தமிழ்
 
 
 
'தி.நகர் ரங்கநாதன் தெருவில் பரபரப்பு' சினிமா செய்திகள்
செ.பா  
சென்னை தி.நகர் ரெங்கநாதன் தெருவில் புகுந்து கடைகளில் பொருள் வாங்கிவிட்டுத் திரும்புவது தூத்துக்குடி கடலில் மூழ்கி முத்தெடுத்து வருவது போன்றது. ஆனால் அதை ஹாசினி அறிந்திருக்கவில்லை.

பொறியியல் கல்லூரி மாணவியான அவளுக்கு கூட்ட நெரிசலில் புகுந்து செல்வது எப்படி என்பது பாடத்திட்டத்தில் இல்லை. குமரியின் உருவமும் குழந்தை உள்ளமும் கொண்டவள். பெரிதாக ஒன்றும் வாங்க விரும்பவில்லை. ஒரு சிறு 'கலைடாஸ்கோப்' வாங்கத்தான் அங்கு சென்றாள். ஆனால் நெரிசல்கள். உரசல்கள் தாங்காமல் ஒதுங்கி நின்றாள்.

நிலவரம் இத்தனை கலவரமாக இருக்கும் என்று அவள் எதிர்பார்க்கவில்லை. வம்பே வேண்டாம் வந்த வழியே திரும்பலாம் என்று அவள் நினைத்து நிற்கையில், அவன் வந்தான், சந்தோஷ். என்ன இந்தப் பக்கம் என்ன விஷயம் ? என்று அவன் விசாரிக்க, அவள் கலைடாஸ்கோப் கவலையைக் கூற.... அவனுக்குள் சினிமாஸ்கோப்பாக கற்பனைத்திரை விரிய.... சமாளித்து, "இதுதானே விஷயம் இதோ நான் வாங்கிட்டு வர்றேன்" என்று அவன் கூற, "இந்தக் கூட்டத்திலா.... உங்களால் முடியாது. வேண்டாம் நான் போறேன்" என்று அவள் சொல்ல "என்ன இப்படிச் சொல்லிட்டீங்க. இது நம்ம எரியா... எல்லா கடையும் நம்ம கடைங்க. உங்களுக்கு என்ன வேணும்? கலைடாஸ்கோப்தானே... ஜஸ்ட் வெய்ட் வர்றேன் பாருங்க..." என்று உற்சாகமாக புறப்பட்ட சந்தோஷ், அவ்வளவு எளிதாகக் கூட்டத்தில் உட்புகுந்து முன்னேற முடியவில்லை. அவனது பந்தாப்பேச்சையும் கஷ்டப்பட்டு வதைப்படுவதையும் எண்ணிச் சிரித்தாள் ஹாசினி.

பார்வையிலிருந்து அகன்று காணாமல் போன சந்தோஷ் சற்று நேரத்தில் வெளிப்பட்டான். பார்த்த அவளுக்குள் சிரிப்பு வெடித்தது. சந்தோஷ் தலை கலைந்து, நிலை குலைந்து, வழியும் வியர்வையுடன் கிழியும் சட்டையுடன் வந்து கொண்டிருந்தான். ஹாசினியால் சிரிப்பை அடக்க முடியவில்லை. "ரொம்ப கஷ்டப்பட்டு வாங்கியிருக்கீங்க. இந்த கலைடாஸ்கோப் என்ன விலை?" என்றபோது சந்தோஷ், "இது என்ன விலை...? 'பை ஒன் டேக் ஒன்'னு எழுதிப் போட்டிருந்தான். ஒண்ணு வாங்கினா ஒண்ணு இலவசம். இலவசமா ஒண்னை மட்டும் எடுத்துக்கிட்டு வந்தட்டேன். அதாவது 'பை ஒன்' இல்ல 'டேக் ஒன்' மட்டும்!" என்று கூற "அப்படீன்னா கூட்டத்துல சுட்டுட்டீங்களா..." என்று அவள் கூற ஒரே சிரிப்பு. அவர்களது பேச்சைப்பற்றி யாரும் கவனிக்காமல் அவரவர் தெருவில் நடந்து கொண்டிருந்தார்கள்.

கட்.கட். என்றார் இயக்குநர் ராஜா. அது 'சந்தோஷ் சுப்ரமணியம்' படப்பிடிப்பு. ஹாசினியாக ஜெனிலியா நடிக்க சந்தோஷாக ஜெயம் ரவி நடிக்க இக்காட்சி படமானது. தொலைவிலிருந்து கிரேனில் அமர்ந்து கேமரா ஒளிப்பதிவு செய்ததால் கூட்ட நெரிசலில் யார் கவனமும் படாதபடி சாமர்த்தியமாக படமாக்கிவிட்டார்கள். கூட்டம் அடையாளம் கண்டதும் எஸ்கேப் ஆகியது பட யூனிட். தெலுங்கில் பெரிய வெற்றிபெற்ற 'பொம்மரிலு' படம்தான் தமிழில் சந்தோஷ் சுப்ரமணியம் ஆக உருவாகிறது.

ஜெயம் ரவி, ஜெனிலியா, பிரகாஷ் ராஜ் முக்கிய வேடங்கள் ஏற்க கெளசல்யா, கீதா, சாயாஜி ஷின்டே, விஜயகுமார், கிரிக்கெட் வீரர் சடகோபன் ரமேஷ், சந்தானம், பிரேம்ஜி, சத்யன் போன்ற நட்சத்திரக் கூட்டமும் உள்ளது. படப்பிடிப்புக்கு சென்னை, ஐதராபாத், கும்பகோணம் பகுதிகளைத் தொடர்ந்து படக்குழு நியுசிலாந்து செல்கிறது.

தொகுப்பு Published on 8th Feb, 2008
மேலும்