அடையாறு
கேட் ஹோட்டலில் உள்ள 'தக்ஷின்' பகுதிக்கு இரவு
நேரத்தில் செல்பவர்கள் ஒரு கணம் புல்லாங்குழல் இசையின்
ஓசையை கேட்காமல் தாண்டிசெல்லமுடியாது. விரும்பிக்
கேட்கும் பாடல்களை, ராகங்களை, மெல்லிசைப் பாடல்களை தனது
புல்லாங்குழலில் வாசித்து அனைவரின் மனதையும் கொள்ளை
கொள்கிறார் சிவகுமார் என்கிற ஓர் இளைஞர். அடையாறு
பார்க் ஷெரட்டன் ஹோட்டலின் இரவு பாண்ட்டை தொடர்ந்து 15
வருடங்களுக்கு மேலாக பொறுப்பேற்று நடத்துகிறார்
சிவகுமார்.
தமிழகத்தில் தஞ்சாவூர் பக்கத்தில் சுமார் 60 கிலோ
மீட்டர் தூரத்தில் உள்ள தலைஞாயிறு என்கிற அழகிய
சிற்றூரில் பிறந்து திருக்குவளை அருகில் உள்ள மடப்புறம்
கிராமத்தில் வளர்ந்து வந்த சிறுவன் சிவகுமார்
பிறவியிலேயே பார்வையற்றவர் அல்ல.
''சிறுவயதில் பள்ளிக்கூடத்தில் இரண்டு
பையன்களுக்குள் சண்டை ஏற்பட்டு ஒருவருக்கொருவர் கல்லால்
தாக்கிக்கொள்ள, அதில் ஒரு கல் தற்செயலாக அங்கு நடந்து
வந்துக்கொண்டிருந்த என் கண் மேல்பட்டு விழுந்தது. அதில்
என்னுடைய விழித்திரை பாதிக்கப்பட்டது. பல டாக்டர்களிடம்
சென்று பரிசோதித்தோம்...ஆனாலும் அந்த கண்
பார்வையிழந்தது இழந்ததுதான்... டாக்டர்கள் ஆபரேஷன்
செய்தாலும் பார்வை திரும்பாது என்றுகூற, தொடர்ந்து
எந்தவித சிகிச்சையும் அளிக்காமல் இருந்துவிட்டார்கள்..
நாளாக நாளாக என்னுடைய மற்றொரு கண்ணும் பார்வை மங்கி
கொண்டு வந்து ஒரு வருடத்தில் மொத்த கண்பார்வையும்
போய்விட்டது... இதனால் என் படிப்பும் பாதியிலேயே
நின்றது..'' கண்பார்வை இழந்த சம்பவத்தை
நினைவுகூர்ந்தார் சிவகுமார்.
வெறும் ஆறாம்வகுப்பு வரை படித்திருந்த இவர்
தொடர்ந்து படிக்க ஆசைப்பட்டதால் காமராஜர்
பல்கலைகழகத்தில் பிரெய்லி முறையில் தன்னுடைய 10வது
படிப்பை முடித்தார். இதற்கிடையில் இவரின் எதிர்காலம்
குறித்து கவலைக்கொண்ட பெற்றோர் இவரை அழைத்துக் கொண்டு
காஞ்சி பரமாச்சர்யாளிடம் சென்று இவர் நிலைமையை கூறிய
போது, பெரியவர் , ''கர்மவினை காரணமாக கண் பார்வை
போயிடுத்து... எந்த மருத்துவமும் குணப்படுத்தாது...
கவலைப்பட வேண்டாம்... மூங்கில் அவனைக் காப்பத்தும்''
என்று சொல்லி அனுப்பி வைத்தார்.
சிவகுமாரின் தாய் இயற்கையிலேயே நன்றாக பாடக்கூடியவர்.
அவரின் இசை ஆர்வம் சிறுவன் சிவகுமாரையும்
தொற்றிக்கொள்ள, தன் தாயிடமே கர்நாடக இசையை கற்க
ஆரம்பித்தார். இளம்பிராயத்தில் வானொலியில் வரும்
கச்சேரிகளும், சினிமா பாடல்களையும் கேட்டு கேட்டு தன்
இசையை மெருகேற்றிக்கொண்டார். புல்லாங்குழல் மாலி இவரின்
தாய்க்கு அத்தை மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில் இவரின் அண்ணி இவரின் இசை ஆர்வத்தை
அறிந்து சென்னையில் உள்ள இசை இயல் நாடகக் கல்லூரியில்
சேர்த்தார். அப்போது இவருக்கு 14 வயது. இவர்
இசைக்கல்லூரியில் முதலில் கற்றுக் கொண்டது வயலின்
இசைக்கருவியைத்தான்.
''1974ல் முதன்முதலாக நான் சென்னைக்கு வந்தேன்..
இங்கு இசைக்கல்லூரியில் வயலின் வாசிக்க கற்றுக்கொள்ள
வேண்டும் என்று நினைத்து அதற்கான விண்ணப்பபடிவத்தை
பூர்த்தி செய்து அனுப்பினேன். அதில் தேர்ச்சியும்
பெற்று வயலின் வகுப்பில் சேர்ந்தேன். அப்போது டி.என்.
கிருஷ்ணன்தான் இக்கல்லூரியின் முதல்வராக இருந்தார்.''
என்கிறார் சிவகுமார்.
ஆனால் இவரால் தொடர்ந்து வயலின்
கற்றுக்கொள்ளமுடியவில்லை. வயலினிலிருந்து
புல்லாங்குழலுக்கு மாறினார். அன்று முதல்
புல்லாங்குழல்தான் தன் உயிர் மூச்சு என்று வாழ்ந்து
வருகிறார் சிவகுமார்.
''வயலின் கற்றுக் கொள்வதானால், தினமும் தியரி
வகுப்பினை படித்துப் பரிட்சை எழுத வேண்டும். அது
உன்னால் முடியாது... எனவே நீ புல்லாங்குழல் கற்றுக்கொள்...
புல்லாங்குழலில் வாரமொருமுறை தியரி வகுப்பைப் படித்தால்
போதும்.. என்று டி.என். கிருஷ்ணன் சார் என்னிடம்
சொன்னார்... காஞ்சி பெரியவர் அன்று சொன்னது
என்நினைவுக்கு வந்தது... ரொம்பவும் சந்தோஷத்துடன் நான்
வயலினிலிருந்து புல்லாங்குழலுக்கு உடனடியாக மாறினேன்...''
என்கிறார்.
அதன்பிறகு தொடர்ந்து டி.ஆர். நவநீதத்திடம் இசை கற்க
ஆரம்பித்தார். அவரிடம் ஒரே நாளில் சரளி வரிசை என்று
ஆரம்பித்து ஒருவருடத்திற்குள் கச்சேரி செய்யும்
அளவிற்கு வளர்ந்தார் சிவகுமார். அந்த சமயத்தில்
இவருக்கு வாத்ய விஷாரதா என்ற டிப்ளமோ பட்டம் கிடைத்தது.
இதன் பின்பு சங்கீத சிரோண்மணி பட்டம் கிடைத்தது.
தொடர்ச்சியாக அரசாங்க கலாசார ஸ்காலர்ஷிப்பை பெற்றார்.
இதன் பிறகு டாக்டர். பிரபஞ்சம் சீதாராமனிடம் 17
வருடங்கள் தொடர்ந்து இசை கற்று இன்று சிவகுமார் என்கிற
தன் பெயருடன் புல்லாங்குழலை இணைத்து உலகில் பல
இடங்களுக்கு சென்றுவருகிறார் என்றால் அதில் மிகையல்ல
என்றே சொல்லலாம்.
கர்நாடக இசை மட்டுமல்ல இந்துஸ்தானியும் கற்றுள்ளார்
சிவகுமார். இந்துஸ்தானியில் இவருக்கு குரு திரு
கிருஷ்ணா நந்தன் என்கிறார். அதேபோல் பி.எஸ். திவாகர்
மூலம் இரண்டு வருடம் சினிமா சம்மந்தப்பட்ட இசையைக்
கற்றுக்கொண்டுள்ளார்.
''1979ல் முதன்முதலாக நான் சென்னை தொலைக்காட்சியில்
வளரும் கலைஞர் வரிசையில் புல்லாங்குழல் இசையை
பாடியுள்ளேன்..அது ஜனவரி 11ம் தேதி என்று நினைக்கிறேன்...''
பெருமையுடன் சொல்கிறார் இந்த இளைஞர்.
தொலைக்காட்சி புகழ் எச். ராமகிருஷ்ணனும், அவரின்
பிள்ளைகளும் இன்று இவரின் சிஷ்யர்கள். மேலும் சென்னை
ஐ.ஐ.டி. வாளகத்தில் தனிப்பட்ட வகுப்பு எடுத்து, இதுவரை
சுமார் இரண்டாயிரம் குழந்தைகளுக்கு புல்லாங்குழல்
வாசிக்கக் கற்றுத் தந்துள்ளார்.
இந்நிலையில் ஒருநாள் புகழ்பெற்ற கடம் வித்வான்
விநாயக்ராம் இவரை காஞ்சி பெரியவரிடம் ஆசிர்வாதம் வாங்க
அழைத்துச் சென்று அவரிடம் இவரை அறிமுகப்படுத்தி
வைத்தார். அப்போது பெரியவர், ''நான் முன்பே இவனுக்கு
சொல்லியிருக்கிறேன்.. மூங்கிலால்தான் பிழைப்பான்..
கவலைப்படாதே என்று... நீ யாரையும் தேடி வேலைக்காகப்
போக வேண்டாம்... வேலை உன்னைத் தேடி வரும்...'' என்று
சொல்லி ஆசிர்வாதம் செய்தார்.
பெரியவரிடம் ஆசிர்வாதம் வாங்கி வந்த 15
நாட்களுக்குள் சிவகுமாரைத் தேடி சென்னை அடையாரிலுள்ள
பார்க் ஷெரட்டன் நிறுவனத்தினர் ஹோட்டலில் தினமும்
இசைக்கச்சேரி செய்ய இவரை தேர்ந்தெடுத்தனர். அன்று முதல்
இன்று வரை தொடர்ந்து இவர் அங்கு இசைக் கச்சேரி
செய்துக்கொண்டிருக்கிறார்.
பலத்தரப்பட்ட மனிதர்கள், பல வெளிநாட்டு மக்கள் என்று
இவரின் கச்சேரியை கேட்காதவர்கள் இல்லை என்றே சொல்லலாம்...
காலை 2 மணி நேரமும், இரவு 8 மணி முதல் 12 மணிவரையும்
தொடர்ந்து ஹோட்டலில் இசைக்கச்சேரி நடத்தி வருகிறார்...
சினிமாவிலும் தன் முத்திரையை பதித்துள்ளார்
சிவகுமார். ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா, நிழல்கள் போன்ற
படங்களில் இவரின் புல்லாங்குழல் ஒலி கேட்டது. தொடர்ந்து
சினிமாவில் புல்லாங்குழல் வாசிக்கவில்லை என்றாலும் பல
வெளிநாடுகளுக்கு சென்று கச்சேரிகளை இன்றும்
செய்துகொண்டிருக்கிறார்.
ஐரோப்பிய நாடுகள், தென் ஆப்பிரிக்கா, அமெரிக்கா
என்று பல வெளிநாடுகளுக்கு சென்று கச்சேரி செய்த
அனுபவமும் இவருக்கு உண்டு.
''என் வாழ்வில் நான் இன்று தன்னம்பிக்கையுடனும்,
சந்தோஷத்துடனும் இருக்கிறேன் என்றால் அது காஞ்சி
பெரியவரின் ஆசிர்வாதம்தான்... '' என்கிறார் சிவகுமார். |