''குழந்தை
கவிஞர்' அழ. வள்ளியப்பாவை தன்னுடைய குருவாக ஏற்றுக்
கொண்டு குழந்தைகளுக்காக பாடல் இயற்றுபவர்களில் கவிஞர்
செல்லகணபதி முதன்மையானவர் என்றால் அது மிகையல்ல'' என்று
இந்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் அவர்களால்
பாராட்டப்பெற்றவர் கவிஞர் செல்லகணபதி அவர்கள்.16
சிறுவர் பாடநூல்கள் எழுதி - கொஞ்சும் குழந்தைகளின்
நெஞ்சம் கவர்ந்து வரும் செல்லகணபதி பாடல்கள் பற்றி
இந்தியாவின் தலை சிறந்த குழந்தை எழுத்தாளர்
விருதுபெற்ற மூத்த குழந்தை எழுத்தாளர் டாக்டர் பூவண்ணன்
குறிப்பிடுகையில், ''துள்ளச் செய்யும் சத்தம், வியக்க
வைக்கும் உவமை, அறியச் செய்யும் எளிமை, ஆற்றல் காட்டும்
புதுமை, அனைவரும் விரும்பும் கதை, நல்லதை உணர்த்தும்
கருத்து, கருத்தை உணர்த்தும் படம் இவையாவும் செல்ல
கணபதியின் பிள்ளைப்பாடல்களில் தொட்ட இடமெல்லாம்
தட்டுப்படும்! குழந்தை மனம் அங்கு கட்டுப்படும்'' என்று
வியந்து பாரட்டுகிறார்.
நல்ல தமிழ் விளையாடும்
நற் கவிதை தோட்டம்
நடனமிடும் உவமை பல
நளினமல ராட்டம்
என கவியரசர் கண்ணதாசன் அவர்களால் பாராட்டப்பட்ட திரு.
செல்ல கணபதி அவர்களின் பாடல்கள், புத்தகங்களாகவும்,
ஒலிப்பேழைகளாகவும், குறுந்தகடுகளாகவும் வெளியாகி
தமிழ்ச் சிறுவர் உலகை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளன.
உலக
தரத்திற்கு இணையாக இவரது புத்தகங்கள் வசீகர வண்ணங்களில்
ஒப்பற்ற ஓவியங்களுடன் வெளியானது தமிழ் குழந்தைகளின்
அதிர்ஷ்டம் என்றே சொல்ல வேண்டும்.
பாரதி விருது, சிறுவர் இலக்கிய மாமணி விருது,
குழந்தை இலக்கிய பணி விருது, குழந்தை இலக்கிய
சாதனையாளர் விருது என பல சிறப்புகள் பெற்ற இவர் 'குழந்தைக்
கவிஞர் அழ. வள்ளியப்பாவின் வாரிசு'' என சான்றோர்
பெருமக்களின் பாராட்டும் குறிப்பிடத்தக்கது.
2006ஆம் ஆண்டில் 'தென்னிந்திய புத்தக
விற்பனையாளர்கள் - வெளியீட்டாளர்கள் சங்கம்' இவரை 'சிறந்த
குழந்தை எழுத்தாளர்' என்ற உயரிய விருதினை வழங்கிச்
சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.
ஆண்டுதோறும் தமிழகத்தின் பேரூர்களில் டாக்டர்
பூவண்ணன் அவர்களுடன் இணைந்து குழந்தை கவிஞர் கலை-
இலக்கிய பெருவிழாக்களை 14 ஆண்டுகளாக சிறப்புடன் நடத்தி
வளரும் குழந்தை எழுத்தாளர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும்
அளித்து வருவது பெரிதும் குறிப்பிடத்தக்கதாகும்.
மூன்று முதல் எட்டு வயது குழந்தைகளுக்கு ''மலரும்
மொட்டுக்கள்'', ஒன்பது முதல் பதினோறு வயதினருக்கு ''வளரும்
பூக்கள்'', பனிரெண்டு முதல் பதினாறு வயதினருக்கு ''மணக்கும்
பூக்கள்'' ஆகிய பாடல் நூல்களை பிரும்மாண்டமான சிறப்பு
விழாவில் இந்திய நிதியமைச்சர் திரு. ப. சிதம்பரம்
வெளியிட அவரது பேத்தி அதிதி நளினி சிதம்பரம் பாடல்
ஒலிப்பேழைகளை பெற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கதாகும்.
தம்மை
ஆளாக்கிய பெருமகனாரும், தம் உறவினருமான பழனியப்பா
பிரதர்ஸ் நிறுவனர் சேவா ரத்தினம் செ.மெ. பழனியப்ப
செட்டியார் அவர்களைப் பற்றி வரலாற்று நூல் ஒன்றை 'வானம்
வசப்படும்'' என்ற தலைப்பில் எழுதி வெளியிட்டுள்ளார்
கவிஞர் செல்ல கணபதி. 'வானம் வசப்படும்'
தன்னம்பிக்கையூட்டும் தரமான நூல் என வானளாவ
போற்றப்படுவது குறிப்பிடத்தக்கது.
தம் தந்தையார் செல்லப்பா , மகன் செல்லப்பன்
ஆகியோரின் நினைவாக ''செல்லப்பா - செல்லப்பன்'' நினைவு
அறக்கட்டளை ஒன்றை நிறுவி அதன் மூலம் ஆண்டுதோறும்
குழந்தை இலக்கிய வளர்ச்சிக்கு உதவி வருகிறார்.
குழந்தை எழுத்தாளர் சங்க புரவலராக, கோவை வள்ளியப்பா
இலக்கிய வட்ட அமைப்பாளராக, கோவை புத்தக வணிகர் சங்கத்
தலைவராக, கண்டனூர் பேரூராட்சி தலைவராக, கோவை அகில
இந்திய வானொலி ஆலோசகராக இவருடைய அரும்பணிகள்
போற்றத்தக்கவை.
பச்சையப்பன்
கல்லூரி முதுநிலை பட்டதாரி. அறுபத்தாறு வயதிலும்
ஆர்வமிகு சுறுசுறுப்புடன் அயராது செயலாற்றும் அற்புத
இளைஞர் இவர்.
தமது எழுத்தாற்றலை, கவியாற்றலை, சிந்தனையாற்றலை,
செயலாற்றலை குழந்தை இலக்கிய வளர்ச்சிக்கென்றே வாழ்நாள்
முழுதும் தம்மை அர்பணித்து அரும்பெரும் தொண்டாற்றும்
இவரை பிரபல எழுத்தாளர் குன்றகுடி பெரியபெருமாள்
குறிப்பிட்டது போல் - திரு. செல்லகணபதி அவர்களை 'குழந்தை
இலக்கியத்தின் கோபுர கலசம்'' என்று அழைப்பது பெரிதும்
பொருத்தமாகும். |