தமிழ்
  Site Web Yahoo! India Search
 
 
 
நிம்மதிக்கு எளிய வழிகள் சிந்தனைகள்
டாக்டர் சரஸ்வதி இராமநாதன்  
2. ஏமாற்றத்தின் தாய் எதிர்பார்ப்பே!

'எங்கே நிம்மதி ? எங்கே நிம்மதி?
அங்கே என்கோர் இடம் வேண்டும்!

கவியரசரின் அற்புதமான பாடல் வரிகள் இது ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வீட்டிலும், ஏன் ஒவ்வொரு இதயத்திலும் ஏதாவது ஒரு நிமிடத்தில் எதிரொலித்துக்கொண்டே இருக்கும். 'நிம்மதி'யை அவ்வளவு பெரிய பொக்கிஷம் என்று தேடுகிறோமே - அதை இழக்க நாம் ஏதாவது ஒரு வகையில் காரணமாக இருக்கிறோம் என்பதை மறக்கலாமா? அதில் கொஞ்சம் கவனம் செலுத்தினால் நல்லது.

ஆண்களைவிடப் பெண்களாகிய நாம் சீக்கிரம் தளர்ந்துவிடுகிறோம். (உடல் ரீதியாகவும், உள்ளரீதியாகவும்) கவலை, கோபம், வெறுப்பு, சலிப்பு ஆகியன சீக்கிரம் நம்மைத் தொற்றிக்கொண்டு விடுகின்றன. எதிர்பார்ப்புகள் அதிகமாவதால் நமக்கு ஏமாற்றங்களும், ஏக்கங்களும் அதிகமாகின்றன. பல்லாயிரம் பெண்களை நம் நாட்டிலும், பிற நாடுகளிலும் பார்த்துக் பழகியவள் நான். 'சத்தியமா நான் சொல்லுறதெல்லாம் தத்துவம். தத்துவமா நான் சொல்லுறதெல்லாம் சத்தியம்' என்ற கண்ணதாசன் வரிகளை நானும் சொல்கிறேன்.

பள்ளி, ஆசிரியர்கள் (ஆடவர்களும்) தன்னிடம் கற்ற மாணவர்கள் தம்மை மதிக்காமல் போனாலும் பெரிதுபடுத்துவதில்லை. என் சக ஆசிரியைகளில் சிலர் எப்போது பார்த்தாலும் புலம்புவதைக் கேட்டிருக்கிறேன். 'இவளைப் பாஸ் பண்ண வைக்க எத்தனை முயற்சி செய்தேன். எத்தனை பாடுபட்டு சொல்லித் தந்தேன். இப்ப என்னைப் பார்த்தா 'விஷ்' (வணக்கம்) பண்ணுவதில்லை.எழுந்துகூட நிற்பதில்லை. எங்கு பார்த்தாலும் கண்டு கொள்வதில்லை' என்று வேதனையும் வெறுப்பும் கலந்த குரலில் ஆசிரியர்கள் அறையே கதிகலங்கம்படி கத்துவார்கள்.

இன்னும் சிலர், 'அம்மா நான் பார்க்க அவன் நடுத்தெருவில் அலைந்து வேலைக்காகப் படிப்படியாய் ஏறி, இறங்கி அவதிப்பட்டான். இப்போ நான் அவனை ஒரு நல்ல வேலையில் அமர்த்தி கைநிறைய காசு சம்பாதிக்க வெச்சேன்! அவன் என்னன்னா என்னைப் பார்த்து ஒரு 'தேங்க்ஸ்'கூடச் சொல்லவில்லை. சம்பளம் வாங்கி ஒரு ஸ்வீட்கூட தரலை' என்று தவிப்பார்கள்.

ஒரு பேராசிரியர், பிரபல பேச்சாளரை, 'இவ என்ன தெரிஞ்சவ? இவளுக்குச் சொல்லித் தந்து, மேடை ஏற்றி, புகழும், பொருளும் அடைய வைத்தவன் நான்.. இப்ப அவள் என்னை மதிக்கிறாளா? பணிவாகவாவது நடக்கிறாளா? எல்லாம் என் நேரம், காலம்! என்று புலம்பி ரத்தக்கொதிப்பு ஏறிப்போகிறது.

ஒரு மாமி, 'இவனுக்கு டைப்பாய்டு வந்தபோது தாலிச் செயினை அடகு வெச்சுப் பொழைக்க வெச்சேன்! இன்னிக்கு 'என்னடீங்கறான்' என்று அழுது கண் சிவக்கிறாள்.

ஒரு ஆச்சி, தன் மகனைப் படிக்க வைத்து, மருமகளம் வந்த பின்,

கண்ணா வளர்த்த புள்ளே
காலேசில் படிச்சு வந்து
மண்ணாளும் ராசாபோல்
வளர்ந்தாண்டி என் வீட்டில்..
தலையணை மந்திரம் போட்டா வந்தவ
ஊட்டி வளர்த்தபிள்ளை உபகாரம் இல்லையே!

என்று அங்கலாய்கிறாள்.

இந்த அத்தனைபேர் வேதனை, வெறுப்பு, சலிப்பு, ஏக்கம் இவை அனைத்திற்கும் காரணமே 'எதிர்பார்ப்பு'தான். மாணவன் மாணவி தன்னை மதித்து வணங்க வேண்டும் என்று ஆசிரியையும், தன்னால் வாழ்வில் உயர்த்தப்பட்டவர் தன்னை என்று நன்றி பாரட்ட வேண்டும் என்று உதவி செய்தவரும், தான் வளர்த்த பிள்ளை தன்னை அன்பு செலுத்திக் காக்கக் கடமைப்பட்டவன் என்று தாய்மாரும் எதிர்பார்க்கிறார்கள். இவர்களின் எதிர்பார்ப்பு நியாயம்தான்! ஆனால் இவர்களது நியாயமான எதிர்பார்ப்பே இவர்களுக்கு ஏக்கமும் ஏமாற்றமும் தந்து நிம்மதியைக் குலைக்கிறதே!

'நாம் ஏணி, தோணி; மெழுகுவர்த்தி - நம் தலையில் எழுதப்பட்டது அந்த உயர்ந்த நிலைதான்!' என்று அமைதியும் ஆனந்தமும் கொள்ளுங்கள்.

அவர்கள் தங்கள் கடமையான நன்றியைச் சொல்லால், செயலால் காட்டாமற் போனால் அது அவர்கள் பாவம். நீங்கள் யார் அதை எதிர்பார்க்க! 'நன்னயம் செய்து விடல்' என்ற வள்ளுவன் வேண்டுகோளை நினைத்துப் பாருங்கள். நன்மை செய்துவிட்டோ ம் என்ற அந்த நினைப்பைக்கூட மறந்துவிடுங்கள்.

'நானிருக்கு நிலையில் உன்னை என்ன கேட்பேன் - தினம்
நன்மை செய்து துன்பம் வாங்கம் உள்ளம் கேட்பேன்'

கவியரசர் கேட்ட மனப்பக்குவம் நமக்கு வரவேண்டும்.

'பக்தி செய்து பிழைக்கச் சொன்னான்
பலனைக் கருதாது உழைக்கச் சொன்னான்' கண்ணன்
என்றார் பாரதி.

'கர்மண்யேவ அதிகாரஸ்தே' - கடமையைச் செய்; பலனை எதிர்பார்த்து, அது கிடைக்காமல் போனால் ஏமாற்றமும், ஏக்கமும் வரும். நிம்மதி குலையும்! நித்தமும் நிம்மதி பெற எதிர்பார்ப்புகளைக் குறைத்துக் கொள்ளுங்கள்!

தொடரும்...

தொகுப்பு Published on 24th Jan, 2008
 

மேலும்