|
தொட்டாசிணுங்கி, சொர்ணமுகி, ப்ரியசகி ஆகிய படங்களை
தமிழிலும் 'ஹம்துமாரா ஹேசனம்', 'தும்சே மில்க்கர்'
போன்ற படங்களை இந்தியிலும் இயக்கியுள்ள இயக்குநர் கே
எஸ் அதியமான் தற்போது ஷாம், சந்தியா, குத்து ரம்யா
நடிக்கும் 'தூண்டில்' படத்தை இயக்கி முடித்துவிட்டார்.
என்ன சொல்கிறார் அதியமான் பார்ப்போம்:- லண்டனில்
வசிக்கும் சாப்ட்வேர் இன்ஜினியர் ஷாம். அவரது மனைவி
சந்தியா. இந்த மகிழ்ச்சியான தம்பதிகளின் வாழ்க்கைக்குள்
வருகிறார் ரம்யா. இந்த மூன்று பேரையும் வைத்து கொண்டு,
முழுக்க முழுக்க லண்டனில் கிட்டத்தட்ட அறுபது நாட்கள்
'தூண்டில்' படத்தை படமாக்கியுள்ளோம். நல்ல கதைதான்
சினிமாவிற்கு ஹீரோ என்பார்கள். இந்த நல்ல கதைக்கு
மிகவும் பொருத்தமானவர் ஷாம். உள்ளம் கேட்குமே, இயற்கை
படங்களைப்போல இந்த 'தூண்டில்' அவருக்கு பெரிய பேர்
வாங்கித்தரும். இந்த கதையை இந்தியாவில் எடுக்க முடியாது.
காரணம் பிரச்சினைகளுக்குள் மாட்டிக் கொள்ளும் இந்த
மூன்று கேரக்டர்களுக்கும், யாருமே ஆதரவளிக்கக் கூடாது
என்பதால்தான் லண்டனுக்கு கதையை கொண்டு சென்றோம்.
இப்படத்தில் சந்தியாவின் நடிப்பை பார்த்துவிட்டு பலபேர்
மிரண்டு போய்விட்டார்கள். எதிர்காலத்தில் சாவித்ரி,
பத்மினி போன்று மிக சிறந்த நடிகையாக சந்தியா வருவார்.
என் படங்களில் காமெடிக்கு தனி ட்ராக் இருந்ததே இல்லை.
முதல்முறையாக இப்படத்தில் விவேக் நடித்துள்ளார். வெறும்
15 நிமிடம் வந்தாலும் கண்டிப்பாக தியேட்டரையே குலுங்க
வைப்பார். படையப்பாவில் நீலாம்பரி கேரக்டரில் ரம்யா
கிருஷ்ணன் நடிப்பு எப்படி பேசப்பட்டதோ, அதேபோல் 'தூண்டில்'
படத்தில் ரம்யாவின் வில்லங்கமான நடிப்பு கண்டிப்பாக
பேசப்படும் என்றார் இயக்குநர் கே எஸ் அதியமான்.
'தூண்டிலை' பிப்ரவரி-14 ஆம் தேதி ரிலீஸ் செய்ய
உள்ளார்களாம். |