தமிழ்
  Site Web Yahoo! India Search
 
 
 
டான்ஸ் மாஸ்டர் ரகுராம் அவர்களுடன் சந்திப்பு... சினிமா நேர்காணல்
சந்திப்பு : கேடிஸ்ரீ  
'பல நடனபாணிகள் வருவது நல்லதுதான்...'
- நடன இயக்குநர் ரகுராம்

1000 படங்களுக்கு மேல் நடன இயக்குநராக பணியாற்றிவர் நடன இயக்குநர் எஸ். ரகுராம். இவரின் தாத்தா கே. சுப்பிரமணியம் 40க்கும் மேற்பட்ட திரைப்படங்களை தயாரித்து அளித்தவர். கே. சுப்பிரமணியம் தியாகராஜ பாகவதர், பி.யு சின்னப்பா என்று அன்றைய சூப்பர் ஸ்டார்களை தமிழ் திரையுலகிற்கு அறிமுகம் செய்த பெருமை பெற்றவர். புகழ் பெற்ற பரதக்கலைஞர் பத்மாசுப்பிரமணியம் ரகுராம் தயா஡ரின் சகோதரி.

நடன இயக்குநர் ரகுராம் நடன ஒருங்கிணைப்பாளர் மட்டுமல்ல, பாரம்பரிய நடனத்தில் தேர்ச்சி பெற்றவரும்கூட. தயாரிப்பாளர், திரைப்பட இயக்குநர் மற்றும் நடிகர் என்று பன்முகம் கொண்டு விளங்கும் ரகுராம் தற்போது கமல்ஹாசனின் 'தசாவதாரம்' படத்தில் முக்கிய பாத்திரம் ஒன்றில் நடித்திருக்கிறார். மோகன்லால் நடிக்கும் மலையாள படமொன்றிற்கு நடன இயக்குநராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் சென்னை மகாலிங்கபுரத்தில் உள்ள அவரது வீட்டில் சென்னை ஆன் லைன் வாசகர்களுக்காக சந்தித்தப் போது நம்முடன் தன் நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.

இதோ அவருடனான உரையாடல்...

உங்களது நடனம் மற்றும் நடன ஆசிரியர்கள் பற்றி...

சிறு வயதில் நாட்டியத்தின் மேல் எனக்கு ஓர் அலாதி பிரியம். நடனம் கற்றுக் கொள்ள ஆசைப்பட்டேன். என் ஆசையை என் வீட்டாரும் தடுக்கவில்லை. 1954ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன். முதன் முதலாக கதக்களி நடனத்தை மறைந்த கலைஞர் குரு கோபிநாத் மற்றும் தங்கமணி கோபிநாத் அவர்களிடம் கற்றுக் கொள்ளத் தொடங்கினேன். அவர்கள்தான் நடனத்தில் என் முதல் குரு. அதுபோல் திருமதி கே.ஜே. சரசா அவர்களிடம் பரதநாட்டியம் முறையாக கற்றுக் கொண்டேன். சுமார் 6 வருடங்கள் பயிற்சிக்கு பிறகு 1960ல் என்னுடைய அரங்கேற்றம் நடந்தது.

உங்கள் நடன நிகழ்ச்சிகள்...

அரங்கேற்றத்திற்கு பிறகு நிறைய நடன நிகழ்ச்சிகளை மேடையில் செய்திருக்கிறேன். லலிதா, பத்மினி, ராகினி ஆகியோருடன் இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களில் பல நிகழ்ச்சிகளை செய்திருக்கிறேன். அதுபோல் பரதநாட்டிய கலைஞர் பத்மா சுப்ரமணியம் அவர்களுடன் இணைந்து நடன நிகழ்ச்சிகள் நிறைய கொடுத்திருக்கிறேன். 'கிருஷ்ணா துலாபாரம்', 'வள்ளி திருமணம்', 'மீனாட்சி கல்யாணம்' என்ற நாட்டிய நாடகங்களை பல்வேறு சபாக்களில் நிகழ்த்தியிருக்கிறேன்.

மறைந்த தண்டபாணி பிள்ளை அவர்கள் இயற்றிய 'காவேரி தந்த கலைச்செல்வி' என்ற நாட்டிய நாடகத்தை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களுடன் இணைந்து வழங்கியிருக்கிறேன். இதற்கிடையில் நான் தனியாகவே நாட்டிய நிகழ்ச்சிகள் கொடுத்திருக்கிறேன். பரதநாட்டியத்திலும் சரி, கதக்களி நடனத்திலும் சரி நிறைய நிகழ்ச்சிகள் கொடுத்திருக்கிறேன்.

நடிகர் ரகுராம் பற்றி...

சின்ன வயதிலேயே நான் திரைப்படத்திற்கு நடிக்க வந்துவிட்டேன்.. 60களில் புகழ்பெற்று விளங்கிய இயக்குநர்களில் முக்கியமானவர் பீம்சிங். அவரது இயக்கத்தில் சிவாஜிகணேசன் மற்றும் செளகார் ஜானகி நடித்த 'படிக்காத மேதை' படத்தில் நடிப்பதற்கு எனக்கு முதன்முதலாக வாய்ப்பு வந்தது. அதுதான் என் முதல் படம். 1960ல் 'படிக்காத மேதை' திரையிடப்பட்டது. இதற்குப் பிறகு நிறைய படவாய்ப்புகள் என்னைத் தேடி வந்தன. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் 'அருணகிரிநாதர்', 'திருமலை தெய்வம்', 'பொற்சிலை', 'எல்லோரும் நல்லவரே', என்று நிறைய படங்களில் நடித்திருக்கிறேன்.சிவாஜி அவர்களும், மனோரமா அவர்களும் நடித்த 'ஞானபறவை' படத்தில் நடித்திருக்கிறேன். தமிழ் மட்டுமல்ல கன்னடத்தில்கூட நடித்திருக்கிறேன். டாக்டர் ராஜ்குமாரின் 'பக்தகும்பரா' படத்தில் நடித்திருக்கிறேன்.

பின்னணி பாடகர் டி.எம். செளந்தரராஜன் அவர்களுடன் 'அருணகிரிநாதர்' படத்தில் குழந்தை முருகனாக நடித்தப் பிறகு நிறைய தெய்வ வேடங்களில் நடிக்க எனக்கு வாய்ப்புகள் தேடி வந்தன. நடிப்பை நான் என் தொழிலாக எடுத்துக் கொள்ளவில்லை. என்னுடைய நெருங்கிய நண்பர்களுக்காக நடித்திருக்கிறேன். சிறு வயதில் இருந்தே நானும் கமல்ஹாசனும் சிறந்த நண்பர்களாக பழகி வருகிறோம். கமலின் பல படங்களில் நான் நடித்திருக்கிறேன். அவரின் ஓளவை சண்முகியில் டான்ஸ் மாஸ்டர் ரோலில் நடித்திருக்கிறேன்.

நடன உதவியாளராக பணியாற்றிய அனுபவம்...

எனக்கு நடனம் மீதுதான் ஆசை அதிகம். அதற்கான வாய்ப்புகளை எதிர்பார்த்துக் கொண்டிருந்த சமயத்தில் பிரபல நடன இயக்குநர் ஏ.கே. சோப்ரா அவர்களிடம் உதவியாளராக பணியாற்றுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களும், சரோஜாதேவி அவர்களும் நடித்த 'அன்போ வா' படத்திற்கு சோப்ரா மாஸ்டர்தான் நடன இயக்குநர். ஏவிஎம் நிறுவனம் தயாரிப்பில் உருவானது அந்தப் படம். சோப்ரா மாஸ்டருடன் பணியாற்றுவதற்கு வாய்ப்பு கிடைத்தது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. 'அன்போ வா' மிகப் பெரிய வெற்றியை பெற்றது. அதனால் சோப்ரா மாஸ்டருடன் தொடர்ந்து பல படங்களில் உதவியாளராக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. நடனத்தில் பல்வேறு நுணுக்கங்கள் சோப்ரா மாஸ்டர் மூலம் தெரிந்து கொள்ள முடிந்தது. பிறகு எனக்கு தங்கப்பன் மாஸ்டருடன் பணியாற்றவும் வாய்ப்பு கிடைத்தது. இப்படி உதவியாளராக சுமார் 500 படங்களுக்கு மேல் பணியாற்றியிருக்கிறேன். தமிழ் படங்கள் மட்டும் அல்ல இந்தியாவில் உள்ள பலமொழி படங்களுக்கு பணியாற்றியிருக்கிறேன்.

நடன இயக்குநராக அனுபவம்...

சோப்ரா மாஸ்டர், தங்கப்பன் மாஸ்டர் போன்றவர்களிடம் பணியாற்றி கொண்டிருக்கும் போதே நடனத்தின் பல்வேறு நுணுக்கங்களை நான் அறிந்து கொண்டேன். 1974 என்று நினைக்கிறேன். அப்போதுதான் நான் தனியாக நடன இயக்குநராக பணியாற்றியது. 'கண்ணே வயசு (Kanne Vayasu) என்ற தெலுங்கு படம்தான் நான் முதன்முதலாக தனியாக நடனம் அமைத்தது. அதற்குப் பிறகு இன்று வரை சுமார் 1000 படத்திற்கு மேல் நான் நடன இயக்குநராக பணியாற்றியிருக்கிறேன். தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் என்று பல மொழி படங்களுக்கு நடன இயக்குநராக பணியாற்றியிருக்கிறேன். முன்னணி நட்சத்திரங்களான சிவாஜி கணேசன், கமல்ஹாசன், முகம்மது, மிதுன்சக்கரவர்த்தி, அமிதாப் பச்சன், ரஜினிகாந்த் என்று பலரை இயக்கியிருக்கிறேன். தற்போது மோகன்லால் நடிக்கும் மலையாள படம் ஒன்றிற்கு நடன இயக்குநராக பணியாற்றி வருகிறேன்.

நடிப்பு, நடனம் மட்டும்தானா... படத்தயாரிப்புகளில் ஈடுபட்டதுண்டா..?

ஒரு பக்கம் நடிப்பு, நடனம் என்று இருந்தாலும் தமிழ், மலையாளம், பெங்காலி, கன்னட படங்கள் சிலவற்றை தயாரித்து அளித்திருக்கிறேன். கமல்ஹாசன் மற்றும் சீமா நடிப்பில் 'மற்றுவின் சட்டங்களே' என்ற பெயரில் மலையாள படம் ஒன்றை தயாரித்து இருக்கிறேன். தமிழில் சுகாசினி, ஒய்.ஜி.மகேந்திரன் நடிப்பில் 'உருவங்கள் மாறலாம்' என்ற படத்தை தயாரித்தேன். இந்தப் படம் 1985ல் திரைக்கு வந்தது. கார்த்திக், ஆனந்த்பாபு நடிப்பில் 'விஸ்வநாதன் வேலை வேண்டும்' என்ற படமும் என் தயாரிப்பில் உருவானதே. மிதுன்சக்கரவர்த்தி, ரஜினிகாந்த் நடிப்பில் 'பாக்கிய தேவதா' என்றொரு பெங்காலி படத்தை தயாரித்து அளித்துள்ளேன். இயக்கியும் இருக்கிறேன். பஞ்சாபி, சமஸ்கிருதம் வரை செய்து இருக்கிறேன். மொத்தம் ஐந்து படம் தயாரித்திருக்கிறேன். 3 படம் இயக்கியிருக்கிறேன்.

திரைப்பட உலகில் நீங்கள் சாதித்தது ...?

இன்று நடன இயக்குநர்களாக இருப்பவர்களில் பலர் என்னால் உருவாக்கப்பட்டவர்கள். இன்று எல்லோராலும் கலா மாஸ்டர் என்று சொல்கின்ற கலா, பிருந்தா, கே.எஸ்.குமார், ஜான் பாபு, சிவ சங்கர். சுசித்ரா, சின்னி பிரகாஷ், சங்கர் மற்றும் பிரசன்னா போன்றோரை சொல்லலாம்.

பிலிம்பேர் விருது, நடிகர் சங்கம் மற்றும் தமிழ்நாடு அரசின் விருது எனக்கு 'தேவர் மகன்' படத்தில் பணியாற்றியதற்காக கிடைத்திருக்கிறது. மறைந்த ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி.ராமராவ் அவர்களின் 'விஸ்வாமித்திரர்' படத்தில் பணியாற்றியிருக்கிறேன். மத்திய அரசின் கல்விதுறையின் தயாரிப்பான சமஸ்கிருத மொழி படத்திற்கு பணியாற்றியிருக்கிறேன். இப்படத்திற்காக சமஸ்கிருதத்தை சரவப்பள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களிடம் கற்றுக் கொண்டேன்.

இன்று தொலைக்காட்சிகளில் வரும் நடன நிகழ்ச்சிகள் பற்றி உங்கள் உங்கள் கருத்து...

தொலைக்காட்சியில் நடன நிகழ்ச்சிகள் ஒளிப்பரப்புவது மூலம் நாட்டியத்திற்கு ஒரு முன்னுரிமை கொடுப்பது மனசுக்கு சந்தோஷமாகத்தான் இருக்கிறது. ஆனால் அதே சமயத்தில் இதுதான் நாட்டியம் என்ற தியரி வந்துவிடுவோ என்று ஒரு பயமும் வருகிறது. இதுதான் நாட்டியம் என்று வந்துவிட்டால்.. அப்போது நாங்கள் கற்றுக் கொண்ட சாஸ்திரிய நடனங்கள் எல்லாம் என்ன ஆகிவிடுமோ என்ற கவலை என்னுள் தோன்றுகிறது. அப்படியானால் எங்கள் குருக்கள் எல்லாம் குருக்களே இல்லை என்ற நிலை வந்துவிடுமோ என்ற பயமும் கூடவே வருகிறது.

இன்று நாட்டியத்தின் அடிப்படை தெரியாமல் ஏதோ ஏதோ செய்து கொண்டு வருகிறார்கள். நாட்டியம் என்பது அற்புதமான கலை. நாட்டிய கலையின் அடிப்படைத் தெரிந்து கொண்டு - அதன் ஆழம் புரிந்து கொண்டு ஆடினால் நன்றாக இருக்கும். அன்று நாங்கள் நடனம் ஆட வந்த போது தொலைக்காட்சி ஊடகங்கள் இல்லை. நாங்கள் எதையும் பார்த்துக் கற்றுக் கொள்ள முடியாது. குருவை தேடி சென்றுதான் கற்றுக் கொள்ள வேண்டும். அதுபோல் எங்கள் திறமையை வெளிகொணர்வதற்கு யாருடைய உதவியும் கிடையாது. நிறைய பயிற்சி எடுத்து.பல குருக்களிடம் கற்றுத்தான் முன்னுக்கு வரமுடியும். ஆனால் இன்று உள்ள இளம் நடன கலைஞர்களுக்கு அவர்கள் திறமையை வெளிகொணர அதிகளவில் வாய்ப்புகள் இருக்கின்றன. இன்றைய இளம் நடன கலைஞர்கள் நன்றாக செய்கிறார்கள். ஆனால் அவர்களிடம் உள்ள ஒரு குறை என்னவென்றால் அவர்கள் செய்யும் தப்பை தப்பு என்று அவர்கள் அறியாமலே செய்து கொண்டிருப்பதுதான். இதற்கு காரணம் அவர்கள் அடிப்படையை கற்றுக் கொள்ளவில்லை என்பதுதான். இன்று ஒரு படத்தில் ஒரு நடன அசைவு வெற்றி அடைந்தால் அதன் பின்னாலயே சென்றுவிடுகிறார்கள். அந்த நடன அசைவே எல்லாப் படங்களிலும் வந்துக் கொண்டிருக்கிறது. இது நல்ல வளர்ச்சியல்ல என்று நான் நினைக்கிறேன்.

ஆனால் இங்கு ஒன்றை குறிப்பிட வேண்டும் நிறைய ஊடகங்கள் வந்தப்பிறகு இளையதலைமுறையினர் ரொம்பவும் நன்றாகவே ஆடுகிறார்கள் என்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். இன்றைய இளைஞர்கள் பிரமாதமாக ஆடுகிறார்கள். அன்று கமல்ஹாசன் ஆட வருகின்ற போது அன்றைக்கு இருந்த மக்களை இதுதான் நடனம் என்று சொல்லும்படி வைத்தார். அவரைப் அப்படி நாங்கள் செய்ய வைத்தோம். அவருக்குப் பிறகு பிரபுதேவா காலத்தில் அவரது நடனத்தை பார்த்த இளைஞர்கள் நிறைய பேர் ஆட ஆரம்பித்தார்கள். இன்று ஏகப்பட்ட பேர் பல தொலைக்காட்சிகளில் தங்கள் நடன திறமையை வெளி கொண்டு வருவதைப் பார்க்கின்ற போது ஆச்சர்யமாகவும், அதிசயமாகவும் இருக்கிறது. ஆனால் பலர் நடனத்தின் அடிப்படை தெரியாமல் ஆடுவதுதான் கொஞ்சம் வருத்தமளிக்கிறது. அடிப்படை தெரியாமல் ஆடுகின்ற போது விரசமாக போகிறது நடனம். இதனைத்தான் நான் முறைப்படுத்த வேண்டும் என்று சொல்கிறேன்.

நடனம் கற்றுக் கொள்ள விரும்பும் இன்றைய இளைஞர்களுக்கு உங்கள் ஆலோசனை...?

முறையான நடனம் கற்றுக் கொடுப்பதற்கு எங்களைப் போன்ற நடனம் தெரிந்த கலைஞர்கள் இருக்கின்றோம். எங்களிடம் அவர்கள் தங்கள் சந்தேகங்களை கேட்டு தீர்த்துக் கொள்ளலாம். அவர்களுக்கு நடனத்தில் பயிற்சி அளிக்க நாங்கள் இருக்கிறோம். எங்களை தேடி வாருங்கள்.ஆனால் இளைஞர்கள் எங்களைப் போன்றவர்களைத் தேடி வருவதில்லை. எல்லோரும் பிசியாக இருக்கிறார்கள்.

'கலாஸ்கலாலயா' என்று என்னுடைய மாணவர்களின் நடன பள்ளியின் மூலமாக நிறைய பேர் கற்றுக் கொள்கிறார்கள். ஆனால் அதற்கும் எனக்கும் நேரிடையான தொடர்பு கிடையாது. என்னிடம் நடனம் கற்றுக் கொள்ள விரும்புபவர்களுக்கு நடனத்தை கற்றுக் கொள்ள என் வீடு இருக்கிறது. யாரும் எப்போதும் வரலாம்..? நடனம் கற்றுக் கொண்டு செல்லலாம்..? 24 மணிநேரமும் அவர்களுக்காக நான் நடனம் கற்றுத் தர காத்திருக்கிறேன். விருப்பப்பட்டவர்கள் என்னைத் தேடி வரலாம்.

எம்.ஜி.ஆர், சிவாஜி முதல் இன்றைய ரஜினி, கமல் வரை நிறைய நடிக, நடிகையர்களை இயக்கியுள்ளீர்கள்... அதைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்கள்...

எம்ஜி.ஆர் நடித்த 'குடியிருந்த கோயில்' படத்திற்கு சோப்ரா மாஸ்டர்தான் நடன இயக்குநராக பணியாற்றினார். அந்தப் படத்தில் அவருக்கு நான் உதவியாளராக பணியாற்றினேன். படத்தில் வரும் 'ஆடலுடன் பாடலைக் கேட்டு' பாடலுக்கு எம்.ஜி.ஆரும், எல். விஜயலட்சுமியும் ஆட வேண்டும். எல். விஜயலட்சுமி சிறந்த நடனகலைஞர். அவரின் ஆட்டத்திற்கு ஈடாக ஆட வேண்டும் என்று எம்.ஜி.ஆர் நினைத்தார். அதனால் அவர் ஒருவாரக் காலம் தினமும் காலையில் சோப்ரா மாஸ்டரிடம் நடன பயிற்சி எடுத்துக் கொண்டார். அது பஞ்சாபி நடனம். அந்தளவிற்கு தொழில் மேல் அவருக்கு அப்படி ஒரு ஈடுபாடு. படப்பிடிப்பின் போது மிக அற்புதமாக அந்த நடனத்தை எம்.ஜி.ஆர் அவர்கள் ஆடினார்கள்.

நடிகர் திலகம் சிவாஜிகணேசனும் அப்படித்தான். படப்பிடிப்புக்கு முன்பு பயிற்சி எடுத்துக் கொள்வார். 'புன்னகை மன்னன்' படத்தில் வரும் 'காலகாலமாய்' பாடலுக்காக கமல்ஹாசன் ஒரு வாரம் பயிற்சி எடுத்துக் கொண்டார். ஒரு வாரம் பயிற்சிக்கு பின்பே அந்த பாடலுக்கான படப்பிடிப்பு நடந்தது. தொழில் மேல் பற்று, ஈடுபாடு, முயற்சி இருந்தால் சிறந்து விளங்கலாம் என்பதற்கு எம்.ஜி.ஆர். , சிவாஜி, கமல்ஹசான் போன்றவர்கள் எல்லாம் ஓர் எடுத்துக்காட்டு.

இன்று திரைப்படங்களில் புது புது நடன இயக்குநர்கள் வருகை பற்றி...

இது ஆரோக்கியமான விஷயம்தான். நான் ஒருவரே செய்து கொண்டிருந்தால் ஒரே பாணிதான் இருக்கும். பல நடனபாணிகள் வருவது நல்லதுதான். ஆனால் அந்த பாணிகளை முறைப்படுத்த வேண்டும் என்பதுதான் என் விருப்பம். அன்று நான் 12 வருடம் , 20 வருடம் பயிற்சி எடுத்தப் பிறகுதான் நடன இயக்குநராக வந்தேன். சோப்ரா மாஸ்டர், தங்கப்பன் மாஸ்டர் போன்ற பெரிய பெரிய மாஸ்டர்களிடம் உதவியாளராக பணிப்புரிந்த அனுபவங்கள் எனக்கு நிறைய உண்டு. அவர்களுடன் சுமார் 500 படங்கள் செய்திருக்கிறேன். ஆனால் இப்போது நான்கு குரூப் நடனங்கள் ஆடியவுடனே மாஸ்டராகிவிடுகிறார்கள். இப்படி நடன மாஸ்டர்களாக வருபவர்களுக்கு நான்கு அல்லது ஐந்து ஸ்டெப்ஸ்தான் தெரியும். அதை வைத்துக் கொண்டு, பல வெளிநாட்டு தொலைக்காட்சிகளில் வரும் நடன அசைவுகளை பார்த்து புதியதாக செய்து கொண்டு வருகிறார்கள். இவர்கள் எல்லாம் கொஞ்சநாட்களிலே காணாமல் போய்விடுகிறார்கள். நாங்கள் எல்லாம் 25 வருடங்களாக நிலைத்து இருக்கிறோம் என்றால் அதற்கு காரணம் முறையான நடன பயிற்சியாகும்.

தற்போது நீங்கள் பணியாற்றி வரும் படங்கள்...

தற்போது நான் நடன இயக்குநராக பணிப்புரிவதை குறைத்துக் கொண்டு விட்டேன். இந்த வருடத்தில் இரண்டு படங்கள் மட்டுமே செய்திருக்கிறேன். மோகன்லால் நடிப்பில் 'பரதேசி' என்ற மலையாளப்படம் ஒன்றை செய்திருக்கிறேன். பாகிஸ்தான் எல்லையில் நடைபெற்ற சம்பவங்களை கொண்ட கதை 'பரதேசி'. படத்தில் அந்தக் காலத்து பின்னணியை கொண்டு வரவேண்டும் என்பதற்காக என்னை அழைத்தார்கள். எல்லாம் நன்றாக வந்திருக்கிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்தப் படத்தில் 'மாப்பா' குழு நடனங்கள் வரும். நிறைய படங்களில் இந்த வகையான நடனங்களை நான் அமைத்துக் கொடுத்திருக்கிறேன். ஒரு சினிமாத்தனமாக இல்லாமல் பார்ப்பதற்கு யதார்த்தமாகவே இருக்கும் வகையில் நடனங்கள் இருக்கும்.

கமல்ஹாசனின் 'தசவதாரம்' படத்தில் நடித்திருக்கிறேன். படத்தில் நான் ஒரு சிபிஐ ஆபீசராக வருகிறேன். நானும், கமலும் லாரன் - லார்டி போல் காமெடியாக செய்கிறோம். பத்து கமலில் ஒரு கமல் இப்படி வருகிறார்.

எதிர்காலத் திட்டங்கள் குறித்து...

ஒரு படம் தயாரிக்க எண்ணியிருக்கிறேன். என் மகள் நடிகை காயத்ரி அந்தப் படத்தை இயக்கவிருக்கிறார். அவர் அமெரிக்காவில் மீடியா கம்யூனிகேஷன் படித்திருக்கிறார். நடிப்பைவிட தொழில்நுட்பத் துறையில் அவருக்கு ரொம்பவும் ஆர்வம் அதிகம். அதனால் அவர் என் தயாரிப்பில் படம் ஒன்றை இயக்கவிருக்கிறார். அதற்கான வேலைகள் தற்போது நடைப்பெற்று கொண்டிருக்கிறது.

அடுத்து நடனத்தை மையமாக வைத்து 'ஆடலரசன்' என்ற பெயரில் தொலைக்காட்சி தொடர் ஒன்றை தயாரித்து அளிக்க நினைத்திருக்கிறேன். அதற்கான வேலைகளும் நடந்து வருகின்றன. இதற்கிடையில் சினி டிவி ரேட்டின் டாட் காம் என்றோர் இணையதளத்திற்கு நிர்வாக இயக்குநராக பணியாற்றுகிறேன். சின்னத்திரைக்கு தொடர்கள் பற்றிய ரேட்டிங் மற்றும் அதுசார்ந்த பல்வேறு அம்சங்கள் இந்த இணையதளத்தில் இடம் பெறவிருக்கிறது. இன்னும் சிலநகூடியவிரைவில் இந்த இணையதளத்தின் துவக்கவிழா நடைபெறவிருக்கிறது.

இவற்றுக்கு எல்லாம் காலம்தான் எனக்கு கைகொடுக்க வேண்டும். இங்கு நான் ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இன்றைய இளையதலைமுறையினரை பார்க்கின்ற போது அவர்களை நாம் பயன்படுத்திக் கொள்ள முடியவில்லையே என்ற ஏக்கம் என்னுள் தோன்றுகிறது.

அவர்களை முறைப்படுத்தி அவர்களுக்கு அடிப்படை நாட்டியத்தை பயிற்றுவித்தால் அவர்களிடமிருந்து பல்லாயிரக்கணக்கான எம்.ஜி.ஆர், சிவாஜிகணேசன், கமல்ஹாசன், ரஜினிகாந்த் போன்றவர்களை உருவாக்கலாம். அதற்கு என்னைப் போன்ற நடன ஆசிரியர்கள் தயாராய் இருக்கிறார்கள்.

தொகுப்பு Published on 25th Feb, 2008
மேலும்