தமிழ்
  Site Web Yahoo! India Search
 
 
 
நிம்மதிக்கு எளிய வழிகள் சிந்தனைகள்
டாக்டர் சரஸ்வதி இராமநாதன்  
3. இருக்க வேண்டிய - கூடாத ஆமைகள்

'ஆமை புகுந்த வீடு உருப்படாது' என்பார்கள் முன்னோர். சீனர்களோ ஆமையை அதிர்ஷ்டத்திற்குரியது என்று வளர்க்கிறார்கள். எந்த ஆமை கூடாதது? ஆமைகளில் இருவகை அதில் எந்த ஆமை இருக்க வேண்டுவது? 'கல்லாமை, இல்லாமை கூடாதது'. அழுக்காறாமை, பொய்யாமை பிறனில் விழையாமை போன்ற ஆமைகள் இருக்க வேண்டியது!

வள்ளுவர் மிக எரிச்சல் படும்போது 'பாவி' என்ற சொல்லைப் பயன்படுத்துவார். வறுமை என்ற ஒரு பாவி. 'அழுக்காது என ஒரு பாவி' என்றார். அந்தப் பாவி நம் செல்வத்தை அழிக்கும்; நரகத்தில் நம்மைச் சேர்க்கும்!.

இந்த (ஆமை) எப்படியோ நம் மனத்தில் வந்து புகுந்துவிடுகிறது. நம் வீட்டில் மின்சாரம் தடைப்பட்டு எதிர்வீட்டில் விளக்கு எரிந்தால் பொறாமை. நம் பிள்ளை தேர்வில் தோற்று எதிர்வீட்டுப்பிள்ளை தேர்ச்சி பெற்றால் பொறாமை. அண்ணனுக்கு ஆண் குழந்தைகளாகப் பிறந்து தப்பிக்குப் பெண் குழந்தைகளாகப் பிறந்தால் அதற்கும் பொறாமை! நாம் வயதான காலத்தில்கூடச் சுறுசுறுப்பாக வேலை செய்வதைப் பார்த்தால், இளமையிலேயே தளர்ச்சியிருப்பவருக்குப் பொறாமை! இப்படி பொறாமையின் வரிசை நீளும். இவற்றைக்கூட சகித்துக் கொள்ளலாம்.

ஆனால் காரணமில்லாத சில பொறாமைகள் உள்ளன! அவற்றைச் சகிக்க முடியாது.

'ஏன் ஸார்! இவர் அமெரிக்க ஜனாதிபதியாமே! ஏனம்மா! இவர் பலகோடி சொத்துக்கு அதிபதியாமே!

ஆகிய இப்படிப்பட்ட பொறாமைகளை எப்படி ஜீரணிப்பது? சிரிக்கத்தான் தோன்றும்! அமெரிக்க ஜனாதிபதி இருக்கும் இடத்திற்கு இவர் போட்டியிடப் போகிறாரா? இந்த அம்மா கதாநாயகியின் இடத்தைப் பிடிக்கப் போகிறாரா? ஏன் இந்தக் காரணமற்ற பொறாமை? இதனால் யாருக்கு லாபம்! வீணாகப் பேசி தொண்டைத்஡ன் புண்ணாகும்! நெஞ்சம் இருண்டு போவதால் முகமும இருளும்! எரிச்சலைத் தவிர நாம் காணும் பலன் என்ன? கபீர்தாசர் சொல்கிறார் :

தான் தான் மே விகாஹை
கான் கான் கா நாம்!

ஒவ்வொரு தானியத்திலும் அதைச் சாப்பிடப் பிறந்தவன் பெயர் எழுதப்பட்டுள்ளதாம். இறைவன் வகுத்தது எதுவோ அதுவே நாம் அனுபவிக்கப் போகிற பொருள்.

'வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது!''

என்ற குறளை ஒவ்வொரு வீட்டு வாசலிலும், ஒவ்வொரு மனிதனின் இதயத்திலும் எழுதச் சொல்வோம்! உடலெல்லாம விளக்கெண்ணெய் பூசிக் கொண்டு ஆற்று மணலில் விழுந்து புரண்டாலும் ஒட்டுவதுதான் ஒட்டும்! 'வருந்தி அழைத்தாலும் வாராத வாரா; பொருந்துவன போமின் என்றால் போகா!''

ஆகவே பொறாமை என்ற 'ஆமை' புகாமல் பார்த்துக் கொள்வது அறிவுடைமை!

அதுவே நித்தம் நிம்மதி தரும்!

தொடரும்...

தொகுப்பு Published on 23rd Feb, 2008
 

மேலும்