அறுபதுகளில்
தமிழ்மறுமலர்ச்சி ஓர் இயக்கமாக ஏற்படுவதற்கு முன்னர்
அநேகமாக வடமொழிச்சொற்கள் பெரிதும் பயன்படுத்தப்பட்டன.
ஆங்கிலச் சொற்களைக் கலந்து பேசுவதை இன்றைய படித்த
வர்க்கம் பெருமையாகக் கருதுவது போல, அன்றைய நாளில்
வடமொழிச் சொற்களைப் பயன்படுத்துவதைச் சிலர் பெருமையாகக்
கருதினர். மேற்கண்ட பட்டியலைப் பர்த்தாலே அது ஒரு
சிலருக்கே புரியக்கூடியதாகவும் பயன்படக்கூடியதாகவும்
இருந்திருக்கும் என்பது தெளிவாகும். கீழ்வருவனவற்றையும்
நாம் குறிப்பிடலாம். வசந்த ருது, க்ரீஷ்ம ருது, வர்ஷ
ருது, சரத் ருது, ஹேமந்தருது, சசிர ருது என்பன எதைக்
குறிக்கின்றன? இவை பருவகாலங்களைக் குறிப்பிடப்
பயன்படுத்தப்பட்ட சொற்கள். அவை முறையே இளவேனில்,
முதுவேனில், கார், கூதிர், முன்பனி, பின்பனி ஆகிய
காலங்களைக் குறிப்பன என்பது பலருக்கு வியப்பளிக்கலாம்.
படித்த வர்க்கம் படிக்காத வர்க்கத்தினரை மேலாண்மை
செலுத்தி வர முடிந்தற்கான காரணங்களில் பிறமொழிச்
சொற்களின் பயன்பாடும் உள்ளடங்கும்.தமிழில் அநேகக்
கலைச் சொற்களும் ஆட்சிமொழிச் சொற்களும் உருவாவதற்கு
தமிழக அரசுகளும் கரணியமாய் இருக்கின்றன. ஒரு சொல்
இவ்வாறு ஏற்றுக் கொள்ளப்பட்டு அறிவிக்கப்பட்டவுடன் அரசு
தொடர்பான எல்லா ஆவணங்களிலும் அது இடம் பெறத்
தொடங்குகிறது. நாளாவட்டத்தில் அது பொதுமக்களின்
அன்றாடப் பயன்பாட்டில் கீழ் வந்து விடுகிறது. இந்த
வகையில் அரும்பணியாற்றிய காலஞ்சென்ற ஆட்சிமொழிக் காவலர்
இராமலிங்கனாரின் சேவை அளவிட முடியாதது.
மிகக் குறுகிய காலக்கட்டத்தில் கூடச் சொற்கள்
மாற்றமடைகின்றன. பத்தாண்டு காலத்தை மிகப் பெரும் கால
இடைவெளியாக எடுத்துக் கொள்ள முடியாது. கீழ்வரும்
பட்டியல் கால் நூற்றாண்டு காலத்தில் ஏற்பட்ட மாற்றத்தை
அறிந்து கொள்ள உதவுகிறது. இந்த மாற்றங்கள் யாரால்
எப்போது அறிமுகப்படுத்தப்படுகின்றன என்பது மற்றொரு தனி
ஆய்வாக அமையும். இதே போல ஆங்கிலச் சொற்களுக்கான
மொழிபெயர்ப்பும் கூட காலத்திற்குக் காலம்
மாறிவருகின்றன. அறிஞர் ம. சிங்காரவேலர், 1931-ல் செய்த
மொழிபெயர்ப்பு இன்று எங்ஙனம் செய்யப்படுகிறது என்பதை
இது காட்டும்.
| சொல் |
பழைய வழக்கில் |
புதிய வழக்கில் |
| Anthropology |
பூர்வமனிதஞானம் |
மனிதஇனநூல் |
| Astronomy |
வானஞானம் |
வானியல் |
| Biologist |
பிராண விஞ்ஞானி |
உயிரியலாளர |
| Botony |
தாவரஞானம் |
தாவரவியல |
| Geology |
பூகர்ப்பஞானம் |
மண்ணியல |
| Phosferous |
திமிறிபாஷாணம் |
பாஸ்பரம் |
| Physiology |
உடல்ஞானம் |
உடல்நூல |
| Zoology |
பிராணிஞானம் |
விலங்கியல் |
இது போல மொழிபெயப்புகள் காலத்திற்குக் காலம்
மாற்றமடைந்து கொண்டே வருகின்றன. கலைச் சொற்களின் தமிழ்
மொழிபெயர்ப்பு இவ்வாறு மாற்றம் பெற்றிருப்பதைப்
பரவலாகக் காணமுடியும்.
இலக்கணம் தொடர்பான சொற்கள் கூட நாளாவட்டத்தில்
மாற்றமடைகின்றன. மிக நுணுக்கமான மாற்றங்களைக் கூடக்
காணமுடிகிறது. சொற்பொருள் ஆய்வியல் (Semantics)
என்பதைப் பெருண்மையியல் என்றும், பயனீட்டு வாதம்
(Pragmatics) என்பதைப் பயன்வழியியல் என்றும்,
சொற்தொடரியல் (Syntax) என்பதைத் தொடரியல் என்றும்
டாக்டர் -. முத்தையா பொருண்மையியல் பயன்வழியில் (1982)
என்ற தனது நூலில் பயன்படுத்தினார். மேல்நிலை
ஆராய்ச்சியில் ஈடுபடுவோர் இத்தகைய மாற்றங்களைச் செய்து
வருவது நாளும் நடைபெற்று வருகிறது. இவற்றை
மொழிபெயர்ப்பாளர் கருத்தில் கொள்ளுதல் வேண்டும். |