அதற்குள்
லாரியோ பஸ்ஸோ வேகமாக வரும் சத்தம் அவன் காதில் கேட்டது.
மொட்டைத் தலையன் திரும்பிப் பார்த்தான்.
பங்களாவுக்கருகே யிருந்த பாதையில் முன்னே ஒரு ஜீப்பும்,
பின்னே ஒரு வெள்ளை நிற போலீஸ் லாரியும் வருவது
தெரிந்தது.'ஐயோ போலீஸ்' என்று கத்தினான். கூட வந்த
ஒரு ஆள்.
'முட்டாளே, கத்தாதே' என்று அதட்டிய மொட்டைத் தலையன்,
'என் பின்னே ஓடி வாருங்கள். இந்தத் தோப்பு வழியே
தப்பித்துக் கொள்ளலாம்.'' என்று கூறி விட்டு ஓடினான்.
மற்றவர்கள் அவன் பின்னே ஓடினார்கள்.
இதற்குள் பங்களாவின் முன்னே ஜீப்பும் போலீஸ்
லாரியும் நின்றன. ஜீப்பில் இன்ஸ்பெக்டர் எத்திராஜின்
அருகேயிருந்த ரவி, ''இன்ஸ்பெக்டர் தோப்பில் ஆட்கள்
ஓடுகிறார்கள்..'' என்றபடி இறங்கித் தோப்புக்குள்
ஓடினான்.
இன்ஸ்பெக்டர் லாரியில் வந்த போலீஸ்காரர்களை
பங்களாவுக்குள் அனுப்பிவிட்டு, ரவியைப் பின் தொடர்ந்து
ஓடினார்.
தோப்புக்குள் ஓடிக்கொண்டிருந்த ரவி, ''பார்த்து வா!
என்னை மிதித்து விடாதே' என்ற ராமனின் குரலைக் கேட்டு
நின்றான். எதிரே பார்த்தான். தோப்பின் இருட்டுக்கு அவன்
கண்கள் பழக்கப்பட்டதும், சற்று தூரத்தில் இருக்கும்
ராமனைக் கண்டான்.
''ராமா, உன்கொன்னும் இல்லையே'' என்றபடி அவனருகே
ஓடினான்.
''எனக்கொன்னும் இல்லை. காலையிலிருந்து இந்த நேரம்
வரை சாப்பிடறதுக்கு எனக்கொன்னுமில்லை. பசி, பசி, பசி''
என்றான் ராமன்.
இதற்குள் அருகே வந்த இன்ஸ்பெக்டர் ராமனைப்
பார்த்தார்.
ரவி தன்னை விட்டுப் பிரிந்தது முதல் அந்த நிமிடம்
வரை நடந்ததை மெல்லிய குரலில் சொல்லி முடித்த ராமன், ''மொட்டைத்
தலையனும் பிறரும் இந்தத் தோப்பின் வழியே ஓடி
விட்டார்கள்'' என்பதையும் தெரிவித்தான்.
''கவலைப்படாதே ராமா, பங்களவிலிருந்து தப்ப
முயல்பவர்கள் தோப்பின் வழியே வருவார்கள் என்பது
தெரிந்து, பிள்ளையார் கோவிலருகே சில போலீஸ்காரர்களை
நிறுத்தி விட்டு வந்திருக்கிறோம். அதனால் யாரும் தப்ப
முடியாது. மூட்டைகள் ஏற்றிய லாரி வெளியே போகாமல் லைட்டை
உடைத்து நிறுத்திய உனக்கு என் பாராட்டு'' என்றான் ரவி.
''பாராட்டு வேண்டாம். சாப்பாடு வேண்டும். பசி! பசி!
பசி!'' என்று புலம்பினான் ராமன்.
''உன் பசி எனக்குத் தெரியும்.அதனால் சீக்கிரம் வந்து
விட வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் இன்ஸ்பெக்டர் ஏதோ
வேலையாகத் திருவொற்றியூர் போய்விட்டார். மாலை
ஆறுமணிக்குத்தான் திரும்பி வந்தார். அதனால் தான்
உன்னிடம் சொல்லி விட்டுப் போனபடி சீக்கிரம்
வரமுடியவில்லை.''
ரவி கூறினான்.
'விளக்கம் வேண்டாம். சாப்பாடு வேண்டும்! பசி! பசி!
பசி!'' என்று அரற்றினான் ராமன்.
''ரவி, முதலில் ராமனை நீ ஜீப்பில் அழைத்துக் கொண்டு
போய் ஒரு ஓட்டலில் டிபனோ சாப்பாடோ வாங்கிக் கொடு.
பங்களாவிலிருந்து எந்தத் துரும்பும் வெளியேறாமல் நான்
பார்த்துக் கொள்கிறேன்' என்றார் இன்ஸ்பெக்டர்.
இதைக் கேட்டதும் ராமனுக்குப் புதுத் தெம்பு
வந்துவிட்டது. அவன் வேகமாக நடந்து போய் ஜீப்பில் ஏறி
உட்கார்ந்து கொண்டான். ரவியும் ஜீப்பில்
ஏறினான்.மறுகணம் ஜீப் அமைந்தகரை நோக்கிச் சென்றது.
மறுநாள் காலை.
ரவியின் வீட்டில் ரவியும் ராமனும் உட்கார்ந்து
பேசிக் கொண்டிருந்தார்கள். இன்ஸ்பெக்டர் எத்திராஜ்
வந்தார். ரவி அவரை வரவேற்று உட்காரச் செய்தான்.
'ரவி, நீ யூகித்தது அத்தனையும் உண்மை. மிளகு, பட்டை,
லவங்கம் முதலியவற்றைக் களிமண்ணில் தயாரித்து நிறம் பூசி
விற்றுப் பல்லாயிரக்கணக்கான மக்களை ஏமாற்றி வந்த
வஞ்சகன் துரை தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் ஆந்திரா,
கேரளா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களுக்கும் போலிப்
பொருட்களை அனுப்பிக் கொள்ளை லாபம் சம்பாதித்துக்
கொண்டிருந்தான். போலீஸ் கைக்குச் சிக்காமல் இதுவரை
தப்பிய துரையையும், அவனுடைய கையாட்களான மொட்டைத் தலையன்
முதலியோரையும் கண்டுபிடித்த பெருமை உன்னுடையது ரவி.
இப்போது அனைவரும் சிறையில் கம்பி எண்ணிக்
கொண்டிருகிறார்கள். இந்தப் போலிப் பொருட்களைத்
தொடர்ந்து சாப்பிட்டால் காசநோய், கான்சர் முதலியன
வருமாம். லட்சக் கணக்கான மக்களை இக் கொடிய நோயிலிருந்து
காப்பாற்றிய பெருமையும் உன்னுடையது ரவி.''
இன்ஸ்பெக்டர் இன்னும் ஏதோ சொல்ல இருந்தார். அதற்குள்
ரவி குறுக்கிட்டான்.
''உண்மையில் பாராட்டப்பட வேண்டியவன் ராமன்தான்.
இவன்தான் விலைப் பட்டியல் காகிதத்தை கண்டெடுத்தான்.
இவன்தான் என்னை மொட்டைத் தலையனிடமிருந்து
காப்பாற்றினான். இவன்தான் கடைசயில் லாரியின் லைட்டை
உடைத்து அதை நிறுத்தினான்'' என்று ராமனைச்
சுட்டிக்காட்டினான் ரவி.
''ரவி, நீ சொல்வது ஓரளவு உண்மைதான் என்றாலும்
பெருமையும் பாராட்டும் உனக்குரியவையே தவிர
எனக்குரியவையே அல்ல. நான் ஆரம்பத்திலிருந்தே இந்த
விலைப்பட்டியல் விவகாரத்தில் மனப்பூர்வமாக ஈடுபடவில்லை.
நான் தப்பி ஓடும் பூனைக்குட்டியாக இருந்தேன். நீ தைரிய
மிக்க புலிக்குட்டியாக இருந்து வஞ்சக நரிக் கூட்டத்தைப்
பிடித்தாய். உனக்குத் தான் முழுப் பெருமை'' என்றான்
ராமன்.
''உங்கள் இருவரையும் பாராட்ட முதலமைச்சர் ஒரு
விருந்து ஏற்பாடு செய்திருக்கிறார். உங்கள்
இருவருக்கும் முறைப்படி அழைப்பு வரும்'' என்று
இன்ஸ்பெக்டர் சொன்னதும் ராமனின் முகம் மலர்ந்தது.
''விருந்தா! எப்போது! என்னென்ன அயிட்டம் இருக்கும்?''
என்று சரமாரியாக ராமன் கேட்டான். ''நல்ல சாப்பாட்டு
ராமன்'' என்று கூறிச் சிரித்தான் ரவி. இன்ஸ்பெக்டர்
அந்தச் சிரிப்பில் கலந்து கொண்டார். நீங்களும் கலந்து
கொண்டு களிப்படையலாமே!
முற்றும் |