தமிழ்
  Site Web Yahoo! India Search
 
 
 
சென்னையில் சர்வதேச தரத்திலான நவீன மாநில நூலகம் ! சிறப்புப்பார்வை
   
சென்னையில் நடைபெற்று வரும் 31வது சென்னை புத்தகக் கண்காட்சியில் கலந்து கொண்டு தமிழக முதல்வர் கருணாநிதி அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து ...

இந்நாள் என்று வரும் என்று ஏங்கிக் கிடந்த தமிழ் மக்களுக்கு இந்நாள் பொன்னாளாக - அவர்களுடைய உள்ளங்களை யெல்லாம் கொள்ளை கொள்ளுகின்ற நாளாக அமைந்திருக்கின்றது என்பதை நான் நினைத்து நினைத்து மகிழ்ச்சியடைகின்றேன். ஏனென்றால் இது தொடர்ந்து ஆண்டு தோறும் நடைபெற்று வருகின்ற புத்தகக் காட்சியினுடைய ஒரு பகுதி. நாம் நம்முடைய அமைப்பாளர்களுக்கு இந்தக் காட்சியை ஏற்பாடு செய்துள்ள தமிழ்மொழிக்கு தங்களைக் கடமையாளர்கள் என்று கருதிக் கொண்டிருப்போருக்கு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். ''புத்தகக் காட்சி'' என்ற பெயரை உண்மையானப் பொருளைத் தரக் தக்க வகையில் மாற்றப்பட வேண்டுமென்பதாகும். எங்கு போனாலும் இந்தப் பெயர் மாற்றுகின்ற வேலைதானா? என்று யாரும் கருதி விடக் கூடாது. ஏனென்றால் இங்கே வைக்கப்படுகின்ற புத்தகங்கள் படிக்கப்பட வேண்டும், வாங்கப்படுகின்ற புத்தகங்கள் வாசிக்கப்பட வேண்டும். புத்தகங்கள் வெறும் காட்சிப் பொருள்களாக மாத்திரம் இருக்கக் கூடாது. அவைகள் படிக்கப்பட, உணரப்பட, பின்பற்றப்பட வேண்டிய அத்தகைய அறிவுரைக் கருவூலங்களாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் நானே இதை புத்தகக் காட்சி என்று சொல்லி, இத்தனை புத்தகங்கள் இருக்கின்றன, அழகாக அடுக்கி வைத்திருக்கிறோம், பாருங்கள் என்று அதை ஒரு காட்சியாகக் காட்டுவதைவிட, அனைவரும் படிக்கக் கூடிய வகையில் அது பயன்பட வேண்டுமென்பதற்காகத் தான் இதை நான் புத்தகக் காட்சி என்ற பெயரால் அழைக்க இந்த ஆண்டோ டு நிறைவுற்று - அடுத்த ஆண்டு முதல் - நான் கடந்த ஆண்டு சொன்னதைப் போல - 'புத்தகப் பூங்கா' என்ற பெயரில் ஆண்டுதோறும் இதன் திறப்பு விழாவும், சிறப்பு விழாக்களும், தொடர் விழாக்களும், விருது வழங்குகின்ற விழாக்களும் நடைபெற்றால் பொருத்தமுடையதாக இருக்கும் என்பதை முதலிலேயே நான் கூறிக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.

கடந்த ஆண்டு நான் இந்த விழாவிலே கலந்து கொண்ட போது எழுத்துலகத்திலே என்னுடைய நிரந்தர எதிரி என்று கருத்தளவில் சிலரால் கருதப்பட்ட இனிய நண்பர் ஜெயகாந்தன் அவர்கள் இங்கேயிருந்து தன்னுடைய மகிழ்ச்சியைத் தெரிவித்து வாழ்த்துக்களை வழங்கினார். இந்த ஆண்டு விழாவிலே அவர் வந்து சிறபிக்க முடியவில்லை. உடல் நலிவுற்றிருக்கிறார் என்பதை தம்பி நாகநாதன் இங்கே பேசும்போது குறிப்பிட்டார். எழுத்தாளர்கள் கூடியிருக்கின்ற இந்த அவையில், எழுத்தாளர்களின் இதயங்களிலிருந்து கிளம்புகின்ற வாழ்த்துக்கள் அவரைக் காப்பாற்றி மீண்டும் நம்மிடையே வந்து அமரக் கூடிய நிலையை உருவாக்க வேண்டுமென்ற நம்பிக்கையின் அடிப்படையில் என்னுடைய வாழ்த்துக்களை அவருக்கு இந்த விழாவிலே தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

நாம் எந்த கொள்கை படைத்தவர்களாக இருந்தாலும், எந்த இலட்சியவாதியாக இருந்தாலும், அல்லது அரசியில் ரீதியாக எந்தக் கட்சி சார்புடையவராக இருந்தாலும், அவர்கள் தமிழுக்காக தொண்டாற்றுகின்றவர்கள், அந்தத் தொண்டு அவர்கள் சார்ந்திருக்கின்ற எந்தக் கொள்கைக்கோ, எநத இலட்சியத்திற்கோ பயன்பட்டாலும் கவலைப்படாமல் அந்தத் தமிழ் ஆற்றலை, அந்தத் தமிழ்த் திறனை பாராட்டி மகிழ்கின்ற, வாழ்த்துகின்ற, ஊக்கப்படுத்துகின்ற அந்தப் பணியை இன்று நேற்றல்ல - தொடக்கக் காலத்திலிருந்து தொடர்ந்து என்னை ஒப்படைத்துக் கொண்டிருப்பவன். அதனால் தான் ஏதோ அங்கொன்றும் இங்கொன்றுமாக நான் செய்கின்ற அல்லது செய்த நல்லவைகளை இங்கே நண்பர்கள் பாராட்டினார்கள். அது என்னுடைய கடமை. கடமைகளைச் செய்யும்போது அதைப் பாராட்டுவது முறையல்ல. பொருத்தமுடையதும் அல்ல.

கடந்த ஆண்டு இந்தப் புத்தகத் திருவிழாவில் ஒரு கோடி ரூபாய் நிதி அளித்தேன். அளித்த நிதியை மறுநாளே தம்பி காந்தி கண்ணதசான் அறிவாலயத்திற்கே படையெடுத்து வந்து வாங்கிச் சென்றார். வாங்கியப் போது அவரோடு நான்கைந்து நண்பர்கள் இருந்தார்கள். நான் அவர்களை யெல்லாம் சாட்சியாக வந்தார்கள் என்று எண்ணிக் கொள்ளவில்லை. எனக்கும் தம்பி காந்தி கண்ணதாசனுக்கும் உள்ள உறவு - தந்தை, மகன் உறவு என்று உங்களுக்குத் தெரியும். எனவே நான் மகனைச் சந்தேகப்பட்டு நான்கு பேரை சாட்சி வைத்துக் கொண்டு அந்தக் காசோலையைத் தரவில்லை. என்னையே சாட்சியாக வைத்துக் கொண்டு - அதைப் போலவே காந்தி கண்ணதாசனையே சாட்சியாக வைத்துக் கொண்டு தந்த தொகை அது. அது நல்ல முறையில் செலவழிக்கப்படும் என்று எனக்கு நன்றாகத் தெரியும். அது கண்ணியமான முறையில் செலவழிக்கப்படும் என்று எனக்குத் தெரியும். அது தகுதியானவர்களக்கு வழங்கப்படும் என்று எனக்குத் தெரியும். என்னுடைய நம்பிக்கை வீண் போகவில்லை. இன்றைக்கு நம் கண் எதிரிலே அது வீண் போகாமல், நல்ல முறையில் வழங்கப்பட்டிருக்கிறது. இந்தக் காசோலைகளைப் பெற்றவர்களை எல்லாம் நீங்கள் கண்டீர்கள். அவர்களுடைய எழுத்தாற்றலுக்கு, அவர்களுடைய எழுத்து வல்லமைக்கு, அவர்களுடைய கற்பனா வளத்திற்கு, அவர்களுடைய சமூக சிந்தனைக்கு எதிர்கால உலகம் எப்படியிருக்க வேண்டுமென்கிற அவர்களுடைய இடதுசாரி சிந்தனைகளுக்கு வழங்கப்பட்ட பரிசாகவே நான் இவற்றைக் கருதுகிறேன். இரண்டு பெண்மணிகள் இந்தப் பரிசைப் பெற்றிருக்கிறார்கள். அவர்களுக்கு தனியாக என்னுடைய வாழ்த்துக்கள். ஏனென்றால் இப்போதெல்லாம் இப்படிப்பட்ட விருதுகளை, பரிசுகளைப் பெறுகிறவர்கள் பெரும்பாலும் இதிலும் ஆண் ஆதிக்கம் தான் இருந்து வருகிறது என்றால் அதை ஊடுருவுகின்ற வகையிலே இரண்டு பெண்கள் அந்தப் பரிசைப் பெற்றிருக்கின்றார்கள். அதிலே ஒரு பெண்மணி எங்கள் திருவாரூரைச் சேர்ந்தவர். அதிலே எனக்கொரு சுயநலம். அவருக்கு தனிப்பட்ட என்னுடைய வாழ்த்தை என் ஊரின் பெயரால்தான் அவருக்குத் தெரிவிக்கிறேன். அதற்காக மற்றவர்களுக்கெல்லாம் வாழ்த்து வழங்கவில்லை என்று பொருள் அல்ல. எல்லோரையும் நான் வாழ்த்துகிறேன். குறிப்பாக அவர்கள் எழுதிய நூல்கள் என்னுடைய பார்வைக்குக் கூட வந்தன, அவற்றை நான் படித்துப் பார்த்தேன். பொருத்தமானவர்களை இந்த விருதுக்குத் தேந்தெடுத்திருக்கின்ற குழுவினரை நான் பாராட்டுகிறேன்.

கடந்த ஆண்டு இந்த விழாவிலே நான் கலந்து கொண்ட போது நான் உணர்ச்சி வசப்பட்டேன். அப்படி உணர்ச்சி வசப்பட்ட காரணத்தினால் தான் ஒரு கோடியை கொடுத்துவிட்டேனோ என்று யாரும் கருதக்கூடாது. உள்ளபடியே உள்ளம் களி கொண்டு அன்றைக்கு இந்த ஒரு கோடி ரூபாயைத் தந்த போது இப்படிப்பட்ட உத்வேகத்தை, உந்துதலை, ஊக்கத்தை எழுத்தாளர்களிடம் உருவாக்க வேண்டும் என்பதற்காகத்தான். அது மாத்திரமல்ல. சில நேரங்களில் நான் செய்கின்ற காரியம் மற்றவர்களுக்கு ஒரு வழிகாட்டுதலாக அமைய வேண்டுமென்று எண்ணுகின்றவன் நான். உதாரணமாக அன்றைக்கு ஒரு கோடி ரூபாய் கொடுத்தால், நம்முடைய நல்லி போன்றவர்கள் ஒரு இலட்சம் ரூபாயாவது கொடுத்து, இதனை இரண்டு பேருக்கு வழங்குங்கள் என்று சொல்லியிருந்தால் நான் கொடுத்த ஒரு கோடி ரூபாய்க்கு மதிப்புண்டு. ஒருவேளை நான் சொன்ன பிறகு அந்த மதிப்பை ஏற்படுத்த நம்முடைய நல்லி போன்றவர்கள் முன்வருவார்களோ என்னவோ எனக்குத் தெரியாது. அவர் என்ன சொல்ல மாட்டார்? சொல்லிச் செய்ய மாட்டார். சொல்லாமலே செய்யக் கூடியவர்கள் பெரியவர்கள். நான் இதைச் சொல்வதற்குக் காரணம், இந்தப் பூங்கா மேலும் மேலும் வளர்ந்து - இந்தப் பூங்கா எல்லா வகையிலும் செழித்த - இது உலகப் புகழ் வாய்ந்த பூங்காக்களிலே ஒன்று என்கின்ற அந்த உன்னதமான நிலையைப் பெற வேண்டும் என்பதற்காகத்தான் இதைச் சொல்கிறேனே அல்லாமல் வேறல்ல.

சென்ற ஆண்டு இந்த மேடையிலே நான் அளித்த வாக்குறுதிகள் - அரசின் சார்பில் அளித்த வாக்குறுதிகள் நிறைவேறியதா அல்லவா என்ற அய்யப்பாடு சில பேருக்கு இருக்கலாம். சென்ற ஆண்டு நான் இதே மேடையிலே சொன்னேன். சொல்லி விட்டு சொன்னதை நிறைவேற்றுவோம். சொன்னதை செய்வோம், செய்வதைத்தான் சொல்லுவோம் என்ற அந்த வாசகத்திற்கேற்ப - நான் இங்கே அளித்த உறுதிமொழியை நிதிநிலை அறிக்கையிலே வலுப்படுத்தி, உறுதிப்படுத்தி, பேரவையிலேயே அறிவித்தேன்.

2007/2008 நிதிநிலை அறிக்கையில் - ''தற்கால அறிவியல் நூல்கள், நவீன வெளியீடுகள், வரலாற்றுப் பின்னணி கொண்ட பனுவல்கள் மற்றும் மேற்கோள் தொகுப்புகள் போன்றன சாதாரண மக்களுக்கும் ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும் எட்டாக் கனியாக இருக்கும் நிலையை மாற்றிட, இவை அனைத்தும் அவர்களுக்கு எளிதில் கிடைக்கச் செய்யும் வகையில் சென்னையில் சர்வதேச தரத்திலான நவீன மாநில நூலகம் ஒன்றை இந்த அரசு அமைக்கும். அனைத்து நூல்கள் மற்றும் இணைய வெளியீடுகளோடு, நவீனக் கட்டமைப்பு வசதிகள் கொண்ட மாபெரும் மாதிரி நூலகமாக அது அமையப் பெறும். ரூபாய் 100 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் இந்த நூலகத்திற்கு நூலக ஆணையத்தின் பங்களிப்பாக ரூபாய் 80 கோடியும், அரசின் பங்களிப்பாக ரூபாய் 20 கோடியும் இருக்கும்'' என்று அறிவிக்கப்பட்டது. அது என்னவாயிற்று என்று நீங்கள் யாரும் எழுந்து கேட்கவில்லை என்றாலும் உங்களுடைய உள்ளத்திலே அந்த நினைவு அழுந்திருக்கும் என்பது எனக்குத் தெரியும்.

எனவே நான் வாக்குறுதியை மதிப்பவன், அதைவிட அதிகமாக வாக்குறுதியை யார் கேட்டீர்களோ, அவர்களை அதிகமாக மதிப்பவன் என்று முறையிலே உங்களுக்கு ஜனநாயக ரீதியாகச் சொல்ல விரும்புகிறேன். இந்த 100 கோடி ரூபாய் இந்த முயற்சிக்காக எவ்வளவு பங்கீடு தரப்பட வேண்டுமென்று அறிவிக்கப்பட்டதோ, அது தரப்பட்டு விட்டது என்பதும், அதற்கான இடம் பார்வையிட்டு விட்டது என்பதும் விரைவில் அங்கே அடிக்கல் நாட்டுவிழா நடைபெறும் என்பதும் உங்களுக்கு நான் தருகின்ற செய்தியாகும்.

இந்த நவீன மாநில நூலகம் கட்டுவதற்கு மைலாப்பூர் - திருவல்லிக்கேணி வட்டம், கோட்டூர் கிராமத்தில் எட்டு ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு பள்ளிக் கல்வித் துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த இடத்தில் நவீன நூலகம் கட்ட, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கட்டட வடிவமைப்பாளர்களிடம் விண்ணப்பங்கள் கோரியதில், 23 நிறுவனங்கள் கட்டடத்தை வடிவமைக்க விருப்பம் தெரிவித்தன. அவர்களில் தகுதி வாய்ந்த ஒன்பது கட்டிட வடிவமைப்பாளர்கள் மாநில நூலகத்திற்கான கட்டட வடிவமைப்பினை உருவாக்கத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். இந்த ஒன்பது கட்டிட வடிவமைப்பாளர்கள் தயரித்து அளிக்கும் மாதிரி வடிவமைப்புகளில் சிறந்த வடிவமைப்பு இம்மாத இறுதிக்குள் தேர்வு செய்யப்பட்டு நூலகக் கட்டடத்தின் கட்டுமானப் பணி விரைவில் தொடங்கப்படும். இதுதான் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவிருக்கின்ற நூலகத்தின் அறிவிப்பு.

இதைப் போலவே, மற்றொன்று 'புத்தக பூங்கா'. இதுவும் 2007-2008 நிதிநிலை அறிக்கையில் ''புத்தகப் பூங்கா அமைத்திட அரசே நிலம் வழங்கும்' என்று அறிவித்தோம். அந்த அறிவிப்பைச் செயலாக்குவதற்காக புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தினரால் இடத் தேர்வு நடைபெற்று வருகிறது. இடத்தேர்வு முடிந்ததும் அந்த இடத்தை புத்தகப் பூங்கா அமைத்திட அரசு வழங்கும் என்பதையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆக வாக்குறுதிகள் ஒன்றிரண்டு நிறைவேற்றப்பட்டு விட்டன. மற்றவை நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அடுத்த புத்தகப் பூங்கா நிகழ்ச்சி நடைபெறும்போது, அடுத்தமுறை நாம் சந்திக்கின்ற நேரத்தில் அந்தக் கட்டிடங்களுடைய - அந்த அமைப்புகளுடைய திறப்பு விழாக்களும் நடந்திருக்கும் அல்லது அவைகளின் ஆண்டுவிழாக்கள் நடைபெறுகின்ற நேரமாக அவை இருக்கும் என்பதை நான் உங்களுக்கு தெரிவித்துக் கொண்டு இன்றைக்கு இங்கே நடைபெறுகின்ற இந்த இனிய விழாவில் பரிசு பெற்றவர்கள் ஐந்து பேருக்கும் என்னுடைய இதயமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்து, இன்றைய நிகழ்ச்சி உங்களை ஊக்கப்படுத்துகின்ற நிகழ்ச்சி - பரிசு பெற்றுவிட்டோ ம், ஆகவே இத்துடன் நாம் எழுதுவதை நிறுத்திக் கொள்வோம் என்றில்லாமல் மேலும் மேலும் எழுத வேண்டும். மேலும் மேலும் ஊக்கப்படுத்துகின்ற எழுத்துக்களை மக்களுக்குத் தர வேண்டும் என்று அவர்களை யெல்லாம் கேட்டுக் கொண்டு - தம்பி காந்தி கண்ணதாசன் குழுவினர் இந்த அமைப்பை இன்னும் நேர்த்தியாக நடத்துகின்ற அளவிற்கு இந்த அரசின் துணை எந்த அளவிற்குத் தேவையோ அந்த அளவிற்கு வழங்கப்படும் என்ற உறுதியையும் தெரிவித்து விடைபெறுகிறேன்.

தொகுப்பு Published on 9th Jan, 2008
 


மேலும்