For Tamil Fonts
 அஞ்சலி
 சிறப்புப்பார்வை
 சிறப்புக் கட்டுரை
 அரசியல்
 சமூகம்
 இலக்கியம்
 கலை
 ஆன்மீகம்
 இயற்கை மருத்துவம்
 நேர்காணல்
 விருந்தினர் பக்கம்
 திட்டிவாசல்
 சினிமா சினிமா
 முகப்பு
 கடந்த பகுதிகள்



தெற்காசிய நாடுகளின் பெண்குழந்தைகள்
பிறந்த குழந்தை பெண் என்று தெரிந்ததும் பெரும்பாலானவர்களின் முகம் வாடித்தான் போகிறது. பெற்ற தாயே தன் குழந்தையைக் கொல்லத் துணிகிறாள் என்றால், சமூகத்தில் பெண் பிள்ளைகளின் மதிப்பைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை.

கல்கியின் - பார்த்திபன் கனவு
கல்கியின்  

38. என்ன தண்டனை? தொடர்ச்சி...

''அப்பா இங்கே இருக்கும் போது அவர் வந்துவிட்டால என்ன செய்கிறது? இப்பொழுது வருகிற சமயமாச்சே! அரண்மனைக்குள் வராமல் நேரே போய்க் கப்பலேறச் செய்வதற்கு வழி என்ன? என்றெல்லாம் எண்ணி அவள் உள்ளம் தவித்தது. அவளுடைய தவிப்பைக் கவனியாதவர் போல் சக்கரவர்த்தி, ''குழந்தாய்! இன்று சாயங்காலம் நான் உறையூருக்குக் கிளம்புகிறேன். நீயும் வருகிறாயா? அல்லது உறையூர் வாசம் போதுமென்று ஆகிவிட்டதா?'' என்றார்.

''உறையூருக்கா? எதற்காக அப்பா?'' என்றாள் குந்தவி.

''ரொம்ப முக்கியமான காரியங்கள் எல்லாம் நடந்திருக்கின்றன, அம்மா! அரள்மொழித்தேவி அகப்பட்டுவிட்டார்.''

''ஆகா!'' என்று அலறினாள் குந்தவி.

''ஆமாம், அருள்மொழித் தேவியைக் கண்டுபிடித்துக் கொண்டு வந்தது யார் தெரியுமா? நீ அடிக்கடி சொல்வாயே, யாரோ வேஷதாரிச் சிவனடியார் என்று, அவர் தான்!''

''என்ன! என்ன!... தேவி எங்கே இருந்தார்? யார் கொண்டு போய் வைத்திருந்தார்கள்? அந்தப் போலிச் சிவனடியார்.. ஒருவேளை அவரேதான்..''

சக்கரவர்த்தி புன்னகையுடன், ''இன்னும் உனக்குச் சந்தேகம் தீரவில்லையே, அம்மா! அந்தச் சிவனடியார் அருள்மொழி ராணியை ஒளித்து வைத்திருக்கவில்லை. ராணியைக் கொண்டுபோய் வைத்திருந்தவன் - நான் முன்னமேயே ஒரு தடவை சொன்னேனே - அந்தக் கபாலிகக் கூட்டத்தின் பெரிய பூசாரி - மகா கபால பைரவன். சிவனடியார் அருள்மொழி ராணியைக் காப்பாற்றிக் கொண்டு வந்ததின் பலன், அவருடைய உயிருக்கே ஆபத்து வருவதாயிருந்ததாம். நேற்று இராத்திரி மகா கபால பைரவன் சிவனடியாரைக் காளிக்குப் பலிகொடுப்பதாக இருந்தானாம். அவரைக் கட்டிப் பலிபீடத்தில் கொண்டு வந்து போட்டாகிவிட்டதாம். கழுத்தில் கத்தி விழுகிற சமயத்தில் சிவனடியாரை யார் வந்து காப்பாற்றினார்களாம் தெரியுமா?''

''யார் அப்பா?''

''செண்பகத் தீவிலிருந்து வந்திருந்தானே - இரத்தின வியாபாரி தேவசேனன் - அவனும் படகோட்டி பொன்னனும் நல்ல சமயத்தில் வந்து காப்பாற்றினார்களாம்?

குந்தவி ஏதோ சொல்வதற்கு வாயைத் திறந்தாள். ஆனால் வார்த்தை ஒன்றும் வெளியில் வரவில்லை.அவளுடைய அழகிய வாய், மாதுளை மொட்டின் இதழ்கள் விரிவது போல் விரிந்து அப்டியே திறந்தபடி இருந்தது.

''இன்னும் ஒரு பெரிய அதிசயத்தைக் கேள், குழந்தாய்! இரத்தின வியாபாரி தேவசேனன் என்பது உண்மையில் யார் தெரியுமா? அவனும் ஒரு வேஷதாரிதான். தேசப்பிரஷ்டனான சோழநாட்டு இளவரசன் விக்கிரமன்தான் அம்மாதிரி வேஷம் போட்டுக்கொண்டு அவனுடைய தாயாரையும் தாய்நாட்டையும் பார்ப்பதற்காக வந்தானாம்! என்ன தைரியம், என்ன துணிச்சல், பார்த்தாயா குழந்தாய்!''

குந்தவி விம்மிய குரலுடன், ''அப்பா! அவர்கள் எல்லோரும் இப்போது எங்கே?''என்று கேட்டாள்.

''யாரைக் கேட்கிறாய், அம்மா! விக்கிரமனையும், பொன்னனையுமா? அவர்களை உறையூருக்குக் கொண்டு போகச் சொல்லி யிருக்கிறேன். நானே நேரில் வந்து விசாரணை நடத்தவதாகச் சொல்லியிருக்கிறேன். அதற்காகத்தான் முக்கியமாக உறையூருக்குப் போகிறேன். நீயும் வருகிறாயா?''

இத்தனை நேரமும் குந்தவி அடக்கி வைத்துக் கொண்டிருந்த துக்கமெல்லாம் இப்போது பீறிக்கொண்டு வெளியில் வந்தது. தந்தையின் மடியில் தலையை வைத்துக் கொண்டு 'கோ' என்று கதற ஆரம்பித்தாள்.

இவ்வளவு நேரமும் புன்னகையுடன் பொலிந்து கொண்டிருந்த சக்கரவர்த்தியின் முகபாவத்தில் இப்போது மாறுதல் காணப்பட்டது. அவருடைய கண்களின் ஓரத்தில் ஒரு துளி ஜலம் முத்துப்போல் பிரகாசித்தது. குந்தவியின் தலையையும் முதுகையும் அவர் அன்புடன் தடவிக் கொடுத்து, ''குழந்தாய்! உனக்கு என்ன துக்கம்? உன் மனத்தில் ஏதோ வைத்துக் கொண்டு சொல்லாமலிருக்கிறாய். என்னிடம் மறைப்பானேன்! எதுவாயிருந்தாலும் சொல்!'' என்றார்.

குந்தவி கொஞ்சங் கொஞ்சமாக எல்லாவற்றையும் சொன்னாள். காஞ்சி நகரின் வீதியில் சங்கிலிகளால் கட்டுண்டு சென்ற விக்கிரமனைச் சந்தித்ததிலிருந்து தன்னுடைய உள்ளம் அவனுக்கு வசமானதைத் தெரிவித்தாள். பிறகு மகேந்திர மண்டபத்தில் ஜுரத்துடன் உணர்வு இழந்து கிடந்த விக்கிரமனைப் பல்லக்கில் ஏற்றி அழைத்துச் சென்றதிலிருந்து இன்று அவனைக் கப்பலேற்றி அனுப்ப உத்தேசித்திருந்த வரையில் எல்லாவற்றையும் கூறினாள். கடைசியில், ''அப்பா! அந்தச் சோழ ராஜகுமாரனையே என் நாதனாக வரித்து விட்டேன். மற்றொருவரை மனதிலும் நினைக்க மாட்டேன்'' என்று கூறி விம்மினாள்.

சக்கரவர்த்தி அப்போது அன்பு கனிந்த குரலில் கூறினார். ''குழந்தாய், இந்த உலகில் அன்பு ஒன்றுதான் சாசுவதமானது. மற்றதெல்லாம் அந்நித்தியம். இரண்டு இளம் உள்ளங்கள் அன்பினால் ஒன்று சேரும்போது, அங்கே அன்பு வடிவமான கடவுளே சாந்நித்தியமா யிருக்கிறார். அவ்விதம் அன்பினால் சேர்ந்த உள்ளங்களுக்கு மத்தியில் நின்று தடை செய்ய யாருக்குமே பாத்தியதை கிடையாது. தாய் தகப்பனுக்குக்கூடக் கிடையாதுதான். ஆகையால், நீ சோழ நாட்டு இளவரசனை மணம் புரிய விரும்பினாயானால், அதை ஒருநாளும் நான் தடை செய்யேன். ஆனால், குழந்தாய்! நமது பல்லவ வம்சம் நீதிநெறி தவறாதது என்று புகழ்பெற்றது. பல்லவ சாம்ராஜ்யத்தில் ராஜகுலத்தினருக்கம் ஒரு நீதிதான். ஏழைக் குடியானவனுக்கும் ஒரு நீதிதான். ஆகையால், சோழ ராஜகுமாரன் விஷயத்தில் ராஜ்ய நீதிக்கிணங்க விசாரணை நடைபெறும். குற்றத்துக்குத் தகுந்த தண்டனை கிடைக்கும். அதற்குப் பிறகும், நீ அந்த ராஜகுமாரனை மணக்க விரும்பினால், நான் குறுக்கே நிற்கமாட்டேன்.''

இதைக் கேட்ட குந்தவி, ''அப்பா! தேசப்பிரஷ்டமானவர்கள் திரும்பி வந்தால் தண்டனை என்ன?'' என்றாள்.

''சாதரணமாக, மரண தண்டனைதான். ஆனால் சோழ ராஜகுமாரன் விஷயத்தில் யோசிக்க வேண்டிய அம்சங்கள் இருக்கின்றன.''

''என்ன அப்பா?''

''நீதான் அடிக்கடி சொல்வாயே. அந்த ராஜகுமாரனுடை காரியங்களுக்கெல்லாம் அவன் பொறுப்பாளியல்ல - போலிச் சிவனடியாருடைய போதனைதான் காரணம் என்று. அது உண்மைதான் என்று தோன்றுகிறது. அந்தச் சிவனடியாரும் இப்போது அகப்பட்டிருக்கிறார். அவரையும் விசாரித்து உண்மையறி வேண்டும்.''

அப்போது குந்தவி, மனதிற்குள், ''ஆமாம், அந்தப் போலிச் சடைச் சாமியாரால்தான் எல்லா விபத்துக்களும் வருகின்றன. அவர் அநாவசியமாக நேற்றிரவு ஒரு ஆபத்தில் சிக்கி கொண்டிராவிட்டால், இத்தனை நேரம் அந்த வீர ராஜகுமாரர் கப்பலில் ஏறி இருப்பாரல்லவா?'' என்று எண்ணமிட்டாள்.

''அதோடு இன்னும் ஒரு விஷயமும் யோசிக்க வேண்டியிருக்கிறது. செண்பகத் தீவின் இரத்தின வியாபாரிக்குக் குதிரை கொடுத்துச் சோழ நாட்டுக்கு அனுப்பி வைத்தது யார்? ஞாபகம் இருக்கிறதா, குழந்தாய்?''

''அபப்஡!'' என்று வியப்பும் ஆனந்தமும் கலந்த குரலில் குந்தவி கூச்சலிட்டாள். ஒற்றர் தலைவன் வேஷத்திலிருந்த சக்கரவர்த்தி குதிரை கொடுத்து அனுப்பித்தானே விக்கிரமன் சோழ நாட்டுக்குப் போனானென்பது அவளுக்கு நினைவு வந்தது.

''அப்படியானால், எப்படி தண்டனை ஏற்படும் அப்பா?'' என்றாள்.

''எல்லாம், விசாரிக்கலாம் குழந்தாய்! விசாரித்து எது நியாயமோ, அப்படி செய்யலாம். பல்லவ ராஜ்யத்தில் நீதி தவறி எதுவுமே நடக்காது'' என்றார் சக்கரவர்த்தி.

தொடரும்...

தொகுப்பு