தமிழ்
  Site Web Yahoo! India Search
 
 
 
இசையால் அளபெடுத்த இனிய குறள் சிறப்புக் கட்டுரை
தேனுகா  
தமிழர்கள் ஓவு, ஓவம் என்றழைக்கப்படும் ஓவியம் - அர்த்தச் சிற்பம், முப்பரிமாண முழுச்சிற்பம், அழகிய கட்டடம், மெய்ம்மறக்க வைக்கும் இனிய இசை என்றெல்லாம் பல கலைகளில் தேர்ந்த கலா வல்லுநர்களாகத் திகழ்ந்தனர்.

பெண்ணின் இடையிலிருந்து கொடியொன்று புறப்பட்டுத் தோளில் பரந்து மார்பகமாகிய மலர்கள் பூக்க அமைந்த கற்பனையில் 'தொய்யில்' எனும் ஒப்பனைக் கலையோவியம் தமிழில் பிறந்தது. இதுபோல் இன்றும் மருதாணியிட்டும், அரிதாரம் பூசி ஆடியும் பாடியும், அரங்கில் கூத்தாடி நாடகமாடியும் உணர்வுமயமாய் வாழும் தமிழரது வாழ்வியல் முறை கலாபூர்வமாக அமைந்திருக்கின்றது. தமிழ் இனத்தை உலக இனத்தவரோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் இவர் தம் வாழ்க்கை வியப்புறும் வண்ணம் கலைரசனையுடன் அமைந்திருப்பதை மார்கரெட் ட்ராவிக் (Margrett Trawic) என்ற அமெரிக்க மானுடவியல் அறிஞர் (Anthropologist) 'Notes on the love of a Tamil family' எனும் நூலில் வியந்து பாராட்டுகின்றார்.

தமிழர்களின் பண் எனும் இசைக்கலையோ இவர் தம் வாழ்வில் இழையோடும் இன்ப நாதமாய் உள்ளது. இசைக்கலை தமிழர் வாழவின் ஓர் அடிநாதமாய் லய கதியோடு அமைந்திருப்பது அருமையிலும் அருமை. பாயும் ஆற்று வெள்ளத்தையும், பேய்க்கொண்டடிக்கும் காற்றையும், விண்ணையிடிக்கும் மேகத்தையும் தாளகதியாய்த் தாம்தரிகட, தீம்தரிகட என்றெல்லாம் இசை வடிவமாய்க் கண்டவர்கள் தமிழர்கள். யாப்பிலக்கண வழியில் வெண்பாவில் குறள் இயற்றிய வள்ளுவரும் எதுகை மோனைச் சந்தங்களின் ஓசையின் இனிமையோடு பாக்களை இயற்றினார். இவரது குறள்கள் பல இலக்கண முழுமை பெற்ற பிறகும் இசைக்காகப் பலமுறை 'கெடுப்பதூஉம் எடுப்பதூஉம்' என்றெல்லாம் ஊம், ஊம் என்று அளபெடுத்து இன்னிசைத்தன.

இசைக்கு மயங்கினார் வள்ளுவர். குழலின் இசையை இனிது என்றார். யாழின் இசையையும் இனிது என்றார். குழந்தையில் மழலை ஓசையைப் பேரின்ப இசை என்று பெரிதும் லயித்தார் இவர். வளைவில்லா நேர்க்கோடாய் நீட்டித்து நின்ற அம்பினைக் கொடிது என்றழைத்த இவர்தான், வளைந்த யாழின் இசையினைச் செவ்விது என்றார். இசையால் பெரிதும் ஈர்க்கப்பட்டவர் திருவள்ளுவர். இருப்பினும், இவ் இசையினுள் தோன்றும் வெற்று ஓசைமையை (resonance) மட்டும் அவர் ரசிக்கவில்லை. இசைக்கு ஆதாரமான பாடலை மிக முக்கியமான ஒன்றாகக் கருதினார். பாடல் இல்லாத பண்ணா? வள்ளுவரால் இதனை நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. ஏற்க மறுத்தார். இவ் இசையில்லாத எழுத்துருவான பாடலால் பயனேது? அதுபோல் பண் (இசை) இல்லாத பாடலாலும் பயனில்லை என்றார். பாடலைப் பண்ணோடு இணைக்கும் 'இயைபை' வாழ்த்தினார் வள்ளுவர்.

பண் எதற்கு?
பாடலுக்கு இயைபு இல்லையென்றால்
பண் எதற்கு?

(பண்ணெண்ணாம் பாடற்கு இயல்பின்றேல்)

என்ற கேள்வியை நம் முன் நிறுத்துகிறார் வள்ளுவர். பாடல் இல்லாத பண்ணே எதற்கு எனும் போது, பண் இல்லாத பாடலும்தான் நமக்கு எதற்கு? என்றே கேள்வியும் நம் முன் தானாகவே எழுந்துவிடுகிறது.

வள்ளுவர் போற்றும் இயைபினைத் தற்போதுள்ள கீர்த்தனைகள், பண்கள், விருத்தங்கள் அல்லது வர்ண மெட்டுகள் போன்ற compositions களோடு ஒப்பிட்டுச் சொல்ல வேண்டும். இசை இல்லாத சாகித்தியமும் (பாடலும்), சாகித்தியம் இல்லாத வெறும் சுரபேத வாகாய் அமைந்துள்ள இசையும் இன்று மக்களால் போற்றப்படுவதில்லை.

எழுத்துருவான தனித்திட்ட பாடலையும், அதற்கு இதமான இசையையும் இணைத்து யைபுடன் புதிய எழுத்திசையை வலியுறுத்தியவர் வள்ளுவர். வெறும் ராக ஆலாபனையாக மட்டும் அமைந்திராமல், தனித்திட்ட வெறும் பாடலாகவும் அமைந்திராமல் இவை இரண்டையும் அழகான வடிவில் கோர்க்கப்பட்டு கட்டமைக்கப்பட்ட (composition) இசைப்பாடல்களுக்குத் தற்போதுள்ள கீர்த்தனைகளை உதாரணமாகச் சொல்லலாம். அருணாசலக் கவிராயர், மாரிமுத்தாப்பிள்ளை, தியாகராஜ சுவாமிகள், முத்துத்தாண்டவர், முத்துசாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரிகள், வேங்கட ரமண பாகவதர் போன்றோரின் அழகழகான விதவிதமான மேளகர்த்தா ராகங்களில் அமைந்த கீர்த்தனைகளை இவற்றிற்கு உதாரணமாகச் சொல்லலாம். தமிழிலும், தெலுங்கிலும் பாடப்பட்ட இக் கீர்த்தனைகள் சிட்டாஸ்வர அழகோடு ஜொலிப்பதற்குத் தமிழ்ப் பண் இசை வழியே காரணம் என்று தமிழறிஞர்கள் கூறுகின்றனர். குறிஞ்சிப் பண், முல்லைப்பண், காந்தாரப் பண் எனும் பண் வழி இசையை இன்றும் ஓதுவாரிடையே நாம் ரசித்து மகிழலாம். ஞானசம்பந்தரின் கோளறு பதிகத்தை விலம்பகாலகதியிலிருந்து துரிதகால கதிவரை பல்வேறு தாள லயகதியில் தருமபுரம் சுவாமிநாதன் போன்ற ஓதுவாமூர்த்திகள் பண்ணிசைத்துப் பாடும் விருத்தங்கள் நம் செவிகளில் இன்றும் ரீங்காரமிட்டுக் கொண்டேயிருக்கின்றன.

கோயில்களில் வாணவேடிக்கையோடு சுவாமி வீதி உலா வரும் காலங்களில் மணிக்கணக்கில், நாள்கணக்கில் அக்காலத்தில் நாதசுவர வித்வான்கள் ராக மழையால் வீதிகளை நனைத்தனர். பல்வேறு தாளகதியில் அமைந்த பாடல் இல்லாத மல்லாரிகள், ரக்திகள் அப்போது பிரபலமாகியிருந்த போதும் கீர்த்தனைகளை வாசித்து மக்களை மெய்ம்மறக்கச் செய்தனர் இவர்கள். பல வாக்கேயக்காரர்களின் (composers) கீர்த்தனைகளை நாதசுவர இன்னிசை மூலம் தமிழிசை உலகுக்கு அறிமுகப்படுத்தியவர்களுள் திருவீழிமிழலை சகோதரர்கள் டி.என். ராஜரத்னம், திருவெண்காடு சுப்பிரமணியம் போன்ற மாமேதைகளைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். அவர்களுக்கு இசைவாகக் கீர்த்தனைகளுக்கு ஒட்டுதலாக, அவற்றை ஏந்தும் விதமாகத் தவில் வாசித்த தவில் சக்கரவர்த்தி நீடாமங்கலம் மீனாட்சிசுந்தரம், கும்பகோணம் தங்கவேலு பிள்ளை, கூறைநாடு கோவிந்தராஜூ பிள்ளை, நாச்சியார் கோயில் ராகவப் பிள்ளை, பந்தநல்லூர் ரத்னம் போன்ற தவில் மேதைகளைச் சொல்ல வேண்டும். நாதஸ்வர வித்வான்களால்தான் கீர்த்தனைகள் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றன.

வாய்ப்பாடலாகப் பாடியவர்கள் கூட கீர்த்தனைகளின் சாகித்தியத்தின் (பாடல்) அர்த்தம் விளங்க மேடையில் பாடினர். ஆனால் இன்றோ 'தாமரைப் பூத்த தடாகமடி' என்ற தண்டபாணி தேசிகர் பாடிய பாடலைத் 'தாமரைப்பூ த்தடா கமெடி' என்று வெட்டி வெட்டி விண்ணப்படுத்தி ரத்தக்களரியாய்ப் பாடும் இசைக்கலைஞர்கள் இன்றும் உண்டு. இன்றைய தமிழ்த் திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. வெட்டி வெட்டித் துண்டு துண்டாக்கப்பட்ட பாடல்களாய் இவ் இசைப் பாடல்கள் எழுதப்படுவது வேதனை தருவதாகும். அதிர்ச்சியைத் தந்து அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் இப் பாடல்கள் அதே வேகத்தில் மறுநாளே மரிக்கவும் செய்கின்றன. நிலைத்து நிற்பதில்லை. ஆனால் கீர்த்தனைப் பாங்காய் அமைந்த எம்.கே.டி. பாகவதர், கிட்டப்பா, எம்.எஸ். சுப்புலட்சுமி, எம்.எல். வசந்தகுமாரி மற்றும் ஜி. ராமநாதன் இசை அமைத்த பாடல்கள் இன்றும் ஆயிரமாயிரம் பேர் விரும்பிக் கேட்கும் சிறந்த இசைப் பாடல்களாய் அமைந்துள்ளன. 'ஆடல் காணீரோ' எனும் சாருகேசி ராகத்தில் அமைந்த திரைப்படப் பாடல் இன்றும் இக்கால ரசிகர்களாலும் மிகவும் விரும்பிக் கேட்கப்படும் பாடலாகும்.

இசையில் செவ்வியல் தன்மையைக் (classicity) கொண்டு வர விரும்புவோர் கீர்த்தனை, பண், விருத்தம் போன்ற இசை வழியில்தான் அவற்றைக் கொண்டு வர இயலும். அவ்வாறே பாடலுக்குச் செவ்வியல் தன்மையையும் பண், கீர்த்தனை வழியில்தான் கொண்டு வர இயலும். அப்போதுதான் இப் பண்ணும், பாடலும் இவ்யையினால் மக்களைச் சென்றடையும். நீடித்த புகழை அடைந்து இவை செவ்வியல் தன்மையை அடைய முடியும். பாடல்களைப் பண்ணோடு இழுத்திணைத்துக் கோர்வைப்படுத்தும் கீர்த்தனையின் அழகிய கட்டமைப்பே (composition) இதன் செவ்வியல் தன்மைக்குக் காரணம். வெறும் பாடல்களாய் இவற்றை நாம் பெற முடியாது.

வள்ளுவன் வியந்து போற்றிய கவி பாரதியும் 'அக்னிக் குஞ்சு' என்ற தன் கவிதையில்

அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் - அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்;
வெந்து தணிந்தது காடு; இதழல்
வீரத்திற் குஞ்சென்று மூப்பென்று முண்டோ ?

என்று தன் கவிதையை இவ்விடத்திலேயே முடித்திருக்க வேண்டும். யாப்பிலக்கண முழுமையோடு கவிதையும் இங்கே முடிந்து போக வேண்டும். ஆனால் பாரதிக்கு யாப்பினும் மிஞ்சிய இசையொன்று தேவைப்படுகிந்து இவ்விடத்தில். இதனால்

தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்

என்று நீட்டித்த லய கதியோடு அழகான இசைக் கவிதையாய் மலர விடுகிறார் இவர்.'

தொகுப்பு Published on Jan 6th, 2008
 
மேலும்

மேலும்