சங்க
இலக்கிய அகப்பாடல் மரபில் குறுந்தொகைக்கு எனத்
தனிசிறப்பு உண்டு. குறுந்தொகையை இன்றைய நிலையில் தமிழ்
மக்கள் அனைவரும் அறிந்து கொள்ளும்விதத்தில் - புரிந்து
கொள்ளும் வகையில் அதன் மூலத்தை, தற்காலத்திற்கேற்றவாறு
நமக்கு தந்துள்ளார் கவிஞர் பிரபாகரபாபு.
பிரபாகரபாபு கவிஞர் மட்டுமல்ல; வங்கிமேலாளரும்கூட.
தமிழ் இலக்கியங்கள் மேல் அவருக்கு ஏற்பட்ட அளவுகடந்த
பற்றும், ஆர்வமுமே அவரின் இத்தகைய முயற்சிக்கு காரணம்.
அடிப்படையில் இவர் எம்.எஸ்ஸி கேமிஸ்ட்ரி பட்டதாரி..
ஆனால் தமிழ் மேல் இவருக்கு இருக்கும் அளவு கடந்த பற்றே
இவருக்கு சங்கஇலக்கியத்தின் பத்துப்பாட்டுக்களின் மேல்
அதிக ஆர்வத்தை ஏற்படுத்தியது. அதன் விளைவே இத்தகைய
சீரிய தமிழ்பணி..
''எழுத்து பல ஆண்டுகளாக செய்துகொண்டிருக்கிறேன். என்
பள்ளிக்கூட நாட்களில் இருந்தே எழுதிக் கொண்டிருக்கிறேன்.
பள்ளிக்கூட நாட்களில் மரபு கவிதைகள் எழுதத் தொடங்கினேன்.
அன்று என் மரபு கவிதைகள் பல பள்ளிக்கூட மற்றும்
கல்லூரிகளின் ஆண்டு விழா மலர்களில்
அலங்கரித்திருக்கின்றன. அன்றைய காலக்கட்டத்தில்
கவிதைகள் என்றால் கண்ணதாசன்தான் என்று இருந்தது. கடந்த
80களின் தொடக்கத்தில் இருந்துதான் கவிதைகள் யார்
வேண்டுமானாலும் எழுதலாம் என்ற நிலை வந்தது....'' என்று
கூறத் தொடங்கினார் கவிஞர் பிரபாகரபாபு.
ஆரம்பத்தில் மரபுகவிதைகளை நிறைய எழுதி வந்த இவர்,
புதுகவிதைகளின் வரவிற்கு பின்பு புதுகவிதைகள் அதிகம்
எழுதத் தொடங்கினார். பொதுவாகவே இவருக்கு மரபு கவிதைகள்
மற்றும் புதுகவிதைகளின் மேல் அதிக ஆர்வம் உண்டு.
இவரின்
முதல் புத்தகமான 'அமுத மலர்களில்' சந்தகவிதையையும்,
புதுகவிதைநயும், ஐக்கூவும் சமவிகிதத்தில் கலந்திருந்தது
குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து 'கவிதை கதிர்கள்'
என்ற தலைப்பில் வெளியான நூலில் அதிகளவில் சாதாரண
புதுகவிதைகளே இடம் பெற்றிருந்தது.
சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஏற்றப்பட்ட
சங்க இலக்கியத்தை தற்காலத்திற்கேற்ற மாதிரி எளிய
முறையில் பிரபாகரபாபு தந்திருக்கிறார். மிகவும்
கடினமாக சங்க இலக்கிய நடையை இந்தளவிற்கு எளிமைப்படுத்தி
தந்திருப்பது சிறப்பு என்றே சொல்லலாம்.
பொதுவாகவே சங்க இலக்கியம் தவிர பிறநூல்களை
எளிமைப்படுத்தி எழுதுவது எளிது. ஆனால் சங்கஇலக்கியம்
என்பது செந்தமிழ் இலக்கியத்தின் சிகரம். அப்படிப்பட்ட
சிறப்புமிக்க சங்கஇலக்கியத்தின் சிறப்பான பத்துப்பாட்டு
நூல்களை வார்ப்பு இலக்கியமாக பிரபாகரபாபு கொடுத்துள்ளது
தமிழுக்கு அவர் ஆற்றிய சிறந்த பணி என்றால் அதுமிகையல்ல.
உங்களது வங்கி பணியின் இடையிலும் எழுத்துப்பணியை
தொடர்ந்து செய்து வருவது எப்படி சாத்தியமாகிறது;
இதற்கென்று தனியாக நேரத்தை ஒதுக்குகிறீர்களா? என்றவுடன்,
''நான் எழுதுவதற்கென்று தனியான நேரம் ஒதுக்கியது
கிடையாது. கிடைக்கின்ற நேரத்தில் என் எழுத்துப் பணியை
செய்து வருகிறேன். என்னுடைய ஒய்வுநேரமே எழுத்துகள்
எழுதும் நேரம்தான். என்னைப் பொறுத்தவரை ஒய்வு என்பது
இன்னொரு வேலை..'' என்று சொல்லி நம்மை அசர வைத்தார்.
அவர் மேலும் கூறுகையில், ''பத்துப்பாட்டு,
குறுந்தொகையை தொடர்ந்து முத்தொள்ளாயிரத்தை வெளியிட்டேன்.
முத்தொள்ளாயிரம் என்பது நேரிடையாக சங்க இலக்கியம் அன்று.
சங்ககாலம் மருவிய ஓர் நூல்..'' என்றார்.
இப்படி எல்லா காலத்தையும் தொட்டு வந்திருக்கும்
கவிஞரின் வார்ப்பிலக்கியம் உண்மையில் புதிய வரலாறு
படைத்திருக்கிறது எனலாம்.
''வார்ப்பிலக்கியம் என்றால் மூலப்பாடல்களை அதன்
பொருள் மாறாமல் எளிமையான வடிவில் அனைவரும் புரிந்து
கொள்ளும்விதத்தில் கொடுப்பது ஆகும். வார்ப்பிலக்கியம்
என்பது ஒரு மொழிப்பெயர்ப்பு இலக்கியம் போல... அது ஒரு
கூடுவிட்டு கூடு பாய்கிற வித்தை. ஆனால் அந்த வித்தையிலே
ஒரு ஈர்ப்பு இருக்க வேண்டும்..'' என்று
வார்ப்பிலக்கியத்தைப் பற்றி அழகாகவும், தெளிவாகவும்
நம்மிடையே விளக்கி கூறினார் பிரபாகரபாபு.
இவரின் வார்ப்பிலக்கியத்தைப் பற்றி முன்னாள்
சட்டப்பேரவை தலைவர் தமிழ்குடிமகன் இப்படி கூறுகிறார் :
''இவரின் வார்ப்பிலக்கியம் உண்மையில் புதிய வரலாறு
படைத்திருக்கிறது என்றால் அதுமிகையல்ல. அந்த புதிய
வரலாறு இன்னும் தொடர வேண்டும். இது வார்ப்பிலக்கியம்
என்றாலும் இது தமிழர்களுக்கு வாய்த்த இலக்கியம்..''
தனது சொந்த கருத்தினையும், கவிதைநயுயும் கலக்காமல்
மூலத்தினை அப்படியே கொஞ்சமும் பொருள் மாற்றாமல்
வார்ப்பிலக்கியத்தில் வடித்துக்காட்ட இவர் மேற்கொண்ட
முயற்சியும், அதில் இவர் பெற்ற வெற்றியும்
குறிப்பிடத்தக்கது.
இன்றைய பரபரப்பான காலத்தில் உங்களின் நூல்களுக்கு
எப்படிப்பட்ட வரவேற்பு மக்களிடையே குறிப்பாக இளம்
தலைமுறையினரிடையே இருக்கின்றன என்றவுடன்,
''இன்றைய இளைய தலைமுறையினர் குறிப்பாக ஆய்வு
மாணவர்கள் இத்தகைய நூல்களை விரும்பி படிக்கின்றனர்.
மேலும் என் புத்தகங்கள் பல கன்னிமாரா நூலகத்தில்
வைக்கப்பட்டுள்ளது. ஆராய்ச்சி மாணவர்களின் ஆய்வுக்
கட்டுரைக்கு இந்த புத்தகங்கள் மிகுந்த உபயோகமாக விளங்கி
வருகிறது. வா.செ. குழந்தைசாமி, சிலம்பொலி செல்லப்பன்,
ஒளவை நடராஜன் போன்ற அறிஞர்கள் என் கவிதை நூல்களை
பலசூழல்களில் பாராட்டியது எனக்கு மேலும் மேலும்
ஊக்கத்தை அளித்து வருகிறது...'' என்கிறார்.
இவரின் பெரும்பாலான புத்தகங்கள் இவரின் தமிழ்கவி
பதிப்பகத்திலேயே அச்சிடப்பட்டு வெளிவந்துள்ளது.
கவிதைகள் மட்டுமல்ல கட்டுரைகளும் எழுதியிருக்கிறார்
பிரபாகரபாபு. ஒளவையாரின் ஆத்திசுடியை எடுத்துக் கொண்டு
அதில் உள்ள ஒவ்வொரு தலைப்பையும் எடுத்துக் கொண்டு
ஒவ்வொரு தலைப்புக்கும் ஒவ்வொரு கட்டுரையை
வெளியிட்டிருக்கிறார்.
தொடர்ந்து கட்டுரைகள் எழுதுவதற்கான முயற்சிகளில்
ஈடுபட்டு வருகிறார். இதனிடையில் மொழிபெயர்ப்பு
ஒன்றையும் செய்திருக்கிறார். Fighting for Peace என்ற
நூலை மொழிபெயர்த்திருக்கிறார்.
இடையிடையே சங்க இலக்கியத்திலிருந்து இளைபாறும்
பொழுதெல்லாம் கட்டுரைகள் எழுதுவது, மொழிப்பெயர்ப்பு
செய்வது என்று இவரது பணிகள் தொடர்கின்றன. ஜப்பான்
மொழியில் வெளிவந்த நூல் ஒன்றை தமிழில்
மொழிபெயர்த்திருக்கிறார். அதற்காக இவர் எடுத்துக்
கொண்ட காலம் 21 நாட்கள் என்பது சிறப்பு.
பொதுச்சேவையிலும் கவிஞர் அதிக அளவில் ஈடுபாடு கொண்டு
விளங்குகிறார். பாவேந்தர் இலக்கிய மையத்தின்
அமைப்பாளராகவும், பாரதி - பாரதிதாசன் இரு
கவிஞர்களுக்கும் ஒரு பைந்தமிழ்ப் பாலமாகவும்
விளங்குகிறார் பிரபாகரபாபு என்றால் அது மிகையல்ல.
கடந்த 1991 ஆம் ஆண்டு கண்ணதாசன் பதிப்பகத்தினரால்
நடத்தப்பட்ட 'வைர வரி கவிஞர்' போட்டியில் கலந்து கொண்டு
வெற்றிப்பெற்றதை பெருமையுடன் நம்மிடையே நினைவுகூர்ந்த
பிரகாரபாபுவிடம் நீங்கள் கவிஞர், எழுத்தாளர்,
மொழிப்பெயர்ப்பாளர் இவற்றில் யாராக இருக்க
விரும்புகிறீர்கள் என்றவுடன் சட்டென்று,
''நான் கவிஞராகவே இருக்க விரும்புகிறேன்..'' என்று
அழுத்தமாக சொன்னார்.
*********
'திருவிளையாடல்' படத்தில் இடம் பெற்ற கொங்குதேர்
வாழ்க்கை என்ற பிரபலமான குறுந்தொகை பாடலுக்கு கவிஞர்
பிரபாகரபாபுவின் எளிமையான வரிகள் இதோ...
மூலப்பாடல்
கொங்குதேர் வாழ்க்கை யஞ்சிறைத் தும்பி
காமஞ் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீ இய நட்பின் மயிலியற்
செறியெயிற் றரிவை கூந்தலின்
நறியவு முளவோநீ யறியும் பூவே.
கவிஞரின் எளிய வரிகளில்..
பூக்களில்
பூந்தாது ஆய்ந்து
உண்டு வாழும்
அழகுச் சிறகுகள் கொண்ட
தும்பியே!
என் மீது கொண்ட
அன்பால்
கண்டதைக் கூறாது - நீ
கண்கூடாய்க் கண்டதைக்
கூறுவாயாக!
நீ கண்ட மலர்களில்-
ஏழ்பிறப்பும்
என்னுடன் கூடும்
நட்பும்
நெருக்கமாய் அழகாய் அமைந்த
வரிசைப் பற்களும் கொண்ட-
இப்பெண்ணின் கூந்தல்போல்
நறுமணம் கொண்ட
பூவும் உண்டோ ? |