தமிழ்
  Site Web Yahoo! India Search
 
 
 
பொது அறிவு
சொல் சொல்லும் கதைகள்
நரியைத் தேடும்
புலிக்குட்டி
பாகம் 10 தொடர்ச்சி... டாக்டர் பூவண்ணன்
பங்களாவிலிருந்து யாரும் வெளியே போகவில்லை. இருள் பரவத் தொடங்கிய போது மொட்டைத் தலையன் வந்தான். இம்முறை தோப்பு வழியே வரவில் லை. பங்களாவை ஒட்டிச் செப்பனிடப்படாத ஒரு தெரு கிழக்கும் மேற்குமாகக் கிடந்தது. கிழக்குத் திசையிலிருந்து அந்தத் தெருவழியே வந்த மொட்நடத் தலையன் பங்களாவுக்குள் நுழைந்தான். பத்து நிமிஷம் பொறுத்து வெளியே வந்து, பங்களாவின் காம்பவுண்டின் மீது உட்கார்ந்து கொண்டான்.

இப்போது நன்றாக இருட்டிவிட்டது. மணி எழு, அல்லது ஏழரை இருக்கும். அதாவது ராமன் சாப்பிட்டுச் சரியாக பன்னிரண்டு மணி நேரமாய் விட்டது! எழு நூற்று இருபது நிமிஷமாய்விட்டது! இனி பொறுக்க முடியுமா? பசியால் உயிரே போய்விடும் போலிருந்தது.

''இரண்டு, மூன்று மணிக்குள் வருகிறேன் என்ற ரவி ஏன் இன்னும் வரவில்லை? ரவியை நெற்குன்றத்திலேயே பிடித்து எங்கோ அடைத்து விட்டு இங்கே வந்து இந்த மொட்டைத் தலையன் உட்கார்ந்திருக்கிறானா? அல்லது பாழுங்கிணற்றில் போட்டுவிட்டானா? இன்னும் இங்கே காத்திருப்பதா? திரும்பிப் போவதா?''

ராமன் சிந்தித்துக் கொண்டிருக்கும் போதே ஏதோ ஒரு சத்தம் கேட்டது. வினாடிக்கு வினாடி சத்தம் பெருகி நெருங்கி வந்தது.

ராமன் உற்றுப் பார்த்தான். கொஞ்ச நேரத்தில், மொட்டைத் தலையன் வந்த அதே வழியில் ஒரு லாரி வருவது தெரிந்தது. அதன் இரண்டு ஹெட்லைட்டுகளின் வெளிச்சம் தோப்பிலும் பரவிய.

ராமன் விளக்கொளிக்குச் சிக்காமல் பின்னே சென்று மரத்தின் மறைவின் நின்றான்.

லாரியைப் பார்த்ததும் மொட்டைத் தலையன் காம்பவுண்டிலிருந்து கீழே குதித்தான். லாரி பழக்கப்பட்டதைப் போல பங்களாவுக்கு முன்னே நின்றது. ரிவர்ஸ் கீயரில் உள் நோக்கிச் சென்று, கார்ஷெட்டை நெருங்கி நின்றது. ஹெட்லைட் அணைந்தது.

மொட்டைத் தலையன் உள்ளே சென்றான். கார்ஷெட்டின் பூட்டைத் திறந்து, கதவுகளைத் திறந்து விட்டான். ஷெட்டுக்குள் ஒரு விளக்கு மங்கலாக எரிந்தது.

லாரியிலிருந்து நான்கைந்து ஆட்கள் இறங்கினார். ஷெட்டிலிருந்து மூட்டைகளை லாரிக்கு மாற்றுவதில் முனைந்தனர்.

ராமன் இதையெல்லாம் பார்த்தான். ''மூட்டைகளை ஏற்றி முடித்தால் லாரி புறப்பட்டு விடும். அது எங்கே போகிறது என்ற எப்படிக் கண்டுபிடிப்பது? ரவி இன்னும் வரவில்லையே! லாரி போன பிறகு ரவி இன்ஸ்பெக்டருடன் வந்து என்ன லாபம்? ரவி வருவானா? வரமாட்டானா?

ராமனின் சிந்தனை தொடர்ந்தது. ஒன்று லாரி இங்கிருந்து போகாமல் தடுக்க வேண்டும். அல்லது லாரியுடன் போய், அது எங்கே போகிறது என்று கண்டுபிடிக்க வேண்டும். எதைச் செய்வது? எப்படிச் செய்வது?

ராமன் முடிவு செய்வதற்குள், மூட்டைகளை லாரியில் ஏற்றி முடித்துவிட்டார்கள். கார்ஷெட்டை மூடிப் பூட்டுவிட்டு, லாரியில் டிரைவருக்குப் பக்கத்தில் அமர்ந்தான் மொட்டைத் தலையன். மற்ற ஆட்கள் லாரியில் ஏற்றப்பட்ட மூட்டைகளின் மேலேயே ஏறி உட்கார்ந்து கொண்டார்கள்.

டிரைவர் லாரியை ஸ்டார்ட் செய்தான். மறுநிமிடம் ஹெட் லைட் இரண்டும் பிரகாசித்தன. லாரி கேட்டை நோக்கி நகரத் தொடங்கியது.

ராமன் தோப்பிலிருந்தபடியே கவனித்தான். லாரியின் விளக்குகள் பளிச்சிட்டதும், அவன் மூளையில் பளிச்சென்று ஒரு யோசனை தோன்றியது. 'தெரு விளக்கு இல்லாத இந்தப் பகுதியில் செல்ல லாரிக்கு விளக்கு வேண்டும். அதை அணைத்துவிட்டால், லாரி வழி தெரியாமல், மேடு பள்ளம் தெரியாமல், எதிரே யார் வருகிறார்கள் என்பது, தெரியாமல் தடுமாறி, விபத்துக்குள்ளாகும்' - இப்படி நினைத்த ராமன் கால் சட்டைப் பையிலிருந்து உண்டை வில்லை எடுத்தன். கல்லை எடுத்தான். இரண்டையும் இணைத்தபடி தோப்பின் முன் பகுதிக்கு வந்தான்.

லாரி கேட்டை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது.

ராமன் முதல் கல்லை விட்டான். கல் படாரென்று ஹெட்லைட்டில் மோதி அதை உடைக்க, லாரியின் ஒரு கண் அவிந்தது.

திடீர் சத்தத்தில் மிரண்ட டிரைவர் அதிர்ச்சியில் ஸ்டியரிங்கை இடப்பக்கமாக கொஞ்சம் திருப்ப விளக்கு உடைந்த பக்கம் காம்பவுண்டு சுவரின் மீது டணர் என்று மோதி, வண்டி நின்றது.

என்ன நடந்தது என்பதை உணரும் முன் ராமனின் மற்றொரு கல் பறந்து வந்து மற்றொரு ஹெட் லைட்டை உடைத்தது. ஆனால் உள்ளேயிருக்கும் பல்ப்
உடையாமல் ஒளி குறைந்து மங்கலானது.

இதற்குள் மொட்டைத் தலையனுக்கு விஷயம் புரிந்துவிட்டது.

''உண்டைவில் பையல் தோப்பில் இருக்கிறான். அவனை விடக்கூடாது. பிடியுங்கள்.''

''நாம் தொலைந்தோம், மொட்டைத் தலையன் நம்மை இங்கேயே கொன்று விடுவான்'' என்று அஞ்சிய ராமனின் இதயம் படபடவெனத் துடித்தது.

மொட்டைத் தலையன் சற்று தூரத்தில் நின்றிருந்த ராமனைப் பார்த்தான். சாலையில் உண்டைவில் கல்லால் அடித்துக் காயப்படுத்திய அதே பையன். அவனைத் தூக்கி பாழும் கிணற்றில் போட்டுப் பழி தீர்த்துக் கொள்ள விரும்பினான்.

விரும்பியபடி செய்யவில்லை.

காரணம்?.

தொடரும்...

தொகுப்பு Published on 21st Jan, 2008
 


மேலும்