|
சின்னஞ் சிறிய கடல் வாத்து அது.
கடலோரப் பாறை உச்சியில் தனியாய்
இருந்தது.
அதன்கூட இருந்த பறவையெல்லாம் பறந்து
போய்விட்டன.
வெயில் காலம் முடிந்தால் இடம் பெயர
வேண்டும்.
அதன்கூட முட்டைக்குள்ளிருந்து வெளி
வந்த வாத்துக்கள் எல்லாம், அம்மா அப்பா சகோதர சகோதரி
வாத்துக்களுடன் பறந்து போய்விட்டன.
ஏன்? அதன் சகோதரி வாத்துகூட நேற்றே
பறந்து போய் விட்டது.
அதன் அம்மா வாத்தும், அப்பா வாத்தும்,
எத்தனை முறை அந்த சின்னஞ் சிறு வாத்தை பறக்க வைக்க
முயற்சி செய்தும் பயனில்லை.
கடைசியில், அம்மா வாத்தும் அப்பா
வாத்தும்கூட பறந்து போய்விட்டன.
அந்த சின்னஞ்சிறிய வாத்து மட்டும்
பாறை உச்சியில் தனியாய் இங்கும் அங்கும் நடந்தது.
என்னமோ பயந்த மாதிரி பட்டென்று
இறக்கையை மூடிக்கொண்டு மறுபடியும் கூட்டுக்கே சோகமாய்
நடந்துவந்தது.
முதல்முறையாய் அந்த வாத்து நடக்க
ஆரம்பித்த போது, அதற்கு முன்பே முட்டைக்குள்ளிருந்து
வெளி வந்த அதன் சகோதரி வாத்துகூட நடக்க ஆரம்பிக்கவில்லை.
அது நடப்பதைப் பார்த்ததும், அம்மா
வாத்துக்கும் அப்பா வாத்துக்கும் ஏக குஷி.
''கெக்கரே... புக்கரே....'' என்று
உற்சாகமாய் சத்தம் போட்டுக் கொண்டு அந்த சின்னஞ் சிறிய
வாத்தை சுற்றி சுற்றி பறந்து வந்தன. சந்தோஷப்பட்டன.
அந்த சின்னஞ்சிறு வாத்தும்
விதவிதமாய் நடந்த காட்டியது.
என்ன செய்ய?
பறவைகள் நடக்கலாம் தான். ஆனால்,
பறந்தேயாக வேண்டும் என்பதுதான் நியதி.
அந்த சின்னஞ்சிறிய வாத்துக்கு
பறப்பதை நினைத்தாலே பயம் வந்துவிடுகிறது. பாவம்,
கால்களை நம்பும் அளவுக்கு அதனால், அதன் சிறகுகளை நம்ப
முடியவில்லை.
சோகமாய் நடந்த கூட்டுக்கு வந்தது.
பசித்தது.
சாப்பிட எதுவுமில்லை.
கூடு முழுக்க தன் சிறிய அலகால்
துளாவியது.
கூட்டின் ஓரத்தில் உடைந்த முட்டை
ஓடுகள் மட்டும் கிடந்தன. அதையும் தன் சின்ன அலகால்
குத்திக் கிழித்துப் பார்த்தது.
பிரயோஜனமில்லை.
பறவைகள் சத்தம் கேட்டுத் தலையை
உயர்த்திப் பார்த்தது.
வானம் இருட்டி விட்டிருந்தது.
அந்த இருட்டிலும் இரண்டு பெரிய
பறவைகளும், நான்கு சிறிய பறவைகளும் பறந்து போவது
தெரிந்தது.
அதற்கு அழுகையே வந்துவிட்டது.
இப்படித்தான் அதன் அம்மா வாத்தும்,
அப்பா வாத்தும், அதன் சகோதரி வாத்தும்கூட பறந்து போய்க்
கொண்டிருப்பார்கள்.
பகல் முழுக்க எதுவும் சாப்பிடவில்லை.
அது களைத்துப் போய் அம்மா வாத்து வருமா என்று
பார்த்துக் கொண்டே சுருண்டு விட்டது.
அதற்கு அப்புறம் நினைவு வந்தபோது
விடிந்திருந்தது.
மெல்லியதாய் எங்கோ அம்மா வாத்தின்
சத்தம் கேட்டது.
அந்த சின்னஞ்சிறிய வாத்து களைப்பும்,
சோகமுமாய் கூட்டிலிருந்து தலையை நீட்டிப் பார்த்தது.
பக்கத்து பாறை உச்சியில் அதன் அம்மா
வாத்து ஒரு கொழுத்த மீனை வாயில் கவ்வியபடி
உட்கார்ந்திருந்தது.
அதைப் பார்த்ததும் அந்த
சின்னஞ்சிறிய வாத்து பலம் கொண்ட மட்டும் கத்தியது.
பதிலுக்கு அம்மா வாத்து ''கர்...கர்...''
என்று சத்தம் எழுப்பியது. அதன் வாயில் இருந்து விழுந்த
மீனை காலால் பிடித்துக் கொண்டு தன் அலகை பாறையில்
தேய்த்தது.
மறுபடியும் சின்னஞ்சிறிய வாத்து ''கர்''
ரென்று சத்தம் எழுப்பியது.
அம்மா வாத்து ''கா ல ஊ..'' என்று
சத்தம் எழுப்பி விட்டு மீனை தன் அலகால் கொத்தியது.
அந்த சின்னஞ்சிறிய வாத்துக்கு அம்மா
வாத்துவரும் என்ற நம்பிக்கையே போய்விட்டது. முடிந்தவரை
கத்திப் பார்த்துவிட்டு, கூட்டிலிருந்து வெளி வந்து
அம்மா வாத்து இருக்கும் பாறையை நோக்கி நடக்க
ஆரம்பித்தது.
ஓ ! அதனால் இப்பொழுது நடக்கக்கூட
முடியவில்லை.
இரண்டு முறை பாறையில் பொத்பொத்தென்று
வழுக்கி விழுந்து விட்டது.
ஆனாலும் எழுந்து நடந்தது.
அம்மா வாத்து மீனை கீழே போட்டுவிட்டு,
தன் அலகால் இறக்கைகளைக் கோதிக் கொண்டது.
சின்னஞ்சிறிய வாத்துக்கோ, ஓடிப் போய்
அந்த மீனை கவ்விக் கொள்ள வேண்டும் போல் இருந்தது.
பாறை வழுக்க வழுக்க அந்த
சின்னஞ்சிறிய வாத்து அம்மா வாத்து நிற்கும் பாறை நோக்கி
ஓடியது.
அம்மா வாத்தின் காலடியில் கிடக்கும்
மீனை எடுக்க இன்னும் மூன்றடிதான் ஓட வேண்டும்.
சின்னஞ்சிறிய வாத்து ''வீர்'' என்று
கத்தியபடி பட்டென்று நின்றுவிட்டது.
அதற்கு மேல் ஓட முடியாது -
பறக்க வேண்டும்.
இரண்டு பாறைகளுக்கும் இடையில்
மூன்றடி இடைவெளிதான். ஆனால், கீழே மூன்று மைல்
ஆழத்தில்தான் கடல் மட்டம் தெரிகிறது. சின்னஞ்சிறிய
வாத்து தலையைக் கீழே குனிந்து பாத்துவிட்டு, கத்த
ஆரம்பித்து விட்டது.
அம்மா வாத்தைப் பார்த்து கெஞ்சுகிற
த்வனியில், சோகமாய் குரல் எழுப்பி எழுப்பி சோர்ந்து
போனது.
திடுமென்று அந்த சின்னஞ்சிறு
வாத்துக்கு அப்படியொரு உற்சாகம் வந்தது.
அத்தனை சோர்விலும் ஆனந்தமாய் குரல்
எழும்பியது.
இப்பொழுது அதன் அம்மா வாத்து வாயில்
கொழுத்த மீனைக் கவ்வியபடி சின்னஞ்சிறு வாத்தை நோக்கி
பறந்து வந்து கொண்டிருந்தது.
அந்த சின்னஞ்சிறிய வாத்து ஆர்வமாய்
தன் சிறிய அலகை பாறையில் தீட்டிக் கொண்டது.
இன்னும் ஒரு அடி இடைவெளிதான்.
மறுபடியும் தன் அலகை பாறையில் தீட்டி
நிமிர்ந்த அந்த சின்னஞ்சிறிய வாத்து, ஒன்றும் புரியாமல்
அலறியது.
அரை அடி இடைவெளியில் வாயில் மீனைக்
கவ்விக் கொண்டு கால்களை மடித்துக் கொண்டு இரண்டு
இறக்கைகளையும் விரித்தபடி அம்மா பறவை அப்படியே,
அந்தரத்தில் நின்று கொண்டிருந்தது.
சின்னஞ்சிறு பறவை கோபமாய் கத்தியது.
அம்மா பறவை, இன்னும் கொஞ்சம்
பக்கத்தில் வந்து மறுபடியும் அப்படியே நின்றுவிட்டடது.
அந்த சின்னஞ்சிறு வாத்தோ, வாயைத்
திறந்தபடி கத்திக் கொண்டே இருந்தது.
இன்னும் கொஞ்சம் தள்ளி துள்ளிக்
குதித்தால் மீனைக் கவ்வி விடலாம்.
பட்டென்று அந்த சின்னஞ்சிறு பறவை,
பாறையின் விளிம்பில் இருந்து துள்ளி வெளியில் குதித்தது.
அவ்வளவுதான்.
அந்தச் சின்னஞ்சிறிய பறவை அதல
பாதாளத்தில் வீழ்ந்து கொண்டே இருந்தது. பயத்தில்
அலறியது.
ஆனால், யாரும் சொல்லாமலேயே அதன்
இரண்டு சிறகுகளும் விரிந்தன.
கீழிருந்து காற்று, அதன் சிறகிலும்
அடி வயிற்றிலும் மேல் நோக்கி அடித்தது.
இப்பொழுது அது பயந்திருந்த மாதிரி
தலைக்குப்புற விழவில்லை.
மேலேயும் கீழேயுமாய் பறந்தது.
மெதுவாய் சிறகசைத்துப் பார்த்தது.
அதற்கு சோர்வாய் இருந்தது -
அவ்வளவுதான்.
ஆனாலும் பறக்கிற மகிழ்ச்சியில் சிறகை
மீண்டும் அடித்தது.
உற்சாகமாய் குரல் கொடுத்து பறந்தது.
அம்மா பறவை ''பர்...'' என்று சத்தம்
போட்டு மகிழ்ச்சியாய் அதன் கீழ் பறந்து போனது.
சின்னஞ்சிறு வாத்தும் ''ப்ரட்..ட்டூ..''
என்று உற்சாகமாய் பதில் குரல் கொடுத்தது.
அப்பா வாத்தும், சகோதரி வாத்தும்,
திடுமென அதன் அருகில் உற்சாகமாய் அதன் கூடவே பறந்து
வந்தன.
சின்னஞ்சிறு வாத்து பறந்து கொண்டே
அம்மா, அப்பா, சகோதரி வாத்துடன் விளையாடியது.
குதியாட்டம் போட்டது.
இப்போது அதன் பெற்றோரும், சகோதரியும்
நேராய் கடலை நோக்கி இறங்கின.
கிறீச்சிட்டு சின்னஞ்சிறு வாத்தைக்
கூப்பிட்டன.
சின்னஞ்சிறு வாத்து நேராய் கடல்
நீரில் நிற்க, தன் கால்களை இறக்கிற்று.
ஆனால் அதன் கால்கள் பாறையில் நின்றது
போல் இல்லாமல், நீருக்குள் மூழ்கின.
பயத்தால் அலறியது. சிறகுகளை
அடித்துப் பறக்க முயற்சித்தது.
பசியால் களைத்துப் போயிருந்ததால்,
அதனால் எழ முடியவில்லை.
பச்சைக் கடலில் அதன் கால்கள்
மூழ்கியதும், அதன் வயிறு கடல் நீரைத் தொட்டது.
பிறகு அது அமிழவில்லை, மிதந்து
கொண்டுதான் இருந்தது.
அந்த சின்னஞ்சிறு வாத்தை சுற்றி
சுற்றி வந்து சத்தமிட்டபடி, அதன் குடும்பம் அதனைப்
பாராட்டியது.
சிறுசிறு மீன்களை அதற்கு திண்ணக்
கொடுத்தன.
உற்சாக மிகுதியில் அந்த சின்னஞ்சிறு
வாத்து ''புர்...'' என்ற சத்தம் எழுப்பி கடலுக்குள்
மூழ்கியது.
யாருக்குத் தெரியும் அந்த
சின்னஞ்சிறு வாத்து தன்னால் தூக்க முடியாத அளவு பெரிய
மீனை, தன் குடும்பத்தினருக்காக தன் சிறிய அலகால்
கவ்விக் கொண்டு வரப்போவது. |