புத்தகப் பிரியர்களை - வாசகர்களை வரவேற்க
தயாராகிவிட்டது செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன்
மேல்நிலைப் பள்ளி. ஆம் 31வது சென்னை புத்தகக் காட்சி
நாளை (04, ஜனவரி 2008) மாலை தொடங்கவிருப்பதை முன்னிட்டு
அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு தயார் நிலையில்
உள்ளது செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்
பள்ளி.
முன்னதாக தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும்
பதிப்பாளர் சங்கம் புத்தகக் காட்சியை தொடர்ந்து 30
வருடங்களாக வெற்றிகரமாக நடத்தி வருவது
குறிப்பிடத்தக்கது. வாசிப்பு உணர்வை வளர்க்கும்
விதத்திலும், புத்தகம் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே
ஏற்படுத்தும் நோக்கிலும் புத்தகக் கண்காட்சி
தொடங்கப்பட்டது. இதன் மூலம் பதிப்பாளர்கள் ஒரே இடத்தில்
தங்கள் பதிப்புகளை விற்பதற்கும், பரப்புவதற்கும் வழிவகை
செய்து தருகிறது.
அன்று இத்தகைய நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்ட
புத்தகக் காட்சி வெற்றிகரமாக தனது 31வது ஆண்டில் காலடி
எடுத்து வைத்துள்ளது சிறப்பு.
இந்நிலையில் வருகிற 4ம் தேதி சென்னையிலுள்ள செயின்ட்
ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியில் (பச்சையப்பன்
கல்லூரி எதிரில்) 31வது சென்னை புத்தகக் காட்சி
தொடங்கவிருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை தென்னிந்திய
புத்தக விற்பனைளர் மற்றும் பதிப்பாளர் சங்கம்
ஏற்பாடுகள் செய்து வருகின்றன.
அன்று மாலை 5 மணிக்கு தொடங்கவிருக்கும் புத்தகக்
காட்சி திறப்புவிழாவின் முதல் நிகழ்ச்சியாக வருகிறது
வரவேற்புரை. விழாவிற்கு வருகைத் தரும் அனைவரையும்
வரவேற்று பேசுகிறார் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்
மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் தலைவர் திரு. காந்தி
கண்ணதாசன் அவர்கள்.
தமிழக முதல்வர் மு. கருணாநிதி விழாவினை தொடங்கி
வைத்து சிறப்புரையாற்றுகிறார். மேலும் தேர்வு
செய்யப்பட்ட சிறந்த எழுத்தாளர்களுக்கு கலைஞர் மு.
கருணாநிதி பொற்கிழி விருதுகள் வழங்குகிறார்.
விழாவிற்கு தலைமை தாங்கி சிறப்பிக்கிறார் நல்லி
சில்க்ஸ் உரிமையாளர் டாக்டர் பத்மஸ்ரீ நல்லி
குப்புசாமி செட்டியார்.
இதனைத் தொடர்ந்து உயர்கல்வி துறை அமைச்சர் க.
பொன்முடியும், திட்டக்குழு துணைத் தலைவரான மு.
நாகநாதனும் வாழ்த்துரை வழங்கவிருக்கின்றனர்.
கடைசியாக ஏற்புரை நிகழ்த்துகிறார் தென்னிந்திய
புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின்
செயலாளர் ஆர்.எஸ் சண்முகம் அவர்கள்.
நிகழ்ச்சியில் முக்கிய நிகழ்வாக வருவது கலைஞர்
மு.கருணாநிதி பொற்கிழி விருது நிகழ்ச்சியாகும்.
இம்முறை இவ்விருது சிறந்த எழுத்தாளர் வரிசையில் மா.சு.
சம்பந்தம் அவர்களுக்கும், நாடகத்துறையில் சிறந்த சேவை
செய்து வரும் மு. ராமசாமி அவர்களுக்கும்,
படைப்பிலக்கியத்தில் சிறந்து விளங்கும் சு.
தமிழ்ச்செல்வி அவர்களுக்கும் மற்றும் மலையாள
எழுத்துலகில் சிறந்து விளங்கும் சாரா ஜோஸப்
அவர்களுக்கும் வழங்கவிருக்கிறது.
இந்நிலையில் இந்த வருட புத்தகக் காட்சியின் சிறப்பு
அம்சங்கள் பற்றியும் விழாவிற்கான ஏற்பாடுகள்
பற்றியும், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும்
பதிப்பாளர் சங்கத்தின் செயலாளர் ஆர்.எஸ். சண்முகம்
அவர்களிடம் ஆறாம்திணை சார்பாக கேட்டப் போது அவைகளை
நம்மிடையே பகிர்ந்து கொள்கிறார் :
''இந்த வருடம் சுமார் பத்து லட்சம் வாசகர்களை
எதிர்பார்க்கிறோம். மொத்தம் 560 stalls
அமைத்திருக்கிறோம். அதில் 360 அரங்குகளில் பல்வேறு
பதிப்பகங்கள் பங்கேற்கின்றன. மேலும் இம்முறை புதுமையாக
- சின்ன சின்ன பதிப்பாளர்களை உற்சாகப்படுத்தும்
நோக்கில் அவர்களுக்காக குறைந்த வாடகையில் இரண்டாயிரம்
சதுர அடி இடம் ஒதுக்கியிருக்கிறோம். அவர்கள் தங்களது
நூல்களை அழகாக தனித்தன்மையோடு புத்தக அடுக்குகளாக
வைத்து தங்களது புத்தகங்களை விளம்பரப்படுத்தவும்,
விற்கவும் வழிவகைச் செய்து கொடுத்திருக்கிறோம்.
வாசகர்களின் தேவையை கருதி, அவர்களின் சிரமத்தை
குறைக்கும் வகையில் ஆறு நுழைவு வாசலை
ஏற்படுத்தியிருக்கிறோம். இதன் மூலம் பொதுமக்கள் நீண்ட
நேரம் வரிசையில் நிற்க வேண்டிய சிரமம் குறையும்.
மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலிருந்து
புத்தககண்காட்சியில் கலந்து கொள்ள வருகிறார்கள்.
அதுபோல் மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற
தென்னிந்திய மொழிகளில் உள்ள பதிப்பாளர்களும் மிகுந்த
ஆவலுடன் கண்காட்சியில் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.
கிட்டத்தட்ட ஐந்து லட்சம் தலைப்புகளில், ஐந்து
கோடிகளுக்கு மேலான புத்தகங்கள் இம்முறை
பார்வையாளர்களுக்காக வைக்கப்படவிருக்கிறது.
இதுமட்டுமல்லாமல் ஊடகங்களுக்காக நிறைய ஸ்டால்கள்
ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும் இன்று நம் நாட்டில்
பெருவாரியான மக்கள் பேசுகின்ற ஹிந்தி மொழி
புத்தகங்களும் இம்முறை அதிகளவில் காட்சிக்கு
வைக்கப்படவிருக்கின்றன.
வருகின்ற வாசகர்களுக்கு அதிகபட்சமாக என்னென்ன
வசதிகள் செய்து தர முடியுமோ அத்தனை வசதிகளையும் செய்ய
ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அதுபோல் சுகாதார
வசதிகளுக்காக இந்த முறை தனிகவனம்
செலுத்தியிருக்கிறோம். நடக்க முடியாத வாசகர்களுக்கு
அவர்களுக்கு வசதியாக வண்டிகள் ஏற்பாடு செய்ய முடிவு
செய்திருக்கிறோம்.
இப்போதே எங்களுக்கு தொலைபேசி மற்றும் மின்னஞ்சல்
மூலமாக மிகப் பெரிய வரவேற்பு கிடைத்து வருவது
குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் இம்முறை கண்காட்சிக்கு
மிகப் பெரிய அளவில் வாசகர்கள் வருவார்கள் என்று
எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் ஊடகங்கள்
மூலமாக மிகப் பெரிய விளம்பரமும் கிடைக்கும் என்று
நம்புகிறோம். இணையதளத்தின் மூலமாகவும் கண்காட்சி
பற்றிய செய்திகளை அவ்வப்போது வெளியிட பல்வேறு
இணையதளங்கள் முயற்சிகள் மேற்கொண்டு இருக்கிறார்கள்.
தினமணி பத்திரிகை மூன்று வாசகர்களுக்கு தினசரி
பரிசு வழங்கவிருக்கிறார்கள். வழக்கம் போல் புத்தக
பரிசும் வழங்கவிருக்கிறோம். இதுபோல் தினசரி நிறைய
பரிசுகள் வழங்கவிருக்கிறோம்.
வருகிற நான்காம் தேதி தமிழக முதல்வர் டாக்டர்
கலைஞர் அவர்கள் விழாவினை தொடங்கி வைக்கிறார்கள்.
அதனைத் தொடர்ந்து தினசரி கலைநிகழ்ச்சிகள்,
பட்டிமன்றம், பேச்சுபோட்டி எல்லாம் நடக்கவிருக்கின்றன.
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகள்
தனித்தனியாக நடைப்பெறவிருக்கின்றன. வெற்றி பெற்ற
மாணவர்களுக்கு நிறைவு விழா அன்று பரிசுகள்
வழங்கவிருக்கிறோம்.
மேலும் புதிய சினிமா, அதாவது மாற்று சினிமாவிற்கான
ஏற்பாடுகள் செய்து இருக்கிறோம். இதன் மூலம் உலகப்புகழ்
பெற்ற குறும்படங்கள் ஒளிப்பரப்பவிருக்கிறோம்.
அவ்வப்போது வருகின்ற புதிய புதிய சிந்தனைகள்
எல்லாவற்றையும் செயல்படுத்த இருக்கிறோம்.
சென்ற ஆண்டு தமிழக முதல்வர் கருணாநிதி அவர்கள் ஒரு
கோடி ரூபாயை வைப்பு நிதியாக வழங்கினார்கள்.
அதனடிப்படையில் ஐந்து பேருக்கு - நான்கு தமிழ்
எழுத்தாளர்கள், ஒரு மலையாள எழுத்தாளர் - ஆகியோருக்கு
இந்த வருடம் ஒரு லட்சம் பெறுமானமுள்ள பரிசு தொகை
அளிக்கவிருக்கிறோம். அனைத்து பரிசுகளையும் தமிழக
முதல்வர் கருணாநிதி அவர்கள் வழங்கவிருக்கிறார்கள்.
மக்கள் தொலைக்காட்சி எங்களுடன் இணைந்து அவர்களே
நேரிடையாக சொல் விளையாட்டு போன்றவைகளை
செய்யவிருக்கின்றனர். இது பெரிய அளவில் ஒரு புதிய
இலக்கை நோக்கி போகக்கூடிய புத்தகக் காட்சியாக அமையும்
என்றால் அதுமிகையல்ல.
வேலைநாட்களில் மதியம் 2 மணி முதல் இரவு 8.30 மணி
வரைலிலும், விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு
9 மணி வரையிலும் புத்தகக் காட்சி திறந்து வைக்கப்படும்.
4ம் தேதி முதல் வருகிற 17ம் தேதி வரையிலும் புத்தக்
காட்சி நடைபெறவிருக்கிறது. பொதுமக்கள் எந்தவிதமான
சிரமும் இன்றி வந்து போவதற்கான பேருந்து வசதிகள்
ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கின்றன. இதைத் தவிர
வருகின்ற மக்களுக்காக நல்ல உணவகம் ஒன்றையும் அமைக்க
திட்டமிட்டுள்ளோம்.
தகவல்தொழில்நுட்பத்தில் பணிப்புரியும் இளைஞர்களையும்,
இளைஞிகளையும் புத்தககண்காட்சிக்கு இழுத்து வரும்
வகையில் சலுகை விலையில் கோல்டன் டிக்கெட் ஒன்றினை
அறிமுக செய்யவிருக்கிறோம். அதற்கான டிக்கெட்டின் விலை
100 ரூபாய் என்று நிர்ணயித்திருக்கிறோம். இதன்படி ரூ.
100 கொடுத்துவிட்டால், ஐந்து பேர் கண்காட்சிக்கு ஒரு
நாளில் எத்தனை முறையும் வரலாம். இதுதவிர
பள்ளிக்குழந்தைகளுக்கு என்று சுமார் 12 லட்சம் இலவச
நுழைவு டிக்கெட் வழங்கவிருக்கிறோம். குழந்தைகள் தங்கள்
பெற்றோர்களுடன் கண்காட்சிக்கு வரவேண்டும் என்ற
நோக்கில்தான் இந்த ஏற்பாடு செய்திருக்கிறோம்.'' |