தமிழ்
 
 
 
சினிமா செய்திகள் சினிமா செய்திகள்
கேடிஸ்ரீ  
விஜய் வழியில் அஜீத்

கடந்த ஜனவரி மாதம் அஜீத் - ஷாலினி தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்த செய்தி எல்லோரும் அறிந்ததே. குழந்தை பிறந்து மூன்று மாதம் ஆன நிலையில் குழந்தைக்கு பெயர் சூட்டுவிழாவை மிக எளிமையான முறையில் சமீபத்தில் நடத்தினார் அஜீத்.

குழந்தை விஷயத்தில் விஜய்யின் வழியே பின்பற்றுகிறார் அஜீத். விஜய் எந்த பத்திரிகையிலும் தன் குழந்தை போட்டோ வருவதை விரும்பவில்லை. அதே போல் அஜீத்தும் தன் குழந்தை போட்டோ வை பத்திரிகையில் வெளிவருவதை விரும்பவில்லை.

அஜித் - ஷாலினி குழந்தையின் பெயர் என்ன தெரியுமா?

அனோஷ்கா (?) ...

அனோஷ்காவிற்கு அர்த்தம் தெரியவேண்டுமானால் உங்களிடம் தமிழ் அகராதி இருந்தால் புரட்டி பாருங்கள்?? பதில் கிடைக்கலாம்!

பதில் கிடைத்தால் எங்களுக்கும் கொஞ்சம் சொல்லுங்கள்!

கர்நாடகாவில் 'குருவி'

விஜய் மற்றும் த்ரிஷா நடிக்கும் 'குருவி' படத்தை பற்றி பல்வேறு செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றன. சுமார் 1.50 கோடி ரூபாய்க்கு கேரளாவில் இப்படம் விற்பனை செய்யப்பட்டதாகவும், தற்போது கர்நாடகாவில் 1.20 கோடிக்கு விற்கப்பட்டதாகவும் செய்திகள் சொல்கின்றன.

கர்நாடகாவின் முன்னணி தமிழ்த்திரைப்பட விநியோகஸ்தராக விளங்கும் 'மாண்டியா' ஸ்ரீகாந்த் 'குருவி' படத்தின் கர்நாடக விநியோக உரிமையை பெற்றுள்ளார்.

தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின், ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்திற்காக இப்படத்தை தயாரித்து அளிக்கிறார். தரணியின் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் 'குருவி' வருகிற தமிழ் வருடப்பிறப்பன்று அனைத்து திரையரங்கிலும் திரையிடப்படலாம் எனத் தெரிகிறது.

ஜெயம் ரவி நடிப்பில் 'பேராண்மை'

பிரபல நிறுவனமான ஐங்கரன் இண்டெர்நேஷ்னல் 'பேராண்மை' என்ற பெயரில் புதிய படம் ஒன்றை தயாரிக்கவிருக்கிறது. ஜெயம் ரவி நாயகனாக நடிக்கவிருக்கும் இப்படத்தை இயக்கவிருக்கிறார் எஸ்.பி. ஜெகநாதன்.

கருணாமூர்த்தி மற்றும் சி. அருண் பாண்டியன் தயாரிக்கவிருக்கும் 'பேராண்மை' படத்திற்கான இசையை அமைக்கிறார் வித்யாசாகர்.

ஐங்கரன் இண்டெர்நேஷ்னல் நிறுவனம் ஏற்கெனவே அஜீத், நயன்தாரா நடிப்பில் வெளிவந்த 'பில்லா'வையும், தற்போது அஜீத், நயன்தாரா நடிப்பில் வெளிவரவிருக்கும் 'ஏகன்' என்று பல்வேறு படங்களை தயாரித்து அளித்து வருகிறது.

நடிகர் ரகுவரன் மரணம்

'பூவிழி வாசலிலே' மூலம் தமிழ் திரைப்படவுலகில் வித்தியாசமான வில்லனாக ரசிகர்களால் அறியப்பட்டவர் நடிகர் ரகுவரன் கடந்த சில மாதங்களாக நோய்வாய்ப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுக்கொண்டிருந்தார். இந்நிலையில் இன்று சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்தார்.

ரகுவரன் 1982ம் ஆண்டு திரைக்கு வந்த 'ஏழாவது மனிதன்' படத்தின் மூலம் தமிழ் திரைப்பட உலகில் காலடி வித்தார். பூவிழி வாசலிலே, மிஸ்டர் பாரத், முதல்வன் உள்பட பல தமிழ்த்திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். இவரின் நடிப்பில் கடைசியாக வந்த திரைப்படம் 'சில நேரங்களில்'. தமிழ் மட்டுமல்லாது மலையாளம், இந்தி, தெலுங்கு மொழி படங்களிலும் நடித்திருக்கிறார்.

நடிகை ரோகிணியை காதல் மணம் புரிந்து கொண்டார். இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் இருவரும் விவகாரத்து பெற்று தனியாக வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் ரகுவரன் இறந்த செய்தியை கேட்ட ரோகிணி உடனடியாக ரகுவரன் வீட்டிற்கு விரைந்தார்.

ரகுவரன் இறந்த செய்தி கேட்டவுடன் தமிழ் திரைப்படவுலகமே அதிர்ச்சிக்குள்ளானது. இவரது மரணம் தமிழ்த்திரைப்பட உலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு.

தொகுப்பு March 19th, 2008
மேலும்