தமிழ்
  Site Web Yahoo! India Search
 
 
 
தமிழ் வளர்த்த இதழ்கள் சிறப்புக் கட்டுரை
மா. சு. சம்பந்தன்  
பத்திரிகையாளர், இதழியல் ஆய்வு முன்னோடி, 'தமிழ் இதழியல் வரலாறு, 'அச்சும் பதிப்பும்', 'அச்சும் நகலும்' 'தொடர்பன் கட்டுரைகள்' 'சென்னை நகரம்' உள்ளிட்ட நூல்களை எழுதியுள்ளார். அறுபது எழுபது வருட சென்னை வாழ்க்கையின் மாற்றங்களை கண்ணார கண்டு வாழ்ந்திருப்பவர். தமிழ்நாட்டின் சமூக அரசியல் இயக்கங்களிலும் தீவிரமாக ஈடுபட்டிருந்தவர்.

பத்தொண்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் தமிழ் இதழ்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இவ்விதழ்களின் தோற்றத்தின் காரணமாகத்தான், தமிழை சிறிது அறிந்தவரும் மேலும் தெரிந்து கொண்டு தமிழ்நூல்களை எளிய முறையில் பாடம் சொல்லி வந்த முறையாலும், நூல்களில் பொதிந்துள்ள விழுமிய கருத்துக்களைக் காட்சிகளாக்கி சில பெருமக்கள் தமது சொல்லோவியங்களாக படம் பிடித்தும் இதழ்கள் வெளிவந்தன. இதனால் பொதுமக்கள் அவற்றை எளிய முறையில் தெரிந்து கொள்ள வழியேற்பட்டது.

எங்கிருந்தோ ஒரு முனையில் ஒரு புலவர் இதழ் மூலம் சொல்லும் கருத்தை, இன்னொரு முனையிலிருந்து மற்றொரு புலவர், அதனை மறுத்து, அதற்கு எதிர்மாறான கருத்தைத் தெரிவிக்கவும் வாய்ப்பு ஏற்பட்டது.

வித்துவான் ஆன ரா. இராகவையங்கார் அவர்கள் 'செந்தமிழ்' எனும் மாத இதழில், சேரர் தலைநகராகிய கரூர் எங்கிருந்தது என்பது பற்றி தம்கருத்தை எழுதியிருந்தார். இவரது கூற்றை மறுத்து திரு. ச.வையாபுரிப்பிள்ளை அவர்கள் அவ்விதழில் தொடராக கட்டுரை எழுதி வந்தார். இதில் இவரது நேர்மையும் தெளிவும் ஆராய்ச்சித் திறனும் தெள்ளெனத் தெளியப் பிறரால் உணர்ந்து கொள்ள முடிந்தது!. இவரது கண்டன உரையைக் கண்டு, தமிழ்நாடு யாழ்பாணம் முதலிய இடங்களிலிருந்து புகழ் மாலைகள் வந்து குவிந்தன! இவை இவருக்குத் தன்மைப்பிக்கையையும் தெம்பையும் துணிவையும் கொடுத்து ஊக்கின! மேலும் இவர் தொடர்ந்து பல ஆராய்ச்சிக் கட்டுரைகளை இதழ்களில் எழுதி வந்தார்.

தமக்கு ஏற்ற கருத்தை வலியுறுத்தி எடுத்துரைக்கவும், மாறான பிறர் கருத்தைச் சுட்டிக்காட்டி காரணங்கள் கூறி மறுக்கவும் இவர் முற்பட்டார். இவரைப் போன்று மற்றவரும் இவர் கருத்தை மறுத்துரைக்கவும் இதழ்கள் வாயிலாக முயன்றனர்.

இவ்விதமாகத் தமிழ் இதழ்களின் தோற்றத்தால், தமிழ் இதழ் மூலம் கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்ளவும் தமிழ் உலகத்தோடு நில்லாது பிற உலகை அறிந்து கொள்ளவும் ஆர்வம் உண்டாயிற்று. வாய்ப்புகள் ஏற்பட்டன.

கிறிஸ்தவ சமயத்தினர் தமிழ் இதழ் வாயிலாகச் சமயத்தொண்டு புரிவதையும், பிற சமயக்கருத்துக்களை மறுப்பதையும் கண்ட இதர சமயப் பெருமக்கள் விழித்தெழுந்தனர். தத்தம் சமய மேம்பாட்டைக் காட்டுவதற்கு இதழ்களை, தக்க சாதனமாகக் கொள்ள முற்பட்டனர். ஆகவே, இந்து சமண பெளத்த இஸ்லாமிய இதழ்கள் முகிழ்க்கத் தொடங்கின. அவற்றின் வாயிலாக அவர்தம் சமயப் பெருமைகளும் நூல்களின் சிறப்பும் வெளிப்படுத்தப்பட்டன.

இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியின் போது, நிர்வாகத்தில் பங்கு பெறவும், தமது சமூக மக்களின் எண்ணிக்கையை எடுத்துக்கூறவும் சமூக இதழ்கள் பல்வேறு சமூக மக்களால் தோற்றுவிக்கப்பட்டன.

ஒவ்வொரு சமூகத்திலிருந்து கற்றறிந்த பெருமக்கள் தம் சமூக செல்வர்களின் ஒத்துழைப்புடன், தம் சமூகம் விழிப்படைந்து பிற சமூகங்களைப் போல் கல்வியிலும், பிற துறைகளிலும் ஏற்றம் பெறுவதற்குப் பாடுபட முனைந்தனர். தம் சமூக மேம்பாட்டிற்காக எழுதப்பட்ட புராணங்களைத் தத்தம் இதழ்கள் வாயிலாக அவர்கள் வெளியிட்டும், விளக்கிக் கூறியும், தம் சமூக மக்ளைக் கிளர்ந்தெழச் செய்தனர். விழிப்புற்ற சமூகங்கள் விரைவில் ஏற்றம் பெறத் துடிதுடித்தன. வாய்ப்பும் வசதியும் பெற முனைந்தன. முன்னேறிய சமூகங்களுடன் போட்டியிட்டு கொண்டு முன்னேற முற்பட்டன.

ஆக சமயப் போட்டியும் சமூகப் போட்டியும் இதழ்கள் பெருக்கத்திற்குப் பெரிதும் துணைபுரிந்தன. இதழ்கள் வாயிலாகவே எளிய நடையில் கருத்துக்கள் வெளிப்படுத்தப்பட்டன. கற்வர்களும் பொதுமக்களிடம் - அதாவது பாமரரிடம் தமது கருத்துகளும், கொள்கைகளும் பரவ வேண்டி எளிய நடையில் தெளிவான முறையில் கதை, கட்டுரை,கவிதை, நாடகம், ஆராய்ச்சி போன்ற பல்துறைகளிலும் தமது அறிவு ஆற்றலை புலப்படுத்தி, மக்களுக்கு நல்லறிவு புகட்டும் பெரும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இதழ்கள் மூலமாகச் சமய, சமூகப் பணிகள் பெருகின; அரசியல் விழிப்புணர்ச்சி ஏற்படத் தொடடங்கியது. மெல்ல மெல்ல அரசியலில் ஈடுபடும் துணிவும் உண்டாயிற்று!

தம்மை ஆண்ட வெள்ளையர் ஆட்சியை ஆதரித்தும் எதிர்த்தும் கட்சிகள் முளைக்கத் தொடங்கின. அக்கட்சிகளின் சார்பிலும் இதழ்கள் தோற்றுவிக்கப்பட்டன. இவைகளின் காரணமாக உணர்ச்சி பெற்ற - அறிவுப் பெற்ற - சமய சமூக பின்புலனில் உந்துதல் பெற்ற - அலுவலர்கள் பெருகினர்.

சென்னை மாநிலத்தின் தலைநகராக இருந்த சென்னை மாநகரிலும், பிற முக்கிய பட்டணங்களிலும், ஊர்களிலும் வசதி படைத்தவர்களாலும், ஆர்வமுள்ளவர்களாலும், ஆங்காங்கு இதழ்கள் வெளிக்கொண்டு வரப்பட்டன. தமிழர் வாழும் பிற பகுதிகளான பிரெஞ்சு இந்தியாவிலும், இலங்கை, பர்மா, மலேசியா, சிங்கப்பூர், டர்பன் போன்ற இடங்களிலும் இத்தகைய நிலையே ஏற்பட்டன. உணர்வுகள் பெருகின. அங்கெல்லாம் கூடத் தமிழ் இதழ்கள் வெளியிடப்பட்டன.

தொடக்கக் காலத்தில் கற்றறிந்தோர் துணைகொண்டு, வசதிபடைத்தோர் ஆங்காங்கு இதழ்களைத் தோற்றுவித்தனர். பின்னர் வசதி குறைந்தவர்களும் ஆர்வங் காரணமாகத் துணிந்து இதழ்களைத் தொடங்கி நடத்த முற்பட்டனர்.

இலக்கியத்துறையில் புகழ் பெற்றிருந்தவர்களும், சமூகப் பணியில் ஈடுபட்டிருந்தவர்களும், அச்சகம் நடத்தி வந்தவர்களும், தமிழ் இதழ்களை நடத்துவதில் நாட்டங் கொண்டனர். இலக்கிய இதழ்கள், சமூக இதழ்கள், சமய இதழ்கள், அரசியல் இதழ்கள், பொழுதுபோக்கு இதழ்கள், மருத்துவ இதழ்கள் என்று பலதுறை இதழ்கள் என்று பலவகையில் இதழ்கள் வெளிவரலாயின.

சமயக் கருத்துப் போர்களைச் சமய இதழ்கள் வளர்த்தன. சமூக இதழ்களாலும் கருத்துப் பரிமாற்றங்கள் உண்டாயின. வாதப்பிரதிவாதங்களால் ஒவ்வொரு பக்கத்தின் அறிவுகூர்மையும் எழுத்துவன்மையும் தெரியலாயின.

அடுத்து புகழ் பெற்ற கருத்துப் போர்களும் இதழ் மூலமாக நடைபெற்றுள்ளன. அவற்றுள்
அருட்பா - மருட்பா வாதம்,
தீண்டாமைக்குச் சாஸ்திர சம்பிரதாய ஆதரவு உண்டா? இல்லையா?
பாரதி மகாகவியா? தேசிய கவியா?
கலப்புத் திருமணத்தால் நாட்டில் ஒற்றுமை மிகுமா? குறையுமா?
தனித் தமிழ் வேண்டுமா? கலப்புத் தமிழ்மொழிக்கு ஏற்றம் தருமா?
மாகாண தன்னாட்சி போதுமா? குடியேற்ற நாட்டு அந்தங்ஸது மதிப்புத் தருமா?
முழு விடுதலைப் பெற்றநாடு அமைய வேண்டுமா?
என்பன போன்ற விவாதங்கள் - தமிழ் இதழ்கள் மூலம் அலசி ஆராயப்பட்டுள்ளன..
சீர்த்திருத்தத்தை விரும்பாதவர்களும், சீர்திருத்தத்தை வரவேற்றவர்களும் யார் யார் என்பதை முற்கால இதழ்களைப் புரட்டிப் பார்த்தால் துல்லியமாகத் தெரிய வருகின்றன.

பொதுவாகப் பல்வேறு கருத்துகளின் மோதலினால், தமிழில் எளிமையும் தெளிவும் ஏற்படத் தொடங்கின. தமிழை நன்கறிந்தவர்கள் தமிழ் இலக்கியங்களிலும் இலக்கணங்களிலும் உள்ள நுட்பமானவறைப் புதுமெருகிட்டும் சங்கநூற்சாட்சிகளாக்கியும், நெடுந்தொகை விருந்தாக்கியும் பயப்படாதீர்கள் என்று அச்சம் அகற்றியும், யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்றும் இதழ்களில் தொடர்ந்து எழுதி வந்துள்ளனர்.

தமிழோடு பிறமொழிகளைக் கற்றவர், பிறமொழிகளில் காணப்படும் அழகிய கதைகளையும், நாடகங்களையும் கட்டுரைகளையும், தமிழில் பெயர்த்து இதழ்களில் வெளியிட்டு வந்தனர். இவற்றால் மொழிபெயர்ப்புத் திறமை வெளியாகியது. நல்லமொழி பெயர்ப்புக்கு வரவேற்பு மிகுந்தது.

அஷ்டாவதானம் வீராசாமி செட்டியார் எனும் புலவர் தமது 'விநோதரச மஞ்சரி' நூலில், ஐரோப்பிய சங்கீதத்தைப் பற்றி தாம் அனுபவித்து சுவைத்த பாங்கை முதன்முதலில் எழுதியுள்ளர். திருமணம் செல்வக்கேசவராய முதலியாரால் கம்பர், கண்ணகி,கோவலன் போன்ற திறனாய்வு நூல்கள் தமிழ் இதழ்களில் முதன் முதலில் வெளியாகி பின்னர் நூலாக்கப்பட்டன.

திரு.பி.ஆர். இராஜம் ஐயர், 'விவேக சிந்தாமணி' என்னும் இதழில் 'கமலம்பாள் சரித்திரத்தை'த் தொடர்ந்து எழுதி வந்தார் அது பின்னர் நூலாக்கப்பட்டன. திரு. அ. மாதவய்யா தமது 'பத்மாவதி சரித்திர'த்தைப் 'பஞ்சாமிர்தம்' எனும் இதழில் வெளியிட்டார். பின்னர் அது நுலாகியது.

செந்தமிழ், செந்தமிழ்ச்செல்வி, தமிழ்ப்பொழில், கலைமகள், சக்தி, பொன்னி, குமுதம், கல்கி போன்ற இதழ்களில் பல ஆராய்ச்சிக் கட்டுரைகளும், தொடர் கதைகளும், சிறுகதைகளும் நாடகங்களும் முதலில் வெளியிடப்பட்டு, பின்னர் நூல்களாக ஆக்கப்பட்டுள்ளன.

இதழ்களில் எழுதி வந்ததன் விளைவாகவே மறைமலையடிகள், சதாசிவ பண்டாரத்தார், விகோ சூரியநாராயணசாஸ்திரியார், எம்.எஸ். பூரணிலிங்கம் பிள்ளை போன்றோரின் அறிவுக்கூர்மையும் ஆராய்ச்சித்திறனும், படைக்கும் ஆற்றலும் வெளியாகி, அவர்களைத் தமிழ் உலகம் நன்கு அறிந்து கொள்ள முடிந்தது.

இவர்ளைப் போன்றே சி.வை. தாமோதரம் பிள்ளை, விபுலானந்த அடிகள், திரு.வி.க, வெ. சாமிநாத சர்மா, மு. வரதராசனார், மு. அருணாசலம், பாரதியார், வ.வே.சு ஐயர், ப. ஜீவானந்தம், டி.கே. சிதம்பரநாத முதலியார், பி.ஸ்ரீ. பாரதிதாசன், சி.என். அண்ணாதுரை போன்றோர் செய்துள்ள பணிகளை இதழ்கள் வாயிலாகவே நாம் அறிந்து கொள்ள முடிந்தது. தமிழ்நாட்டில் மட்டுமின்றி தமிழர் வாழும் இடங்களிலும் உள்ள எழுத்தார்வம் மிக்கவர்களை அறிமுகப்படுத்தியவை தமிழ் இதழ்களே ஆகும். மூலையில் இருந்தவர்களை முற்றத்திற்கு கொண்டு வந்து அவர்களது திறன்களையெல்லாம் வெளிப்படுத்தியவை தமிழ் இதழ்களாகும்.

அச்சுக்கோப்பாளர்களாக இருந்தவர்களையும், அரசியல்வாதிகளாக திகழ்ந்தவர்களையும், பேச்சாளர்களாகப் புகழ்பெற்றவர்களையும், வழக்கறிஞர்களையும், நடிகர்களையும் எழுதத்தூண்டி, அவர்களில் சிலராவது எழுத்தாளர்களாக விளங்கச் செய்த பெருமையும் தமிழ் இதழ்களுக்கு உண்டு.

உலகம் என்பது நன்மையும் தீமையும் கலந்ததுதானே? இதழ்களிலும் நன்மையானவற்றை விளக்கிக் கூறுவதும் உள்ளன. தம்மை அறியாமலே குறுக்கு வழியில் பணம் திரட்டும் வஞ்சகமும் உள்ளன. மக்களின் ஐம்புல உணர்ச்சிகளை தீயவழியில் கிளப்பிவிட்டு, அவர்களைப் புலக்குறும்புகளில் திளைக்கச் செய்து போதை ஊட்டும் செய்திகளை படங்களுடன் வெளியிடுதலில் ஈடுபட்டுள்ள இதழ்களும் தோன்றியுள்ளன.

தொகுப்பு Published on Feb 25th, 2008
 
மேலும்

மேலும்