தமிழ்
  Site Web Yahoo! India Search
 
 
 
கழிவுப் பொருட்களிலும் கலையிருக்கிறது! சமூகம்
சரவணன்  
இந்தக் கால இளைஞர் சமூகத்திற்கு எதையாவது வித்தியாசமாகச் செய்யாவிட்டால் தூக்கமே வராது போலிருக்கிறது. சதா அனுதினமும் எதாவதொரு தேடலுடன்தான் தங்களுடைய வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள். பணம் பண்ணுவது என்று மட்டும் இவர்கள் தங்களுடைய வாழ்க்கையைக் குறுக்கிக் கொள்வதில்லை. கைக்காசைச் செலவழித்தாவது தங்களுடைய தேடலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

வயது 35 நெருங்கினாலும் பாலாஜி இன்னும் இளைஞராகவே வலம் வருகிறார். இவருடைய சாதனைகளும் யாரும் தொட்டிராத தளத்தில் இளமையாகவே வலம் வருகின்றன.

யார் இந்த பாலாஜி? 'ஜி' என்று அனைவராலும் மதிப்புடன் அழைக்கப்படும் ஓவியர் மற்றும் ஓவியத் துறை சார்ந்த பல்துறை வித்தகர். திண்டுக்கல்லைப் பூர்வீகமாகக் கொண்ட பாலாஜி என்னும் 'ஜி' தற்போது TVS நிறுவனத்தில் பணிபுரிகிறார்.

நாம் அன்றாடம் பயன்படுத்திவிட்டு உபயோகமில்லை எனக் கருதித் தூக்கி எறியும் கோழியிறகு, களிமண், துணி, பஞ்சு, சாக்பீஸ் துண்டுகள், குட்டைப் பென்சில்கள், மரக்கிளைகள் போன்ற கழிவுப் பொருட்களிலிருந்து கலைப் பொருட்களை உருவாக்குகிறார்.

குட்டி சாக்பீஸில் தஞ்சைப் பெரிய கோயிலின் ஒரு பகுதியைச் சிற்பமாகச் செதுக்குகிறார். பெண்கள் அமர்ந்து, நின்று, நாற்று நடுவது போலான உருவங்களை நுணுக்கமாக இத்தினியூண்டு சாக்பீஸில் சிற்பமாகச் செதுக்குகிறார். இன்னும் விதவிதமான சிற்பங்களைச் சாக்பீஸ் துண்டில் செதுக்குகிறார். இதுவரை சாக்பீஸ் சிற்பங்கள் செதுக்கியவர்களை விட ஒருபடி மேலே போய் பாலாஜி முப்பரிமாணத்தில் (3D) சிற்பத்தைச் செதுக்குவது கூடுதல் தனிச் சிறப்பு.

இதுவரை 150க்கும் மேற்பட்ட சாக்பீஸ் சிற்பங்களைச் செதுக்கியுள்ள இவர் பென்சில் முனைகளிலும் சிற்பங்கள் செதுக்குவதில் தனிச் சிறப்புப் பெற்றிருக்கிறார். முட்டை ஓட்டின் மீது சிறு ஓட்டை போட்டு அதற்குள் ஓவியம் வரைவது, முட்டை ஓடு உடையாமல் அதன் மீது உருவங்களைச் செதுக்குவது, ஧சாப் துண்டுகளில் சிற்பம் செய்வது, நிழற் விளையாட்டு (Shadow plays)... என இவரது தேடல் முற்றுப் பெறாமல் நீண்டு கொண்டே செல்கிறது. இந்த வகை கலை முயற்சிகளுக்கென்று விஷேசமான உபகரணங்கள் எதையும் பயன்படுத்துவதில்லை. உபகரணங்கள்கூட நாம் பயன்படுத்தித் தூக்கி எறியும் பிளேடு, குண்டூசி போன்ற கழிவுப் பொருட்கள்தான்.

பள்ளியில் படிக்கும் போது வாத்தியார் தூக்கி எறிந்த சாக்பீஸ் துண்டை எடுத்து விளையாட்டாகச் சுரண்டிக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது அதில் வித்தியாசமான உருவம் தென்பட்டிருக்கிறது. உடனடியாக அதேமாதிரி பிள்ளையார் உருவத்தை அந்தச் சிறு சாக்பீஸ் துண்டில் கொண்டுவர முயற்சி செய்து அதில் அரைகுறையாக வெற்றி பெற்று, பின்னாட்களில் சாக்பீஸ் சிற்பம் செதுக்கும் கலையைக் கைவரப் பெற்றிருக்கிறார். இதோடு நின்று விடாமல் மேலும் மற்ற கழிவுப் பொருட்களிலும் தன்னுடைய கைவண்ணத்தைக் காட்ட பெருமுயற்சி எடுத்து வெற்றி பெற்றதை சந்தோசமாக நினைவுகூறும் ப஡லாஜி விருதுகள் பலவும் பெற்றிருக்கிறார்.

1999-ஆம் ஆண்டின் சிறந்த கலைஞருக்கான விருதை ரோட்டரி கிளப் அளித்துள்ளது. 2000-ஆம் அண்டின் சிறந்த கலைஞருக்கான விருதை சென்னை கலை பண்பாட்டு மையம் அளித்துள்ளது. மேலும் திண்டுக்கல், மதுரை, மைலாப்பூர் ஆகிய இடங்களிலெல்லாம் தன்னுடைய படைப்புகளைக் கண்காட்சிய஡க வைத்த போது நிறையப் பேர் பாராட்டியதை மகிழ்ச்சியுடன் நினைவுகூர்கிறார். தான் பணிபுரியும் TVS நிறுவனத்தில் கண்காட்சி வைத்ததை வாழ்நாளில் மறக்கவே முடியாது என்று கூறும் இவரைப் பற்றி பல பத்திரிகைகளும் செய்திகள் வெளியிட்டிருக்கின்றன.

விஜய், ராஜ், சன், குமுதம், ஆனந்தவிகடன் என பல ஊடகங்கள் இவருடைய கலாமுயற்சிக்கு உதவிக்கரம் நீட்டியிருக்கின்றன. விரைவில் நையாண்டி தர்பார் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவிருக்கிறார். இவருடைய ஓவியங்கள் மற்றும் சிற்பங்களை இதுவரை விற்பனைக்கு வைக்கவில்லை. நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்காக மட்டுமே செய்து தருகிறார். விரைவில் விற்பனைக்கு வைக்கவும் திட்டமிட்டிருக்கிறார்.

"நான் திட்டமிட்டு இந்தத் துறைக்கு வரவில்லை. அதே மாதிரி குரு என்று எனக்கு யாரும் இதுவரைக்கும் எதையும் கற்றுத் தரவில்லை. இயற்கையிலே எனக்கு இந்தக் கலை அமைந்து விட்டதாகவே கருதுகிறேன். அமைந்த அந்தக் கலையை பயிற்சியின் மூலம் நான் பெரிய அளவிற்கு மீட்டெடுத்திருக்கி஧றன் அவ்வளவுதான். சிற்பங்கள் செதுக்குவதற்கென்று நான் எந்த அளவுகோலையும் வைத்துக் கொள்வதில்லை. கண்ணில் பட்டு மனதில் நிற்கின்ற காட்சிகளை மட்டுமே சிற்பங்களாகச் செதுக்குகிறேன். அதேமாதிரி செதுக்குவதற்குச் சவாலான காட்சிகளை விரும்பித் தேர்ந்தெடுக்கிறேன்" என்று சொல்லி அதிகமாகப் பேசாமல் சுருக்கமாக முடித்துக் கொள்கிறார் பாலாஜி என்னும் 'ஜி'.

அன்றாடம் யாருக்காகவாது பிறந்தநாள் மற்றும் ஏனைய விசேஷங்களுக்காக பரிசுப் பொருட்கள் வாங்குவதற்கு ஆயிரக்கணக்கில் செலவழிப்பவர்கள், மிகக் குறைந்த விலையில் கிடைக்கும் கலையம்சம் மிக்க இந்தப் பொருட்களை வாங்கிப் பரிசளிப்பதில் கொஞ்சம் கவனத்தைச் செலுத்தலாம்.

தொகுப்பு Published on 17th Jan, 2008
 

மேலும்

மேலும்