தமிழ்
 
 
 
லா.ச.ரா வாழ்கிறார் இலக்கியம் - கட்டுரை
எதிரொலி விஸ்வநாதன்
மேல் தோலைச் சுலபமாக உரித்து வீசி எறிந்துவிட்டு வாழைப் பழத்தை உண்ணமுடியும். இனிக்கும் மாம்பழத்தை அப்டியே கடித்துச் சாப்பிடலாம். ஆனால் அதன் கொட்டையின் நார்ப்பகுதியைச் ருசித்து ருசித்து சாப்பிடுவதில்தான் தனி ருசி. இப்படி சுலபமாகப் பலாப் பழத்தை மட்டும் சாப்பிட முடியாது. தூக்க முடியாத பலா பழத்தை இரண்டு துண்டாக முதலில் வீரன் போல் வெட்டி வீழ்த்த வேண்டும். அப்புறம் உள்ளங் கையில் எண்ணெய்யைப் பூசிக் கொண்டு சிக்கென்று பிடித்துக் கொண்டிருக்கும் சடைப்பகுதிகளைக் கவனாகக் களைய வேண்டும். விள்ளாமல் விரியாமல் சுளைகளை லாகவமாகப் பிய்த்து எடுக்க வேண்டும். கொட்டைகளை அப்புறப்படுத்திவிட்டுப் பலாப்பழச் சுருள்களை வாயில் போட்டுக் கொள்ளும் போது எச்சிலும் தேனாக இனிக்கும்.

கொஞ்சம் சிரமப்பட்டாலும் வயிறு முட்ட பலாப்பழத்தைச் சாப்பிடலாம். மற்றவர்களுக்கும் கொடுக்கின்ற அளவுக்கு அந்தப் பழத்தில் பலாச்சுளைகள் நூற்றுக் கணக்கில் கிடைக்கும். சோம்பல் இல்லாமல் பலாப்பழத்தை பக்குவமாக உரித்து சுளைகளைச் சாப்பிட வேண்டும். முக்கனிகளில் பலாப்பழத்தைப் போன்றவைதாம் அமரர் 'லாசுரா'வின் அற்புதமான சிறுகதைகள்.

ஒருமுறை படித்தால் புரியாது. மீண்டும் ஒருமுறை படித்தால் புரிந்தும் புரியாதும் மாதிரி இருக்கும். கவனமாக மறுமுறையும் படித்துப் பார்த்தால் கதை இன்பம் நம்மை கிறுகிறுக்க வைத்து விடும். சுவையான பலாச் சுளைகளை உண்ட தித்திப்பில் நாக்கு நாலாப்புறமும் வாய்க்குள் சுழன்று அசைப்போடும் 'லா.ச.ரா' கதைகளில் உத்திகளை மிகத் திறமையாகக் கையாளுகிறார். சொல்ல வேண்டிய விஷயத்தைவிட சொல்லப்படும் விதத்தில் அதிகம் கவனம் செலுத்துகிறார்.

'ஒருநாள் ஒரு மரத்தடியில் அவள் மத்தியானவேளையில் தூங்கிக்கொண்டிருந்தாள். மத்யானம் பிற்பகலாயிற்று. பிற்பகல் மாலையாயிற்று. மாலை இரவாயிற்று. இரவு காலை ஆயிற்று. காலை பகலாயிற்று. அவள் மூக்கிலும் வாயிலும் எறும்பும் ஈயும் தாராளமாகப் புகுந்து புறப்பட்டுக் கொண்டிருந்தன. ஆனால் அவள் எழுந்திருக்கவேயில்லை...''

அவள் இறந்துவிட்டாள் என்பதை எத்தனை அர்த்தபுஷ்டியோடு லா.ச.ரா. எழுதியிருக்கிறார் என்பதை எண்ணிப் பாருங்கள்.

காட்சியை நேருக்கு நேர் படம் பிடித்துக் காட்டுகிற வசீகர வார்த்தை ஜாலங்களுக்கும் பொருத்தமான உவமைகளுக்கும் ரசனைகளுக்கும் லா.ச.ராவின் கதைகளில் பஞ்சம் கிடையாது.

ஒரு மந்திரவாதியின் கோல்பட்ட மாதிரி வார்த்தைகள் அவருடைய கதைகளில் உருமாற்றம் பெறுகின்றன. எல்லாவற்றையும்விட அவர் எழுத்தில் ஒரு உயிர் இருக்கிறது. ஓர் அசைவு இருக்கிறது.

'த்வனி' என்றொரு கதை; புதுக்கவிதையில் தீட்டிய புன்னகை போல் சிரிக்கிறது. ஒவ்வொரு வரிகளையும் வார்த்தைகளையும் புரிந்து கொண்டு மேலே போக மணிக்கணக்காய் சிந்திக்க வேண்டியிருக்கிறது. கதை இவ்வாறு முடிகிறது.

''நான் கண்விழித்ததும் இவ்வுலகை சிருஷ்டிக்கிறே... நான் தூக்கத்தில் அயர்கையில் என் சிருஷ்டியாகிய இவ்வுலகம் என் இமைகளின் குவிப்புள் ஒடுங்கிவிடுகின்றது. இவ்வுலகத்தை அழித்து, என் சடலத்தையும் கழற்றிவிட்டு பிரக்ஞையில் புகுந்து யோகநித்திரையில் ஆழ்ந்துவிடுவேன்.

லா.ச.ரா.வின் கதைகளின் மையக்கருத்து சராசரி குடும்பம் பற்றிய சாதாரண விஷயங்கள்தான். ஆனால் அந்த எல்லைக்குள் அவருடைய கதைகள் விஸ்வரூபம் எடுக்கின்றன. மூவுலகையும் அளந்த வாமனரைப் போல் அவர் தமது எழுத்தை அற்புதமாகக் கையாளுகிறார். உணர்வுகளை மைக்ரோஸ்கோப் வைத்துக் கொண்டு ரசிக்கிறார்கள். அவருக்குத் திருப்தி ஏற்படுகின்ற வரையில் கதைகளை அடித்து அடித்து மாற்றி மாற்றி எழுதி அழகுப்படுத்துகிறார். அவர் ஒரு கதை எழுத மூன்று மாதம்கூட ஆகும். சில கதைகள் ஆண்டுக்கணக்கில் அவகாசம் எடுத்துக் கொண்டவை. தீப்பொறியைச் சுடராக்கி அதை விளக்காக ஏற்றி வெளிச்சம் தருகிறார்.

செய்தித்தாள் படிக்கின்ற சாதாரண வாசகர்களுக்கும் புரியும் வண்ணம் அவர் கதை எழுதுவதில்லை. அவருடைய கதைகள் தரமான எழுத்தாளர்கள் படித்து ரசிக்கவே எழுதப்பட்டவை.

பொதுமக்களுக்குப் புரியும்படி கதை எழுதவில்லை என்பதாலோ - புதிய புதிய விஷயங்களைப் பற்றி அவர் கதை எழுதவில்லை என்பதாலோ அவரை ஒதுக்கித் தள்ளிவிடமுடியாது. அவர் கதைகளின் உள்ளே சென்று அந்தக் கதையைத் தொடுவதற்கு ஒரு ஞானம் வேண்டும். இது அவருடைய குறையோ அல்லது நிறையோ... அவர் மேதைகளுக்காக எழுதுகிறார். மேதைகள் வாசித்து அவர் கதைகளைக் கொண்டாடி மகிழ்கிறார்கள்.

'பச்சைக் கனவு' என்றொரு கதை. கண்பார்வை நன்றாக இருந்து இளம் வயதில் பார்வை இழந்த ஒரு குருடன் பற்றிய கதை அது. அவன் கண்ணால் கடைசியாக கண்ட நிறம் பச்சை. அதனால் அந்த வர்ணம் அவன் மனதைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டுவிட்டது. அதிலிருந்துதான் கேள்விப்படுகிற, உணர்கிற பொருட்களெல்லாம் பச்சை வர்ணம் அமைந்திருப்பதாய் கற்பனை செய்து கொள்வது அவனுக்குப் பிடிக்கிறது.

அவனுக்குக் கண்பார்வை இருந்த போது ஒரு ஊமைப் பெண்ணுடன் அவனுக்கு திருமணம் நடைபெற்றது. அது பால்ய விவாகம்.சாரதா சட்டம் அமுலுக்கு வருமுன்னர் அவசரமாக நடத்தப்பட்ட கல்யாணம். பெண் ஊமை என்று சொல்லாமல் சம்பந்தி ஏமாற்றிவிட்டார் என்று அவன் அப்பாவுக்கு ஏககோபம். பெண்ணைத் தள்ளி வைத்துவிட்டார். அப்போது பார்த்து அவனுக்கு கண்பார்வை சூரியனை நேருக்கு நேர் பார்க்கும் பிள்ளை விளையாட்டல் பறிபோய்விட்டது. குருட்டு பையனுக்கு ஊமைப் பெண் குறைந்து போயிற்றா என சம்மந்தி கேட்கப் பகை மூண்டது.

ஆனால் வயது ஏறஏற பருவக்கோளாறால் குருட்டுப் பையனும், ஊமைப் பெண்ணும் யாருக்கும் தெரியாமல் தனிமையில் சந்தித்துக் கொள்கிறார்கள். விளைவு ஊமைப் பெண் வயிற்றில் கரு வளர்கிறது. கரு வளர்ந்து குழந்தை உருவாக ஊமைப் பெண் பயந்து போகிறாள். ஒருநாள் விஷப்பூண்டைத் தின்று செத்துவிடுகிறாள்.

நிலா பச்சையாக இருக்குமா? வெய்யில் பச்சையாக இருக்குமா? என்ற வாயைத் திறந்தால் தத்துபித்தென்று கேட்கும் அவன் இந்தப் பச்சைப் பிதற்றல்கிடையே அவனுடைய முதல் மனைவி பற்றி தரிசனத்தைத் தனது இளைய மனைவிக்கு சொல்கிறான். இதுதான் பச்சைக்கனவு என்ற கதை.

கதையில் குருடனின் நினைவோட்டமாக தூங்குவதற்கும் விழித்திருப்பதற்கும் என்ன வித்தியாசம்?எனக்கு இரண்டும் ஒன்றாயிருக்கிறது. எப்பவும் இருள்தான். வெய்யில் உடலில் உறைத்தால் அது பகலா? அப்புறம் வெய்யில் இல்லாது தெருக்கோடியில் நான் படுத்துவிட்டால் அது இரவா? இப்பொழுது நான் தூங்குவதாக அர்த்தமா? தூக்கம் நிஜமா?விழிப்பு நிஜமா? என அற்புதமாக எழுத லா.ச.ராவால்தான் முடிகிறது.

தாழ்வாரத்தில் பிரம்பு நாற்காலியில் சாய்ந்து கொண்டு குனிந்த தலைநிமிராது யோகத்தில் ஆழ்ந்தது போல் உட்கார்ந்திருக்கிறார். என்ன இருக்கிறது .. இவ்வளவு யோசனை செய்ய...? கண்ணிருந்தாலே பொழுது போகமாட்டேன்கிறது... இவருக்குப் பார்வை இல்லாமல்.. பேச்சில்லாமல் எப்படி பொழுது போகிறது...

குருடர்களின் உலகம் குறுகிவிடுகிறது. நினைத்த இடம் போகமுடியுமா?வரமுடியுமா? நாலு பேருடன் இஷ்டப்பிரகாரம் சேர முடியுமா? எல்லோரும் எவ்வளவு பிரியமாய் இருந்த போதிலும் அவர்களின் இரக்கம் ஏளனமாகத்தான் படுகிறது. அவர்களுக்கு இருபபது எனக்கிருக்கிறதா?

நான் தெரியாத கண்ணைத் திறந்த வண்ணம் கட்டிலில் படுத்துக் கொண்டிருந்தேன்.

இப்படியெல்லாம் லா.ச.ரா தமது பச்சைக்கனவு கதையில் எழுதுகிற போது அதைப் படிக்கிற போது எனக்கு பார்வை இழந்தவர்களின் பரிதாப நிலை நன்கு புரிகிறது. பெரியவர் லா.ச.ராவை நான் பார்த்திருக்கிறேன். பழகியிருக்கிறேன். அவர் ஒரு சமயம் குரோம்பேட்டையில் என் வீட்டுக்கு வருகை தந்தார். எந்த சந்தர்ப்பத்தில் வந்தார் என்பது பற்றி எனக்கு நினைவு இல்லை. என் அம்மா போட்டுக்கொடுத்த காப்பியைக் குடித்துவிட்டு பிரமாதமாகப் போற்றி புகழ்ந்தார்.அவருடன் குரோம்பேட்டை ரயில் நிலையம் வரை கொஞ்சதூரம் துணையாக கூடச் சென்றேன். அவரிடம் விடைபெறுகையில் உங்கள் நண்பர் மாசுவை எனக்கு நன்றாகத் தெரியும் என்றேன். அப்படியா என்றவர் என்னை ஒரு கணம் ஆலிங்கனம் செய்து கொண்டார்.

பெண்களைப் பற்றி மோசமாக எழுதுவதை எதிர்த்துப் போர்க்கொடி தூக்கியவர் மாசு. அவர் லா.ச.ரா. வாழ்ந்த போது மறைந்துவிட்டார். தனது பிரியமான நண்பனைப் பற்றி லா.ச.ரா கட்டுரை ஒன்று எழுதியிருக்கிறார். 'சிந்தா நதி' என்கிற தலைப்பு. பத்திரிகை பெயர் நினைவில்லை.

''மாசு நீங்கள் எனக்கு சுந்தரகாண்டம்; எத்தனை முறை படித்தாலும் பூர்த்தியாகாத பாராயணம்..!'' என்று அதில் லா.ச.ரா. எழுதிய வரி நினைவுக்கு வருகிறது.

லா.ச.ரா. 30.10.1916ல் பிறந்து 30.10.2007ல் மறைந்தார். அவர் மறைந்து மூன்று மாதங்கள்கூட இன்னும் நிறையவில்லை. அதற்குள் லா.ச.ரா. இறந்துவிட்ட செய்தி தெரியுமா? என்று நண்பர்கள் என்னைக் கேட்கிறார்கள். லா.ச.ரா. இறப்பதற்காகப் பிறந்த சராசாரி மனிதர் அல்லர். தமிழில் சிறுகதை நாவலை இலக்கியம் எழுதுகின்ற எழுத்தாளர்கள் உருவில் அவர் என்றும் வாழ்கிறார் என்பதால் அவருக்கு அஞ்சலி செலுத்த நான் விரும்பவில்லை.

தொகுப்பு Published on Feb 13th, 2008
 


மேலும்