தமிழ்
 
 
 
ஆர்வி என்ற ஆர். வெங்கட்ராமன். சமூகம்
கேடிஸ்ரீ  
1945முதல் 1975க்கு இடைப்பட்ட முப்பதாண்டுக் காலத்தைச் சிறுவர் இலக்கிய வரலாற்றில் சிறுவர் பத்திரிகைகளின் பொற்காலம் எனலாம். ஏராளமான தரமிக்க சிறுவர் பத்திரிகைகள் இந்தக் காலக்கட்டத்தில்தான் தோன்றி மறைந்தன. இந்த முப்பதாண்டு காலத்தில் தமிழ் படிக்கும் சிறுவர் மனதைக் கொள்ளை கொண்ட இதழ்களுள் சிறப்பான இடத்தை வகித்த பெருமைக்குரியது 'கண்ணன்' இதழ் ஆகும்.

'கண்ணன்' இதழை சிறுவர் உள்ளங்களில் நிலைக்க வைத்த பெருமை ஆர்வி என்கிற ஆர். வெங்கட்ராமன் அவர்களையே சாரும்.அந்தளவிற்கு 'கண்ணன்' இதழில் அறிஞர் பெருமக்கள், புகழ் பெற்ற கல்வியாளர்கள், நாடு போற்றும் தலைவர்கள்,பெயர் பெற்ற கதாசிரியர்கள், பல துறையைச் சேர்ந்த கலைஞர்கள், பள்ளியாசிரியர்கள் என்று பலரையும் குழந்தைகளுக்காக எழுத வைத்து கண்ணனுக்கு அழகுக்கு அழகு சேர்த்த பெருமை இவரையே சாரும்.

ஆர்வி, ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு தமிழில் தரமான சிறுகதைகள், நாவல்கள் ஆகியவற்றை எழுதி தனக்கென தனிபாணியை உருவாக்கி நடைப்போட்டவர். நாடறிந்த கதாசிரியர்: நாவலாசிரியர்; 'கண்ணன்' சிறுவர் இதழை நடத்தியவர். அன்று இளம் எழுத்தாளர்களை இனம் கண்டு அவர்களின் படைப்பாற்றலை வளர்த்தவர் என்ற பெருமைப் பெற்றவர்.

தேசிய இயக்கத்தில், சுதந்தரப் போராட்டத்தில், காந்தீய சித்தாந்தங்களில் பற்றும் ஈடுபாடும் கொண்டு விளங்கியவர் ஆர்வி. அன்று வெள்ளையர் ஆட்சிக்காலத்தில் தனிநபர் சத்தியாகரகத்தில் ஈடுபட்டதால் இரு மாதம் சிறைய வாசம் கண்டவர்.

'கண்ணன்' சிறுவர் இதழ் தொடங்குவதற்கு முன்பு 'கலைமகள்' பத்திரிகையில் ஆசிரியர் குழுவில் பணியாற்றிக் கொண்டிருந்தார் ஆர்வி. அன்றைய காலக்கட்டத்தில் பெரியவர்களுக்கான இதழ்களும் அதிகளவில் வெளிவந்துக் கொண்டிருந்தன. குழந்தைகளுக்காக அதிக அளவில் பத்திரிகைகளில் வராத நிலையில் சிறுவர்களுக்கான இதழ் ஒன்றை தொடங்க வேண்டும் என்ற எண்ணம் ஆர்வி மனதில் உதயமாக, அதன் விளைவு 'கண்ணன்' என்ற பெயரில் சிறுவர்களுக்கான இதழ் உருவானது.

'கண்ணனில்' ஆர்வி ஏராளமான சிறுகதைகளையும், சித்திரக்கதைகளையும், தொடர்கதைகளையும் மற்றும் நாவல்களையும் எழுதினார். இவரின் எழுத்துக்கள் வாசகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.

''சிறுவர்களுக்காக எத்தனையோ இதழ்கள் வந்திருக்கலாம். ஆனால், 'கண்ணன்' போல் சிறுவர் இலக்கியத்தைச் செழிக்க வைத்து, 22 ஆண்டுகள் விழுது பரப்பிச் சிறப்போங்கி நிலைத்த ஓர் இதழ் நேற்றும் வந்ததில்லை; இன்றும் வரவில்லை!'' என்று ஆர்வியின் 'கண்ணன்' இதழுக்கு புகழாரம் சூட்டுகிறார் இலக்கியவீதி இனியவன்.

நவீன அச்சு வசதிகள் இல்லாத அந்தக் காலத்தில், இப்படிப் பலரும் பாராட்டும் வண்ணம் சாதனைப் படைக்கச் செய்தவர் ஆர்வி. புகழ் நிறைந்த எழுத்தாளர்களை நம்பிப் பத்திரிகை நடத்தாமல், புதிய புதிய எழுத்தாளர்களை இனம் கண்டு வளர்த்தெடுத்தவர் ஆர்வி.

அந்த வகையில் இளம் படைப்பாளிகளின் வளர்ச்சி இதழுக்கும், இதழின் வளர்ச்சி இளம் படைப்பாளிகளுக்கும் வளம் சேர்த்தது என்றால் அதுமிகையல்ல.

எந்த சபையில் அமர்ந்திருந்தாலும், ஆர்வியிடம் ஒரு தனித்துவம் இருக்கும் . வெற்றிலைச்சிவப்புடன் கூடிய இதழ்களினூடே எப்போதும் உயிர்ப்புடன் துலங்கும் அழகிய புன்னகை; இதமான பேச்சு; சாதி மதப் பாகுபாடில்லாத பண்பு. இதுதான் ஆர்வி.

இப்படி எல்லோராலும் அறியப் பட்ட ஆர்வி அவர்களின் சிறுவர் இலக்கியப் புதினங்களை கையில் எடுத்துக் கொண்டு அதனை விரிவாகவும், சுவையாகவும் ஆய்வு செய்து 'சிறுவர் இலக்கியத்தில் ஆர்வி படைத்த கண்ணன் நாவல்கள்' என்ற பெயரில் நூலாக்கியிருக்கிறார் டாக்டர் ஈ.எஸ். ஹரிஹரன். டாக்டர் ஹரிஹரன் வேறுயாருமல்ல.. ரேவதி என்ற புனைபெயரில் குழந்தைகளுக்கான ஏராளமான கதைகளையும், நாவல்களையும் எழுதிய குழந்தை குழந்தை எழுத்தாளர் ஆவார்.

சமீபத்தில் புதுக்கோட்டையில் நடைபெற்ற 'வள்ளியப்பா இலக்கிய வட்ட'த்தின் குழந்தைக் கவிஞர் கலை இலக்கியப் பெருவிழாவில் இந்நூல் வெளியிடப்பட்டது.

குழந்தை எழுத்தாளர் ரேவதி ஆர்வியின் நாவல்கள் குறித்து ஆய்வு செய்துள்ளது இன்றைய காலத்தின் அவசியமும்கூட. இன்றுள்ள புத்தகப் பிரியர்களுக்கு பல துறை ஆற்றலாளரான ஆர்வியை பற்றி அறிந்து கொள்ள - உணர்ந்து கொள்ள - 'சிறுவர் இலக்கியத்தில் ஆர்வி படைத்த கண்ணன் நாவல்கள்' என்ற இந்நூல் பயன்படும் என்றே சொல்லலாம்.

மொத்தம் 14 உள்ளுறைகளை கொண்டுள்ளது இந்நூல். ஆர்வி அவர்களின் அசட்டுப்பிச்சு, சைனா சுசூ!, ஐக்கு, ஐக்கு துப்பறிகிறான், சந்திரகிரிக் கோட்டை, காளி கோட்டை இரகசியம், புதிய முகம், ஜம்பு, காலக் கப்பல்,ஒருநாள் போதுமா?, லீடர் மணி ஆகிய நாவல்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த பதினொரு நாவல்களின் சிறப்புகளைப் பல்வேறு கோணங்களில் ஆய்ந்து, ஒவ்வொன்றும் எந்தெந்த வகைகளில் சிறப்புடையன என்பதை ரேவதி அவர்கள் ஆய்வு செய்துள்ளது சிறப்பு. மேலும் இவரின் நாவல்களின் கதைக்கரு, களங்கள், உத்திகள், தொடுப்பு, முடிப்பு போன்ற எல்லாமே ஒள்றுக்கொன்று மாறுபட்டனவாய் இருந்தாலும் இவற்றினுள் ஒரு பொதுத்தன்மை ஊடுருவியிருப்பதாக இருக்கிறது. முக்கியமாக நகைச்சுவை விச்சின் அளவு மாறுபட்டாலும் எல்லாப் படைப்புகளிலுமே அதன் உயிர் தன்மையை நாவல்களை படிப்பவர்கள் அனுபவிப்பது சிறப்பு.

நகைச்சுவை, குடும்பப் பாசம்,. நட்பு, துப்பறிதல், அறிவியல்,எதிர்பார்ப்பைத் தூண்டும் நிகழ்வுகள், உண்மையான நிகழ்விடங்கள், வட்டார மணம், விளையாட்டு, திரைப்படங்களின் தாக்கம் என்று அனைத்து வகையான விஷயங்களையும் தொட்டுச் செல்கின்றது இவரின் நாவல்கள்.

மொத்தத்தில் ஆர்வியின் அனைத்து நால்வகளுமே அறிவுக்கு விருந்தாகி நல்வழிகாட்டும் ஓர் அறிவுரையை உணர்த்துவனவாகவே அமைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ஆங்காங்கே சிதறிக்கிடக்கும் ஆர்வியின் சிறுகதைத் தொகுப்புகள், சித்திரக்கதைகள், மொழிபெயர்ப்புகள் ஆகியவை சிறுவர் இலக்கிய ஆர்வலர்களுக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கும் புதையல் போன்றவை. இவைகள் தேடப்பட்டு ஆய்வு செய்யப்பட்டால் சிறுவர் இலக்கிய வரலற்றில் கால் நூற்றாண்டு கால சிறுகதை, சித்திரக்கதை, நாடகம், அறிவியல், பாடல்கள் அகிவற்றின் வளர்ச்சியைக் கணக்கிடச் சிறந்த அளவுகோலாய் அது இருக்கும்.

171 பக்கங்கள் கொண்ட இந்நூலை பழனியப்பா பிரதர்ஸ் பதிப்பகம் பதிப்பித்துள்ளது இதன் விலை ரூ. 55 ஆகும்.

தொகுப்பு March 5th, 2008
 

மேலும்

மேலும்