தமிழ்
  Site Web Yahoo! India Search
 
 
 
சிற்ப சாஸ்திரத்துக்கு அடிப்படை சமஸ்கிருதம் வித்யா சங்கர் ஸ்தபதியுடன் ஓர் சந்திப்பு நேர்காணல்
சந்தித்து உரையாடுபவர்கள் : அப்பணசாமி, தேனுகா, கண்ணம்மா  
கும்பகோணம் ஓவியக் கலைக்கல்லூரியில் சிற்பத் துணை விரிவுரையாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற வித்யா சங்கர் ஸ்தபதி, தன்னுடைய கருத்துகளை ஓவியங்கள், சிற்பங்கள் மூலமாக வெளிப்படுத்துவதில் தேர்ச்சி பெற்றவர். நாட்டுப்புறக்கலைகளிலும் இவருக்கு ஈடுபாடு உண்டு. கிராமிய வாழ்வின் நாடி நரம்புகளை நன்கு அறிந்தவரென்பதால் இவரது படைப்புகள் அனைத்திலும் கிராமிய மணம் கமழ்கின்றன.

நவீனபாணி புடைப்புச் சிற்பங்கள் செய்வதில் மிகவும் புகழ் வாய்ந்தவர். நவீன அருங்காட்சியகங்களில் இவரது படைப்புகள் பல பரிசுகளையும், பாராட்டுகளையும் பெற்றுள்ளன. தேசிய அளவிலும், மாநில அளவிலும் பல விருதுகளை வாங்கிக் குவித்தவர். இவருடைய மிதுனா, யுவதி, சுஹாசினி சிற்ப வரிசைகள் அனைவராலும் புகழப்பட்டவை.

தற்போது மாஜிகல் ரியலிசக் கூறுகளை தன்னுடைய சிற்பங்களில் சேர்த்துச் செய்வதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். தற்போது கும்பகோணத்தில் வசித்து வரும் வித்யா சங்கர் ஸ்தபதியின் மகன் ராஜா ரவிசங்கர் ஸ்தபதியும் தந்தையைப் போலவே புடைப்புச் சிற்பங்கள் செய்வதில் வல்லவர். இனி, வித்யா சங்கர் ஸ்தபதி பேசுகிறார்....

உங்கள் பெயர் மற்றும் பாரம்பரியம் பற்றிச் சொல்லுங்கள்?

''என் பெயர் சு.கெள. வித்யா சங்கர் ஸ்தபதி. என் அப்பா பெயர் கெளரி சங்கர் ஸ்தபதி. அம்மா சுந்தராம்பாள். அவங்க அப்பா அம்மா முத்துசாமி ஸ்தபதி - மீனாட்சியம்மாள். அவருடைய தகப்பனார் பெயர் ஸ்ரீவித்யா ராமசாமி ஸ்தபதி -சிவகாமியம்மாள். இது வரை தெரியும். இதற்கு முன்னாடி முத்துசாமி ஸ்தபதி, அகோர வீரபத்ர ஸ்தபதி என்று ஒரு தாத்தாவும் இருந்தாங்க. இந்தத் தலைமுறைக் கிளை படம் இருக்குதில்லயா. அதாவது எங்க பரம்பரை பத்திய chronology-யை எங்க அண்ணன் தேவசேனா ஸ்தபதியார் வைத்திருக்கிறார். அதில் எங்கள் பரம்பரை பற்றிய தகவல்கள் வந்திருக்கும். நாங்க முத்துசாமி ஸ்தபதி வழியில் வந்தவர்கள்''.

உங்களுடைய மூதாதையரும், தேவசேனா ஸ்தபதியுடைய மூதாதையரும் உறவினர்களா?

ஆமா. ஸ்ரீவித்யா ராமசாமி ஸ்தபதியுடைய அண்ணன், தம்பிகள் நாலுபேர். அகோர வீரபத்ர ஸ்தபதிக்குப் பிள்ளைகள்தான் முத்துசாமி ஸ்தபதி. முத்துசாமி ஸ்தபதிக்குப் பிள்ளைகள் நான்கு பேர். அவர்கள் ஸ்ரீகண்ட ஸ்தபதி, துரைசாமி ஸ்தபதி, சதாசிவ ஸ்தபதி, ராமசாமி ஸ்தபதி இப்படி என்று நான்கு பிள்ளைகள் ஒரே ஒரு பொண்ணு. இதில் ராமசாமி ஸ்தபதிதான் எங்களுடைய தாத்தா. ஸ்ரீகண்ட ஸ்தபதி என்று வரும்போது தேவசேனா ஸ்தபதி சுவாமிமலையில இருக்கிறார். அவர் மிகவும் பிரபலமான ஸ்தபதி. தெய்வீக விக்ரகங்களைத்தான் அவரும் அவர் வழித்தோன்றல்களும் செய்து வருகிறார்கள். அவருடைய பாட்டனும், என்னுடைய பாட்டனும் அண்ணன் தம்பிகள். இதுல இந்த சதாசிவ ஸ்தபதியாருடைய குடும்பம், இந்தத் தொழிலை செய்து கொண்டிருந்தாலும் ப்ராபல்யம் அடையவில்லை. இதுல காமராஜ் என்று ஒரு ஸ்தபதி இருக்கிறார். இப்ப தான் அவை VTI (victoria technical institute) கண்காணிப்பாளராச் சேர்ந்திருக்கிறார். நானும் அவரும் அண்ணன் தம்பிகள் ஒரு வழியில.

இந்த சுவாமிமலையில மொத்தம் ஒரு நானூறு, ஐநூறு குடும்பங்கள் இருக்கு. அவ்வளவு குடும்பங்களும் ஒரே தாயாதிகள். ஒரு பெரிய ஆலமரம் மாதிரி. இதுல ஸ்ரீவித்யா ராமசாமி ஸ்தபதியும், சதாசிவ ஸ்தபதியும் உடையார்பாளையம் ஜமீன்ல வந்து, ஆஸ்தான சிற்பிகளாகவும், ஆஸ்தான ஜோதிடர்களாகவும் வாழ்ந்து வந்துருக்காங்க. மன்னர்கள் இவர்கள் சொல்வதைக் கேட்டுதான் ஆட்சி பரிபாலனம் பண்ணிக் கொண்டு வந்திருக்கிறார்கள். ராமசாமி ஸ்தபதி ஆஸ்தான சிற்பியாக இருக்கும் பொழுது உடையார்பாளையம் பக்கத்தில சில கோயில்கள் கட்டியிருக்காங்க.

இதப் பத்தி Madras Metaphor என்கிற புத்தகத்தில எங்களுடைய வரலாறு எல்லாம் இருக்கு. அதைப் படித்துப் பார்த்தால் எங்க பாரம்பரியம் என்னவென்றும், எப்படி வந்தோம் என்றும் எல்லாம் தெரிந்து கொள்வீர்கள். இது ஒரு பெரிய பாரம்பரியத்தைச் சேர்ந்தது. இதுல முத்துசாமி ஸ்தபதி என்கிறது என்னுடைய தாத்தா, சிற்பக் கலையில் பெரிய வல்லுனராக இருந்திருக்கிறார்கள். எங்க அப்பா வந்து ஸ்ரீவித்யா ராமசாமி ஸ்தபதியுடைய பெயரை நிலைநாட்டி, அதைக் காட்டிலும் நல்ல ஒரு பெயரைப் புகழை சம்பாதித்தார்.

ஸ்ரீரங்கத்தில் ஜெய ஸ்தம்பம் பலிபீடம் எங்க அப்பாதான் செய்தார்கள். அப்ப இப்பொழுது இருக்கிற ஸ்தபதிகள் எல்லாம் சின்னக் குழந்தைகள். அப்பொழுது எனக்கே வயது 7, 8 தான் இருக்கும். அந்த ஜெய ஸ்தம்பத்தைப் பார்த்து விட்டு சங்கராச்சாரியார் 'சிற்ப கலா ரத்னா' , 'சிற்ப கலாநிதி' என்ற பட்டத்தை என்னுடைய அப்பாவிற்கு அளித்திருக்கிறார். அதற்குப் பின்னர், அவர் கிட்டத்தட்ட இருபது பட்டங்கள் வாங்கியிருக்கிறார். அதுல 'சிற்ப கலா ரத்னா', 'சிற்ப கலாநிதி' , 'சிற்ப ப்ரவீணா' , 'சிற்ப ஜோதிஷ சாம்ராட்' என்று சிற்ப, சோதிடக் கலைகளுக்காகப் பல பட்டங்களும் வாஸ்து சாஸ்திரத்தில் ஓர் பட்டமும் வாங்கியிருக்கிறார். அவர் தொடாத சப்ஜெக்டே இல்லயென்று சொல்லலாம்.

எங்க அப்பா பெயருலேயே 'கெளரி சங்கர ஸ்தபதி' விருது என்று தற்பொழுது விஸ்வகர்மா சமூகத்துக்கு விருது கொடுத்து வருகிறார்கள். இந்த விருது இந்த வருடம் எனக்குக் கிடைத்தது. இந்த மரபு வழியிலேயே வந்ததற்காக நான் பெருமைப்படறேன். எங்க அப்பா வந்து என்னைப் பெரிய படிப்பு படிக்க வைக்கணும், டாக்டர் ஆக்க வேண்டும் என்றெல்லாம் ஆசைப்பட்டார். ஆனா ஆண்டவன் புண்ணியத்தில அந்தப் படிப்பு படிக்காமல் எனக்கு இந்தக் கலையைப் படிக்க முடிந்தது. 1963 - 1964 ல் சென்னையில் ஸ்கூல் ஆஃப் ஆர்ட்ஸில் படித்தேன். இரண்டு டிப்ளமா படித்தேன். மாடலிங் படிக்கும் பொழுது எனக்கு குரு தனபால். அப்பொழுது தான் செளத்ரி போய் பணிக்கர் வருகிறார். அப்ப நாங்க படிக்கும் பொழுது இதை நவீன கலை பாணி என்றெல்லாம் யோசித்ததில்லை, யாரும் சொன்னதுமில்லை''.

உங்கள் தகப்பனார் உங்களை சிற்பக் கலையில் கொண்டு வர விரும்பாததற்கு என்ன காரணம்?

'இந்தக் கலைத்துறையில என் தந்தைக்கு ஈடுபாடு எப்படி இருந்தது என்றால் தன்னுடைய பாரம்பரியமான தொழிலை செய்து கொண்டிருந்தாலும், இந்த மக்களுக்காக சமூக சேவையை அந்தக் காலத்தில செய்தவர், இந்த விஸ்வகர்மா சமுதாயத்திற்கே ஏதாவது செய்ய வேண்டும், இந்தச் சமுதாயம் என்கிறபோது, பல சமுதாயங்கள் பிரச்சினைகள் இருக்கிற போதும், ஆனா விஸ்வகர்மா என்று சொல்கிற போது இந்த உலகம்தான் விஸ்வம், விஸ்வகர்மா என்ற அடிப்படையைக் கொண்டதுதான் கலையே. அந்த அடிப்படையில பல மாநாடுகள் எல்லாம் போடும் போது, இந்தக் குடும்பங்கள் எல்லாம் அழிந்து போகிறது. ஷீணிச்சுப் போகுது என்கிறபோது, ஒரு சங்கம் ஆரம்பித்தார்கள்.

ராமசாமி ஸ்தபதி இருந்தார். அவரும் எங்க பாட்டன் மரபு வழி வந்தவர், அவரது பேரன் பெயரும் ராமசாமி ஸ்தபதி. ஏன்னா, எல்லோரும் இந்தப் பாட்டன் பெயரை அவங்க அவங்க வைச்சுப்பாங்க. அதனால் தான் எங்களுடைய தாத்தாவின் பெயர், ஸ்ரீவித்யா ராமசாமி ஸ்தபதி அப்படி என்கிறது ஒரு அடைமொழி சேர்த்து வைத்தது. இப்ப கெளரி சங்கர் ஸ்தபதியார் என்கிற போது இன்று வீணை எல்லாம் வாசிப்பவர்கள் கூட அதே பெயரைக் கொண்டதினால், காலம் கடந்து வருகிற போது கெளரி சங்கர் என்றால், பல கெளரி சங்கர் இருப்பார்கள், அதனால்தான் சிற்ப கலாநிதி கெளரி சங்கர், ஸ்ரீவித்யா ராமசாமி ஸ்தபதி, அதனால்தான் எனக்கு எங்க அப்பா என் பாட்டன் பெயரைச் சேர்த்து வித்யா சங்கர் ஸ்தபதி என்று பெயர் வைத்தார். தற்பொழுது வித்யா சங்கர் என்ற பெயரோடு 'கலைச்செம்மல்' என்கிற பட்டம் எல்லாம் சேர்ந்து வருகிறது. பாரம்பரியமாக ஸ்ரீவித்யா பூசை பண்ணுகிறதால்தான், ஸ்ரீவித்யா ராமசாமி என்ற பெயரும், அவருக்கு ஸ்ரீவித்யா சதாசிவ ஸ்தபதி என்ற பெயரும் வந்தது. அவர்கள் எல்லோரும் சுவாமிமலையில இருந்திருக்காங்க. நான் ஒருவன்தான் கும்பகோணத்தில் இருக்கேன்.''

ஸ்தபதிகள் எந்த நூற்றாண்டிலிருந்து சுவாமிமலையில் இருக்கிறார்கள் என்று சொல்ல முடியுமா?

''இராஜராஜ சோழன் பெரிய கோயில் கட்டும்போதே அந்தக் காலத்தில் இருந்தே எங்க பாரம்பரியம் இருந்ததற்கான அறிகுறிகள் தெரிய வருது. அப்ப அந்த முறையில வரும் போது பக்கத்தில அதன் வம்சாவளிகள்தான் அகோர வீரபத்திர ஸ்தபதி, எங்க பாட்டனுக்கு, பாட்டனுக்கு, பாட்டன். 14 அல்லது 16 ஆவது நூற்றாண்டு என்று நினைக்கிறேன். இப்படி கணக்குப் போட்டுப் பார்க்கும்போது, தஞ்சைக் கோயிலுக்கும் அது எந்த நூற்றாண்டில் கட்டப்பட்டது என்பதற்கும், இதற்கும் எங்க பாரம்பரியத்திற்கும் ஏதோ சம்பந்தம் இருக்கிறது என்று என்னால் நிச்சயமாக அறுதியிட்டுக் கூற முடியும். அந்தக் காலத்தில அவங்க கல் தச்சர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள். அடுத்த தலைமுறையில்தான் வார்ப்பு வந்திருக்கிறது.

அந்தக் காலத்தில அவர்கள் பாலி, சமஸ்கிருத மொழி எல்லாம் நிறையப் படித்தவர்கள். சிற்ப சாஸ்திரம் எல்லாம் சமஸ்கிருதத்தில்தான் இருந்தது. அதனால் அவர்கள் சமஸ்கிருதத்தை எல்லாம் படித்திருக்கிறார்கள். சமஸ்கிருதத்தை நாம் வடமொழி என்று சொல்லிக் கொள்கிறோம். பாலி என்று சொல்லிக் கொள்கிறோம். நாகரம் என்று ஒன்று இருந்திருக்கிறது. அதற்குப் பின்னர் தமிழும் இம் மொழியோடு கலந்து மணிப்பிரவாளம் என்று ஒன்று இருந்திருக்கிறது.''

இந்த சாஸ்திரம் எல்லாம் பூர்வாங்கமாக சமஸ்கிருதத்தை மூலமாகக் கொண்டே வந்தவை என்று கூறுகிறீர்களா?

''முதலில் எல்லாமே சமஸ்கிருதமாகத்தான் இருந்திருக்கிறது. இப்பொழுதுதான் தமிழாக்கம் செய்திருக்கிறார்கள். சரஸ்வதி மகாலில் இப்பொழுது இந்தப் புத்தகங்கள் எல்லாம் கிடைக்கிறது. கிரந்த மொழியில் இருந்ததைத்தான் மொழியாக்கம் செய்து தமிழில் வந்திருக்கிறது. அந்தக் காலத்தில இந்த அளவிற்கு வளர்ச்சியில்ல, வசதியில்ல. நாளடைவில...ஓலைச் சுவடியில இருந்ததை எழுதி, அதைப் புத்தக வடிவமாக்கிப் புத்தகத்திலிருந்து புதிய வடிவத்திற்கு மாத்தி..... விஞ்ஞானத்தோடு இணைந்த அறிவு வளர்ச்சிதானே இது.''

உங்கள் குழந்தைப் பருவத்தைப் பற்றியும், எப்படி இந்தக் கலையைப் படித்தீர்கள் என்பது பற்றியும் கொஞ்சம் சொல்லுங்கள்?

''என்னைப் பற்றி நான் அதிகம் சொல்லிக் கொள்ள முடியாது. இருந்தாலும் சொல்கிறேன் 1938 , ஜூன் 6 என்று என்னுடைய காலேஜ் டி.சி.யில கொடுத்திருப்பாங்க. ஆனா நான் நவம்பர் 9 -ல கரூர்ல பிறந்தேன். கரூர் நகர் தேவர் என்று சொல்லக்கூடிய அமராவதி நதிக் கரையிலே எங்க பாட்டியா வீடு. எங்க அம்மாவினுடைய தாய் வீட்டில. எப்பவும் முதல் பிரசவும் தாய் வீட்டில தான் நடக்கும் என்கிறதால், அப்புறம் தாய்வீடு கரூர் என்று சொல்லிவிட்டு சுவாமிமலை எப்படி என்று கேட்பாங்க? தந்தை ஊர் சுவாமிமலை. பிறந்தது கரூர்.... தாய் வீடு. 4 1/2 வயதுல, அப்ப எல்லாம் காது குத்தித்தான் பள்ளிக் கூடத்தில சேர்ப்பாங்க சம்பிரதாய ரீதியா என் கல்வி ஆரம்பிக்கப்பட்டது. ஹை ஸ்கூல் ஸ்ரீரங்கத்தில படித்தேன். பள்ளியில படிக்கும் போதே ஓவியங்களில் எல்லாம் ஈடுபாடு இருந்தது. படிப்பு எல்லாம் எஸ்.எஸ்.எல்.சி. வரை முடித்தேன்.

ஓவியக் கல்லூரியில் எப்போது சேர்ந்தீர்கள்?

என் தந்தையார் அப்ப சென்னையில இருந்தாங்க..என்னுடைய பாட்டன் இராமசாமி ஸ்தபதி தாடி வைத்திருப்பதால் தாடிக்காரர் என்றும் தாடி இராமசாமி ஸ்தபதி என்றும் சொல்லுவார்கள். 1854 என்று நினைக்கிறேன். வெள்ளைக்காரன் சர்வே பண்ணிக் கொண்டு வரும் பொழுது - மூன்று இடத்தில பள்ளி ஆரம்பிச்சான். ஒண்ணு சென்னையில, ஒண்ணு கல்கத்தாவில அதே நேரத்தில ஊட்டியில கூட ஒரு ஸ்கூல் அங்க உள்ள British டவுன்ல ஆரம்பித்தாங்க . எங்க பாட்டனைக் கொண்டு போய் மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் ஆர்ட்ஸ் மெட்டல் செக்ஷன்ல ஹெட்ஆப் தி டிபார்ட்மெண்ட் ஆகப் போட்டாங்க. சுவாமிமலையில இருந்து இழுத்துக்கிட்டுப் போயிருக்காங்க. என்னுடைய அப்பா என்னை சென்னை கூட்டிக் கொண்டு போவாரு. 13 வயதுல உங்க தாத்தா இந்த பொம்மை காலேஜ்-ல தாண்டா வேலை செய்யறாரு என்று சொல்லுவார். இன்னிக்கு தான் இது ஸ்கூல் ஆப் ஆர்ட்ஸ் என்று தெரிந்தது. அப்பயெல்லாம் பொம்மை காலேஜ்தான்.

அப்ப மெட்ராஸில நாலு காலேஜ். ஒண்ணு செத்த காலேஜ், ஒண்ணு உசிரு காலேஜ், மற்றொன்று பொம்மை காலேஜ் மூணு காலேஜ்தான் தெரியும். அந்த பொம்மை காலேஜ் தான் -ன்று உள்ள ஓவியக் கலைக் கல்லூரி என்று மாறி உள்ள போது எங்களுக்கு எல்லாம் ரொம்பப் பெருமையாக -ருக்கு. ஏன்னா... பேஸிக் ரூட், அடிப்படை, மூலம். பாக்கி செக்ஷன் ஆரம்பித்தது எனக்கு தெரியாது. மெட்டல் செக்ஷன் ஆரம்பித்தது என்னுடைய பாட்டனால் - உருவாக்கப்பட்டது என்று சொல்ல முடியாது. ஆங்கிலேயர் அழைத்துப் போய் -வரை ஆசிரியராக அமர்த்தி அந்தத் தொழில் ஆரம்பிக்கப்பட்டது.

இதைப் பத்தி சொல்லிக் கொண்டு வரும் பொழுது எனக்கு எமோஷன்... அந்த traditional தாத்தா மாதிரி வரணும். ஏன்னா தாத்தா எந்த கோயில்ல உக்காந்து பிச்சை எடுத்தாரோ அந்த கோயில்ல சென்று சோறு தின்ன வேணும், அவருடைய கதை சொல்லும் போது அந்த உணர்வுகள் என்னை அறியாமல் என் உள்ளத்தில் வந்து, அந்தப் பள்ளிக்கூடத்தில, அதே கல்லூரியில மாணவனாகச் சேர்ந்து ஒரு நல்ல ஆசிரியருடைய ஆசீர்வாதத்தினாலும் நல்ல உயர்ந்த முதல்வர்களுடைய ஆசியாலேயும் ஒரு நல்ல கலையை 63-64 -ல் படித்து முடித்தேன். அப்ப நேரடியாக இதே டிப்பார்ட்மெண்டுல ஒரு ஆறு மாதம், ஏழு மாதம்... அப்ப வந்து கலை பண்பாட்டுத் துறை இல்ல... Industries and commerce-ல இது வந்து பெரிய சமுத்திரம். இந்த கலை இதெல்லாம் சேர்ந்தது. அப்ப டி.எஸ். பாலகிருஷ்ணன் பெரிய Directors - எல்லாம் இருந்தாங்க. கட்டிக் காத்து வந்தாங்க. அதுக்கு அப்புறம் இது சிதறுண்டு போச்சு. அதுக்கு அப்புறமா அது பல டிபார்ட்மெண்ட்டா ஆகி, இப்ப வந்து அது கலை பண்பாட்டுத் துறையாக வந்திருக்கு. இனி எதிர்காலத்தில் இது எந்தத் துறைக்குப் போகும் என்று தெரியவில்லை.

சென்னை கல்லூரியிலேயே வேலை செய்தீர்களா?

இல்லை, கும்பகோணம் கலைத்தொழில் கல்லூரியிலே என்னுடைய பாட்டனுடைய நினைவோட உள்ள நுழைந்து அதை நிறைவு பண்ணி, ஒரு மாடலிங் Department-ல, sculpture Departments-ல ஓர் சின்ன ஆசிரியராக ஒரு 225 ரூபாய் அந்த காலத்தில, 225 க்ரேட், 125 க்ரேட்ன்னு சொல்லுவாங்க அதாவது 1964, 65-ல 125-என்ற க்ரேட்-ல நுழைந்து 225-என்ற க்ரேடுக்குப் பதவி உயர்வு பெற்று, அது Instructor grade கிட்டதட்ட 30 வருடம் இருந்தேன்..

இந்தக் கல்லூரிக்கென்று தனிப்பட்ட ஒரு பாரம்பரியமும் உண்டு. விஸ்வகர்மா சமூகத்தவர்களுக்காகவே 1954 - ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. வடிவேல் ஆச்சாரி, முக்கண் ஆச்சாரி ஆகியவர்களால் முயற்சி எடுத்து உருவானது. அந்தக் காலத்தில் நகை வேலை செய்பவர்களுக்கு டிசைன் செய்து தருவதற்காக உள்ள 'என்கிரேவிங்' டிபார்ட்மெண்ட் தான் மெயின்.

எந்த நகை செய்வதென்றாலும் முதலில் பிளேட் அடித்துவிட்டு அதற்கு மேல் டிசைன் செய்வார்கள். டிசைன் சொல்லிக் கொடுப்பதற்காகவே இந்த மாதிரி ஆசிரியர்களை வைத்து நடத்தப்பட்டது. முக்கண் ஆச்சாரி பெயரில் ஒரு தெருவே இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

இதன் தொடர்ச்சி அடுத்த வாரம்......

தொகுப்பு Published on 9th Feb, 2008
மேலும்