|
கபிலன் வைரமுத்து கடந்த சில வருடங்களாக 'இளைஞர் சமுதாய
முன்னேற்ற சங்கம்' என்றொர் அமைப்பின் மூலம் பல்வேறு
நற்பணிகளை செய்து வருகிறார். கவிஞர், சிறுகதை
எழுத்தாளர் என்று பன்முகம் கொண்டு விளங்கும் இவர்
தற்போது ஆஸ்திரேலியாவில் 'ஜெர்னலிஸம்' படித்து
வருகிறார். விடுமுறைக்காக சென்னை வந்திருக்கும் கபிலன்
இந்த ஒரு மாத காலம் முழுவதையும் இயக்க பணிகளுக்காக
பயன்படுத்தியிருக்கிறார். அடுத்த வாரம் மீண்டும்
கங்காரு நாட்டிற்கு புறப்படவிருக்கும் கபிலனை ஆறாம்திணை
வாசகர்களுக்காக சந்தித்தப் போது...
ஒவ்வொரு
ஆண்டும் உங்கள் " இளைஞர் சமுதாய முன்னேற்ற சங்கத்தின்"
சட்டக்குழு வெளியிடும் சட்டக் கையேடுகளை பொதுமக்களுக்கு
இலவசமாக வழங்குவீர்கள். இம்முறை சிலருக்கு இலவசமாகவும்
சிலருக்கு குறைந்தவிலையிலும் வழங்குகிறீர்கள். ஏன்
இந்த மாற்றம்?
ஜனவரி 19-ஆம் தேதி சென்னை சிட்டி சென்டரில்
வழக்கறிஞர் நளினி சிதம்பரத்தின் கரங்களால் "பெண்கள்
பாதுகாப்புச் சட்டங்களை" வெளியிட்டிருக்கிறோம்.
அன்றுமுதல் பொதுமக்களுக்கான வினியோகமும் விற்பனையும்
முழுவீச்சில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இயக்கத்தின்
சட்டக்குழு செயலாளர் சுரேஷ் மற்றும் செந்தில்குமார்
இந்தக் கையேட்டிற்கு சட்டத்தகவல்கள்
சேகரித்திருக்கிறார்கள். இது சட்டக்குழுவின் நான்காவது
சட்டப்புத்தகம். சிலருக்கு இலவசம்- சிலருக்கு
குறைந்தவிலை என்ற திட்டத்தை சில வருடங்களாகவே
கடைப்பிடித்து வருகிறோம். அதற்கு இரண்டு காரணங்கள்.
ஒன்று- நிதியின்றி எந்த இயக்கமும் நகராது. எண்ணங்கள்
உறைந்துகிடக்கும்- செயலுக்கு வராது. இந்தப் புத்தகத்தை
விற்று வரும் பணம் பெரும்பணமல்ல என்றாலும் அது
நலத்திட்டப் பணிகளுக்கும் விழிப்புணர்வு
நிகழ்ச்சிகளுக்கும் பயன்படுகிறது. அந்த பயன்பாட்டை
தடுப்பதேன்? இன்னொரு காரணம்- இலவசமாக கொடுக்கின்ற
எதற்கும் மதிப்பில்லை. ஒரு பொருளை முழுமனதோடு
பயன்படுத்த வேண்டுமெனில் அதை பணம் கொடுத்து வாங்க
வேண்டும். இல்லையேல் திருட வேண்டும். திருடப்படுகின்ற
அளவிற்கு சட்டப்புத்தகத்தில் கவர்ச்சி இல்லை. அதனால்
விலைக்கு கொடுக்கிறோம். இருபது ரூபாய் கொடுப்பதற்கு
சில்லறை மாற்ற தயங்குபவர்களுக்கும் இருபது ரூபாய்
மிகப்பெரிய தொகை என்ற பொருளாதார அவலத்தில்
இருப்பவர்களுக்கும் இலவசமாய் கொடுக்கிறோம்.
பெண்கள் கல்லூரி விழாவில் எஸ். எம்.எஸ் பற்றி
பேசினீர்களாமே? அதைப் பற்றி...?
பெரம்பூர்
எலிசெபத் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற அனைத்து கல்லூரி
விழாவில் பேச அழைத்திருந்தார்கள். அழைத்தவர்கள்
என்னிடம் நல்ல "மெசேஜ்" சொல்ல வேண்டும் என்றார்கள்.
எனக்கு செல்பேசியில் நாம் அனுப்புகின்ற மெசேஜ்
நினைவுக்கு வந்தது. " ஒருமுறை என் செல்பேசிக்கு "ஹைடா
செல்லக்குட்டி" என்று அந்நிய எண்ணிலிருந்து ஒரு தகவல்
வந்து என்னை பரபரப்பாக்கியது. சற்று நேரத்தில் அதே
எண்ணிலிருந்து "சாரி ராங் நம்பர்" என்று அடுத்த தகவல்
வந்து என் பரபரப்பை கவிழ்த்துவிட்டது. இதேபோல் ஒருமுறை
என் நண்பன் " டேய்.. மை மேனேஜர் ஒரு டுபுக்கு பையன்
டா" என்று எனக்கு அனுப்புவதாயெண்ணி தன் மேனேஜருக்கு
அனுப்பிவிட்டான். இப்படி யார்யாரோ கொஞ்சப்படுகிறார்கள்.
யார்யாருக்கோ கெட்டவார்த்தைகள் போய் சேருகின்றன. இந்தத்
தகவல் தொழிநுட்ப உலகத்தில் செல்பேசி தகவல்களால் தவறான
உற்சாகத்தையோ தீராத அவமானத்தையோ ஏற்படுத்திவிட வேண்டாம்
என்பதுதான் உங்களுக்கான என்னுடைய முதல் மெசேஜ்" என்று
நான் உரைதொடங்கியபோது பெரம்பூர் மகளிர் தங்கள் அழகான
புன்னைகையால் ஆமோதித்து வரவேற்றனர்.
ஆஸ்திரேலியாவின் கல்வி உங்களை ஆட்கொண்டிருக்கும்.
அடுத்த படைப்பிற்கான அஸ்திவாரம் ஏதாவது?
தீவிரவாதத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு குறுநாவல்
எழுதத்தொடங்கியிருக்கிறேன். அதுதான் அடுத்த படைப்பு.
2008- இன் இறுதியில் முதுகலை முடித்துவரும்போது
நாவலையும் முடித்திருப்பேன் என நம்புகிறேன்.
உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையின் எதிர்காலத்
திட்டமென்ன? இயக்கத்தின் அரசியல் எதிர்காலம் எவ்வளவு
தூரத்தில் இருக்கிறது?
"எமக்குத் தொழில் எழுத்து". இந்த 21-ஆம்
நூற்றாண்டின் 25 வயது இளைஞனாய் இருந்துகொண்டு இதை
அழுத்தமாய் சொல்வதில் பெருமைப்படுகிறேன். "ஜெர்னலிஸம்"
என்பதும் எழுத்து சார்ந்த கல்விதான். கற்ற கல்வி, உற்ற
அனுபவங்கள், படைத்த- படைத்துக்கொண்டிருக்கும்
படைப்புகள்- இவைகளையெல்லாம் வெள்ளித்திரை
வெளிச்சத்திற்கு எடுத்துச்செல்லவிருக்கிறேன். இதுதான்
என் தனிப்பட்ட வாழ்க்கையின் எதிர்காலத்திட்டம்.
உலகம்
ஓர் அதிநவீன அரசியலை நோக்கி நகர்ந்துகொண்டிருப்பதாய்
தோன்றுகிறது. இதில் தேர்தல்- கட்சி- பதவி என்ற
அமைப்புகளெல்லாம் நொருங்கப்போவதாய் உணர்கிறேன்.
இறந்தகாலங்களில் இருந்ததை விட எதிர்கால ஜனநாயகம் அசுர
பலம் கொள்ளப்போகிறது. வாக்குச்சாவடிகளைத் தாண்டி சமூக
முன்னேற்றங்களிலும்- சமூக மாற்றங்களிலும் பொதுமக்கள்
நேரடியாய் பங்குபெறுவர். இந்த ஆக்கபூர்வமான
எதிர்காலத்தைப் பற்றியும் அதில் ஓர் பயனுள்ள
அங்கமாயிருந்து இயங்குவது பற்றியும் எங்கள் இயக்கத்தின்
தலைமைக்குழுவில் கலந்தாலோசித்துக்கொண்டிருக்கிறோம்.
எவ்வளவு தூரத்தில் எதிர்காலமிருக்கிறது என்று கணக்கிட
முடியாது. ஆனால் அதை நோக்கி முன்னேறிக்
கொண்டிருக்கிறோம் என்பதில் இரண்டு கருத்தில்லை. கூடிய
விரைவில் கொடிபறக்கும். |