தமிழ்
 
 
 
கலைமாமணி விக்ரமனின் நூல் வெளியீட்டு விழா இலக்கியம் - கட்டுரை
கேடிஸ்ரீ
தொடர்ந்து 55 வருடத்திற்கு மேலாக சீராக ஓர் இலக்கியப் பத்திரிகையின் ஆசிரியராக இருப்பது என்றால் அது இலேசுபட்ட காரியமல்ல. கொள்கையிலிருந்து மாறாமல், எத்தனைவிதமான மாற்றங்கள் ஏற்பட்டாலும் தங்களின் தனித்தன்மையிலிருந்து சிறிதும் விலகாமல் அமுதசுரபியை அன்று வழிநடத்திய பெருமை திரு. கலைமாமணி விக்கிரமன் அவர்களையே சாரும். விக்ரமன் அவர்களின் உழைப்பு, தொழில் மேல் அவருக்கு இருந்த பிடிப்பு.,. இன்று 80 வயதிலும் அவரிடம் காணும் சுறுசுறுப்பு என்று அவரைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம்.

கல்கியின் 'பொன்னியின் செல்வன்' வரலாற்று நாவலை 'நந்திபுரத்து நாயகி' என்ற பெயரில் தொடர்ந்து நாவலாக எழுதியவர். இதுவரை சுமார் 57 நூல்கள் எழுதியுள்ளார். 'மாமல்லபுரம்' பற்றி எல்லோரும் அறிந்து கொள்ளும் வகையில் 'மாமல்லபுரம்' என்ற பெயரில் நூல் ஒன்றை எழுதியுள்ளார்.இதுதவிர வரலாற்று நூல்கள், சமூக நூல்கள், சிறுகதைத் தொகுதிகள், இளைஞர்களுக்கான வரலாறு, நாடகத் தொகுதி, ஆங்கில நூல் என்று நிறைய எழுதியிருக்கிறார் விக்ரமன். இதுவரை சுமார் 31 வரலாற்று நாவல்கள் எழுதி வெளியிட்டுள்ளார். 'இலக்கிய பீடம்' என்ற இதழ் ஒன்றை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் கலைமாமணி விக்ரமன் அவர்கள் எழுதிய '80-இல் மலர்ந்த புத்தம் புது சிறுகதைகள்' என்ற நூலின் வெளியீட்டு விழா சென்னையில் வருகின்ற சனிக்கிழமை (5.04.08) அன்று நடைபெறவிருக்கிறது.

அன்று மாலை 6 மணிக்கு சென்னையிலுள்ள நியூ உட்லண்ட்ஸ் ஹோட்டலில் நடைபெறவிருக்கும் புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சி தொடங்குகிறது. நிகழ்ச்சிக்கு தமிழக முன்னாள் அமைச்சர் ஆர்.எம். வீரப்பன் அவர்கள் தலைமைத் தாங்குகிறார்.

முன்னதாக அன்றைய நிகழ்ச்சி கலைமாமணி ஓ.எஸ். அருண் குழுவினரின் பாட்டுக்களுடன் சரியா ஆறு மணிக்கு தொடங்குகிறது. இசை நிகழ்ச்சியில் பத்மஸ்ரீ டாக்டர் ஹரித்துவாரமங்கலம் மற்றும் தவில் ஏ.கே. பழனிவேல் ஆகியோர் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.

இதனைத் தொடர்ந்து 7 மணிக்கு '80-ல் மலர்ந்து புத்தம் புது சிறுகதைகள்' நூலை வெளியிடுகிறார் பத்மஸ்ரீ டாக்டர் நல்லிகுப்புசாமி அவர்கள். இந்நூலை எழுத்தாளர் புஷ்பா தங்கதுரை பெற்றுக் கொள்கிறார். அதற்கு அடுத்ததாக வாழ்த்துரை வழங்க வருகிறார் சென்னை தொலைக்காட்சியின் முன்னாள் இயக்குநர் ஏ. நடராஜன் அவர்கள்.

கடைசியாக ஏற்புரையாற்றுகிறார் கலைமாமணி விக்கிரமன். இதனைத் தொடர்ந்து இனிய விருந்துடன் விழா இனிதே முடிவடைகிறது. பிரம்ம கானசபா இந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகநயும் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

தொகுப்பு April 2nd, 2008
 


மேலும்