தமிழ்
  Site Web Yahoo! India Search
 
 
 
27 வருடங்களுக்கு முன்.. சினிமா செய்திகள்
செ.பா  
இந்த உலகத்தில் உடனடியாக சமரசம் செய்து கொள்ளும் சமரசவாதிகள் யாரும் சரித்திரம் படைப்பதில்லை. இலட்சியவாதிகள்தான் இலக்கை அடைகிறார்கள். அப்படிதான் சினிமாவிலும் தங்களை எந்த விதத்திலும் சமரசம் செய்து கொள்ளாதவர்கள் இயக்குநர்கள் பாலா, அமீர் இவர்களது பள்ளியிலிருந்து வந்துள்ள நானும் அப்படிதான் என்று எடுத்தவுடனே தடாலடியாக பேசுகிறார் 'சுப்பிரமணியபுரம்' படத்தின் இயக்குநர் சசி குமார்.

"அது என்ன சுப்ரமணியபுரம்?" அவரிடமே கேட்டபோது..மதுரையில் சுப்ரமணியபுரம்தான் கதைக்களம். இங்குதான் கதை நிகழ்கிறது. சுப்ரமணியபுரம் என்கிற பெயர் மதுரை, திருச்சி, திண்டுக்கல், சென்னை என்று பல ஊரிகளில் இருக்கிறது. அதனால்தான் படத்திற்கு இப்பெயரை சூட்டினோம்.

27 ஆண்டுகளுக்கு முன் என்கிற ஒரு பிளாஷ்பேக்குடன் கதை தொடங்குகிறது. அதாவது 1980-ஆம் ஆண்டு நடக்கும் சம்பவங்கள்தான் படம். இந்த காலகட்டத்தில் பயன்படுத்தப்பட்ட உடை வாகனங்கள். தியேட்டர்கள். நடை. உடை, பாவனைகள் என்று எல்லாவற்றிலும் பழைய தன்மையை கொண்டு வந்துள்ளோம்,. எந்தவித இலக்குகளும் இல்லாத ஒரு நண்பர்கள் கூட்டம். இறுக்கமான அவர்களது நட்புக்குள் ஒரு பெண் நுழைகிறாள். எந்த பகைவனாலும் பிரிக்க முடியாத நட்பு ஒரு பெண்ணின் புன்னகையில் சஞ்சலப்படுகிறது. சுருக்கமாக சொன்னால் இதுதான் சுப்ரமணியபுரத்தின் கதை.

சென்னை-28 நாயகர்களில் ஒருவரான ஜெய், கஞ்சா கருப்பு, ஸ்வாதி என்கிற புதுமுகம், இவர்களுடன் சசிகுமாராகிய நானும் நடிக்கிறேன். அத்துடன் ஒது முக்கியமான கதாபாத்திரத்தில் இயக்குநர் சமுத்திரக்கனி நடிக்கிறார். கதையும் கதைக்களமும் நிச்சயம் புதுமையாக இருக்கும். இதனால் இக்கதைக்கு இன்றைய சூழலில் தயாரிப்பாளர்கள் கிடைக்கமாட்டார்கள் என்பதால் நானே சொந்தமாக இப்படத்தை தயாரித்து வருகிறேன் என்று துணிச்சலுடன் பேசுகிறார் இயக்குநர் சசி குமார்.

இப்படத்திற்காக ஒரு பஸ் வாங்கி அந்தக்கால பாண்டியன் போக்குவரத்துக் கழக பஸ்ஸாக மாற்றியுள்ளார்களாம். சின்னத்திரையில் புகழ்பெற்று வரும் ஜேம்ஸ் வசந்தனை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தியுள்ளார்கள். சுப்ரமணியபுரத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறதாம்.

தொகுப்பு Published on 25th Feb, 2008
மேலும்