இன்னும்
அந்த மகத்தான சபையில், மந்திரிகளும் படைத்தலைவர்களும்
தனாதிகாரிகளும் பண்டிதர்களும் கலைஞர்கள் கவிராயர்களும்
பிரபல வர்த்தகர்களும் கிராமங்களிலிருந்து வந்த
நாட்டாண்மைக்காரர்களும் அவரவர்களுக்கு ஏற்பட்ட
இடத்தில் அமர்ந்திருந்தார்கள். இவர்கள் எல்லாரையும்
காட்டிலும் அந்தச் சபையில் அதிகமாக அனைவருடைய
கவனத்தையும் கவர்ந்த ஒருவர் சக்கரவர்த்தி குமாரன்
மகேந்திரனுக்குப் பின்னால் அமர்ந்திருந்தார். அவருடைய
உருவமும் உடையும் அவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவரல்லர்
என்பதைத் தெளிவாக எடுத்துக் கூறின. சபையினர் அவரைச்
சுட்டிக் காட்டித் தங்களுக்குள்ளே, ''சீன
தேசத்திலிருந்து வந்திருக்கும் உலக யாத்திரிகர்
இவர்தான்!'' என்று பேசிக்கொண்டார்கள். யுவான் சுவாங்
என்னும் அவருடைய பெயரைப் பலரும் பலவிதமாக உச்சரித்து
நகையாடினார்கள்.
இந்தச் சீன யாத்திரிகரைத் தவிர இன்னும் சில
அயல்நாட்டாரும் அந்த மகாசபையில் ஒரு பக்கத்தில்
காணப்பட்டார்கள். அவர்கள் நடை உடையினால்
அயல்நாட்டாராகத் தோன்றினாலும், அவர்கள் பேசுகிற பாஷை
தமிழாகத்தான் தெரிந்தது. சற்றே அவர்களை உற்றுப்
பார்த்தோமானால், ஏற்கெனவே பார்த்த முகங்கள் என்பது
நினைவு வரும். ஆம்; செண்பகத் தீவிலிருந்து வந்த
கப்பலில் இரத்தின வியாபாரி தேவசேனனுடன் வந்தவர்கள்
தான் இவர்கள். அச்சபையில் நடக்கவிருந்த விசாரணையின்
முடிவாகத் தங்கள் மகாராஜாவுக்கு என்ன கதி நேரப்போகிறதோ
என்று தெரிந்துகொள்ளும் ஆவல் அவர்களுக்கிருப்பது
இயற்கையேயல்லவா?
சபை முழுவதிலும் ஆங்காங்க பணியாட்களும்
பணிப்பெண்களும் நின்று வெண்சாமரங்களினால் விசிறியும்
சந்தனம் தாம்பூலம் முதலியவை வழங்கியும் சபையினருக்கு
வேண்டிய உபசாரங்கள் செய்து கொண்டிருந்தார்கள்.
குறிப்பிட்ட நேரம் ஆகியும் சக்கரவர்த்தி
வராதிருக்கவே சபையில், ''ஏன் சக்கரவர்த்தி இன்னும்
வரவில்லை?'' என்று ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளும்
சப்தம் எழுந்தது. இவ்விதம் பல குரல்கள் சேர்ந்து
பேரிரைச்சலாகிவிடுமோ என்று தோன்றிய சமயத்தில்,
சிறுத்தொண்டர் எழுந்திருந்து, கையமர்த்தி,
''சபையோர்களே! சக்கரவர்த்தி சபைக்கு வருவதற்கு இன்னும்
சிறிது நேரம் ஆகும் என்று செய்தி வந்திருக்கிறது.
அதுவரையில், இந்தச் சபை கூடியதின் நோக்கம் இன்னதென்பதை
உங்களுக்கு எடுத்து உரைக்கும்படி எனக்குச்
சக்கரவர்த்தி கட்டளையிட்டிருக்கிறார்!'' என்று இடி
முழக்கம் போன்ற குரலில் கூறியதும், சபையில் நிசப்தம்
உண்டாயிற்று. எல்லாரும் பயபக்தியுடன் சிறுத்தொண்டருடைய
முகத்தையே பார்க்கலானார்கள்.
சிறுத்தொண்டர் மேலும் கூறினார் : -
''வீர சொர்க்கமடைந்த என் அருமைத் தோழரான பார்த்திப
சோழ மகாராஜாவின் புதல்வர் விக்கிரம சோழர், இன்று
உங்கள் முன்னால் குற்ற விசாரணைக்கு
நிறுத்தப்பட்டிருக்கிறார். சக்கரவர்த்தியின் தேசப்
பிரஷ்டத் தண்டனையை மீறி அவர் இந்நாட்டுக்குள்
பிரவேசித்துக் கையும் மெய்யுமாய்க் கண்டுபிடிக்கவும்
பட்டார். அவர் இவ்விதம் சக்கரவர்த்தியின் ஆக்ஞையை மீறி
வந்ததின் காரண காரியங்களை விசாரணை செய்து, உங்கள்
எல்லாருடைய அபிப்பிராயத்தையும் கேட்டு, சர்வ சம்மதமான
நியாயத் தீர்ப்புக் கூறவேண்டுமென்பது சக்கரவர்த்தியின்
விருப்பம். இதற்காகத்தான் இந்தச் சபை கூடியிருக்கிறது.
நீங்கள் அபிப்பிராயம் கூறுவதற்கு முன்னால் எல்லா
விவரங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும். விக்கிரம
சோழர் சக்கரவர்த்தியின் கட்டளையை மீறியது
குற்றமானாலும், அதற்கு அவர் மட்டும் பொறுப்பாளியல்ல.
இதோ என் பக்கத்தில் வீற்றிருக்கும் என் தோழர் அதற்குப்
பெரும்பாலும் பொறுப்பை ஏற்றுக் கொள்ள
முன்வந்திருக்கிறார்!'' என்று சிறுத்தொண்டர் கூறியதும்
சபையில் எல்லாருடைய கவனமும் சிவனடியார் மேல்
திரும்பியது. அவருடைய முகத்தில் குடிகொண்டிருந்த
தேஜஸைப் பார்த்து அனைவரும் பிரமித்தார்கள். ''இவர்
யார் இந்தப் பெரியவர்? அப்பர் பெருமானோ இறைவன்
பதமடைந்துவிட்டார். சம்பந்த சுவாமியோ இளம்
பிராயத்தவர். மஹான் சிறுத்தொண்டரோ இங்கேயே
இருக்கிறார். வேறு யாராக இருக்கும்? விக்கிரம சோழர்
விஷயத்தில் இவர் பொறுப்பு ஏற்றுக்கொள்ளக் காரணம் என்ன?
என்று எண்ணமிட்டனர்.
தொடரும்... |