'அய்யாவழி' படத்தின் இறுதிக்கட்டப்படப்பிடிப்பு 'செஞ்சிக்
கோட்டை'யில் நடைபெற்று வருகிறது. இதில் திருவிதாங்கூர்
சமஸ்தான மன்னராக நடிப்பவர் பிரபல பாடகரும், நடிகர்
விஜய்யின் மாமாவுமாகிய எஸ் என் சுரேந்தர். அவரது
அமைச்சரவையில் புலவர் புலமைப்பித்தன் மந்திரியாக
முதல்முறையாக சினிமாவில் நடிக்கிறார்.
வைகுண்டசாமியை புலிக்கூண்டில் அடைத்து வைக்கும்
காட்சியை ஹாலிவுட் படத்திற்கு இணையான தொழில்
நுட்பத்துடன் படமாக்கியுள்ளார்களாம். இதுதவிர பாடகி எஸ்
ஜானகி தன் 50-வது வருடத்தில் பாடியுள்ள முதல் பாடல்
இந்த 'அய்யாவழி' படத்தில் இடம்பெறுகிறதாம். பகவதி நேசன்
என்கிற புதுமுக இசையமைப்பாளரின் இசையை கேட்டு மகிழ்ந்த
பாடகர் கே ஜே ஜேசுதாஸ் அவரை மிகவும் பாராட்டியது
மட்டுமில்லாமல், எதிர்காலத்தில் சிறந்த இசையமைப்பாளராக
வருவீர்கள் என்று வாழ்த்தியதை பெருமையாக சொல்லி
வருகிறார்.
தமிழகத்தின் தென்கோடியில் 175 ஆண்டுகளுக்கு முன்
வாழ்ந்த வைகுண்டசாமியின் வரலாற்றை இப்படம் மூலம் உலகம்
முழுவதும் தெரியப்படுத்தப்போகிறோம் என்கிறார் இயக்குநர்
நாஞ்சில் பி சி அன்பழகன்.