இந்தியாவின்
கிழக்குக் கடற்கரையில் வங்காள விரிகுடாக் கடலைக்
கிழக்கு தெற்கு எல்லைகளாகக் கொண்டுள்ளது ஒரிசா.
கோனார்க், ஜகன்னாத், லிங்கராஜ் ஆகிய கோயில்
சிற்பங்களின் வரிசையில் கலை நயமிக்க
வேலைப்பாட்டுத்திறன் கொண்டதோடு நில்லாமல், ஒரிசாவின்
நாட்டுப்புறக்கலை, வேலைப்பாடுகள் இன்றும் கலைஞர்களின்
சிந்தனையில் அதீதமான கற்பனை சக்தியைத் தூண்டிக்
கொண்டுதான் இருக்கின்றன. கோயில்களால் சூழப்பட்டுள்ள
ஒரிசா மாநிலம் அந்த நாட்டுப் புராணம், கதை, கற்பனைகளால்
பின்னப்பட்டுள்ளது. நுண்கலைகள், கிராமியச் சுவர்
ஓவியங்கள், பட்ட சித்ரா, செள நடனங்கள், சிற்பம் மற்றம்
கட்டடக்கலையாலும், ஒரிசாவுக்கு 'உத்கல்' என்ற
பட்டப்பெயர் ஏற்றிருப்பது மிகவும் பொருத்தமானதுதான்.
'உத்கல்' என்றால் சிறந்த கலைகளைத் தன்னகத்தே கொண்ட நாடு
என்று பொருள்படும். ஒரிசாவின் பட்ட சித்ரா அந்த
நாட்டின் கலை வரலாறு பாரம்பரியம், நில அழகு, வாழ்வின்
பிரம்மாண்டம், தெய்வீகத்தின் பிரிவுகளின் ஒருமைப்பாடு
இவற்றை அற்புதமாக விளக்குகிறது. முகமதியர்களின்
படையெடுப்புகளில் படாமல், ராஜாங்க தர்பார்களிலிருந்து
விலகி ஒரிசா 'முன் முகமதிய பாணி' என்ற கலைப்பணியில்
சமயக் கலைகளை நிறுத்தி வைத்துப் பல ஆண்டுகளாக மாறாத
தன்மை கொண்டுள்ளது.
ஜகன்னாதரின்
தாமரைத் திருவடிகளை வங்காள குடாக் கடலின் மென்மையான
அலைகள் தழுவ, பட்டா சித்திரங்களின் கிராமியப்
பாரம்பரியம் ஆரம்பம். இக் கலை எட்டாம் நூற்றாண்டைச்
சார்ந்தது எனலாம். காலம் என்ற மணல் துகள்களில் தங்கள்
வண்ணம் உருவங்களால் காவிய வேதாந்த ஓட்டங்களை உள்வாங்கி
உள்ளது. (மொகந்தி).
பட்டசித்ராவின் பாரம்பரியம் பிரபு ஜகன்னாதரின்
வழிபாட்டுடன் நெருக்கமாக இணைக்கப்பட்டு தன் அபாரக்
கலைத் திறனால் தனி இடம் பிடித்துள்ளது. கண்டகிரி,
உதயகிரி, சீதாபின்ஜி, குகை ஓவியங்கள் கி.பி. ஆறாம்
நூற்றாண்டைச் சார்ந்த ஓவியங்கள். இவை தவிர ஒரிசாவின்
சொந்த மண் சார்ந்த ஓவியக் கலைஞர்களின் கைவண்ணம்தான்
பட்ட சித்ரா ஆகும். இவை ஓரிடத்தை மட்டும் சார்ந்தவை
அல்ல. இந்த ஓவியர்கள் பெரும்பாலும் பூரி
மாவட்டத்தில்தான் உள்ளனர்.
வடமொழி சொல்லான பட்டா என்பதற்குத் துணி என்றும்
சித்ரா என்றால் படம் என்றும் பொருள்படும். இந்தக்
கலைப்பாணி அதிக வண்ணத்தை உபயோகிப்பதிலிருந்து தெரிகிறது.
இக் கலைப்பாணி பெரும்பாலும் இந்துப் புராணங்களைத்தான்
வெளிப்படுத்துகிறது. மகாபாரதம், ராமாயணம்,
ராதா-கிருஷ்ணண் கதைகள், பிரபு ஜகன்னாதர் போன்ற
கதைகளைத்தான் இக் கலைப்பாணி வெளிப்படுத்துகிறது. ஆனால்,
மிகவும் பழக்கத்திற்குரியதாகவும், அடித்தளமாகவும்
கருதப்படுவது பிரபு ஜகன்னாதர், பாலபத்ரா, சுபத்ரா
ஆகியவற்றின் கலை அம்சங்களே ஆகும்.
பல நூற்றாண்டுகளாகப் பாதுகாக்கப் பட்டவை பட்ட சித்ரா
ஓவியங்கள். இதை வரைகின்ற ஓவியக்கலைஞர்கள் யதார்த்தம்
வேண்டுமென்று முனைவதில்லை. ஆனால், அவர்கள்
வேலைப்பாட்டில் உணர்ச்சி, பாவனை இவைகளின் வெளிப்பாடு
கண்டிப்பாக இருக்கும். அவற்றை ரசிப்பதற்குக் கூர்மையான
கவனிப்புத் தேவை. அதிகமாக வண்ணங்களைப் பயன்படுத்தினால்
இவை தவறுதலாக வண்ணத்தினாலான கலைப்பாங்கு என்றும்
எடுத்துக் கொள்ளப்படலாம். இந்த ஓவியங்களின் காட்சிப்
பலன் மனித உணர்வுகளை நேராகத் தாக்கி விடுகிறது என்பதை
உணர முடியும்.
இந்த
ஓவியங்களின் கரைகள் ஒரு பிரதானம். பட்டாவின்
நாற்புறமும் இக்கரை வரையப்படுகிறது. ஓவியத்தின் அளவைப்
பொறுத்து இரணடு அல்லது மூன்று கோடுகள் இருக்கும்.
உருவங்களின் வெளிக்கோடுகள் மெல்லிய கோடுகளாய் வெள்ளை
வண்ணத்தில் வரையப்படும். உடலுக்கு வண்ணம் பிறகு
ஏற்றப்பட்டு, உடைகளின் வண்ணம் பிறகு சேர்க்கப்படுகிறது.
பின் உருவங்களுக்கு அணிகள், அதற்கு வணணம். வேறு
சிலவற்றுக்குத் தடித்த கோடுகள் கருப்பு வண்ணம். பின்பு
சிறிய நேர்த்தியான வெள்ளை வண்ணம் ஏற்றப்படுகிறது. இதில்
சிறப்பு என்னவென்றால் சித்திரக்காரர் வெள்ளை வண்ணத்தில்
தொடங்கி வெள்ளை வண்ணத்திலேயே முடிப்பதுதான் ஆச்சரியம்.
ஓவியத்தில் விழிகள் கடைசியாகச் சேர்க்கப்படுகின்றன.
சிலசமயம் ஓவியம் வெள்ளை - கருப்பில் மட்டுமே கூட
இருக்கும். கோடு வரைவதில் நிபுணர்களான ஓவியக் கலைஞர்கள்
ஓவியத்தை உயிருள்ளதைப் போல் செய்து விடுகிறார்கள்.
சில முக்கியமான பட்ட சித்ரா ஓவியங்களின் கருக்களாக
தியா-பதியா-ஜகன்னாதர் கோயில், கிருஷ்ண லீலா - ஜகன்னாதர்
கிருஷ்ணனாக (இளமைக்கால நிகழ்ச்சிகள்) தசாவதாரபட்டி (விஷ்ணுவின்
பத்து அவதாரங்கள்) நபாகுஞ்சாரா - ஒன்பது பல விதமான
பிராணிகள், கந்தர்ப-ராத்-மன்மதனின் தேர் (முற்றிலும்
பல வண்ண உடைகளுடன் விளயாடும் கோபியர்கள், தேரில்
கிருஷ்ணன்; ராம் ராவணா சுதா - ராம ராவணா யுத்தம் காஞ்சி
அபிஜனா - காஞ்சிக்கு எதிராகப் படையெடுத்தல்; கஞ்சபா -
சீட்டு விளையாடுதல் ராதா - கிருஷ்ணாபதி, பஞ்சமுகி ஐந்து
தலை விநாயகர், கலியாதலன் வேஷ - யமுனையில் கிருஷ்ணன்
காளிங்கனை வென்று ஜகன்னாதனை மீட்பது போன்றவை உள்ளன.
முறைகளும் வண்ணமும்
பட்டாவைத் தயாரித்தல் ஒரு நீண்ட சிரமமான வேலை இதை
முடிக்க மட்டும் ஐந்து நாள்களாகும். முதலில் புளிய விதை
சாந்து தயாரிக்கப்படுகிறது. இதற்காகப் புளியம் விதைகளை
மூன்று நாள்கள் நீரில் ஊற வைக்கிறார்கள். விதைகள் உப்பி
மெதுவானதும் அதை அரைத்து ஜல்லி போன்று ஆக்கப்பட்டதும்
மண் கலத்தில் நீரில் கலக்கப்பட்டு மறுபடியும் கோந்து
போல் ஆக்கி சூடாக்கப்படுகிறது. இதற்கு நிர்யாஸ் கல்பம்
என்று பெயர்.
இப்பொழுது ஓவியக்கலைஞர் இரண்டு துண்டுத் துணிகளை ஒரே
அளவாகத் தேர்வு செய்து கோந்து வைத்து -த் துணிகளை
ஒட்டுகிறார். மிருதுவான மண் கற்கள் பொடியாக்கப்பட்டு
புளிய விதை கோந்துடன் கலக்கப்படுகிறது. அந்தத் துணியின்
இருபுறமும் இந்தப் புளியங்கோந்து தடவப்படுகிறது.
நன்றாக உலர்ந்த பின்பு இரு கடினமான கல்லால் துணி
வழவழக்கப்பாக்கப்படுகின்றது. அதையே மேலும் மரத்தினாலோ
மிருதுவான கல்லினாலோ மீண்டும் தேய்த்து
மெருகேற்றுகிறார்கள். அத்துணி தோல் போன்று ஆகி ஓவியம்
தீட்டுவதற்கு வசதியாகத் தயாராகிறது. இப்படி துணியை
ஒட்டி மெருகேற்றுவது என்பது நீண்ட பிரயத்தன வேலை. இதை
ஆண்கள் செய்யப் பெண்கள் பட்டியைத் தயாரிக்கிறார்கள்.
ஓவியக்
கலைஞர்கள் பெரும்பாலும் வெள்ளை, கருப்பு, சிவப்பு,
மஞ்சள், பச்சை, நீல வண்ணங்களையே உபயோகிக்கிறார்கள்.
வண்ணங்களை ஒன்றோடொன்று கலப்பதில்லை. எல்லா
வண்ணங்களையும் தனித்தனியாகத்தான் சேர்க்கின்றனர். எல்லா
வண்ணங்களும் இயற்கைப் பொருள்களால் தயாரிக்கப்பட்டவையே
ஆகும்.
வெள்ளை வண்ணத்துக்குக் கிளிஞ்சலைப் பொடியாக்கிக்
கைதா, கோந்து பழங்களுடன் சேர்த்துக் கொதிக்க வைத்துக்
கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். முடிவில் கோந்து
போன்று வரும். இக் கோந்துடன் சிறிது நீர் கலந்து
தேவையானபோது உபயோகிப்பார்கள். கருப்பு வண்ணத்துக்கு
விளக்குக் கரியைப் பயன்படுத்துவார்கள்.
ஒரு பித்தளைத் தட்டில் நிறைய நீர் வார்த்து விளக்கு
நெருப்பின் மேல் வைத்துக் கரி சேரும் வரை காத்து நின்று
தயாரிப்பார்கள். இக் கரியை வில்வம் அல்லது கைதாப் பழக்
கோந்துடன் கலந்தால் கருப்பு வண்ணம் கிடைத்து விடும்.
சிவப்பு வண்ணத்துக்கு ஹிங்குலால் என்ற ஒரு
சிவப்புக்கல்லைத் தூளாக்கி வேண்டிய நீர் சேர்த்துக்
கோந்துடன் கலக்கப்படும். சிவப்பு வில்லைகளாகத்
தயாரிக்கப்பட்டு வண்ணத்துக்குப்
பயன்படுத்துகின்றனர்.திட்டி என்பது நீரில் கரையும் ஒரு
பொருள். இதுவும் கூட சிவப்பு வண்ணத்துக்குப் பயன்படும்
பொருளாகும். ஹர்தலா என்னும் கல்லை மஞ்சள் வணணத்துக்குப்
பயன்படுத்துகின்றனர்.
இதே ஹர்தலா கல்லையே சிவப்பு வண்ணத்துக்கும்
பயன்படுத்துகின்றனர். பச்சை இலைகளை நீரில் கொதிக்க
வைத்துக் கைதா பழக் கோந்துடன் கலந்தால் பச்சை நிற
வண்ணம் கிடைக்கிறது. பச்சை நிற வண்ணத்துக்குப் பச்சை
நிறக் கற்களைப் பொடி செய்து தயாரிப்பார்கள்.
பட்ட சித்ரா ஓவியக்கலைஞர்கள் அதிகமாக நீல
வண்ணத்தைத்தான் உபயோகிக்கின்றனர். நீல நிற வண்ணத்தை ஒரு
மூலிகையிலிருந்தும் ராஜபர்தா என்ற கல்லிலிருந்தும்
தயாரிக்கின்றனர்.
காய்ந்த தேங்காய் ஓட்டில் வண்ணத்தை வைத்து கேயா
வேரிலிருந்து தூரிகை செய்வார்கள். மிக நுண்மையான
தூரிகைக்கு எலியின் உரோமத்தைப் பயன்படுத்துவர். இந்த
உரோமத் தூரிகைக்கு மரத்தாலான பிடியைப்
பயன்படுத்துவார்கள்.
பட்ட சித்திரா இன்று
ஒரிசா
ஓவியக்கலைஞர்கள் தங்கள் திறமையை சாதாரண காட்சிகளை
வெளிப்படுத்த மட்டும் உபயோகிக்கவில்லை. அவர்கள் இந்த
ஓவியங்களை பட்டு, ஓலைச்சுவடி போன்றவற்றிலும் பரப்பினர்.
பட்டு பட்டாக்கள் டஸ்ஸார் பட்டிலிருந்து
தயாரிக்கின்றனர். நவீன கிராம ஓவியர்கள் அற்புதமான
சுவர்த் தொங்கல் ஓவியங்கள், அணித்துண்டுகள்
போன்றவற்றில் செய்கிறார்கள். இதில் சிறப்பு
என்னவென்றால், அதே உருவங்கள் அதே வண்ணங்களை இன்றும்
நடைமுறையில் பயன்படுத்துகின்றனர். சோன்பூர், பாங்கி,
கண்டபடா, தேன்கனல், ஜெய்பூர், காளீ, கோட் மற்றும்
புவனேஸ்வர் போன்ற இடங்களில் பட்ட சித்திரங்கள் மிகவும்
பெருமை வாய்ந்ததாக இருக்கின்றன. ரகுராஜபூர் என்ற கைவினை
கிராமம் பூரி மாவட்டத்தில் மிகவும் குறிப்பிடத்தகுந்த
கிராமமாக உள்ளது. முனைவர் எம். பிராசா பட்ட சித்ரா
பற்றிக் கூறுகையில் இக் கலையில் சுமார் 22 குடும்பங்கள்
கண்ணும் கருத்துமாக ஈடுபட்டு வருவதாகக் கூறுகிறார்.
இக்கலை மட்டும் அல்லாது வேறு சிலர் கைத்தொழிலிலும்
ஈடுபட்டு வருகின்றனர்.
மாறி வரும் உலகில் ஒரிசா ஓவியங்கள் தனி இடத்தைப்
பெற்றதோடல்லாமல் அதிசயமானதாகவும் கருதப்படுகிறது. அது
ஒரு தனி உலகம். ஒவ்வொரு பொருளும், அணிகலனும் மாறாத
உருவைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு விலங்கினமும் அதிசயப்
படைப்புதான். ஒவ்வொரு தனி மனித ஆளுமையும் அதன்
ஸ்தானமும் முக்கியம். இவ்வளவும் புராணங்களில், சமயக்
கதைகளில் உள்ள பாரம்பரியத்தில் கூறப்பட்டுள்ளது போல்
உள்ளன. |