பிறகு
சிறுத்தொண்டர், பத்து வருஷங்களுக்கு முன் பார்த்திப
மகாராஜா போர்க்கோலம் பூண்டு உறையூரிலிருந்து
கிளம்பியதையும் வெண்ணாற்றங்கரையில் நடந்த பயங்கர
யுத்தத்தையும் சபையோருக்கு ஞாபகப்படுத்தினார்.
பார்த்திப மகாராஜாவுடன் கிளம்பிய பத்தாயிரம் பேரில்
ஒருவர்கூடத் திரும்பாமல் போர்க்களத்திலேயே மடிந்ததைச்
சொன்னபோது சபையோர் புளகாங்கிதம் அடைந்தனர். அந்தப்
புரட்டாசிப் பெளர்ணமியன்றிரவு, இந்தச் சிவனடியார்
போர்க்களத்தில் வீரமரணமடைந்த தீர மன்னரின் முகத்தைப்
பார்க்க வேண்டுமென்று அவருடைய உடலைத் தேடியலைந்ததை
எடுத்துக் கூறினார். கடைசியில் இவர் தம்முயற்சியில்
வெற்றியடைந்ததையும், பார்த்திப மகாராஜாவின் உடலில்
இன்னும் உயிர் இருந்ததையும், மகாராஜா சிவனடியாரிடம்,
''என் மகனை வீர சுதந்திரப் புருஷனாக வளர்க்க வேண்டும்''
என்று வரங்கேட்டதையும், சிவனடியார் அவ்விதமே
வரங்கொடுத்ததையும் எடுத்துச் சொன்னபோது, அந்தப் பெரிய
சபையின் நாளா பக்கங்களிலும் 'ஆஹா' காரம் உண்டானதுடன்,
அநேகருடைய கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடிற்று.
பின்னர், சிவனடியார் உறையூருக்கு வந்து அருள்மொழித்
தேவியைப் பார்த்துத் தேற்றியது. முதல், விக்கிரமன்
சுதந்திரக் கொடியை நாட்ட முயன்றது, தேசப் பிரஷ்டத்
தண்டனைக்குள்ளானது, செண்பகத் தீவின் அரசனானது,
தாயாரையும், தாய்நாட்டையும் பார்க்க வேண்டுமென்ற
ஆசையினால் திரும்பி வந்தது. வழியில் அவனுக்கு ஏற்பட்ட
இடையூறுகள் எல்லாவற்றையும் சிறுத்தொண்டர் விவரமாகக்
கூறினார். இதற்கிடையில், நீலகேசி 'மகா கபால பைரவர்'
என்ற வேஷத்தில் செய்த சூழ்ச்சிகளையும், ராணி
அருள்மொழித் தேவியை அவன் கொண்டு போய் மலைக்குகையில்
வைத்திருந்ததையும், சிவனடியாரின் தளரா முயற்சியினால்
அவனுடைய சூழ்ச்சிகள் வெளிப்பட்டதையும் சென்ற அமாவாசை
இரவில் நடந்த சம்பவங்களையும் விக்கிரமன் தன்
உயிரைப்பொருட்படுத்தாமல், சிவனடியாரைக் காப்பாற்ற
முன்வந்ததையும் விவரித்தார். இவ்வளவையும்
சொல்லிவிட்டுக் கடைசியாக ''சபையோர்களே, உங்களையெல்லாம்
ஒன்று கேட்க விரும்புகிறேன் என் தோழர் சிவனடியார்
போர்க்களத்தில் பார்த்திப மகாரஜாவுக்குக் கொடுத்த
வாக்குறுதியை நிறைவேற்றி விட்டதாக - நீங்கள்
அபிப்பிராயப் படுகிறீர்களா? பார்த்திப மகாராஜாவின்
குமாரர் விக்கிரமர் வீர சுதந்திரப் புருஷராக வளர்க்கப்
பட்டிருக்கிறா?'' என்று கேட்டார்.
அப்போது சபையில் ஏகமனதாக ''ஆம்.. ஆ'' என்ற மகத்தான
பெருங்கோஷம் எழுந்து அந்த விசாலமான மண்டபம் முழுவது
வியாபித்து, வெளியிலும் சென்று முழங்கியது.
கோஷம் அடங்கியதும், சிறுத்தொண்டர் கையமர்த்தி, ''இன்னும்
ஒரு முக்கிய விஷயம் உங்களுக்குச் சொல்ல மறந்து விட்டேன்.
போர்க்களத்தில் பார்த்திப மகாராஜாவுக்கு இந்த மகா
புருஷர் வாக்குறுதி கொடுத்த பிறகு மகாராஜா இவரைப்
பார்த்து, ''சுவாமி! தாங்கள் யார்?'' என்று கேட்டார்.
அப்போது இந்த வேஷதாரி, தமது பொய் ஜடாமகுடத்தை
எடுத்துவிட்டு உண்மை ரூபத்துடன் தோன்றினார். இவர் யார்
என்பதைத் தெரிந்து கொண்ட பிறகு பார்த்திப மகாராஜா தம்
மனோரதம் நிறைவேறும் என்ற பூரண நம்பிக்கை பெற்று
நிம்மதியாக வீர சொர்க்கம் அடைந்தார்!'' என்று கூறியபோது
சபையிலே ஏற்பட்ட பரபரப்பைச் சொல்லி முடியாது.
மீண்டும் சிறுத்தொண்டர், ''இந்த வேஷதாரியின் உண்மை
வடிவத்தைப் பார்க்க நீங்கள் எல்லோருமே
ஆவலாயிருக்கிறீர்கள், இதோ பாருங்கள்!'' என்று கூறி ,
சிவனடியார் பக்கம் திரும்பி, ஒரு நொடியில் அவருடைய
ஜடாமகுடத்தையும் தாடி மீசையையும் தமது இரண்டு
கையினாலும் நீக்கிவிடவே, மாமல்ல நரசிம்ம
சக்கரவர்த்தியின் தேஜோ மயமான கம்பீர முகத்தை எல்லாரும்
கண்டார்கள்.
அப்போது அச்சபையில் மகத்தான் அல்லோலகல்லோலம்
ஏற்ப்பட்டது. குந்தவி தன் ஆசனத்திலிருந்து எழுந்து ''அப்பா!''
என்று கதறிக் கொண்டே ஓடிவந்து வேஷம் பாதி கலைந்து
நின்ற சக்கரவர்த்தியின் தோள்களைக் கட்டிக் கொண்டாள்.
உணர்ச்சி மிகுதியினால் மூர்ச்சையாகி விழும் நிலைமையில்
இருந்த அருள்மொழித தேவியைச் சிறுத்தொண்டரின் பத்தினி
தாங்கிக்கொண்டு ஆசுவாசம் செய்தாள். விக்கிரமன்
கண்ணிமைக்காமல், திறந்த வாய் மூடாமல் உருவம் மாறிய
சிவனடியாரைப் பார்த்தவண்ணம் நின்றான். அந்தப்
பரப்பரப்பில் இன்னது செய்கிறோமென்று தெரியாமல் பொன்னன்,
வள்ளியின் கையைப் பிடித்துக் குலுக்கினான்.
''தர்ம ராஜாதிராஜ மாமல்ல நரசிம்ம பல்லவ சக்கரவர்த்தி
வாழ்க'' என்று ஒரு பெரிய கோஷம் எழுந்தது. 'ஜெய விஜயீ
பவ!'' என்று சபையினர் அனைவரும் ஒரே குரலில்
முழங்கினார்கள். சிறிது நேரம் இத்தகைய கோஷங்கள்
முழங்கிக்கொண்டிருந்த பிறகு பொன்னனுக்கு என்ன
தோன்றிற்றோ என்னவோ திடீரென்று உரத்த குரலில், ''விக்கிரம
சோழ மகாராஜா வாழ்க!'' என்று கோஷித்தான் அதையும் சபையோர்
அங்கீகரித்தது. ''ஜய விஜயீ பவ!'' என்று முழங்கினார்கள்.
அந்தக் குழப்பமும் கிளர்ச்சியும் அடங்கியபோது இத்தனை
நேரமும் சிவனடியார் அமர்ந்திருந்த இடத்தில் அவர் இல்லை
என்பதைச் சபையோர் கண்டார்கள். சிறுத்தொண்டர், ''சபையோர்களே!
நீங்கள் கலைந்து போவதற்கு முன்னால் இன்னும் ஒரே ஒரு
காரியம் பாக்கியிருக்கிறது. மாமல்ல சக்கரவர்த்தி தர்ம
சிம்மாசனத்தில் அமர்ந்து விக்கிரம சோழரின் குற்றத்தைப்
பற்றி முடிவான தீர்ப்புக் கூறுவார்!'' என்றார்.
சிறிது நேரத்துக்கெல்லாம் நரசிம்ம சக்கரவர்த்தி
தமக்குரிய, ஆடை ஆபரணங்களைத் தரித்தவராய் கம்பீரமாக
அச்சபைக்குள் பிரவேசித்தார். அவர் சபைக்குள்
பிரவேசித்த போதும், சபையின் நடுநாயகமாக இருந்த தர்ம
சிம்மாசனத்தில் அமர்ந்த போதும், ''ஜய விஜயீ பவ!''
என்னும் முழக்கம் வானளாவ எழுந்தது. சத்தம் அடங்கியதும்,
சக்கரவர்த்தி எழுந்து, ''விக்கிரம சோழரைப் பற்றி
உங்களுடைய அபிப்பிராயம் இன்னதென்பதைத் தெரிந்து
கொண்டேன். தேசப் பிரஷ்ட தண்டனைக்குள்ளானவர்கள்
திரும்பிவந்தால், அதற்குத்தண்டனை சிராசாக்கினையாகும்.
எனவே, இதோ புராதனமான சோழ மன்னர்களின் மணிமகுடத்தை
விக்கிரமசோழர் இனிமேல் தனியாகவே தலைமேல் தாங்க
வேண்டுமென்னும் சிரசாக்கினையை விதிக்கிறேன்'' இன்று
முதல் சோழ நாடு சுதந்திர ராஜ்யமாகிவிட்டது. இதன் பாரம்
முழுவதையும் விக்கிரம சோழரும் அவருடை சந்ததிகளும்தான்
இனிமேல் தாங்கியாக வேண்டும்!'' என்று கூறியபோது,
சபையிலே உண்டான கோலாகல ஆரவாரத்தை வர்ணிப்பதற்கு,புராண
இதிகாசங்களில் சொன்னது போல், ஆயிரம் நாவுள்ள
ஆதிசேஷன்தான் வந்தாக வேண்டும்!.
தொடரும்... |