தமிழ்
 
 
 
வாழ்வு எனும் போராட்ட களத்தில்... சமூகம்
கேடிஸ்ரீ  
உடல் ஊனம் ஒரு குறையல்ல; மனோதிடமும், தன்னம்பிக்கையும், கொண்ட லட்சியத்தில் பிடிப்பும் இருந்தால் அந்த வானத்தைக்கூட தொட்டுவிடலாம். வானத்தை தொட்டவர்கள் அன்றும்...இன்றும் நம்மிடையே பலர் இருக்கத்தான் செய்கிறார்கள். தங்கள் குறைகளையே நிறைகளாக்கி சாதனைப்படைத்து வரும் இவர்களின் சாதனைகள் போற்றப்பட வேண்டியவை மட்டுமல்ல; போற்றி பாதுகாக்கப்பட வேண்டியவையும்கூட!

ஹெல்லன் கெல்லர், சுதா சந்திரன், 'டான்சர்' பட நாயகன் மறைந்த நடிகர் குட்டி, ஜனா எனும் ஜனார்த்தனம் என்று இந்த சாதனைப் பட்டியல் வரிசை தொடர்கிறது. இவர்களின் வரிசையில் இதோ இன்னொரு சாதனையாளர்... அந்தோணி முத்து என்றோர் இளைஞர்...

'துன்பம் வரும் வேளையில் சிரிங்க..'' என்ற வள்ளுவன் வாக்கினை மனதில் கொண்டு, வந்த துன்பத்தையே எண்ணிக் கலங்கிக் கொண்டிருக்காமல், துன்பங்களை மனத்தளவில் வென்றுவிடும் வலிமை பெற்று, லட்சியத்தில் உறுதியாக இருந்து இன்று துன்பத்தை வென்றிருக்கிறார் இவர்.

ஆம்... இசையில் துல்லியத்தை பெறுவதற்கு புதிய தொழில்நுட்பம் ஒன்றை உருவாக்கி சாதனைப் படைத்திருக்கிறார் அந்தோணி முத்து என்ற இந்த 35 வயது இளைஞர்.

இது டி.டி.எஸ், டால்பி ஸ்டீரியோ உலகம். இவற்றின் மூலம் ஒலியை மிகதுல்லியமாக கேட்க ஒருவரால் முடியும் என்றால் அந்தோணி முத்துவின் புதிய தொழில்நுட்பத்தின் மூலம் ஒருவர் இசையின் துல்லியத்தை நன்கு உணரமுடியும்.

''எல்லோரையும் போல் என்னால் பள்ளிக்கு சென்று படிக்க முடியவில்லை என்ற ஏக்கம் என்னுள் எப்போதும் இருந்துக் கொண்டே இருக்கும். சிறுவயதில் எதிர்பாராமல் நடந்த அந்த விபத்துக்கு பின்பு நான் வீட்டிலேயே அடைந்து கிடந்தேன். வெளி உலகம் எனக்கு அன்னியமாகி போன அந்தக் காலக்கட்டத்தில் எனக்கு வெளியுலகத்துடனான தொடர்பை இணைக்கும் பாலமாக அமைந்தது வானொலி பேட்டியும்.. டேப்ரிக்கார்டரும்தான்..'' என்று தன் கடந்த கால நினைவுகளை நம்மிடம் அசை போடுகிறார் அந்தோணி.

பொழுதுபோக்கிற்காக வானொலியில் பாட்டு கேட்க ஆரம்பித்த இவருக்கு டிவி மற்றும் ரேடியோ மெக்கானிசத்தின் மேல் ஓர் ஈர்ப்பு ஏற்பட்டது. அதன்விளைவு அஞ்சல் வழியில் டிவி மற்றும் ரேடியோ மெக்கானிக் பயிற்சியில் டிப்ளமோ பட்டடத்தைப் பெற்றார்.

இதனைத் தொடர்ந்து முழுமூச்சாக டிவி, ரேடியோ போன்றவைகளை பழுது பார்க்கும் பணியில் ஈடுபடத் தொடங்கினார். தினம், தினம் பாடல்களைக் கேட்டு கேட்டு இசையின் மேலும் இவருக்கு ஓர் ஈர்ப்பு ஏற்பட, வெறும் கேள்வி ஞானத்திலேயே கர்நாடக சங்கீதம் மற்றும் மேற்கத்திய இசைகளிலும் தன்னுடைய ஞானத்தை வளர்த்துக் கொண்டார். அதுமட்டுமல்ல கீபோர்டும் இவருக்கு அழகாக வாசிக்க வரும். சென்னை பல்கலைக்கழகத்தின் மூலம் இசையை கற்றுக் கொண்டார்.

சப்தஸ்வரங்களையும் துல்லியமாக கேட்டால் எப்படி இருக்கும் என்று எண்ணம் எழ, நான்கு ஆண்டுகால கடும் முயற்சிக்கு பின்பு இசைநயும், எலக்டரானிக்கையும் இணைத்து தற்போது புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கி அசத்தியிருக்கிறார்.

''எங்கள் சொந்த ஊர் திருவண்ணாமலை பக்கத்தில் உள்ள குந்தாணிசுணை என்பதாகும். நாங்கள் எங்கள் பெற்றோருக்கு 9 பசங்க.. எனக்கு 7 அக்கா ஒரு அண்ணா.. பெரிய குடும்பம் எங்களுடையது.. அப்பா விவசாயி... எல்லோரையும் போலத்தான் நானும் பிறந்தேன். சிறுவயதிற்கே உரிய விளையாட்டு குணங்கள் எனக்கும் உண்டு. ஒருநாள் என் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருக்கும் போதுதான் எனக்கு அந்த விபத்து ஏற்பட்டது. தண்ணீர் இல்லாத கிணற்றில் தவறி நான் விழ, அதன் விளைவு என் மார்புக்கு கீழ் உள்ள பகுதி முழுவதும் உணர்வுகள் அற்று போயின. அப்போது எனக்கு வயது 11. குடும்பமே என் நிலை கண்டு அதிர்ந்து போனது.. பார்க்காத வைத்தியம் இல்லை... சாப்பிடாத மருந்தும் இல்லை... அன்று வீட்டிற்குள் அடைப்பட்டவன்தான்....'' தனக்கு நேர்ந்த விபத்தினைப் பற்றி சொல்லிக் கொண்டு போகிறார் அந்தோணி முத்து.

இவரின் எல்லா தேவைகளையும் இவரது சகோதரிகள் பார்த்துக் கொள்ள.. கொஞ்சம் கொஞ்சமாக யதார்த்தமான வாழ்க்கைக்கு தன்னை தயார்படுத்திக் கொண்டுவிட்டார் இந்த இளைஞர்.

நான்குசுவற்றுக்குள் இவர் அடைந்து போனாலும், இவரின் எண்ணங்களும், சிந்தனைகளும் நான்கு திசைகளிலும் பறக்கத் தொடங்கியது. ஏதாவது செய்ய வேண்டும்.. வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற துடிப்பு ஒவ்வொரு நிமிடமும் இவரின் மனதில் ஒலிக்கத் தொடங்கியது. இவரின் விடாமுயற்சியால் உருவானது இந்த புதிய தொழிற்நுட்பம்.

இந்த புதிய தொழில்நுட்பம் எந்த வகையில் சாத்தியம்... எதை எப்படி உருவாக்கியிருக்கிறீர்கள் என்று அந்தோணியிடம் கேட்டப்போது,

''அன்று திரைப்படங்களிலும், குறுந்தகடுகளிலும் மோனோரெகார்டிங் முறை அதிகம் பயன்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து வந்தது ஸ்டீரியோ மற்றும் போனிக் முறை. இதன் மூலம் இசை கருவிகள் அனைத்தும் தனித்தனியாக, வெவ்வேறு டிராக்குகளில் பதிவு செய்யப்பட்டு, பிறகு இரண்டும் தனித்தனியாக ஸ்பீக்கரில் கேட்கப்பட்டது. இதன் மூலம் இதில் மோனோவைவிட அதிக துல்லியமான இசை கிடைத்தது. இதன் மூலம் இசையை ரசித்து கேட்க முடிந்தது. இதைவிட இன்னும் துல்லியமாக டி.டி.எஸ் மற்றும் டால்பி ஸ்டீரியோ மூலம் கிடைக்கப்பட்டது. இதன் மூலம் இன்னும் அதிகமான ஒலித் துல்லியம் கிடைத்தது. இப்போது நான் உருவாக்கியிருக்கும் புதிய முறையில் இதுபோன்றவைதான். இதில் வித்தியாசம் என்னவென்றால் அது ஒலித்துல்லியத்திற்கானது.. இது இசைத்துல்லியத்திற்கு உருவாக்கப்பட்டது என்பதே ஆகும். '' தன் புதிய தொழில்நுட்ப உருவாக்த்தைப் பற்றி நம்மிடம் விளக்குகிறார் ராஜா.

இதுப் பற்றி கொஞ்சம் தெளிவாக சொல்ல முடியுமா என்று அவரிடம் கேட்டவுடனே, மடை திறந்த வெள்ளம் போல் நம்மிடையே சொல்லத் தொடங்கினார்...

'' இந்த தொழில்நுட்பத்தின் அடிப்படையில் சப்தஸ்வரங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு ட்ராக் இருக்கிறது. உங்களுக்கு புரியும்படி சொல்ல வேண்டும் என்றால் சப்தஸ்வரங்களின் 'ஸ' என்ற ஸ்வரத்தைப் ஒருவர் பாடினாலோ அல்லது இசைக் கருவியின் மூலம் வாசிக்கின்றபோதோ அந்த ஒலி ஒரு குறிப்பிட்ட திசையிலிருந்து இதற்கென்று உள்ள ஸ்பீக்கரில் மட்டுமே ஒலிக்கும். அதுபோல் 'ரி' என்று வாசிக்கின்ற போது இந்த ஒலி மற்றொரு திசையில், மற்றொரு ஸ்பீக்கரில் ஒலிக்கும். இதுபோல் ஒவ்வொரு ஸ்வரமும் ஒவ்வொரு திசையிலிருந்தும், அதற்கான ஸ்பீக்கரிலிருந்தும் ஒலிக்கும்.. இதன் மூலம் இசையை கேட்பவர்கள் அந்ததந்த ஒலியை மிகத் துல்லியமாக கேட்டு ரசிக்க முடியும்...''

நான் சொல்ல வந்தது உங்களுக்கு புரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன். இப்படி கொஞ்சம் கற்பனை செய்து கொண்டு பாருங்கள். நாம் இப்போது ஒரு பெரிய திரையரங்கில் இருக்கிறோம். என் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்ற போது, இசையமைப்புக்கு தக்கப்படி வெவ்வேறு திசைகளில் இருந்து வெவ்வேறு ஸ்வரங்கள் வருகின்ற போது ரசிகர்களுக்கு அந்த இசையின் துல்லியம் மிக அற்புதமாக கேட்கும். அப்படி கேட்கின்ற போது கேட்பவர்கள் மனதில் ஒரு உற்சாக ஊற்று சுரக்கும்; இசைக்கேற்ப நடனமாடவும் தோன்றும்.. இல்லையா...'' என்று உற்சாக குரலில் தன் புதிய தொழில்நுட்பத்தை பற்றி விரிவாக கூறினார் அந்தோணி.

இன்று சின்னத்திரை மக்களை வீட்டிலேயே கட்டிப்போட்டு விட்டது என்று பரவலாக ஒரு கருத்து சினிமா வாட்டாரங்கள் நிலவி வரும் நிலையில் சின்னத்திரை பார்வையாளர்களை மீண்டும் சினிமா திரையரங்குக்கு அழைத்து வருவதற்கு இவரின் புதிய தொழில்நுட்ப உருவாக்கம் மிகப் பெரிய உதவியாக இருக்கும் என்றே சொல்லலாம். ஏனெனில் இத்தகைய விஷயங்கள் பெரிய திரையரங்குகளில் மட்டுமே துல்லியமாக கிடைக்கும். இதன் காரணமாக மீண்டும் மக்கள் திரையரங்கிற்கு நாடி வருவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன.

இதனை இயங்க வைக்கும் முறையினைப் பற்றி மிகத் தெளிவாக கூறுகிறார் அந்தோணி அவர்கள்..

''ஒவ்வொரு ஸ்வரத்திற்கும் ஒரு ப்ரிகொயன்சி இருக்கின்றன. இதனால் அந்தந்த ப்ரிகொயன்சிகளை தனித்தனியாக பிரித்து வெவ்஧று சானல்களுக்கு பிரித்து கொடுக்கும் பிரத்யேகமான எலக்ட்ரானிக் சர்க்கியூட்டை நான் வடிவமைத்திருக்கிறேன். இதில் ஒரே விஷயம் என்னவென்றால் என்னுடைய இந்த புதிய தொழில்நுட்பத்தை டி.டி.எஸ், மற்றும் ஸ்டீரியோ போன்றவைகள் உள்ள திரையரங்குகளில் மட்டுமே பயன்படுத்த முடியும்..'' என்கிறார்.

தான் அரும்பாடு பட்டு உருவாக்கிய இந்த புதியதொழில்நுட்பத்தை பலரும் - குறிப்பாக சினிமா சம்மந்தப்பட்டவர்கள் - அறிந்து கொள்ள வேண்டும்.. இதன் மூலம் தன் உழைப்புக்கு ஓர் உரிய அங்கீகாரம் கிட்டும் என்ற எண்ணம் கொண்டு தன் சொந்த கிராமத்தை விட்டு சென்னைக்கு வந்த இவர் சினிமாதுறையினர் பலரை சந்திக்க பெரும் முயற்சி எடுத்தார். முடிவில் இசையமைப்பாளர் எம்.எஸ்.வி. அவர்களை சந்திக்கும் வாய்ப்பு இவருக்கு கிட்ட, அவரிடம் மிக சந்தோஷமாக விளக்கியுள்ளார். அவரை மட்டுமல்ல.. இன்னும் பலரையும் சந்தித்து தன்னுடைய கண்டுப்பிடிப்பை எடுத்துரைத்திருக்கிறார். எப்படியாவது தன் தயாரிப்பை வெளியுலகிற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற ஆசையில் சென்னையிலேயே தன் சகோதரி வீட்டில் தங்கிவிட்டார். இன்று வரை இவரது முயற்சிகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

இவரது உருவாக்கத்தில் பிரமிக்கத் தக்க அதிசயம் என்னவென்றால் திரையரங்கில் சினிமா பார்த்துக் கொண்டு படத்தில் வரும் கதையோடு ஒன்றிப்போகும் ரசிகர்களை அந்தக் கதைகேற்ற சூழலுடன் ஒன்றிபோக செய்வதுதான்.

திரையில் காதலர்கள் கொடைக்கானல் மலையில் ஆடிப்பாடும் காட்சி வருகிறதென்றால் படம் பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகன் தானும் அந்தக் காட்சியில் ஒன்றி அந்த கொடைக்கானல் குளிரை உணர்ந்து, அங்குள்ள மலர்களின் வாசத்தை நுகரலாம் இவரது புதிய தொழில்நுட்பத்தின் மூலம்.

இது எப்படி முடியும்..? என்று கேட்டவுடன் முடியாது என்று எதுவும் இல்லை என்று பட்டென்று பதில் வருகிறது அந்தோணியிடமிருந்து.

''திரையரங்குகளில் இதற்காக வசதிகளை செய்வது சுலபம். ஒரு ஸ்பரேயர், ஒரு ஹீட்டர், ஒரு ப்ரீஸர் இருந்தால் போதும். இவற்றை ஒவ்வொரு இருக்கை வரிசையின் இருபுறங்களிலோ அல்லது ஒவ்வொரு சீட்டிலேயோ அமைத்துவிட வேண்டும். ஸ்ப்ரேயரில் விதவிதமான வாசனகளை காட்சிகளுக்கேற்ப வரிசையாக லோட் செய்து கொள்ளலாம். திரையில் ஒரு மல்லிப்பூவை காண்பித்தால், மல்லியின் வாசனை உடனடியாக அங்குள்ள ஸ்ப்ரேயர் மூலம் வெளிப்படம். அதுபோல் அந்த காட்சி மாறியதும் அந்த வாசனை தானாகவே போய்விடும். இதுபோல் வெய்யில் காட்சி திரையில் வருகிறது என்றால் அந்தக் காட்சிக்கேற்ப ஹீட்டர் ஆன் ஆகிவிடும். இவை அனைத்துமே அந்தந்தக் காட்சியில் வருகிற போது மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெறும் . இதனை ஒரு சிறிய கம்ப்யூட்டர் மூலம் மிகச் சரியாக கட்டுப்பாட்டில் கொண்டு வர முடியும். அதுபோல் கம்ப்யூட்டரை இயங்கச் செய்யும் சிக்னல்களை அந்தத் திரைப்படத்தின் பிலிம்லேயே பதிவு செய்து கொள்ளலாம்...'' என்று கூறுகிறார் அந்தோணி.

இவருக்கு ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு உண்டு. பிறப்பால் கிறிஸ்துவராக இருந்தாலும் இந்து மத ஆன்மீகங்களில் அதிக ஆர்வம் காட்டுகிறார்.

''நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஓர் திறமை இருக்கின்றது. நமக்குள் இருக்கும் அந்த சக்தியை அல்லது திறமையை நாம் அடையாளம் கண்டுக் கொள்ள வேண்டும்..எனக்கு பல நேரங்களில் உதவி கரம் நீட்டிய என் சகோதர, சகோதரிகள் மற்றும் என் நண்பர்களுக்கு நான் நிறைய செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அதற்காக நான் நிறைய சம்பாதிக்க வேண்டும் என்றும் நினைக்கிறேன். பொருளாதார ரீதியாக என்னால் முடிந்த உதவிகளை என்னை போன்ற உடல்ஊனமுற்றோர்க்கு செய்யவும் எண்ணியுள்ளேன். என்னுடைய இந்த தேவைக்காக நான் ஆன் லைன் மூலமாக வேலைவாய்ப்பை தேடிக் கொண்டிருக்கிறேன். எனக்கு கணணியில் தமிழ் தட்டச்சு நன்றாக செய்ய வரும். தமிழ் தட்டச்சு பணியை ஆன் லைன் மூலமாக செய்யவும் நான் காத்திருக்கிறேன். இதுவரை எனக்கு எந்த வேலையும் கிடைக்கவில்லை. அது மட்டுமல்ல எனக்கு தமிழில் சிறுகதை, கவிதைகள் எழுதுவதில் மிகுந்த ஆர்வம் உண்டு. என் எழுத்துகள் பல்வேறு இதழ்களில் வரவும் ஆசைப்படுகிறேன். மேலும் உடல்ஊனமுற்றோர்க்கு எதிர்காலத்தில் ஓர் அமைப்பை உருவாக்கி அதன் மூலம் அவரவர்களுக்கு தேவையானவற்றை செய்யவும் விரும்புகிறேன்...'' தன் எதிர்கால கனவுகளையும் தன்னுடைய ஆசைகளையும் நம்மிடையே பகிர்ந்து கொண்டார் அந்தோணி.

சில நேரங்களில் நான் சோர்ந்து போகும் வேளையில் நண்பர்கள் அழகி விஸ்வநாதன், எஸ். சுரேஷ் போன்றவர்களின் அன்பான, வருடும் வார்த்தைகள் என் சோர்வை சட்டென்று மறக்கடிக்கச் செய்வது மட்டுமல்லாமல் அவர்களின் வார்த்தைகள் தன்னம்பிக்கையும், மிகுந்த தைரியத்தையும் எனக்கு கொடுத்திருக்கின்றன என்று கூறும் அந்தோணி முத்துவிற்கு உடனடி தேவை ஒரு வேலை. அதுமட்டுமல்ல அன்புள்ளங்களின் ஒரு புன்முறுவல், ஒரு சக்தியூட்டும் வார்த்தை! வாழ்க்கை என்னும் போராட்டக் களத்தில், தன் லட்சியத்திற்காக போராடி வரும் அந்தோணி முத்து காத்திருக்கிறார் தன் விடியலுக்காக!

அந்தோணி முத்துவை தொடர்பு கொள்ள...

திரு. எஸ். அந்தோணிமுத்து
C/o. திரு. ஜே. தர்மராஜ்
5/96 சேரன் தெரு
கேகே நகர்
பம்மது குளம்
செங்குன்றம்
தமிழ்நாடு

செல் போன் 0-94444 96600 மற்றும்
91-44-26323185.

தொகுப்பு Published on 15th Feb, 2008
 

மேலும்

மேலும்