தமிழ்
  Site Web Yahoo! India Search
 
 
 
'இதுவும் கவிதையாகிவிடும்' சமூகம்
கேடிஸ்ரீ  
எழுதுவது என்பது எல்லோருக்கும் கைவந்த கலையல்ல; சிலருக்கு அழகாக, கோர்வையாக பேச வரும். ஆனால் சேர்ந்தாற்போல் இரண்டு வரிகள் எழுத வராது. ஏன் நம்மில் சிலருக்கு ஒரு கடிதத்தைக்கூட ஒழுங்காக எழுத வராது.

கற்பனை வளமும் கதை சொல்லும் திறனும் இருந்துவிட்டால் சிறுகதை என்ன.. நாவல்கூட ஒருவர் எழுதிவிடலாம். ஆனால் எழுத்து வகைகளிலே மிகவும் கடினமானது கவிதை எழுதுவது... கவிதையை எப்படி தொடங்க வேண்டும்; எப்படி முடிக்க வேண்டும் என்ற நுட்பம் கவிஞனுக்கு தெரிந்திருக்க வேண்டும். அப்போதுதான் அவன் வெற்றி பெற்ற கவிஞனாகிறான்.

மரபு கவிதைகள், சந்தக்கவிதைகள் அன்று அதிகளவில் வந்தன. தற்போது புதுகவிதைகள் அதிகம் வெளிவருகிறது. புதுபுது கவிஞர்கள் நாள்தோறும் வந்துக்கொண்டு இருக்கின்றனர். அந்த வகையில் சேஷாத்ரி என்ற இளைஞர் கவிதைகளை எழுதி வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

சமூகத்திற்கான இலக்கியத்தின் கடமைகளுக்கு பொறுப்பேற்கின்ற நம்பிக்கையை புதிய தலைமுறை பெற வேண்டும். கவிஞர் சேஷாத்ரியின் கவிதைகளில் இந்த நம்பிக்கையின் தளிர்கள் அதிகம் தென்படுகின்றன என்று சேஷாத்ரியின் கவிதை நூலுக்கு புகழாரம் சூட்டுகிறார் கபிலன் வைரமுத்து.

கவிஞர் சேஷாத்ரி அடிப்படையில் ஒரு பொறியியல் பட்டதாரி. சென்னையிலுள்ள ஹிந்துஸ்தான் பொறியியல் கல்லுரி மாணவரான இவருக்கு சிறுவயது முதலே கவிதைகள் மேல் ஓர் ஆர்வம்.

பள்ளிக்கூட நாட்களிலேயே கவிதைகளை எழுதத் தொடங்கிவிட்டார். கவிஞர் வைரமுத்துவின் மகனும், கவிஞருமான கபிலன் வைரமுத்து இவரின் கல்லூரி நண்பர். கபிலன் மற்றும் அவரின் கல்லூரிவகுப்பு நண்பர்கள் சேர்ந்து தொடங்கிய 'இளைஞர் சமுதாய முன்னேற்ற சங்கம்' என்ற இயக்கத்தில் தன்னையும் இணைத்துக் கொண்டுள்ளார் சேஷாத்ரி.

இயல்பிலேயே இவருக்கு இருந்து கவிதை ஆர்வம், கபிலனின் நட்பு கிடைத்தவுடன் பெருக்கெடுத்தது என்றே சொல்லாம். இவரின் சின்ன சின்ன கவிதைகளை படித்து அவர் கொடுத்த உற்சாகமும், ஊக்கமும் மேலும் மேலும் கவிதை எழுத இவரை தூண்ட, இன்று இந்த இளைஞர் இரண்டு கவிதை தொகுப்பு நூல்களுக்கு சொந்தக்காரர்.

கவிதை எழுதுதல் ... இவரது பள்ளிப்பருவ கனவு என்றாலும், அவரின் கனவான கவிதை நூல் படைப்பு... கல்லூரி நாட்களையும் தாண்டி, பணியில் அமர்ந்த நேரத்தில்தான் நனவானது.

ஆம்... இவரின் முதல் படைப்பான 'இன்னொரு தாய்மொழி' கடந்த 2006ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12ம் தேதி சென்னையிலுள்ள 'பாரதியார் இல்லத்தில்' வெளியிடப்பட்டது. 24 கவிதைகள் கொண்ட தொகுப்பு அது. மனித உணர்வுகளையும், மனித உறவுகளையும் அதிக அளவில் வெளிப்படுத்தக்கூடிய கவிதைத் தொகுப்பே 'இன்னொரு தாய்மொழி'.

கவிஞர் முத்துலிங்கம் புத்தகத்தை வெளியிட, 'கண்ணியம்' சிற்றிதழ் ஆசிரியர் குலோதுங்கன் முதல் இதழைப் பெற்றுக் கொண்டு சிறப்பித்தார்.

இவரின் முதல் கவிதை நூலுக்கு அணிந்துரை எழுதி பெருமைப்படுத்தினார் கவிஞர் வைரமுத்து. தனது அணிந்துரையில் 'இன்னொரு தாய்மொழி' நூலைப் பற்றி கீழ் கண்டவாறு கூறுகிறார் கவிஞர் வைரமுத்து.

''வாழ்வனுபவங்களால் கவிஞரானார் சேஷாத்ரி..''

''மோதிரவிரலால் குட்டுப்பட்டது போல் இருந்தது'' என்று கவிஞரின் பாராட்டைப் பற்றி நம்மிடையே பெருமையாக கூறுகிறார் கவிஞர் சேஷாத்ரி.

''கவிதை எழுதுவதென்பது காதலியைக் கொஞ்சுவதைவிடவும், தாய்க்கு சேவை செய்வதைவிடவும் கடவுளை நினைப்பதைவிடவும் சுகம். கவிதை அத்தியாவசிய உணவு... இன்றியமையாத மருந்து. அது மனதிலிருந்துக் கேட்கின்ற அசரீரி.. புலன்கள் புரிந்துக்கொள்கிற மொழி..'' என்று கவிதை எழுதுவதைப் பற்றி அழகாக நம்மிடையே சிலாகித்து கூறுகிறார் கவிஞர் சேஷாத்ரி.

இதற்கிடையில் இளைஞர் சமுதாய முன்னேற்ற சங்கத்தில் (www.thetriple-s.org) இலக்கிய குழு தலைவராக பொறுப்பு வகித்து வரும் சேஷாத்ரி, இவ்வியக்கத்தின் மூலம் இன்றைய இளைஞர்களிடையே இருக்கும் பேச்சுத்திறன், எழுத்து திறன், இலக்கிய ஆர்வம் ஆகியவற்றை மேம்படுத்தவும், அதனை வெளிக்கொணரும் பணிகளிலும் அதிக அளவில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

அதில் ஒரு கட்டமாக நெடுஞ்சாலை (www.nedunjaalai.com) என்ற பெயரில் ஓர் இணையதளம் ஒன்றை தொடங்கி அதன் மூலம் எழுத்து ஆர்வம் மிக்க இளைஞர்களுக்கு ஒரு பாலம் அமைத்து கொடுத்து வருகிறார். இன்று இந்த இணையத்தளத்தில் தினமும் பல இளைஞர்கள் தங்களது எழுத்துக்களை பதித்து வருவது சிறப்பு.

சேஷாத்ரி தற்போது Convansys நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். தனது பணி நேரம் போக கிடைக்கும் ஓய்வுநேரங்களில் சங்கப்பணியையும், தன்னுடைய கவிதை பணியையும் தொடர்ந்து ஆற்றி வருகிறார்.

இவரின் இரண்டாவது கவிதை தொகுப்பான 'இதுவும் கவிதையாகிவிடும்' கடந்த ஜூன் மாதம் 7ம் தேதி (2007) வெளியிடப்பட்டது. கவிஞர் ஈரோடு தமிழன்பன் இந்நூலை வெளியிட இயக்குநர் வசந்த் முதல் பிரதியை பெற்றுக் கொண்டு சிறப்பித்தார்.

'இதுவும் கவிதையாகிவிடும்' நூலைப் பற்றி சேஷாத்ரி கூறுகையில்,

'' ஒருவர் கண்ணாடியில் பார்க்கின்ற போது அதில் தன் முகம் தெரிவதைப் போல் ஒவ்வொருவரின் எழுத்திலும், தன் உணர்வும், தன் வாழ்க்கையும்தான் பிரதிபலிக்க வேண்டும் என்று மனிதன் சம்மந்தப்பட்ட எதுவுமே கவிதை என்ற வகையில்தான் 'இதுவும் கவிதையாகிவிடும்' என்ற தலைப்பினை இந்நூலுக்கு வைத்தேன்... '' என்றார்.

மேலும் அவர் கூறுகையில், ''ஒரு கவிதை என்பது ஒரு 'மாதிரி' கவிதையை வைத்துக் கொண்டு எழுதப்படும் ஒருவிஷயமல்ல... இயல்பாக உணர்வுகளை பதிவு செய்யும் ஒரு கலைதான் கவிதை என்பது. எது இந்த இயல்பை மீறாமல் எழுதப்படுகின்றதோ அந்தப் படைப்புக்கு கவிதை என்று பெயர்...அந்த வகையில் என்னுடைய 'இதுவும் கவிதையாகிவிடும்' ஒரு இயல்பிலக்கணம் என்றே சொல்வேன்...'' என்றார்.

கவிதை மட்டுமல்ல இசை ஆல்பங்கள் தயாரித்து வெளியிடவும் செய்கிறார் சேஷாத்ரி. சமீபத்தில் Software Bug 1.0 என்ற பெயரில் ஐந்து நிமிடமே ஓடக்கூடிய இசை ஆல்பம் ஒன்றை தயாரித்து வெளியிட்டுள்ளார்.

இன்று இளைஞர்கள் மற்றும் இளைஞிகளிடையே ஏற்பட்டு இருக்கும் சாப்ட்வேர் மோகமும்.. அதனால் சமூகவாழ்வில் ஏற்பட்டு வரும் மாறுதல்களையும், இன்றைய இளைஞர்களின் நவீன வாழ்க்கை முறை மாற்றங்களை பற்றியும் அழகாக இசைவடிவில் சொல்லியிருக்கிறார் இந்த ஆல்பத்தின் மூலமாக.

தண்மதியின் இசையில் ப்ரீத்தி மற்றும் ஜெக் பாடியுள்ள இந்த ஆல்பத்திற்கு சாப்ட்வேர் துறையினரிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த வரவேற்பை தொடர்ந்து நிறைய ஆல்பங்கள் தயாரிக்க முடிவு செய்துள்ளார் சேஷாத்ரி. ஒரு பக்கம் இசை ஆல்பம் தயாரிப்பு, மற்றொரு பக்கம் தனது அடுத்த கவிதை தொகுப்பிற்கான பணிகள் என்று தற்போது பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும் சேஷாத்ரியிடம் உங்கள் எதிர்கால கனவு என்ன என்றவுடன்

''திரைப்பட பாடல் எழுத வேண்டும் என்பது என் கனவு.. ஆசை...'' என்றார்.

காலம் கனிந்து கனவு மெய்ப்படுவதற்காக காத்திருக்கிறார் இந்த இளம் கவிஞர்.!

மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் : rajagopalan.seshadri@gmail.com

தொகுப்பு Published on 28th Dec, 2007
 

மேலும்

மேலும்