தமிழ்
  Site Web Yahoo! India Search
 
 
 
எழுத்தும் அச்சும் சமூகம்
கேடிஸ்ரீ  
சமீபத்தில் நடைப்பெற்ற சென்னை புத்தகக் காட்சியில் சிறந்த எழுத்தாளர்களுக்கான பரிசினை பெற்ற எழுத்தாளர் மா. சு. சம்பந்தன் 'தமிழர் பதிப்பகத்திற்கு' சொந்தக்காரர். 84வயது இளைஞர். இன்றும் சுறுசுறுப்புடன், பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வரும் தமிழ் ஆர்வலர்.

ம.சு. சம்பந்தன் அவர்கள் சென்னை முத்தியாமல்பேட்டை உயர்நிலைப்பள்ளியிலும், பச்சையப்பர் கல்லூரியிலும் தனது படிப்பினை முடித்தவர். தமிழ் மேல் இவருக்கு இருந்த அளவு கடந்த பற்றின் விளைவு, பள்ளிப்பருவத்தில் பல்வேறு கட்டுரை போட்டிகளில் கலந்து பல்வேறு பரிசுகளை பெற வைத்தது. முக்கியமாக 'போர்வீரனின் வாளைவிடச் சிறந்தது எழுத்தாளனின் எழுதுகோல்'' என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை எழுதி பரிசு பெற்றது.

ஒரு லட்சம் பெறுமானமுள்ள பரிசு தொகையை முதல்வரின் கரத்தினால் பெற்றதை பெருமையுடன் நம்மிடம் நினைவுகூர்ந்த மா. சு சம்பந்தன் ''நான் ஏறக்குறைய 1940முதல் எழுத்துத்துறையில் ஈடுபட்டிருக்கிறேன். தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் பொதுச்செயலராக பணியாற்றியிருக்கிறேன். சென்னை நகரமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியிருக்கிறேன். அங்கிருந்து செனட் உறுப்பினராகவும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறேன்..'' என்று கூறத் தொடங்கினார்.

அன்று சென்னை பல்கலைக்கழக செனெட் (மூப்பரவை) உறுப்பினராக இவர் தேர்வு செய்யப்பட்டப்போது பெயர்களுக்கு முன் ஸ்ரீமான், ஸ்ரீமதி என்று அடைமொழி இட்டு வழங்குவதை மாற்றி, திரு, திருமதி என்ற தீர்மானத்தைச் சென்னை மாநகராட்சி அவையில் கொண்டு வந்து நிறைவேற்றியதையும், அதுபோல் 'அபேட்சகர்' என்று சொல்லை அடியோடு ஒழித்து 'வேட்பாளர்' என்ற சொல்லை வழக்கு சொல்லாக ஆக்கியதையும் பெருமையுடன் நினைவுகூர்ந்தார்.

'சிறந்த பேச்சாளர்கள்' என்ற தலைப்பில் பத்து சிறந்த பேச்சாளர்கள் பற்றிய நூல் ஒன்றை 1947ல் எழுதி வெளியீட்டிருக்கிறார் மா.சு. சம்பந்தன். திரு.வி.க, சேதுப்பிள்ளை, ஒளவை துரைசாமிபிள்ளை, அண்ணா, கி.ஆர், பெ, விசுவநாதன், ம.பொ.சி ஆகியோர் அதில் குறிப்பிடத்தக்கவர்கள். இந்நூலை 'தொடர்பன்' என்ற புனை பெயரில் எழுதி வெளியிட்டார்.

இந்நூல் ஒவ்வொரு பேச்சாளர்களின் பேச்சு எப்படி இருக்கும் என்பது போன்ற பல்வேறு விஷயங்களை தொட்டு சென்றுள்ளது. இந்நூலுக்கு அன்று நல்ல வரவேற்பு கிடைத்தது. இரண்டு மாதங்களுக்குள்ளாகவே சுமார் 2000 படிகள் விற்பனையாகிவிட்ட முதல் மேடைத் தமிழ் நூல் இது என்ற சிறப்பைப் பெற்றது. தற்போது 40 வருடங்களுக்கு பிறகு இந்நூல் மீண்டும் மணிவாசக பதிப்பகத்தினரால் பதிப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆக, தமிழ் அதுசார்ந்த விஷயங்களிலேயே இவரது ஆர்வம் அதிகம் வட்டமிட்டது எனலாம். இதனால் தானோ என்னவோ சிறுகதை, தொடர்கதை, நாவல்கள் போன்றவைகள் எழுதுவதில் அதிக ஆர்வம் காட்டவில்லை மா. சு. சம்பந்தன்.

ஆரம்பம் முதலே எழுத்துத்துறையே நீங்கள் உங்கள் பணியாக ஏற்றுக் கொண்டீர்களா.. அல்லது வேறு ஏதாவது பணிகளில் ஈடுபட்டிருந்தீர்களா என்றவுடன்,

''நான் அடிப்படையில் இன்டர்மீடியட் மாணவன். முதன் முதலாக நான் கன்னிமாரா நூலகத்தில் உதவியாளராகத்தான் பணிச்செய்யத் தொடங்கினேன். சில தனிப்பட்ட காரணங்களால் எனக்கு அந்தப் பணியில் அவ்வளவாக நாட்டம் இல்லை. மேலும் அன்று கன்னிமாரா நுலகத்தில் தேடி தேடி சென்றாலும் தமிழ்ப் புத்தகங்களை பார்க்க முடியவில்லை. இதனால் அந்த வேலையில் இருந்து நின்றேன். அதன் பிறகு சொந்தமாக 'தமிழர் பதிப்பகத்தை' தொடங்கினேன்...'' என்று கூறும் சம்பந்தன், இதனைத் தொடர்ந்து 'தமிழர் கழகம்' என்றோர் அமைப்பை உருவாக்கி அதன் தலைவராக இருந்து தமிழுக்கு நிறைய தொண்டாற்றியுள்ளார்.

இவரின் கை வண்ணத்தில் 'சென்னை மாநகர்', 'திருச்சி விசுவநாதம்', 'அச்சுக்கலை', 'அச்சும் பதிப்பும்', 'சிறந்த பேச்சாளர்கள்', 'சென்னை மாநகர்', திருச்சி விசுவநாதம்', 'அச்சுக்கலை', 'அச்சும் பதிப்பும்', ''தமிழ் இதழியல் வரலாறு', 'தமிழ் இதழியல் சுவடுகள்', 'தமிழ் இதழியல் களஞ்சியம்' என்று பல்வேறு நூல்கள் வெளிவந்தன. இந்த நூல்கள் அனைத்தும் ஒவ்வொரு துறையிலும் முன்னோடி நூலாக விளங்கியது மட்டுமல்லாமல் சிறந்த நூலுக்கான எடுத்துக்காட்டாக விளங்கியதும் சிறப்பு.

அன்று கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்கள் தமிழ்மொழி பயிற்று மொழியாகவும், பாடமொழியாகவும், ஆட்சிமொழியாகவும், நீதி மொழியாகவும் அரியனை ஏற வேண்டும் என்பதை வலியுறுத்தி குமரியிலிருந்து சென்னை வரை தமிழ் வழி நடைப்பயணம் ஒன்றை மேற்கொண்டார்கள். அந்த நடைப்பயணத்தில் மா.சு. சம்பந்தன் அவர்களும் கலந்து கொண்டார். இதன் விளைவால் இவருக்கு 'நடைப்பயண அரிமா' என்ற விருது ஒன்றும் வழங்கப்பட்டது.

''நான் அதிகமான புத்தகங்கள் என் பதிப்பகதிலிருந்து போடவில்லை என்பதை சொல்லிக் கொள்கிறேன். அப்பாதுரைப்பிளைளயின் 'வருங்கால தமிழகம்' , மு. வரதராசன் அவர்களின் 'கி.பி. 2000' என்ற நூல், கி.பெ.விசுவநாதம் அவர்களின் 'வானொலி பேச்சு' போனற புத்தகங்கள் எங்கள் பதிப்பகங்கள் மூலமாக பதிப்பித்தேன். இதன் பிறகு என்னுடைய புத்தகங்களான 'சென்னை மாநகரம்', சிறந்த பேச்சாளர்கள்' போன்ற நூல்கள் அதிகளவில் வெளியிட்டேன். இதன் பிறகு 'அச்சுக்கலை' என்ற நூலை வெளியிட்டேன். அதன் பிறகு 'அச்சும் பதிப்பும்' என்ற நூலை வெளியிட்டேன். இந்த நூலுக்கு தமிழ் வளர்ச்சி ஆ஡஡ய்ச்சி மன்றம் முதல் பரிசு அளித்து சிறப்பித்தது. இது இரண்டு பதிப்புகள் கண்டது. என்னுடைய நூல்களே அதிகளவில் 'தமிழர் பதிப்பகத்தில்' வெளியிடப்பட்டது...'' என்கிறார் சம்பந்தன்.

சுமார் பத்து புத்தகங்களை வெளியிட்டிருக்கும் மா. சு. சம்பந்தன் அவர்கள், கடந்த 40 ஆண்டுகளாக பல்வேறு இதழ்களில் வந்த இவரின் கட்டுரைகள் எல்லாவற்றையும் ஒன்று திரட்டி தொகுத்து தொடர்பன் கட்டுரைகள் என்று வெளியிட்டுள்ளார்.

இவருடைய இளமைக்காலங்களில் தலைநகர்த் தமிழ் சங்கம் நடத்திய அனைத்து போராட்டங்களிலும் கலந்து கொண்டு சிறைப்பட்டும் உள்ளார். மேலும் இவர் இந்தியா முழுவதும் சுற்றுப்பணம் செய்து தமிழுக்காக பல்வேறு பணிகளைச் செய்து வந்தார். இலங்கைக்கு இரண்டு முறையும், மலேசியா, சிங்கப்பூர், அந்தமான் என்று பல இடங்களுக்கும் சென்று பல்வேறு தமிழ் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தன் கருத்துகளை எடுத்து வைத்துள்ளார். உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கருத்தரங்கு - இரண்டாவது, ஐந்தாவது, ஏழாவது மாநாடுகளில் கலந்து கொண்டு உரையாற்றிய பெருமை பெற்றவர்.

இதுவரை தமிழ் எழுத்துலகில் இவர் செய்து வந்த தொண்டினை சிறப்பிக்கும் வகையில் இவருக்கு சென்னை புத்தகக் காட்சியில் சிறந்த எழுத்தாளருக்கான விருது வழங்கப்பட்டது.

''பொன்னாடை போர்த்தி ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள காசோலையும், அதனுடன் நினைவு பரிசு ஒன்றையும் எனக்கு அளித்தார்கள். முதல்வர் கலைஞர் அவர்கள் கையால் எனக்கு பரிசுகள் கிடைத்தது மனசுக்கு சந்தோஷமாகவும், நிறைவாகவும் இருந்தது.. ஏற்கெனவே ஒரு எட்டு வருடங்களுக்கு முன்பு திரு.வி.க பரிசினை கலைஞர் கைகளால் வாங்கியிருக்கிறேன். 20 ஆயிரம் ரூபாய் பரிசு அது.. அதுபோல் ஆதித்தனார் பரிசும் எனக்கு கிடைத்திருக்கிறது...'' என்று தன் விருதுகள், பரிசுகள் ஒவ்வொன்றையும் நினைவில் நிறுத்தி நம்மிடையே சொல்லிக் கொண்டு வந்தார் மா. சு. சம்பந்தன்.

இவரின் நூல் வெளியீடுகளையும், தமிழ்ப்பணிகளையும் அறிந்து, விஜிபியின் சந்தனம்மாள் அறக்கட்டளை பரிசும், டாக்டர் இரத்தினவேல் சுப்பிரமணியம் பேரில் நடந்து வரும் தமிழ் வளர்ச்சி மன்றத்தினால் 'பதிப்புக் கலைச் செல்வர்' என்ற விருதும் பாராட்டும் அளித்து சிறப்பித்துள்ளதும், தற்போது புத்தகக் காட்சியில் இவருக்கு சிறந்த எழுத்தாளர் விருது அளித்ததும் சால பொருந்தும்.

மா.சு. சம்பந்தன் அவர்கள் தமக்கு என்று ஒரு புதிய நெறியைத் தேர்ந்தெடுத்து அதில் குறிப்பிடத்தக்க வெற்றியும் பெற்றவர் என்றால் அது மிகையல்ல!

தொகுப்பு Published on March 7th, 2008
 

மேலும்

மேலும்