தமிழ்
 
 
 
நிம்மதிக்கு எளிய வழிகள் சிந்தனைகள்
டாக்டர் சரஸ்வதி இராமநாதன்  
4. ஏமாளிகளை ஏய்க்கும் கோமாளிகள்!

தூங்குகிறவன் தொடையில் கயிறு திரிப்பவர் உலகில் ஏராளம்! ஏமாந்தால் நம் தலையில் மிளகாய் அரைத்துவிடுவார்கள். எத்தனை விவரமானவர்கள் பேருந்திலும், புகைவண்டியிலும், பெட்டி, பொருள், பணம், நகையைத் தொலைக்கிறார்கள். எத்தனை படித்தவர்கள் எளிதில் ஏமாந்து கோட்டைவிடுகிறார்கள். ஏமாறுகிறவர் இருப்பதால், ஏமாற்றுபவர்கள் எளிதில் பிழைக்கிறார்கள். பல்லைக் காட்டிப் பிச்சை எடுத்து ஏமாற்றுபவர் போலவே, பகட்டைக்காட்டி அதிகாரப்பிச்சை எடுப்பவரும் உலகில் உள்ளனர்.

இருபது சதவிகிதம் வட்டி, ஏழு சதவிகிதம் ஊக்கத்தொகை என்று ஆசைவார்த்தை காட்டி ஏமாற்றி எத்தனை நடுத்தரக் குடும்பங்களை எத்தனை நிதி நிறுவனங்கள் ஏமாற்றின. மாரடைப்பு வந்த மரணித்த அப்பிராணிகளைச் சா(கு)ம்பிராணி களாக்கியவர்கள் மன்னிக்க முடியாத குற்றவாளிகளே. காசு காட்டி ஏமாற்றுபவர் - காவிகட்டி ஏமாற்றுபவர் இப்படி ஏமாற்றுபவர் பலவிதம். கட்டிய கணவனை ஏமாற்றிச் சோரம் போகும் காரிகையர், கட்டிய மனைவிக்குப் பசப்புக் காட்டி ஏமாற்றிவிட்டுப் பிறனில் விழையும் கணவர்கள், நம்பும் பெற்றோரை ஏமாற்றியதாக எண்ணித் தாங்களே ஏமாந்து போகும் பிள்ளைகள், தொழிலாளியை ஏமாற்றிக் கசக்கிப் பிழியும் முதலாளி, முதலாளியை ஏமாற்றும் தொழிலாளி, வாடிக்கையாளரை ஏமாற்றும் வியாபாரி, தொண்டரை ஏமாற்றும் தலைவன் என்று பட்டியல் நீளுமே.

'ஏமாளிகளை ஏய்க்கும் கோமாளிக் கூத்துகள்
எத்தனை எத்தனை பித்துலகத்தில் - அந்தோ
சிரிப்புத்தான் வருகுதய்யா...''

என்று ஒரு பழைய பாடல் உண்டு.

'இனி எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே'
'நாட்டை ஏய்க்கும் கருங்காலிக் கூட்டமே
நாங்கள் நிமிர்ந்துவிட்டால் எடுக்க வேண்டம் ஓட்டமே'

நிமிர்ந்து கொள்ளவும், ஏமாற்றுபவரை எதிர்க்கவும் நல்ல அறிவு, ஆற்றல் நமக்குத் தேவை. ஊரை ஏமாற்றுபவன் என்றுமே உயர்ந்து வாழ முடியாது. இறைவன் என்ற நீதிபதியின் தீர்ப்பு சத்தியமானது. ஏமாற்றிச் சேர்ப்பவன் பொருள் எப்படிப் போகும் தெரியுமா? பச்சை மண்குடத்தில் வைக்கப்பட்ட நீர் தானும் கரைந்து, குடத்தையும் கரைத்து, இடத்தையும் சேறாக்கதல் போல, ஏமாற்று வித்தையால் வரும் பொருள் உன்னிடம் உள்ளதையும் சேர்த்துக் கரைத்துவிட்டுப் போய்விடும் என்று எச்சரிக்கிறார் - அறம் பாடவந்த ஆசான் வள்ளுவர்.

எனக்குத் தெரிய, மற்றவர் பணக்கட்டுக்களை எண்ணி எண்ணி வைத்து மகிழ்ந்த நிதிநிறுவனத்தார் சிலர், கம்பி எண்ணி எண்ணிக் கலங்குகிறார்கள்.

பக்தர்களை ஏமாற்றி 'லிங்கம்' எடுத்தவர்கள் 'ஜாமீன்' எடுக்க வழியில்லாமல் திகைக்கிறார்கள்.

தொண்டர் வாயில், வயிற்றில் அடித்தவர் பலர் தலையில் அடிபட்டுக் கதறுகிறார்கள்.

''ஊருக்குத் தேவை சில சாட்சி
உனக்கத் தேவை மனச்சாட்சி' ஆகவே,

'ஏமாறாதே ஏமாற்றாதே!' 'சலத்தில் பொருள் சேர்க்காதே' ஊமைகள் ஏங்கவும் உண்மைகள் தூங்கவும் இறைவன் பொறுத்திருக்க மாட்டான். முன்பெல்லாம் அடுத்த பிறவியில் பயன் என்றார்கள். கலியில் உடனுக்குடனே பலன் கிடைத்துவிடும். பிறரை ஏமாற்றாமல் இருந்தால் நெஞ்சுக்கு நித்தமும் நிம்மதிதான்.

தொகுப்பு Published on 25th Feb, 2008
 

மேலும்