தமிழ்
  Site Web Yahoo! India Search
 
 
 
அழிந்துவரும் சமனப்பிரதிமைகள் சிறப்புப்பார்வை
- ஹரிகிருஷ்ணா  
தமிழகத்தில் சமணக் கோயில்களும், குகைகளும், சமண முனிவர்கள் தங்கியிருந்த பாழிகளும் மலை மீது தென் மாவட்டங்களில் பரவலாகக் காணப்படுகின்றன. குறிப்பாக மதுரையை அடுத்த நாகமலைப் பகுதிகளில் குகைகளும், படுகைகளும் காணப்படுகின்றன. சமணத் துறவிகள் மலைக் குகைகளில் தான் தங்கி வாழ்ந்தனர். இந்தக் குகைகளில் நீரூற்றுகளும், கல்லால் ஆன படுக்கையுமிருக்கும். மேலும் இவர்கள் வழிபடுவதற்காக அமைக்கப்பட்ட தீர்த்தங்கரர்களின் உருவங்கள், சித்திரங்கள் இந்த மலைகளின் மீது காணப்படுகின்றன. தென் மாவட்டங்களில் இதுபோல தீர்த்தங்கரர்களின் மிக அழகான சிற்பங்களின் தொகுதி கழுகு மலையில் காணப்படுகிறது.

பழைய சமணக் கோயில்கள் இடிக்கப்பட்டும், உருக்குலைந்தும் வேறு கோயில்களாக மாற்றப்பட்டுள்ளன. விருதுநகர் மாவட்டம் சோலிலாங்குளத்தில் உள்ள திகம்பரநிலையில் 12-ஆம் நூற்றாண்டு தீர்த்தங்கரின் சிலை ஒன்று உள்ளது. இதை மக்கள் அம்மணநாதர் என வழிபட்டு தினமும் சூடமேற்றிப் பூஜை செய்கிறார்கள். மலை மீதுள்ள பெரும்பான்மையான சமணக் கோயில்கள் முறையான பாதுகாப்பு, பராமரிப்பு இன்றி அழிந்தும், இடிபாடு கொண்டும் காணப்படுகின்றன.

தென் மாவட்டங்களில் அதிகம் அறியப்படாத மேற்குத் தொடர்ச்சி மலையின் ராஜபாளையம் பகுதித் தொடரில் உள்ள கொண்டாபினி என்ற கிராமத்தின் அருகாமையில் உள்ள மலையில் சமணப் பிரதிமைகளும், சிற்பங்களும் காணப்படுகின்றன. இங்கு குகைகளோ, கல் படுகைகளோ காணப்படவில்லை. தீர்த்தங்கர் ஒருவரும் முக்குடையும் காணப்படுகின்றன. இதன் அடிவாரத்தில் உள்ள கல்குவாரியொன்றில் இடிந்த நிலையில் சமண உருவமொன்று காணப்படுகின்றது.

சமணர்களில் திகம்பரர்கள் நிர்வாணிகளாக இருந்ததாலும், சமணவாழ்வு முறை இயற்கையைச் சார்ந்து இருந்ததாலும் இவர்கள் மலைகளின் குகைகளில் அதிகம் வாழ்ந்திருக்கின்றனர். சிறப்பான சமணக் கோயில்கள் வட ஆற்காடு மாவட்டத்தில் காணப்படுகின்றன. குறிப்பாகச் செஞ்சியைச் சுற்றிலும் உள்ள பஞ்சபாண்டவர் மலைப் பிரதேசத்தில் சமணர்களின் குகைகளும் அதனுள் சிற்பங்களும், சுவர் ஓவியங்களும் காணப்படுகின்றன.

இந்தச் சிற்பங்களில் தீர்த்தங்கரர்கள், அம்பிகாயக்ஷி போன்றோரின் உருவங்கள் காணப்படுகின்றன. அதிலும் குறிப்பாகச் செஞ்சி மாவட்டம் அகலூர் அருகே உள்ள மலையில் மூன்று கல் படுகைகள் காணப்படுகின்றன. இங்குள்ள கல்வெட்டின்படி இது கி.மு. 1-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாக அறியப்படுகிறது. இது போலவே செஞ்சிக்கு வடக்கே 32 கி.மீ. தூரத்தில் கப்ளாம்பாடி என்ற ஊரின் புறத்தே உள்ள மலையில் குகைகள் காணப்படுகின்றன. இங்கு ஆராதன் என்ற துறவி உண்ணாநோன்பிருந்து இறந்தார் என்ற குறிப்பும் காணப்படுகிறது.

இது போலவே வந்தவாசிக்கு 20 கி.மீ. தென் மேற்காக உள்ள வேடல் என்ற ஊரில் பெண் துறவிகளுக்கான சமணப் பள்ளி இருந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. இந்தப் பள்ளியிலிருந்து கி.பி. 885ல் கனக வீரகுரத்தி என்ற சமணப் பெண் துறவியும் அவருக்கு 500 மாணாக்கியரும் இருந்ததாகக் கல்வெட்டு ஒன்று குறிப்பிடுகிறது. இந்தக் கனக வீர குரத்தியின் குரு குணகீர்த்திபட்டாரர். இவர்கள் இங்கிருந்து அறத் தொண்டு புரிந்ததாகக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

விளாப்பாக்கம் என்ற ஊரிலும் சமணப் பெண் துறவிகளுக்கென தனியே பள்ளியும், அங்கு பட்டினி குரத்திக் கிணறு என்ற கிணறும் காணப்படுகின்றன.

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் உள்ள சமணக் கோயில்கள் சில கல்குவாரிகளுக்கு வெடி வைப்பதன் மூலம் சிதறியும், அழிக்கப்பட்டும் வருவது தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன. நமது புராதனக் கலைச் சிற்பங்கள் உடைந்து சிதறுகின்றன கவனிப்பாரற்று.

தொகுப்பு Published on 22nd March, 2008
 


மேலும்