தமிழ்
  Site Web Yahoo! India Search
 
 
 
ரஜினி படத்தில் அமிதாப் - அர்ஜூன்!' சினிமா செய்திகள்
கேடிஸ்ரீ  
'சிவாஜி' படத்தை அடுத்து ரஜினி நடிப்பில் 'ரோபோ' உருவாகிறது என்பது பழைய செய்தி. ரஜினி - சங்கர் கூட்டணியில் உருவாகும் இப்படத்தைப் பற்றி தினம் தினம் ஒரு செய்தி வந்துக்கொண்டு இருப்பது இப்போதைய புதிய செய்தி.

தற்போதைய செய்தி 'ரோபோ'வில் முக்கிய வேடத்தில் ஹிந்தி படவுலகத்தின் சூப்பர் ஸ்டார் அமிதாப்பும், அர்ஜூனும் நடிக்க இருக்கிறார்கள் என்பதுதான்.

அமிதாப் முக்கிய பாத்திரத்திலும், அர்ஜூன் வில்லன் அல்லது ரஜினியின் நண்பர் பாத்திரத்திலும் நடிக்கவிருப்பதாக இப்படத்து வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது.

ரஜினியின் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது 'ரோபோ'. வெளிநாட்டு படங்களுக்கு இணையாக இப்படத்தை எடுக்கவிருப்பதாக செய்திகளும் உலா வருகின்றன.

வேகமாக வளர்ந்து வரும் 'சுப்ரமணியபுரம்'

'சுப்ரமணியபுரம்' என்ற பெயரில் புதிய படம் ஒன்றை இயக்குகிறார் சுசி குமார். இவர் வேறு யாருமல்ல; பாலா, அமீர் போன்ற பிரபல இயக்குநர்களுடன் பணியாற்றியவர். படத்தின் இயக்குநர் மட்டுமல்ல தயாரிப்பாளரும் இவரே.

'சென்னை28' படத்தில் நடித்த ஜெய் இப்படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். நாயகியாக ஸ்வாதி என்ற புதுமுகம் நடிக்கிறார். இவர்களுடன் கஞ்சா கருப்பு, இப்படத்தை இயக்கும் சுசி குமாரும் நடிக்கிறார்கள்.

படத்தின் கதைக்களமே மதுரையில் உள்ள சுப்ரமணியபுரம்தான் என்கிறார் இயக்குநர் சுசிகுமார். இப்படத்திற்கான இசையை சின்னத்திரை புகழ் ஜேம்ஸ் வசந்தன் கவனித்துக் கொண்டு வருகிறார். இப்படத்தில் முக்கிய பாத்திரம் ஒள்றில் நடிக்கிறார் இயக்குநர் சமுத்திரக்கனி.

எந்தவித இலக்குகளும் இல்லாத ஒரு நண்பர்கள் கூட்டம். இறுக்கமான அவர்களது நட்புக்குள் பெண் ஒருத்தி நுழைகிறாள். யாராலும் பிரிக்க முடியாத நட்பு பெண் ஒருத்தியின் வருகைக்கு பிறகு கொஞ்சம் தடுமாறுகிறது. இதுதான் 'சுப்பிரமணியபுரத்தின்' கதை கரு.

கே. ராஜேஷ்வர் இயக்கத்தில் 'இந்திரவிழா'

அந்த நாளில் திரைக்கு வந்த 'அவள் அப்படித்தான்', 'பன்னீர் புஷ்பங்கள்' மற்றும் 'மீண்டும் ஒரு காதல் கதை' போன்ற படங்களில் கதையாசிரியராக பணியாற்றிய கே. ராஜேஷ்வர் பிறகு 'நியாய தராசு' மற்றும் 'அமரன்', 'துறைமுகம்' மூலம் இயக்குநராக உருவெடுத்தார். தற்போது 'இந்திரவிழா' என்ற படத்தை இயக்குகிறார்.

நாயகனாக ஸ்ரீகாந்த் நடிக்க நாயகியாக மாளவிகா மற்றும் நமீதா ஆகியோர் நடிக்கும் இப்படத்தை கே.கே. மூவீஸ் சார்பில் அசோக் கே. கோத்வானி தயாரித்து அளிக்கவிருக்கிறார். 'இந்திரவிழா' படத்திற்கான இசையை யதீஷ் அமைகிறார்.

'இந்திரவிழா' படத்தைப் பற்றி இயக்குநர் கே.ராஜேஸ்வர் இப்படி கூறுகிறார்:

''இந்திரவிழா' மகிழ்ச்சி, கொண்டாட்டம், தடைகள் இல்லாத உற்சாகம், எழுச்சி, உல்லாசம் இவை சார்ந்த கதைக்களத்தைக் குறிப்பாகக் கூறலாம். இந்திரனுக்கு சிவன், விஷ்ணுவுக்கு முன்பே வழிபாடு விழாக்களும் நடந்துள்ளன. சிலப்பதிகாரத்தில் புகார்க்காண்டத்தில் இந்திரவிழா பற்றி அணுஅணுவாக வர்ணிக்கப்பட்டுள்ளது. அப்போது காதல், ஊடல், கூடல், வழிபாடுகள் என்று நடந்துள்ளன. இது கட்டற்ற மகிழ்ச்சியின் வெளிபாடு. அப்படி ஒரு கொண்டாட்டமே இந்த 'இந்திரவிழா' படமும்...''

அசத்த வருகிறது கமல்ஹாசனின் 'தசாவதாரம்'

கமல் நடிப்பில் வளர்ந்து வரும் 'தசாவதாரம்' படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், தற்போது அடுத்த கட்டவேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் 'தசாவதாரம்' தயாரிக்கப்பட்டு வருவது சிறப்பு.

ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தை கே.எஸ். ரவிக்குமார் இயக்கி வருகிறார். முதன்முதலாக இப்படத்தில் கமல்ஹாசன் 10 வேடங்களில் நடிக்கிறார். படத்தில் பல காட்சிகள் கிராபிக்ஸ் முறையில் உருவாக்கப்படுவது சிறப்பு. ஹிமேஷ் ரேஷ்மாச்சார்யாவின் இசையில் அற்புதமான பாடல்கள் உருவாகியுள்ளது. இந்நிலையில் இப்படத்திற்கான ஆடியோ வெளியீட்டு விழாவை உலக புகழ்பெற்ற நடிகர் ஜாக்கி ஹொரன் வெளியிட இருக்கிறார்.

கமலுடன் அசின், மல்லிகா ஷெராவத், ஜெயப்பிரதா, கே.ஆர். விஜயா, ரேகா ஆகியோர் ஜோடியாக நடித்திருக்கிறார்கள்.

தொகுப்பு Published on 22nd Feb, 2008
மேலும்