தமிழிசை
புதிதல்ல, தமிழிசை இயக்கம் படையெடுப்புமல்ல,
அபசாரமுகமாகாது தமிழ் இந்நாட்டிற்குரிய மொழி. தமிழிசை
இந்நாட்டிற்குரிய இசைச் செல்வம். இரண்டாயிரம்
ஆண்டுகளுக்கு முன்னிருந்தே தமிழிசை செழித்து வந்தது.
தமிழர் இசைச் செல்வமே இந்திய சங்கீதத்திற்கு தாயூற்றாக
இருந்ததென்று தக்க புலவர் ஆராய்ந்து சொல்லுகின்றனர்.
தமிழிசை வழிவழியாகப் பெருகி வந்தது. பிறமொழிப் பாடல்கள்
மிகச் சமீபத்திலேதான் தோன்றின. பிறமொழிப் பாடல்களில்
மோகங்கொண்ட சிலர் தடைச்சுவர் எழுப்பினார்கள்.
இயற்கைக்கு விரோதமான இத்தடை எத்தனை நாள் நிற்க முடியும்?
தாயிடமிருந்து மக்களை எத்தனை நாள் பிரித்து வைக்க
முடியும்? தமிழர் உணர்ச்சி பெற்றெழுந்தனர். தாங்கள்
இழந்த செல்வத்தை மீட்டனர். காலச்சூழலில் மறைந்து போன
கலைக்கோயிலைக் கண்டுபிடித்தனர்.
மறைந்துபோன பழம் பாடல்கள் இந்த இயக்கத்தால்
புத்துயிர்பெற்று முழங்குகின்றன. புதிய பாடல்கள்
எழுந்து இன்பம் தருகின்றன. கவிவாணரும் இசை வாணரும்
ஆர்வமுடன் முன் வந்து தமிழிசையை வளர்க்கிறார்கள்.
இசையரங்கிற்குக் கூட்டங் கூட்டமாகத் தமிழர்கள்
வருகின்றார்கள். தமிழிசை வேறெதற்கும் இளைத்தல்ல என்பதை
இசைவாணர்கள் விளக்கி விட்டார்கள். அரியபெரிய ஆவேசக்
கவிஞர்கள் தமிழ்ப் பாடல்கள் பாடியிருக்கிறார்கள்.
கண்ணிருப்பவர் தமிழிசைக்குள்ள பொது ஜன ஆதரவைக் காணலாம்.
காதிருப்பவர் எத்திசையிலும் தமிழைக் கேட்டு -ன்புறலாம்.
நமது தமிழ் மொழிக்கு நலம் தரும் இந்த
இயக்கத்திற்கும் எதிர்ப்பும் இடர்களும் முளைத்தன. ஆனால்,
தமிழிசை வேகத்தில் அந்த இடர்கள் தகர்ந்து போயின.
எனினும், இன்னும் விதண்டாவாதங்களும் பிடிவாதங்களும்
சிற்சில இடங்களில் காண்கின்றன. தமிழிசை எதிர்ப்பாளர்
விநோமான குறுக்குவாதங்களைக் கிளப்பிக் கூச்சலிட்டனர்.
பத்தி பத்தியாகப் பத்திரிகைகளை நிரப்பினர்.
''தமிழ், இசைக்குத் தகுந்ததல்ல. தெலுங்கு வட
மொழிகளிலுள்ள நயம் தமிழுக்கு வராது. இசைக்கு மொழி
வேறுபாடில்லை. அது நாத வித்தை. அதில் பாஷைப்
பிரச்னையைப் புகுத்தக்கூடாது. தமிழில் பாடினால் நயம்
கெடும். சங்கீதத்தின் மாற்று குறையும் மதிப்பு கெடும்.
பாட்டு அருளால் வரும். பொருளால் வராது. ஏதோ சிலர்
பணத்தைக் கொட்டி இசையைத் தமிழாக்கப் பார்க்கிறார்கள்.
அது கர்நாடக சங்கீதத்தையே காலைவாரி அடித்து விடும்.
தமிழில் உயர்ந்த பாடல்கள் இல்லை.''
இவையே
எதிர்ப்பாளர்கள் கிளப்பிய குறுக்கு வாதங்கள்.
இவ்வாதங்கள் இப்போது மறைந்த வருகின்றன. இன்று தமிழில்
ஏராளமான பாடல்கள் வெளிவந்து முழங்குகின்றன.
சங்கீதத்திற்கு வேண்டிய நயங்களெல்லாம் தமிழ்ப்
பாடல்களில் இருப்பதை இன்று கண்டும் கேட்டும்
ஆனந்திக்கிறோம். மிகச் சிறந்த தெலுங்குக்
கீர்த்தனங்களைப் போலவே தமிழில் பல கீர்த்தனங்கள்
வழங்குகின்றன. ஆயுளெல்லாம் பாடிக் கொண்டிருக்கலாம்.
தமிழிசை அமுத வெள்ளம் என்பதை இன்று நம் உள்ளம் உணர்ந்து
சொல்லுகிறது. இக்காலத்துப் பிரபல வித்வான்களும் இதையே
சொல்லுகிறார்கள். எதிர்ப்பாளரும் இதை உணர்ந்துதான்
வருகின்றனர்.
ஆனால், சிலரிடம் உள்ள பிடிவாதம் இன்னொரு குறுக்குச்
சால் ஓட்டியது. தமிழிசை இயக்கம் ஒரு ஜாதி இயக்கம்.
அரசியல் சதுரங்கம் என்ற வாதத்தைக் கிளப்பியது. தமிழிசை
இயக்கம் தூய கலை இயக்கமே. அதில் அரசியல் கலப்பே இல்லை.
ஜாதிப் பித்தமுமில்லை. சமஸ்கிருதத்தையோ, தெலுங்கையோ
நாம் வெறுக்கவில்லை. மற்ற மொழியாளர் தமது தாய்மொழிப்
பாட்டையே போற்றுவதுபோலத் தமிழர் தமிழ்ப்பாடல்களைப்
போற்ற வேண்டுமென்கிறோம். தமிழிசை இயக்கம் அரசியல்
சூழ்ச்சியல்லவென்பதை அழுத்தமாகச் சொல்லுகிறேன்.
இவ்வியக்கம் ஜாதிப் பிரிவினையை வளர்ப்பதல்ல அதற்கு
மாறாக இவ்வியக்கம் ஜாதிமத கட்சி பேதமில்லாமல் யாரையும்
பண்புடன் பழகச் செய்யும் ஒற்றுமை இயக்கமேயாகும்.
தமிழிசையில் எவ்விதமான வேறுபாடுமில்லாமல் தமிழிர்
உள்ளமெல்லாம் ஒன்றுபட்டிருக்கிறது. இந்தக் கலையொற்றுமை
நாட்டின் ஒற்றுமைக்கு அரிய துணையாகுமென்பதை
வற்புறுத்துகிறேன்.
காலத்தை வீணாக்கும் எதிர்ப்பு வாதங்கள் பயனற்றுப்
போயின. தமிழிசையை ஆந்திரர் எதிர்க்கவில்லை. அவர்கள்
தமிழிசையைத் தமிழருக்கே விட்டுவிட்டுத் தமது பாட்டைப்
பார்க்கின்றனர். தமிழிசையைத் தமிழரில் சிற்சிலரே
எதிர்த்துப் போராடுகின்றனர். இதுதான் வருந்தத்தக்கது.
இப்படி எதிர்ப்பவர் உள்ளத்தில் ''நமது வித்வான்கள்
பழகிய தெலுங்கிசை வீணாகுமே, அவர்களுக்கு ஆதரவு குறையுமே''
என்ற பயமும் சந்தேகமும் குடிகொண்டிருக்கின்றன.
வித்வான்கள் தமது அறிவையும் முயற்சியையும் தமிழிசை
வளர்ச்சியில் செலுத்தட்டும். அவ்விதம் செய்வார்களானால்,
இப்பொழுதுள்ள அச்சமும் சந்தேகமும் நீங்கிவிடும். தமிழ்
அவர்களுடைய தாய்மொழி. பிறமொழியைவிடத் தாய்மொழியில்
அவர்கள் எளிதாகத் தங்கள் புலமையைக் காட்டலாம். அப்போது
தமிழர்கள் அவர்களை வரவேற்று, மகிழ்வுடன் ஆதரிப்பார்கள்.
கலையும் செழிக்கும்.
மற்றோர் இடம் சில பத்திரிகைகளால் வந்தது, அவை
தமிழிசை எதிர்பாளருக்கே இடமளித்தன. தமிழிசையார் பேச்சை
ஆதரிப்பதில்லை, வெளியிடுவதில்லை, வெளியிட்டாலும்
இங்குமங்கும் விலக்கி, செய்திகளைத் தங்கள் இஷ்டப்படி
வெளியிட்டன. இது நியாயமல்ல. இது போன்ற காரியங்கள்
விசனிக்கத் தக்கவை. பத்திரிகைகள், எல்லாவற்றையும்
சமமாகக் கருதவேண்டம்.
மற்றொருபுரம், சங்கீதம் அரண்மனையிலிருந்து
பொதுமக்கள் ஆதிக்கத்திற்கு வந்துவிட்டதென்ற பேச்சைக்
கேட்கிறோம். ''சங்கீதம் சிலருடைய தனி உரிமையாக இருந்தது.
இப்போது பொது உரிமையாகிவிட்டது. எல்லோரும் பாடக்
கிளம்புகிறார்கள். எல்லாச் செவிகளும் பாட்டைக்
கேட்கின்றன. பாட்டிற்குக் கூட்டம் பெருத்துவிட்டது.
பாடகரும் பெருகிவிட்டார்கள்'' என்று சிலர்
சொல்லுகின்றனர். இசை எவர் மிராசுமல்ல. தமிழிசை தமிழரின்
பொதுச் செல்வம். அதைப் பயிலவும் பாடவும்
வல்லவருக்கெல்லாம் அது பொதுவாகும் இவ்வியக்கத்தில்
பங்குகொண்டு, 'இன்னது பிழை' என்று திருத்தி, இசைப்
பண்பை உயர்த்தப் பாடுபடும் புலவர்களைத் தமிழ் மக்கள்
மகிழ்வுடன் போற்றுவார்கள். -சைக்கலையால் நமது நாடு
முழுதும் ஒன்று பட இடமுண்டு. தமிழர் அனைவரும்
கலைக்கோயிலில் அன்பு மயமாக விளங்கும் நாளே தமிழர்
நன்னாள். அந்நாளை நான் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
தமிழ்க்கலை அந்நாளை நோக்கியே பவனி செல்கிறது.
அப்பவனியில் சமரசப் பான்மையுடன் எல்லாத் தமிழரும்
சேர்ந்து உதவ வேண்டும். எல்லா இசைவாணரும் தமிழிசையை
ஆதரித்து அப்பவனிக்கு ஊக்கமளிக்க வேண்டும். இவ்வாறு
கலைப் பவனியில் நாம் மன ஒற்றுமையுடன் சென்றால்,
வெறுப்பும் வேறுபாடும் ஒழிந்து, நமது சமுய வாழ்வு,
அமைதியும் இன்பமும் அடையுமென்பது நிச்சயம்.
தமிழ்நாட்டில் நடக்கும் இசையரங்குகளில் தமிழ்ப்
பாடல்களே முதன்மை பெற வேண்டும். கச்சேரியின் ஆரம்பமும்
மங்களுமும் தமிழ்ப் பாட்டுகளாக இருக்க வேண்டும்.
கச்சேரியின் பெரும்பகுதி தமிழ்ப் பாடல்களாக இருக்க
வேண்டும். இடையிடையே இதர மொழிப் பாடல்களையும் பாடலாம்.
அதற்குத் தடையில்லை. பிறமொழிப் பாடல்களை நாம்
வெறுக்கவில்லை. தமிழ் நாட்டில் நடக்கும் கச்சேரியைக்
கேட்கும் தமிழருள்ளம், ''இன்று தமிழிசையரங்கு நடந்தது,
நம் உள்ளம் தமிழிசையால் பூரித்தது'' என்று உணர வேண்டும்.
தமிழ் நாட்டில் நடக்கும் பாட்டுக் கச்சேரிகள்
தமிழருக்கு இன்பமளிக்க வேண்டும். இதுதான் நமது நோக்கம்.
தமிழ் இசை நிகழ்ச்சியில் எல்லா வகுப்பு
வித்வான்களும் காண்கின்றனர். பிறமொழிப் பாடல்களும்
காண்கின்றன. ஜாதி வேற்றுமையோ, பாஷை வேற்றுமையோ
இங்கில்லை. தமிழர் எல்லோரும் சமமானவர்களே. இந்த
உணர்ச்சியுடன் நாம் ஒன்று கூடிக் கலையை வளர்த்தால் மன
வேறுபாடும் இன வேறுபாடும் ஒழியும். ஆகையால் அன்பர்களே,
தமிழ் நாட்டில் பிறந்து வளர்ந்த மக்களாகிய நாமெல்லோரும்
ஒரே மனதுடன் நம் தாய்மொழியாகிய தமிழில் இசைக் கலையை
ஆதரித்துப் போற்றுவோமாக!1 |