தமிழ்
 
 
 
காமெடிக்கு முக்கியத்துவம் சினிமா செய்திகள்
செ.பா  
'கருப்பசாமி குத்தகைத்தாரர்' படத்தை இயக்கிய இயக்குநர் மூர்த்தி, மீண்டும் நகைச்சுவையோடு ஒரு கமர்ஷியல் படத்தை எடுத்து வருகிறார். படத்திற்கு 'வெடிகுண்டு முருகேசன்' என்று பெயர் சூட்டியுள்ளார். இப்படத்தைப் பற்றி மூர்த்தி கூறியதாவது:-

இப்பட தலைப்பை பார்த்ததும் ஏதோ ஆக்ஷன் படம் போல தோன்றும். ஆனால் முழுக்க முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கும் படம். ஊரில் சின்ன சின்ன தப்புகளை செய்து கொண்டு, தன்னை 'சண்டியர்' என்று உதார்விட்டு திரியும் கேரக்டர் பசுபதி. இது போன்றவர்களுக்கு 'சைக்கிள் செயின் பக்கிரி', 'வீச்சருவா வீராசாமி', 'பட்டாகத்தி பாஸ்கர்' இப்படி பட்டப்பெயர்கள் இருக்கும். பசுபதியும் ரொம்ப நேரம் யோசிச்சு தன் பெயரை வெடிகுண்டு முருகேசன் என்று மாற்றி கொள்வார். ஆனால் உண்மையிலேயே அவர் ஒரு ஊசி பட்டாசுகூட கொளுத்தமாட்டார்.

இந்த சமயத்தில் அந்த ஊருக்கு பெண் போலீசாக ஜோதிர்மயி வருகிறார். எதை செய்தாலும் ஒரு சீரியஸோடு செய்யும் ஜோதிர்மயிடம், பசுபதி மாட்டுகிறார். அப்புறம் என்ன நடக்கும் என்பதை நான் சொல்லிவிட்டால் படம் பார்க்கும் ஆர்வம் இருக்காது என்று பேச்சை முடித்துக் கொண்டார் இயக்குநர் மூர்த்தி.

விருமாண்டியிலிருந்து வெயில்வரை பல வித்தியாசமான கேரக்டர்களில் நடித்துள்ள பசுபதி வெயில் படத்திற்கு பிறகு ஒரு வருடம் கழித்து இப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டாராம்.

ஸ்ரீகாந்தை வைத்து 'பம்பரக்கண்ணாலே', பரத் நடித்த 'கூடல் நகர்' படங்களை தயாரித்துள்ள அண்ணாமலை பிலிம்ஸ் பட நிறுவனம்தான் இப்படத்தை தயாரிக்கின்றார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு ஒரே கட்டமாக ராஜபாளையத்தில் நடந்து வருகிறது.

தொகுப்பு Published on 4th Feb, 2008
மேலும்