|
''வணக்கம் சார்!''
''குட் மார்னிங் சார்!''
பள்ளிக்கூடத்தில்
நுழைந்த மாணவ மாணவியர் வாயிலருகே நிற்கும்
தலைமையாசிரியரைக் கண்டதும், தமிழிலும், ஆங்கிலத்திலும்
வணக்கம் செலுத்திவிட்டு மேலே சென்றனர். தலைமையாசிரியர்
தாமோதரம் அந்த மரியாதையினைத் தலையசைப்பின் மூலம்
புன்னகையோடு ஏற்றுக் கொண்டிருந்தார்.
பள்ளியின் மணி ஒலிப்பதற்கு இன்னும் பதது நிமிட நேரம்
இருந்தது. எப்போதும் முதல் மணி அடித்த பிறகு தமது
அறையிலிருந்து வெளி வரும் தலைமையாசிரியர் அன்று சிறிது
முன்னதாகவே வெளியே வந்து வாயிலுக்கு அருகே நின்றார்.தம்
பள்ளி மாணவர்களின் மூன்று பேரை உடனே பார்க்க வேண்டும்
போல ஓர் ஆவல் தோன்றியது. அதனால்தான் சிறிது முன்பாகவே
வந்து வாயிலருகே நின்றுவிட்டார்.''
சுமார் முன்னூறு மாணவர்கள் அந்தப் பள்ளியில்
படிக்கிறார்கள். அவர்களில் மூன்று பேரை மட்டும் அவர்
பார்க்க விரும்பியதற்கு ஒரு காரணம் இருந்தது.
அன்று கால பள்ளி நிறுவனரும் பள்ளியின் தாளாருமான
கோபாலனை அவரது வீட்டில் பள்ளி நிர்வாக விஷயமாகச்
சந்தித்தார். தலைமையாசிரியர் பள்ளியின் வளர்ச்சிக்காக
எதுவும் செய்யக்கூடிய கோபாலன் அன்று கொஞ்சம் சலிப்போடு
பேசினார்.
''பள்ளிக்கூடத்தை நடத்தி என்ன பயன்? நேற்று சென்னை
நகரில் ஒரு பணக்காரரைச் சந்தித்தேன். அவரிடம் நமது
பள்ளிக்கூடத்தைப் பற்றிச் சொன்னேன். ''இலட்சுமி
உயர்நிலைப் பள்ளியா? அப்படி ஒரு பள்ளிக்கூடம் அய்யாவு
காலனியில் இருப்பது எனக்குத் தெரியாதே' என்று
சொல்லிவிட்டார். பள்ளிக்கூடத்துக்கு அருகே இருக்கும்
செனாய்நகர் வாசிக்குக் கூட நமது பள்ளி தெரியவில்லையே!''
கோபாலன் வருத்தத்தோடு கூறினார்.
பத்தாண்டுகளுக்கு முன்னே கோபாலனை தம் தாயாரின்
நினைவாக இலட்சுமி உயர்நிலைப் பள்ளியை அய்யாவு காலனியில்
தொடங்கினார். ஆறாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு
வரை உள்ள சிறிய பள்ளிக்கூடம் அது. அதில் பெரும்பாலும்
எளியவர்களின பிள்ளைகளே சேர்ந்தனர். தொடங்கிய ஆண்டே
அங்கே ஆசிரியராகச் சேர்ந்த தாமோதரம் மூன்றாண்டுகளுக்கு
முன்னே தலைமையாசிரானார் என்றாலும் பள்ளிக்கூடம்
புகழடையவில்லை. பள்ளி இறுதித் தேர்விலும்
இலட்சுமிப்பள்ளி சிறந்த இடம் பெறவில்லை. தேர்ச்சியில்
இன்னும் ஐம்பது சதவிகிதத்தை அது தாண்டவில்லை. அகே உள்ள
திரு.வி.க பள்ளி, வைணவப் பள்ளி முதலியவைகள் புகழ்
பெற்று வர இலட்சுமி உயர்நிலைப் பள்ளி இருக்குமிடம்
தெரியாமல் இருந்தது.
இந்த நிலையைத் தலைமை ஆசிரியரும் அறிவார். மாணவரகளைச்
சேர்க்க மற்றப் பள்ளிகளில் மக்கள் திரண்டபோது, இலட்சுமி
உயர்நிலைப்பள்ளியைத் தேடிச் சிலரே வருவார்கள். அதுவும்
மற்றப் பள்ளிகளிடம் இடம் கிடைக்கவில்லை என்பது
உறுதியான பிறகு கடைசிப் புகலிடமாக இலட்சுமி பள்ளிக்கு
ஓட முயல்வார்கள். தாமோதரம் இதைக்கண்டு
வருந்தியிருக்கிறார்.
''உண்ண போதுமான உணவுக்கே வழியற்ற ஏழைகளின்
குழந்தைகளே நிறைந்திருக்கும் இலட்சுமி பள்ளி, எண்பது
தொண்ணூறு சதவிகித வெற்றியைப் பெறுவது முயல் கொம்பு போல
முடியாத ஒன்று என்று உடன் பணியாற்றும் ஆசிரியர்கள்
கூறிவிட்டார்கள் என்றாலும் தாமோதரம் ஓயாமல் உழைத்தார்.
விடுமுறை நாட்களில் தனிவகுப்புகள் நடத்தினார். அந்த
வகுப்புகளுக்குப் பாதிபேரே வந்தனர். அதனால் தேர்வில்
வெற்றியும் பாதிக்கு குறைவாகவே இருந்தது.
இந்த நிலையில் இலட்சுமி உயர்நிலைப்பள்ளி
புகழடையவில்லை. அது இருப்பதை அறியாதவர் மிகப்
பலர்.அறிந்தவர்களோ அதை எள்ளி நகையானைர்கள்.
அதனால் தாமோதரரின் வருத்தம் மிகுதியானது. அவரைப்
போலவே கோபாலனும் வருந்தினார். இன்று தமது வருத்தத்நக்
கொஞ்சம் அதிகமாகவே வெளிப்படுத்திக் கொண்டார்.
கோபாலன் கூறியதைக் கேட்ட தாமோதரம், ''ஐயா! கவலையை
இன்றோடு விட்டுவிடுங்கள். அடுத்த ஆண்டு இதே நேரத்தில்
இலட்சுமி உயர்நிலைப்பள்ளி நாடறிந்த பெயராகிவிடும்.
சென்ற இடத்திலெல்லாம் உங்களை உங்கள் பள்ளிக்காகப்
பாராட்டுவார்கள்'' என்று கூறினார்.
கோபாலனின் கவலை வியப்பாக மாறியது. அவர் தாமோதரத்தின்
முகத்தை ஏறிட்டுப் பார்த்தார். அவர் முகத்தில்
மகிழ்ச்சி தெரிந்தது.
''தலைமையாசிரியர் சார்! அலாவதீனின் அற்புத விளக்கு
உங்களுக்குக் கிடைத்துவிட்டதா? அதிலிருந்து பூதத்தை
வரவழைத்து, நமது பள்ளிக்குப் புகழ் வாங்கிக் கொடுன்னு
உத்திரவிடப் போகிறீர்களா?''
கோபாலன் கிண்டலாகக் கேட்டார்.
'''அலாவுதீனின் அற்புத விளக்கைக் காட்டிலும்
உயர்ந்த மாணவ விளக்குக் கிடைத்திருக்கிறது. அதுவும் ஒரு
விளக்கல்ல! மூன்று விளக்குகள்! அவற்றின் ஒளியால் நமது
பள்ளி புகழ் பெற்றுப் பிரகாசிக்கப் போகிறது.''
தாமோதரம் சொன்னதைக் கேட்டதும் கோபாலன், ''கொஞ்சம்
விளக்கமாகச் சொல்லுங்க சார்'' என்று கேட்டார்.
தாமோதரம் சொன்ன மாணவ விளக்குகள், தங்கப்பன்,
முத்துமணி, செந்தாமரை ஆகிய மூவரே. மூன்று பேரும்
பத்தாம் வகுப்பு மாணவர்கள். படிப்பில் கெட்டிக்காரர்கள்.
எந்தப் பாடத்திலும் அவர்கள் தொண்ணூற்றைந்துக்கு
மேற்பட்ட மதிப்பெண்ணைத்தான் பெறுவார்கள். மதிப்பெண்
வழங்குவதில் கஞ்சனாக இருக்கும் ஆசிரியரையும் கர்ணனாக
மாற்றி அவர்களிடமும் அதே அளவு மதிப்பெண்
பெறுவார்கள்.அவர்கள் திறமையை ஆறாம் வகுப்பிலிருந்தே
கவனித்து வரும் தாமோதரம் அவர்களை மேலும் ஊக்கி,
உற்சாகப்படுத்தினார். அதனால் அவர்கள் தொடர்ந்து
படிப்பிலே தனிக்கவனம் செலுத்தி வந்தனர். அந்த மூவரும்
அந்த ஆண்டு பள்ளி இறுதித் தேர்வில் மாநிலத்தின் முதல்
பத்து இடங்களில் இடம் பெற்று விடுவார்கள் என்பது அவர்
நம்பிக்கை.
''ஐயா! தங்கப்பன், முத்துமணி, செந்தாமரை ஆகிய
மூவரும் மாநிலத்தின் முதல் மூன்று ராங்கைப் பெற்று
விடுவார்கள் என்பது என் நம்பிக்கை. அது தவறிப் போனாலும்
மூவரும் மாநிலத்தின் முதல் பத்து இடங்களில் இடம்
பெற்றுவிடுவார்கள். அதில் சந்தேகமே இல்லை!''
தாமோதரம் கூறியதைக் கேட்ட கோபாலன்
மகிழ்ச்சியடைந்தார்.
''என் தாயாரின் நினைவாக இந்தப் பள்ளியைத்
தொடங்கினேன். பள்ளி புகழடைந்தால்தான் என் தாயாரின்
பெயர் புகழ்பெறும். என் மனம் மகிழ்ச்சியடையும் சார்!
நீங்கள் குறிப்பிட்ட மூன்று மாணவர்களின் திறமை
குறையாமல் மேலும் வளர்ச்சியடையச் செய்யுங்கள். நானும்
ஒருநாள் பள்ளிக்கூடத்துக்கு வந்து மூவரையும் பார்த்து
உற்சாகப் படுத்துகிறேன்.'' என்றார் கோபாலன்.
அதனால்தான் அன்று தலைமை ஆசிரியர் அந்த மூன்று
மாணவர்களையும் சந்திக்க வாயிலுக்கே வந்துவிட்டார்.
''வணக்கம் சார்!''
கணீரென்ற குரலைக் கேட்டதும் தலைமையாசிரியர்
சிந்தனையிலிருந்து விடுபட்டு எதிரே பார்த்தார். வணக்கம்
கூறியவன் தங்கப்பன். பூந்தமல்லி சாலைக்கு வடக்கே
பொன்னுவேல் பிள்ளை தோட்டத்தில் உள்ள குடிசைப்பகுதியைச்
சேர்ந்தவன். அவன் வீட்டில் மின்சாரம் கூடக் கிடையாது.
ஆனால் தெருவிளக்கின் ஒனி அவன் வீட்டு முற்றத்தில்
படியும். அங்கே உட்கார்ந் தான் படிப்பான் என்றாலும்
வகுப்பில் முதல் மதிப்பெண் பெறவே போட்டியிடுவான்.
அவனைப் பார்த்ததும் தாமோதரத்தின் முகம் மலர்ந்தது.
''தங்கப்பா, நன்றாகப் படிக்கிறாயா?''
''படிக்கிறேன் சார்''
''நிறைய மார்க் வாங்கறோம்னு நினைச்சு அலட்சியமா
இருந்திடாதே. அரசாங்கத் தேர்வு மார்ச்சு மாதந்தானே,
இப்போ என்ன அவசரம்ன நினைச்சு படிக்கா இருந்திடாதே..''
தலைமையாசிரியர் சொல்லிக் கொண்டிருந்த போதே,
முத்துமணி அங்கு வந்து வணக்கம் தெரிவித்தான்.
''முத்து, தங்கப்பனிடம் சொன்னது உனக்கும்
கேட்டிருக்கும். இப்போதிலிருந்தே நீங்கள் நல்லா
படிக்கணும். மாநிலத்தின் முதல் ராங்க் நம்ம
பள்ளிக்கூடத்துக்குக் கிடைக்கணும்!'!
''படிக்கிறோம் சார்..''
இருவரும் ஒரே குரலில் கூறிவிட்டு விடை பெற்றுச்
சென்றனர்.
தலைமையாசிரியர்
அங்கேயே நின்றிருந்தார். முதல் மணி அடிக்கும் போது
செந்தாமரை வந்தாள். அவளிடமும் நன்றாகப் படிக்க வேண்டும்
என்று கூறினார். ''இந்த ஆண்டு முதல் ராங்க் நம்ம
பள்ளிக்கூடத்துக்குத்தான் கிடைக்கும். முதல் ராங்க்கை
தங்கப்பன், முத்துமணி ஆகிய இருவரில் ஒருவன் வாங்கித்
தரப் போகிறானா? அல்லது நீ வாங்கித் தரப் போகிறாயா?
இதுதான் கேள்வி. பெண்கள் எதிலும் முன்னணியில் நிற்கும்
காலம் இது. முதல் ராங்க்கை நீ பெற்றால் அது பெண்
குலத்துக்கே பெருமை'' என்று போட்டி மனப்பான்மையைத்
தூண்டு விட்டார் தாமோதரம்.
''சார், மாநிலத்தின் முதல் ராங்க் வாங்குகிறேனோ
இல்லையோ, இந்தப் பள்ளிக்கூடத்தில் முதல் ராங்க் வாங்கப்
போவது நான்தான். சார், தங்கப்பன், முத்துமுணியைக்
காட்டிலும் நான் அதிக மதிப்பெண் பெறுவேன். இது உறுதி
சார்..!''
செந்தாமரை சபதம் செய்யும் உணர்வோடும் உறுதியோடும்
பேசியதைக் கேட்டுத் தலைமையாசிரியர் உவகை அடைந்தார்.
அடிக்கடி இவர்களை ஊக்குவித்துக் கொண்டிருக்க வேண்டும்
என்று முடிவு செய்த கொண்டவராக அவர் தமது அறையை நோக்கிச்
சென்றார்.
முற்பகல் வகுப்புகள் முடிந்தன. பள்ளியின் அருகே
குடியிருக்கும் மாணவர்கள் உணவுக்காகத் தம் வீடுகளை
நோக்கிப் பறந்தனர். பகல் உணவை கொண்டு வந்திருந்த
மாணவர்கள், வகுப்பறைக் குள்ளும் மரத்தடியிலும் அமர்ந்து
சாப்பிடத் தொடங்கினர். முத்துமணி தான் கொண்டு வந்த
சிறிய எவர்சில்வர் டப்பியைத் திறந்தான். அதில் தயிர்
சாதமும் அதன் மேலே பொடடு வைத்தாற் போல ஒரு துண்டு
எலுமிச்சை ஊறுகாயும் இருந்தன. அவன் சாப்பிடப் போகும்
முன்பு தற்செயலாக எதிரே பார்த்தான். முதல் பெஞ்சில்
தங்கப்பன் சோர்வோடு உட்கார்ந்திருப்பதைக் கண்டான்.
''தங்கம் நீ சாப்பிடலே!'' என்று கேட்டான் முத்துமணி.
அதைக்கேட்ட தங்கப்பன் சோர்வை மறைத்து, சிரிப்பை
வரவழைத்துக் கொண்டு, ''இன்னிக்குச் சாப்பாடு கொண்டு
வரலே... ஓட்டலுக்குப் போகணும்'' என்றபடி எழுந்து
நின்றான்.
''தங்கம்! நான் தயிர்சாதம் கொண்டாந்திருக்கேன்.
ரெண்டு பேரும் சாப்பிடலா.''
முத்துமணி சொன்னதும் தங்கப்பன் அவனிடமிருந்த
சாப்பாட்டு டப்பியைப் பார்த்தான். முத்துவின் மனதைப்
போல அது விரிந்து பரந்து பெரிதாக இல்லை. சிறிய டப்பி.
அதிலிருக்கும் சாதம் அவனுக்கே போதாது என்பதை உணர்ந்தான்
தங்கப்பன்.
''வேண்டாம் முத்து. அப்பா பணம் கொடுத்திருக்காரு.
நான் ஓட்டலுக்கு போய் டிபன் சாப்பிடுகிறேன். நீ
சாப்பிடு''
தங்கப்பன் சொல்லிவிட்டு அறையை விட்டு வெளியே வந்தான்.
வாயிலருகே அவன் சென்ற போது அங்கே தலைமையாசிரியரைச்
சந்தித்தான். அவர் வீடு அதே காலனியில் இரண்டு தெரு
தள்ளியிருந்தது. அதனால் அவர் நடந்து போய்,
சாப்பிட்டுவிட்டு வருவார். இன்றும் அவ்வாறு சென்று
கொண்டிருந்தபோதுதான், தங்கப்பனும் வெளியே செல்வதைப்
பார்த்தார். அவன் முகம் சோர்ந்திருப்பதைக் கண்டார். ''தங்கப்பா
என்ன ஒரு மாதிரியா இருக்கே? சாப்பிடலையா?'' என்று
கேட்டார்.
காலையில் சித்தியுடன் சண்டை. சித்தி ஒன்பது மணிக்கு
வந்து புரசைவாக்கத்திலிருக்கும் அவருடைய தங்கை
வீட்டுக்குப்போய், தான் தரும் பணத்தைக் கொடுத்துவிட்டு
வருமாறு கூறினாள். 'பள்ளிக்கூடம் போக வேண்டும். அதனால்
மாலையில் செல்கிறேன்ஷ என்றான் தங்கப்பன். கோபம் கொண்ட
சித்தி, காலையில் டிபனும் கொடுக்கவில்லை. பகல் உணவும்
டப்பியில் போட்டுத் தரவில்லை. காலையிலிருந்து எதுவுமே
சாப்பிடாததால் அவன் சோர்ந்திருந்தான்.
''உண்மையைத் தலைமையாசிரியரிடம் சொல்லிவிடலாமா?''
என்று ஒரு கணம் நினைத்தான். பிறகு அந்த எண்ணத்தை
மாற்றிக் கொண்டு, ''இன்னும் சாப்பிடலே சார்.. அப்பா
பணம் கொடுத்திருக்கார்.. சாப்பிடஓட்டலுக்குப் போறேன்''
என்றான் தங்கப்பன்.
''சரி சீக்கிரம்போ.. நேரமாகுது!'' என்றார்
தலைமையாசிரியர்.
தங்கப்பன் வெளியே நடந்தான். அவன் நடையில்
தளர்ச்சியிருப்பது போல அவருக்குத் தெரிந்தது.அவர்
அவனையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அதே
வழியே வந்த ஒருவன், ''தங்கப்பன் வயதுள்ளவன், ''தங்கப்பா!''
என்றழைத்தபடி அவனருகே சென்று தங்கப்பனின் தோளில்
உரிமையோடு கை போட்டுக் கொண்டதைத் தலைமையாசிரியர்
பார்த்தார். அவனால் தங்கப்பனின் வாழ்க்கையே மாறப்
போகிறது என்பது அவருக்குத் தெரியாது.
தொடரும்... |