| தெற்காசிய நாடுகளின் பெண்குழந்தைகள் |
சிறப்புப்பார்வை |
| கிருஷ்ணப்ரியா |
|
ஒரு கண்ணில் வெண்ணெய் மற்றொன்றில் சுண்ணாம்பா?
பிறந்த குழந்தை பெண் என்று தெரிந்ததும் பெரும்பாலானவர்களின் முகம்
வாடித்தான் போகிறது. பெற்ற தாயே தன் குழந்தையைக் கொல்லத் துணிகிறாள்
என்றால், சமூகத்தில் பெண் பிள்ளைகளின் மதிப்பைப் பற்றி சொல்ல
வேண்டியதில்லை. உணவு, கல்வி, வேலை வாய்ப்பு, திருமணம் என்று
தொடர்ந்து பல்வேறு நிலைகளிலும் அவள் போராட வேண்டியுள்ளது. பாலியல்
வன்முறை, குழந்தை விபச்சாரம், தக்க வயதுக்குக்கு முன்னரே
பிரசவித்தல் போன்ற பல தொல்லைகளுக்கு, நம்முடன் பிறந்த பெண்
பிள்ளைகள் இலக்காகிறார்கள். இன்றைய பொருளாதார மற்றும் சமுதாய
நிலையில் பெண்கள் மிகவும் தாழ்ந்தும், புறந்தள்ளப்பட்டும்,
வாழ்வதற்கான உரிமை கூட மறுக்கப்பட்டும் தான் பிழைத்துக்
கிடக்கிறார்கள்.
ெண்களை முன்னேற்றுவதற்குப் பெண் குழந்தைகளை மையப்படுத்தி வேலை
செய்ய வேண்டும் என்ற கருத்தை இந்தியா உள்பட சில நாடுகள் ஏற்றுக்
கொண்டு செயல்படத் தொடங்கியுள்ளன. 1987-ம் ஆண்டே தெற்காசிய நாடுகளின்
(saarc) கூட்டத்தில் 1990- ஆம் ஆண்டைப் பெண் குழந்தைகளுக்கான
ஆண்டாகக் கொண்டாடுவது என்று தீர்மானிக்கப்பட்டது. அதே போல 1991
முதல் 2000 வரையிலான ஆண்டைப் பெண் குழந்தைகளுக்கான 'சார்க்
பத்தாண்டு' என்று கொண்டாடுவது என முடிவு செய்யப்பட்டது.
1990-ம் ஆண்டு உலகம் முழுவதும் உள்ள நிலையை ஆராய்ந்து வந்த அறிக்கை
(world summit) பெண் குழந்தைகளின் வாழ்க்கை, பாதுகாப்பு, வளர்ச்சி
போன்ற துறைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தியது.
இந்தியா தனது ஏழாவது ஐந்தாண்டுத் திட்டம் தொடங்கிய காலத்திலிருந்து
பெண் குழந்தைகளுக்கென தனி கவனம் செலுத்தி வருகிறது.
இப்போது ஆண்- பெண் விதிகாச்சாரம் குறைந்து வருகிறது. அதே நேரம் பெண்
சிசுக்கொலை மேலும் அதிகரித்து வருகிறது. பெண் முன்னேற்றத்துக்குத்
தடையாக இருக்கும் காரணங்களை ஆராயந்த போது, கிடைத்தவை:
பெண் குழந்தைகளுக்கு சத்தான ஆகாரமின்மை மற்றும் ஆரோக்கியமின்மை
பள்ளிக்கூடம் போகாத பெண் குழந்தைகளுக்குப் படிப்பதற்கான
வாய்ப்பின்மை பெண் குழந்தைகளுக்கு அவர்கள் உரிமை குறித்தோ, அவர்கள்
வளர்ச்சிக்காக அரசு தீட்டியிருக்கும் திட்டங்கள் குறித்தோ
சொல்வதற்குச் சரியான ஊடகம் இல்லாமை. இந்தக் கண்டுபிடிப்புகளின்படி,
'பெண் குழந்தைகளின் வாழ்வுக்கான உரிமை, பாதுகாப்பு, வளர்ச்சி '
என்ற திட்டத்தை 1992- ஆம் ஆண்டு அரசு நடைமுறைப்படுத்தியது. இத்
திட்டம், பெண் குழந்தைகளுக்குச் சம உரிமை, பட்டினி, எழுத்தறிவின்மை,
அறியாமை மற்றும் பாலியல் சுரண்டல் ஆகியவற்றிலிருந்து விடுதலையை
முன்னிறுத்துகிறது.
கருக்கலைப்பு மற்றும் சிசுக்கொலை
ெண் குழந்தைகள் பிறந்தால், அவள் வயதுக்கு வந்ததும் சடங்கு,
திருமணம், அவளின் முதல் பிரசவம் போன்றவற்றுக்காக ஏராளமாகச் செலவு
செய்ய வேண்டியுள்ளது என்பது போன்ற காரணங்களுக்காகப் பெண் குழந்தை
என்று தெரிந்ததும் கருவிலேயே கலைப்பது, அல்லது பிறந்தவுடன்
கள்ளிப்பால் கொடுத்தோ, நெல் மணிகளைப் புகட்டியோ, மூச்சுத் திணறச்
செய்தோ கொல்வது போன்ற கோரமான செயல்கள் நடைமுறையில் உள்ளன.
மத்திய அரசு 1994- ஆம் ஆண்டு கருவில் உள்ள குழந்தையைக் கண்டறியும்
முறையை எதிர்த்துச் சட்டம் கொண்டு வந்துள்ளது. இச் சட்டம் 1996-ம்
ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் நடைமுறையில் உள்ளது. இதன் படி தகுந்த
மருத்துவ ஆலோசனையில்லாமல் கரு இனம் கண்டறியும் சோதனை செய்தால், தாய்,
அவள் குடும்பத்தினர், குறிப்பிட்ட மருத்துவர், சோதனைக் கூடத்தினர்
முதலியவர்கள் தண்டனைக்குள்ளாவார்கள்.
பெண் குழந்தைகள் நிலை உயர்வதற்காக , 1997-ம் ஆண்டு அரசு 'பாலிகா
சம்ரிதி யோஜனா' என்ற திட்டத்தை அறிவித்துள்ளது. பெண் குழந்தைகள்
மேல் அவள் தாய், குடும்பம் மற்றும் சமூகத்தினருக்கு உயர்வான மதிப்பை
ஏற்படுத்துவதற்கு இத் திட்டம் முயல்கிறது. இத் திட்டத்தின் ஒரு
பகுதியாக, வருமானக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பத்தில் பெண்
குழந்தை பிறந்தால், அவள் தாய்க்கு 500 ருபாய் அரசின் பரிசாகக்
கொடுக்கப்படுகிறது.
பெண் குழந்தைக் கல்வி
பெண் குழந்தைகளின் மிகவும் மோசமான நிலை தொடர்வதற்கு, கல்வியின்மை
தான் முக்கியமான காரணம். நமது சமூகத்தில் ஆண் குழந்தைகளுக்குத் தான்
கல்வியில் முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. பெண் குழந்தைகளை விட
வயதில் இளையவனாக இருக்கும் ஆண் குழந்தையைத் தான் பள்ளியில்
சேர்ப்பார்கள். ஆண் குழந்தை படித்து, சம்பாதித்தால் வீட்டிற்குக்
கொடுப்பான். பெண் குழந்தைகளைக் கஷ்டப்பட்டு படிக்க வைத்தாலும்,
அவர்கள் திருமணம் ஆனதும் வேறு வீட்டுக்குப் போய் விடுவாளே! என்ற
காரணத்துக்காகவும், வீட்டு வேலைகளைப் பகிர்ந்து கொள்ளவும்,
கைப்பிள்ளையைக் கவனிக்கவும் ஆள் வேண்டும் என்பதற்காகவும் பெண்
குழந்தைகள் படிப்பு பாதியிலேயே நிறுத்தப்படுகிறது.
இவற்றைச் சீர் செய்ய அரசு,பெண் கல்வி குறைவாக உள்ள ஒவ்வொரு
மாவட்டத்திலும் மாவட்டத் தொடக்கக் கல்வித் திட்டம்
அறிமுகப்படுத்தப்பட்டு, பெண் குழந்தைகளுக்குச் சிறப்பு கவனம்
செலுத்தி வருகிறது. முழு எழுத்தறிவுத் திட்டத்திலும்,
பெரும்பான்மையான திட்டங்களில், பெண் குழந்தைகளுக்கு முன்னுரிமை
கொடுக்கப்படுகிறது. இதே போலவே பல மாநிலங்களில் பெண் குழந்தைகளுக்கு
இலவசக் கல்வி, புத்தகம், சீருடை, ஊக்கத் தொகை போன்றவை
கொடுக்கப்படுகின்றன. 'பாலிகா சம்ரிதி யோஜனா' திட்டப்படி
வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பத்திலிருந்து வரும் பெண்
குழந்தைகளுக்கு ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்க
ஆண்டுதோறும் ஊக்கத்தொகை கொடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
தொடக்கக் கல்வி உரிமையை, அடிப்படை உரிமையாகச் சட்டத்தில் கொண்டு
வரவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
பெண் குழந்தைத் தொழிளாளர்கள்
குடும்பத்தில் உள்ள நபர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வருமானம் கூடும்
என்ற காரணத்தால் சிறு வயதிலேயே குழந்தைகளை வேலைக்கு அனுப்பி
விடுகிறார்கள். ஆபத்தான, கடின வேலைகளில் ஈடுபட்டாலும் கூட குழந்தை
என்ற காரணத்தால், கிடைக்கும் சம்பளமும் குறைவானதுதான். கல்வி கற்க
வேண்டிய காலத்தில் வேலைக்குச் செல்ல வேண்டியிருப்பதால், தெரிந்தோ
தெரியாமலோ, இவர்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்துக்கான பாதைகளை மூடி
விடுகிறார்கள். பெண் குழந்தைகளைப் பொருத்த வரை சத்தான
ஆகாரமின்மையாலும், கடினமான உடல் உழைப்புக் காரணமாகவும் சக்தியற்று,
பிரசவ காலத்திலும், எஞ்சிய காலத்திலும் மிகுந்த துன்பத்துக்கு
ஆளாகிறாள்.
பல திட்டங்கள் மூலமாகப் பெற்றோரிடமும், சமூகத்திலும் பெண் குழந்தைத்
தொழிலாளர்களுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்த அரசு முயன்று
வருகிறது. முறை சாராக் கல்வித் திட்டம், திறந்த வெளிப் பள்ளிகள்,
தொழில் சார்ந்த கல்வி போன்ற பல திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
குழந்தைத் தொழிலுக்கு எதிராகப் பல சட்டங்களையும் அரசு இயற்றியுள்ளது.
பெண் குழந்தைகள் பாலியல் வன்முறைக்குள்ளாதல்
பெண் குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகளுக்குச் சிகரமாக, ஏதும் அறியாப்
பருவத்திலேயே, அவள் (பெரும்பாலும் மிகவும் அறிமுகமான நபர்கள் மூலம்)
பாலியல் வன்முறைக்கு இலக்காகிறாள். இங்கு சமூகத்தில் ஜாக்கிரதையாக
கட்டிக் காக்கப்படும் தந்தை, அண்ணன், தாத்தா என்ற உறவு முறைகள் கூட
இதற்குத் தடையல்ல. மனதளவில் குழந்தைகளுக்குப் பெரும் பாதிப்புகளை
ஏற்படுத்தும் இது போன்ற வன்செயல்கள் தற்போது அதிகரித்து வருகின்றன.
பெண் குழந்தைகளைக் கட்டாயப்படுத்தி விபச்சாரத்தில் ஈடுபடுத்தும்
இரக்கமில்லாத செயல்களும் திரைமறைவில் நடந்து கொண்டிருக்கின்றன.
குழந்தைப் பருவத்திலேயே திருமணம்
சில சமூகத்தினர், இன்றளவும் சிறு வயதிலேயே குழந்தைகளுக்குத்
திருமணம் செய்து வைத்து விடுகின்றனர். மனதளவிலும், உடல் ரீதியாகவும்
23 வயது தான் திருமணத்திற்கு ஏற்ற வயது என்று மருத்துவர்கள்
கூறுகிறார்கள் என்ற போதும் , திருமணத்துக்குக் குறைந்த பட்சம் 18
வயது நிரம்பியிருக்க வேண்டும் என்று சட்டம் வரையறுத்துள்ளது.
வாழ்வதற்கான உரிமையே இல்லாத போது, பெண்கள் தங்கள் கணவனைத்
தேர்ந்தெடுக்கும் உரிமையைப் பற்றி யோசிக்கக் கூடத் திறனற்று
இருக்கிறாள்.
உடல் நலம் மற்றும் சத்தான உணவு
பல குடும்பங்களில் பெண் குழந்தைகளின் உடல் நலன் குறித்துக்
கவலைப்படுவதே இல்லை. பெண் குழந்தைகளுக்கு சத்தான உணவு
கொடுக்கப்படாததற்கு வறுமை மட்டும் காரணமல்ல. பெண் குழந்தை தானே
என்ற அலட்சியப் போக்கு குடும்பத்தில் நிலவுவதே காரணம். போதுமான
மதிப்பு பெண் குழந்தைகளுக்கு, சமூகத்திலோ, குடும்பத்திலோ,
பெற்றோரிடத்திலோ கூடக் கிடைப்பதில்லை.
பிறந்ததுமே பாலூட்டுவதில் கூட பெண் என்ற வித்தியாசம்
பார்க்கப்படுகிறது. அது போலவே வீட்டில் ஆண்கள் (உடன் பிறந்த தம்பி
வரை) சாப்பிட்ட பிறகே, பெண் குழந்தைகள் சாப்பிட வேண்டும் என்ற
எழுதப்படாத விதியுள்ளது. உணவு, உடை போன்றவற்றைத் தேர்ந்தெடுக்கும்
வாய்ப்புக் கூட அவளுக்கு மறுக்கப்படுகிறது. உண்மையில், மாதவிடாய்,
பிரசவம் போன்ற நிலைகள் பெண் வாழ்க்கையில் உள்ளதால், அவளுக்கு ஆண்களை
விட சத்தான உணவு உட்கொள்ள வேண்டிய தேவையுள்ளது. இன்று மருத்துவ
அறிக்கைப்படி சரியான உணவு சாப்பிடாததால், பெரும்பாலான பெண்
குழந்தைகள் உயரத்திலும், எடையிலும் தங்களுக்கான முழு அளவை
எட்டுவதேயில்லை.
பல திட்டங்களை அரசு கொண்டு வந்தாலும் ஒவ்வொரு தனி மனிதனின் மன
மாற்றமே இத் திட்டங்களை வெற்றியடையச் செய்யும். அன்பிலோ, அறிவிலோ
ஆணுக்கு எந்த வகையிலும் பெண் குறைந்தவளில்லை என்பதை சமூகம் முழு
அளவில் ஏற்றுக் கொள்ள வேண்டும். பெண் என்பவள் உயிர் என்பதையும்
அடுத்த சந்ததியினர் பூமியில் காலடி எடுத்து வைக்கக் காரணமாக
இருப்பவள் என்பதையும் உணர்ந்து அவளுக்கான உரிமைகளை அவளுக்குக்
கொடுக்க வேண்டும். பெற்ற தாயே பெண் குழந்தைக்கு எதிராக இருக்கும்
அவலமான நிலை தொடராமல் தடுக்க, போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட
வேண்டும். ஒவ்வொரு குடும்பமும் தங்கள் பெண் குழந்தைகளுக்கு,
அவளுக்கான மதிப்பைக் கொடுக்க வேண்டும். ஒட்டு மொத்த சமுதாய
மாற்றத்திற்கு, ஒவ்வொரு குடும்ப மாற்றம் தான் அடிப்படை. இது வரை
கவனத்துக்கே வராமல் நம் குடும்பத்தில் நிலவும் பால் வேற்றுமையைக்
களைவோம். சுய சிந்தனைக்கு வழிவகுக்கும் பெண் கல்வியை முழு வீச்சில்
ஆதரிப்போம்.
தொகுப்பு
|