தமிழ்
 
 
 
குழந்தைக் கவிஞருக்கு நினைவாஞ்சலி இலக்கியம் - கட்டுரை
ஸ்ரீவித்யா சுவாமிநாதன்
அழ. வள்ளியப்பா

குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா அவர்களின் 19 ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள காம்கேர் கணினிப் பயிற்சி மையக் கூடத்தில் குழந்தைக் கவியுலகம் சார்பாக நினைவாஞ்சலி நடந்தது. 'லேடீஸ் ஸ்பெஷல்' பத்திரிகை ஆசிரியர் திருமதி கிரிஜா ராகவன் தலைமை வகிக்க, வரவேற்புரை நிகழ்த்தினார் குழந்தைக் கவியுலக அமைப்பாளர்- சிறுவர் இலக்கியச்செல்வர் திரு.பி. வெங்கட்ராமன். விழாவின் சிறப்பு விருந்தினராக சந்தக்கவிமாமணி திரு. தமிழழகன் கலந்து கொண்டார்.

கிரிஜா ராகவன்:

தலைமை வகித்த திருமதி கிரிஜா ராகவன் தன் உரையில், 'குழந்தைகள் உலகம் என்பது ஒரு தனி உலகம். அந்தக் குழந்தைகளுக்காக, குழந்தை இலக்கியத்திற்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் திரு. அழ.வள்ளியப்பா' என்று குறிப்பிட்டார். மேலும் அவர் பாடல்கள் பலவற்றைத் தாம் பாடி மகிழ்ந்திருப்பதாகவும், பல குழந்தைகள் தாள லயத்துடன் பாடிக் கேட்டிருப்பதாகவும் கூறியவர், வள்ளியப்பாவின் படைப்புகள் குழந்தை இலக்கியத்திற்கான கொடை. அவற்றைச் சமுதாயம் போற்றிப் பாதுகாக்க வேண்டும்' என்று குறிப்பிட்டார்.

எஸ்.ஆர்.ஜி.சுந்தரம்:

தொடர்ந்து பேசிய எழுத்தாளர் எஸ்.ஆர்.ஜி.சுந்தரம், அழவள்ளியப்பா என்றாலே நம் கண் முன் வருவது இவரது அடக்கமான தோற்றமும், பணிவான பேச்சும் தான். என்னைப் போன்று பல எழுத்தாளர்களை ஊக்குவித்தவர் அவர். நான் குழந்தை இலக்கியவாதியாக விளங்குவதற்கு அவர்தான் மிக முக்கிய காரணமாக, முன்னோடியாக அமைந்தார்' என்று குறிப்பிட்டார்.

ரேவதி (டாக்டர் ஈ.எஸ். ஹரிஹரன்):

தொடர்ந்து கோகுலம் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரும், அழ.வள்ளியப்பா அவர்களின் நண்பரும் குழந்தை எழுத்தாளருமான டாக்டர் ஈ.எஸ். ஹரிஹரன் (ரேவதி) சிறப்புரையாற்றினார். 'வள்ளியப்பாவின் படைப்புகள் போற்றிப் பாதுக்காக்கப்பட வேண்டும்' என்று வலியுறுத்திய அவர், 'வள்ளியப்பா பணம், புகழ், போன்றவற்றிற்கு ஆசைப்பட்டு எழுத்துத் துறைக்கு வரவில்லை. குழந்தைகளின் மீது கொண்ட உண்மையான அன்பினாலேயே, அக்கறையினாலேயே இத்துறைக்கு வந்து இறவா இலக்கியங்களைப் படைத்தார்' என்று கூறினார். திருச்சி 'பா'ரதன் போன்ற எழுத்தாளர்களை ஊக்குவித்தவர் வள்ளியப்பா. ஆனால் வள்ளியப்பாவின் படைப்புகளையே சிலர் திருடி தமது பெயரில் வெளியிட்டுக் கொண்டதும் உண்டு' என்றும் தெரிவித்தார். மேலும் அழ.வள்ளியப்பா அவர்களின் பாடலை தனது பாடலைப் போன்று பாடிய ஒரு ஆசிரியரை தனியாகக் கூப்பிட்டு அறிவுறுத்தி அவர்தம் தவறை உணர வைத்தார். இவ்வாறு பல்வேறு பெருமைகளுக்கு உரியவராக அழ.வள்ளியப்பா அவர்கள் விளங்கினார்' என்று கூறினார்.

குழ.கதிரேசன்:

குழந்தைக் கவிஞர் குழ.கதிரேசன் தம் உரையில் கூறும் போது, "நான் பெரியவர்களுக்கான, கவிதைகளை, நூல்களை எழுதிக் கொண்டிருந்த காலத்தில், குழந்தைகளுக்கான நூல்களை எழுதுமாறு என்னை ஊக்கப்படுத்தியவர் அழ.வள்ளியப்பா அவர்கள் தான் என்றார். மேலும், 'குழந்தைகள் மனநிலை என்ன, அவர்களுக்கு எப்படி எழுத வேண்டும், அதற்கான விதிமுறைகள் என்னென்ன என்பது பற்றியெல்லாம் விரிவாகச் சொல்லிக் கொடுத்து என்னை எழுதத் தூண்டியவர் திரு. அழ.வள்ளியப்பா அவர்களே' என்றும் நன்றியுடன் குறிப்பிட்டார்.

பா.சு.ரமணன்:

எழுத்தாளர் பா.சு.ரமணன் தனது உரையில், 'நான் சிறுவனாக இருந்த பொழுது கோகுலம் பத்திரிகைக்கு எழுதி அனுப்பிய முதல் துணுக்கிற்கே பரிசு கிடைத்தது. அப்போது அதன் ஆசிரியராக இருந்தவர் திரு. அழ. வள்ளியப்பா அவர்கள் தான். தொடர்ந்து பிருந்தாவனக் கதையரங்கம், கவியரங்கம் என பல விதங்களில் எனது படைப்புகளை வெளியிட்டு ஊக்கப்படுத்தினார்' என்று கூறினார். மேலும் 'குழந்தை இலக்கியம் பற்றிய அழ.வள்ளியப்பாவின் அனைத்து படைப்புகளும் கதை, கவிதை, கட்டுரை என அனைத்தும் தொகுக்கப்பட்டு தனி புத்தகமாக - பெருந்தொகுப்பாக வெளி வர வேண்டும். அவை அனைத்தும் வணப்படுத்தப்பட வேண்டும். இணைய வளர்ச்சியைப் பயன்படுத்தி அவற்றை உலகளாவிய தமிழ்ச்சமுதாயத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும்' என்று வலியுறுத்தினார்.

குமரிச்செழியன்:

குமரிச்செழியன் தனது உரையில் ''அழ.வள்ளியப்பா அவர்களின் படைப்புகள் தமிழ்நாட்டிற்கும் குழந்தை இலக்கியத்திற்கும் கிடைத்த கொடை. அவற்றைப் பேணிப் பாதுக்காக வேண்டியது நமது கடமை' என்று தெரிவித்தார்.

கோ. பார்த்தசாரதி:

திருக்குறள் இலக்கியக் கழகத் தலைவர் திரு கோ. பார்த்தசாரதி அவர்கள் பேசும் போது, 'அழ.வள்ளியப்பா அவர்கள் தமிழில் குழந்தை இலக்கியம் வளர அரும்பாடுபட்டவர். அவருடைய குழந்தை இலக்கியப் படைப்புகளை தமிழ் மொழி உள்ளவரை, குழந்தைகள் விரும்பிப் படித்துப் பயன் பெறுவர். அது தமிழ் இலக்கியத்தின் சொத்து' என்று குறிப்பிட்டுப் பேசினார். மேலும் 'குழந்தை இலக்கியத்திற்கு வித்திட்டவர் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை என்றால் அதனை ஆணிவேராக இருந்து வளர்த்தெடுத்தவர் திரு. அழ.வள்ளியப்பா அவர்கள் தான் என்றால் அது மிகையாகாது' என்றும் தெரிவித்தார்.

இலந்தை ராமசாமி:

எழுத்தாளர், கவிஞர் இலந்தை ராமசாமி அவர்கள் தமது உரையில், 'வள்ளியப்பா மிகவும் எளிமையான மனிதர். அனைவரிடமும் அன்பு பூண்டு ஒழுகுபவர். நான் அக்காலத்தில் ஏற்பாடு செய்த கூட்டங்களுக்கு என்னுடன் இருசக்கர வாகனங்களிலேயே வந்து விடுவார். மிகவும் பண்பாகவும், மரியாதையாகவும் பழகக் கூடியவர்' என்று தெரிவித்தார்.

புதுவயல் ந. செல்லப்பன்:

கவிஞர் புதுவயல் ந. செல்லப்பன் தமது உரையில், ' வள்ளியப்பா பழகுவதற்கு மிகவும் இனிமையான மனிதர். மனித நேயம் மிக்க மாண்பாளர். திருமதி சௌந்தரா கைலாசம் அவர்களுடைய கவிதை நூல் வெளிவருவதற்கான முயற்சிகளில் நான் அழ.வள்ளியப்பாவுடன் இணைந்து செயலாற்றி இருக்கிறேன் என்பது எனக்கு பெருமை தரக் கூடியதாக உள்ளது' என்று குறிப்பிட்டார்.

சந்தக்கவிமாமணி தமிழழகன்

சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட சந்தக்கவிஞர் தமிழழகன் அவர்கள் வள்ளியப்பாவுடனான தனது நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். 'பிறருக்கு உதவி செய்வதிலும், அவர்களை ஊக்குவித்து முன்னுக்குக் கொண்டு வருவதிலும் வள்ளியப்பா மிகுந்த அக்கறை கொண்டவர்' என்று கூறியதுடன், 'தமிழில் குழந்தை இலக்கியம் வளர வள்ளியப்பா எடுத்துக் கொண்ட முயற்சிகள், குழந்தை எழுத்தாளர் சங்கம் அமைத்து எழுத்தாளர்களை ஊக்குவித்தது, குழந்தைகள் தினத்தன்று பல குழந்தை நூல்களை வெளியிட்டுச் சாதனை படைத்தது' என வள்ளியப்பாவுடனான தனது வாழ்க்கை அனுபவங்களை மிகவும் சுவைபடப் பகிர்ந்து கொண்டார். அழவள்ளியப்பாவைப் பின்பற்றி திருச்சி 'பா'ரதன், குழ.கதிரேசன் என பல எழுத்தாளர்கள் உருவானார்கள் என்றும், அதன் மூலம் வள்ளியப்பா பரம்பரை உருவானது என்றும் தெரிவித்தார்.

வாசல் வசந்தப்ரியன்:

'பெயரில் தான் 'அழ' இருக்கிறதே தவிர தன் வாழ்நாளில் அனைவரையும் சிரிக்க வைத்தவர் வள்ளியப்பா' என்ற கவிஞர் வாசல் வசந்தப்ரியன், 'அவரது இலக்கியத் தொண்டு என்றும் நினைவுகூரத்தக்கது. ஈடு இணையில்லாதது' என்று புகழ்ந்துரைத்தார். மேலும் அவர், 'குழந்தைக் கவிஞரின் பிறந்த தினத்தை (நவம்பர் 7) குழந்தைக் கவியுலகம் அமைப்புடன் தங்கள் 'வாசல்' கவிதை அமைப்பு இணைந்து நடத்தும் என்று பலத்த கரவொலிகளுக்கிடையே அறிவித்தார்.

வ. அழகப்பன்

ஏற்புரை வழங்கிய குழந்தைக் கவிஞரின் புதல்வர் திரு வ.அழகப்பன், தங்களது தந்தை ஒரு உதாரண புருஷராக விளங்கியதாகவும், தங்களுக்கு ஒரு நண்பரைப்போல் இருந்து வாழ்க்கை வழிகாட்டியாக விளங்கினார் என்றும் கூறினார். தங்களை மிகவும் அன்பாக நடத்தியதுடன், தங்களை எதற்கும் கோபித்துக் கொண்டதேயில்லை என்றும் கூறியவர், குழந்தைகளைக் கண்டால் தாமும் ஒரு குழந்தையாக மாறிவிடும் அளவிற்குக் குழந்தை உள்ளம் படைத்தவர் வள்ளியப்பா என்றும் குறிப்பிட்டார்.

பி.வெங்கட்ராமன்:

சிறுவர் இலக்கியச் செல்வர் பி.வெங்கட்ராமன் தனது உரையில், "ஜவஹர்லால் நேருவின் பிறந்த தினமான நவம்பர் 14-ம் தேதியை குழந்தைகள் தினமாகக் கொண்டாடுவது போல, அழ.வள்ளியப்பா அவர்களின் பிறந்த நாளான நவம்பர் 7-ம் தேதியை குழந்தைகள் இலக்கிய தினமாக அரசு கொண்டாட முன்வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அந்த நாளில் சிறந்த குழந்தை நூல்களுக்கு பரிசுகள் வழங்கி, குழந்தை எழுத்தாளர்கள் கௌரவிக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.

எதிரொலி விசுவநாதன்:

தொடர்ந்து பேசிய எதிரொலி விசுவநாதன் தாம் இரண்டு முறை வள்ளியப்பா அவர்களைச் சந்தித்ததுண்டு என்றும் அவரது இலக்கியச் சேவை என்றும் நினைவுகூரத்தக்கது என்றும் பெருமையுடன் குறிப்பிட்டார். வள்ளியப்பாவின் நினைவாஞ்சலியாக பாடல் ஒன்றையும் இயற்றிப் பாடி அஞ்சலி செலுத்தினார்.

காம்கேர் புவனேஸ்வரி

நன்றியுரை ஆற்றிய காம்கேர் புவனேஸ்வரி, அழ.வள்ளியப்பா அவர்கள் ஆசிரியராக இருந்த கோகுலம் இதழ் மூலம் தான் தாம் எழுத்தாளராக அறிமுகமானதாகவும், அத்தகைய குழந்தைக் கவிஞரின் பாடல்களை குறுந்தகடாகத் தாம் வெளியிட முடிந்ததை தமக்குக் கிடைத்த பெரும்பேறாகக் கருதுவதாகவும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

குழந்தைக் கவிஞரின் நினைவாக ஆண்டுதோறும் நவம்பர் மாதத்தில் தமது 'இலக்கிய பீடம்' சார்பில் 'குழந்தை இலக்கியப் போட்டி' நடத்துவதாக இலக்கியபீடம் ஆசிரியர் டாக்டர். கலைமாமணி திரு.விக்கிரமன் அவர்கள் முன் வந்திருப்பது, இக் கூட்டத்தின் சிறப்பம்சம் என்று கூறலாம்.

நிகழ்ச்சிக்கு வள்ளியப்பா குடும்பத்தினர் மற்றும் இலக்கிய ஆர்வலர்கள் திரு. கீதா (ஏழ்வரைக்கடியான்), திரு.மாயன் ஆகியோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியது, வள்ளியப்பாவிற்கான உண்மையான நினைவாஞ்சலியாக, மனதிற்கு நிறைவு தரும் நிகழ்ச்சியாக அமைந்திருந்தது.

தொகுப்பு April 1st, 2008
 


மேலும்