தமிழ்
  Site Web Yahoo! India Search
 
 
 
தங்க முத்துத் தாமரை சிறுவர் இலக்கியக் களஞ்சியம்
2. பழைய நண்பன் டாக்டர் பூவண்ணன்
தன் தோளில் கைபோட்டவன் யார் எனத் திரும்பிப் பார்த்த தங்கப்பன், ''சோமு, நீயா? பார்த்து எவ்வளவு நாளாச்சு? எங்கே இருக்கறே? என்ன செய்யறே?'' என்று மகிழ்ச்சியோடு கேட்டான். அந்த மகிழ்ச்சியில் அவனது பசியைக் கூட மறந்துவிட்டான்.

சோமு தங்கப்பனோடு முதல் வகுப்பிலிருந்து ஒன்றாகப் படித்தவன். அப்போது தங்கப்பன் மாநகராட்சிப் பள்ளி ஒன்றில் படித்து வந்தான். இருவரும் ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது, சோமுவின் பெற்றோர் அமைந்தகரையைவிட்டுச் சிந்தாதிரிப்பேட்டைக்குப் போய் விட்டனர். அதனால் சோமுவும் பள்ளியிலிருந்து நின்றுவிட்டான். சிந்தாதிரிப்பேட்டையில் ஒரு பள்ளியில் சேரப்போவதாகச் சொல்லிவிட்டுப் போனவன்தான். அதன் பிறகு அவனைப் பார்க்கவில்லை. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு திடீரென்று இப்போது அவனைச் சந்தித்த மகிழ்ச்சியில் பசியை மறப்பதும் இயல்புதானே?

''தங்கப்பா, நானே உங்க வீட்டுக்கு வந்து உன்னைப் பார்க்கணும்னு நினைச்சேன். வழியிலேயே பாத்துட்டேன். எனக்கு இப்ப ஒரே பசி. உடனே சாப்பிட்டாகணும். அப்புறந்தான் நான் எங்கே இருக்கேன் என்ன செய்யறேன்னு சொல்ல முடியும். நீ சாப்பிட்டாச்சா?''

சோமு கேட்டதும் தங்கப்பன் பதில் சொல்லவில்லை. ''உன் முகத்தைப் பார்த்தாலே நீ இன்னும் சாப்பிடலேன்னு தெரியுது. சாப்பாட்டுக்கு வீட்டுக்குப் போறேன்னு நினைக்கிறேன். இன்னைக்கு என்கூட சாப்பிடு, ரெண்டு பேரும் ஓட்டல்லே சாப்பிடுவோம்'' என்றான் சோமு.

தங்கப்பன் மறந்த பசியை அவன் மீண்டும் நினைவுபடுத்தி விட்டான். அதனால் 'வேண்டாம்' என்று சொல்ல மனம் நினைத்தாலும், வயிறு சம்மதிக்கவில்லை. சோமுவுடன் அவனும் நடந்தான். அப்போது ஒரு ஆட்டோ காலியாக அவர்களைக் கடந்து சென்றது. சோமு 'ஆட்டோ ' என்று குரல் கொடுத்ததும், ஆட்டோ நின்றது சோமு. அதில் ஏறிக் கொண்டான். ''என்ன நிக்கறே? ஏறு தங்கப்பா'' என்று அவசரப்படுத்தினான்.

''ஓட்டல் பக்கத்திலேதானே இருக்குது. அஞ்சி நிமிஷத்திலே நடந்து போயிடலாமே இதுக்கு ஏன் ஆட்டோ ?''தங்கப்பன் ஆட்டோ வில் ஏறாமலேயே கேட்டான்.

''தங்கப்பா ஆட்டோ விலே ஏறு. உன்னை உசத்தியான ஒரு ஓட்டலுக்கு அழைச்சிட்டுப் போறேன்'' -சோமு வாயால் சொன்னதுடன், தன் கையை நீட்டி அவன் கையைப் பிடித்து இழுத்தான்.

தங்கப்பன் சாவி கொடுத்த பொம்மையைப் போல அசைந்து ஆட்டோ வில் ஏறினான். ஆட்டோ வைக் கிளம்பிய டிரைவர், ''எங்கே போகணும்?'' என்று கேட்டான். சோமு ''மவுண்ட்ரோட்'' என்று சொன்னதும் ஆட்டோ வேகமாகச் சென்றது.

சோமு சொன்னதைப் கேட்டதும், ''மவுண்ட் ரோட்டுக்கா? அவ்வளவு தூரம் போனால், பள்ளி மணி அடிக்கறதுக்குள்ளே திரும்பி வரமுடியாதே!'' என்று பதறினான், தங்கப்பன்.

''முடியட்டா என்ன? குடியா முழுகிடும்..? நீ ஒருநாள் கூட மட்டம் போடாம ஸ்கூலுக்குப் போறவனாச்சே. இன்னைக்கு உன்னுடைய பழைய நண்பனோடு சாப்பிட, பேச ஒரு அரை நாள் மட்டம் போடேன். அதனால் என்ன தப்பு?''

சோமு சொன்னதைக் கேட்டுத் தங்கப்பன் குழப்பமடைந்தான். சோமு சொன்னது போல அவன் எப்போதும் தப்பாமல் பள்ளிக்குச் செல்பவன். சென்ற ஆண்டு காய்ச்சல் வந்த போதுகூடப் பள்ளிக்கு வந்துவிட்டான். அதை அறிந்த தலைமையாசிரியர்தான் முதல் பீரியட் முடிந்ததும் அவனை வீட்டுக்கு அனுப்பினார். அப்போது தொடர்ச்சி஡க மூன்று நாட்கள் பள்ளிக்கூடம் செல்லவில்லை. அதைத் தவிர வேறு விடுமுறையே எடுத்ததில்லை. ''இப்போது அரைநாள் விடுமுறை எடுப்பதா? ஆட்டோ வை நிறுத்தி இறங்கிக்கலாமா?''

''ஆட்டோ வை நிறுத்தி இறங்கினாலும் சாப்பாட்டுக்கு வழியில்லே, இன்னைக்கு அரை நாள் விடுமுறை எடுத்துக்கொள்ளலாம்'' என்று தங்கப்பன் தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டான்.

தங்கப்பனும் சோமுவும் சென்ற ஆட்டோ மவுண்ட் ரோடின் ஒரு தியேட்டருக்கு அருகே இருந்த பிரபலமான ஒரு அசைவ ஓட்டல் முன்நின்றது. சோமு ஆட்டோ வுக்குப் பணம் கொடுத்து விட்டு இறங்கினான். தங்கப்பனும் இறங்கினான். ''வா தங்கப்பா'' என்றபடி, ஓட்டலின் படிகளில் ஏறத் தொடங்கினான், சோமு.

ஓட்டலில் கூட்டம் அதிகம் இருந்தது. சிலர் இடம் கிடைக்காமல் நின்று கொண்டிருந்தனர். சோமு அப்படி நிற்கவில்லை. ஓட்டலின் ஒரு பகுதியில் சிறு சிறு அறைகள், சிறிய கதவுகளுடன் இருந்தன. அவற்றில் ஓர் அறையின் கதவைத் திறந்து கொண்டு நின்றான். தங்கப்பன் நுழைந்த பிறகு, அவனும் நுழைந்தான். பின்பு கதவு தானாகவே மூடிக் கொண்டது.

அந்தச் சிறிய அறையில் நான்கு பேர் உட்காரலாம்..ஆனாலும் தங்கப்பனும் சோமுவும் மட்டுமே அங்கிருந்தனர். சிறிது நேரத்தில் சீருடை அணிந்த சர்வர் உள்ளே வந்தான்.

அவனிடம் ரெண்டு சிக்கன் பிரியாணி என்று ஆர்டர் கொடுத்தான் சோமு.

தங்கப்பன் வாயடைத்துப் போனான். உள்ளே நுழையும் போது விலைப்பட்டியலில் கொட்டை எழுத்தில் அரை பிளேட் மட்டன் பிரியாணி ரூ. 9 சிக்கன் பிரியாணி ரூ12 என்று எழுதியிருந்ததை அவன் படித்திருந்தான். ஓட்டலுக்குப் போனால் ''ரெண்டு இட்லி, சாம்பார்'' என்பதற்கு மேலே வேறு எதையுமே சொல்லாத தங்கப்பனுக்கு இப்போது நடப்பதெல்லாம் கனல் நடப்பது போல இருந்தது.

வெள்ளை வெளேர் என்று ஒரு பெரிய பீங்கான் தட்டு. அதன் மேலே ஒரு சிறிய பீங்கான் தட்டு. அதில் பெரிய மஞ்சள் பந்தைப் பாதியா வெட்டி வைதததுபோல் பிரியாணி. அதற்கு மகுடம் சூட்டியதுபோல ஒரு முழு முட்டை. சர்வர் பிரியாணித்தட்டை வைத்து, அருகே ஒரு பெரிய ஸ்பூனும், முள் கறண்டியும் வைத்தான். மற்றொரு பீங்கான் கிண்ணத்தில் வெங்காயத் தயிர்ப் பச்சடி வைத்தான்.

தங்கப்பன் வியப்பிலிருந்து விடுபடவில்லை. ஆனால் சோமு, சிறிய தட்டிலிருந்த பிரியாணியைப் பெரிய தட்டில் போட்டுக் கொண்டான். வலக்கையில் ஸ்பூனும் இடக்கையில் முள்கரண்டியும் எடுத்துக் கொண்டு ''சாப்பிடு தங்கப்பா'' என்று கூறிவிட்டு அவன் சாப்பிட தொடங்கினான்.

தங்கப்பன் சோமுவைப் பார்த்து அவன் செய்தப்படியே செய்தான். ஆனால் முள்கரண்டியும் ஸ்பூனையும் தொடவில்லை. கையாலேயே சாப்பிடத் தொடங்கினான். நிதானமாக சாப்பிட்டான். நடப்பது நிஜம்தானா? நாம் சிக்கன் பிரியாணி சாப்பிடுறோமா?'' சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே கனவு கலைந்து விழித்துக் கொள்வோமா? என்றெல்லாம் நினைத்துக் கொண்டே சாப்பிட்டான்.

இருவரும் சாப்பிட்டு முடித்தனர். பில் வந்தது. சோமு பில் இருந்த தட்டில் மூன்று பத்து ரூபாய் நோட்டுகளை வைத்தான். பில் தொகை இருபத்துநான்கு ரூபாய் போச்சு. ஆறு ரூபாயைக் கொண்டு வந்து வைத்தான் சர்வர். சோமு அதில் ஐந்து ரூபாயை எடுத்துக் கொண்டு ஒரு ரூபாயை சர்வருக்கு அன்பளிப்பாக வைத்துவிட்டு எழுந்தான். இருவரும் ஓட்டலிருந்து வெளியே வந்தனர்.

வெளியே வந்ததும, ''சோமு, பணத்தை இப்படி தண்ணியா செலவு செய்யறையே! உனக்கு ஏது இவ்வளவு பணம்?'' என்று கேட்டான் தங்கப்பன்.

''முதல்லே பக்கத்து தியேட்டரிலே படம் பார்க்கப் போவோம். அப்புறம் எனக்குப் பணம் எப்படி கிடைக்குதுன்னு சொல்றேன்.''

சோமு சொல்லிவிட்டு, தங்கப்பனை அழைத்துக் கொண்டு தியேட்டருக்குள் நுழைந்தான்.

மறுநாள்

தலைமையாசிரியர் பத்தாம் வகுப்புக்கு ஆங்கிலப் பாடம் மட்டும் நடத்துவார். அவர் எப்போதும் இரண்டாம் பீரியட்தான் வகுப்புக்கு வருவார். அன்றும் அதேபோலப் பத்தாம் வகுப்புக்குள் நுழைந்து உட்கார்ந்தார். வகுப்பைச் சுற்றித் தம் பார்வையைச் செலுததினார். முதல் பெஞ்சில், முதல் இடத்தில் எப்போதும் உட்கார்ந்திருக்கும் தங்கப்பனைக் காணோம்.

தலைமையாசிரியர் இதைக்கண்டு வியந்தார். தங்கப்பன் வகுப்புக்கு வராமல் இருந்ததே இல்லை. தாமதமாக வந்ததும் இல்லை. இன்று அவன் ஏன் வரவில்லை?

''முத்து, தங்கப்பன் எங்கே? தலைமையாசிரியர் கேட்டார்.

''முதல் பீரியடுக்கே வரலை சார்.. எப்பவும் வராமல் .இருக்க மாட்டான். உடம்பு சரியில்லையோன்னு நினைக்கறேன். சார்!''

முத்துவின் பதில் அவருக்கு ஓரளவு திருப்தியளித்தது. ''ஊரெங்கும் 'புளு' காய்ச்சல் பரவிக் கொண்டிருக்கிறதே, தங்கப்பனையும் அந்தக் காய்ச்சல் தாக்கியிருக்கும்'' என்று நினைத்துக்கொண்டு பாடத்தைத் தொடங்கினார்.

மறுநாளும் தங்கப்பன் பள்ளிக்கு வரவில்லை.

தலைமையாசிரியர் தங்கப்பன் குடியிருக்கும் பகுதியில் வசிக்கும் வரதனை அழைத்தார். 'வரதா, பள்ளிக்கூடம் விட்டதும் தங்கப்பன் வீட்டுக்குப் போ. தங்கப்பன் ஏன் பள்ளிக்கூடத்துக்கு வரலைன்னு பாத்துட்டு வா.. ஒருவேளை அவனுக்கு உடம்பு சரியில்லேன்னா, என்ன நோய், இப்ப எப்படி இருக்குன்னு கேட்டுட்டு வா'' என்று கூறினார்.

மறுநாள் காலை.

தலைமையாசிரியர், பள்ளி வாயிலில் அருகே நின்று 'வரதன் வருகிறானா?'' என்று பார்த்துக் கொண்டிருந்தார்.

அதோ வரதன் வருகிறான்.

'வணக்கம் சார்..''

வரதனின் வணக்கத்தை ஏற்றுக்கொண்ட தலைமை ஆசிரியர் அடுத்து அவன் சொல்லப் போவதைக் கேட்க அவனை ஆவலுடன் நோக்கினார்.

''சார், தங்கப்பனுக்குக் காய்ச்சல் கீய்ச்சல்னு எதுவுமில்லே''

''பின்னே ஏன் அவன் பள்ளிகூடத்துக்கு வரலையாம்?''

தலைமையாசிரியர் குழப்பத்தோடு கேட்டார்.

''தங்கப்பன் இனிமேல பள்ளிக்கூடத்துக்கே வரமாட்டானாம் சார்''

வரதன் சொன்னது, இடியாக அவர் இதயத்தைத் தாக்கியது.

தொடரும்...

தொகுப்பு March 29th, 2008
 


மேலும்