தமிழ்
  Site Web Yahoo! India Search
 
 
 
'சொன்னதையே திரும்ப சொல்லமாட்டேன்!' சினிமா செய்திகள்
- இயக்குநர் கரு பழனியப்பன்  
'பார்த்திபன் கனவு', 'சிவப்பதிகாரம்', 'சதுரங்கம்' படங்களை தொடர்ந்து இயக்குநர் கரு பழனியப்பன் "பிரிவோம் சந்திப்போம்" இப்படத்தின் பின்னணி இசை சேர்ப்புப் பணியிலிருந்தவரை சந்தித்தபோது.....

* சிவப்பதிகாரம் படத்திற்கு பிறகு இவ்வளவு இடைவெளி..?

நான் வந்து நான்கு வருடங்களில் நான்கு படங்கள் முடித்திருக்கிறேன். இப்போதும் எனக்கு, நிறைய படங்கள் என்பதைவிட நிறைவாய் படங்கள் செய்வதே என் கொள்கை, விருப்பம், ஆசை எல்லாமே. இந்த எண்ணம்தான் இதுதான் எனக்கு முக்கியமே தவிர, எண்ணிக்கை அல்ல. நான் ஒரு படம் முடித்ததும் இரண்டு மாதங்கள் எதுவும் செய்யமாட்டேன். யோசிப்பேன். இருந்தாலும் காற்றுள்ள போதே தூற்றிக் கொள்வது நல்லது.

* ஒரே சாயலில் படங்கள் வருகிறதே..?

எனக்கு என் மேல் நம்பிக்கை இருக்கிறது. அதனால் நான் கவலைப்படுவதில்லை. ஒருவரைப் போல இன்னொருவர் படம் எடுக்க முடியாது. பிறரைப்போல நானும், என்னைப்போல மற்றவர்களும் நிச்சயமாகப் படமெடுக்க முடியாது. ஒரே கதையை ஐந்து பேரிடம் கொடுத்து படமாக்கச் சொன்னாலும் ஒரே மாதிரியான படமாக வராது. ஏன் நான் எழுதி வைத்துள்ள 80 காட்சிகளை அப்படியே இன்னொருவரிடம் கொடுத்து எடுக்கச் சொன்னால் கூட நான் நினைத்த படத்தை எடுக்க முடியாது.

* எதை வைத்து இப்படி சொல்கிறீர்கள்..?

'சிந்து பைரவி', 'முதல் மரியாதை', 'சின்னவீடு', இந்த மூன்று படங்களும் ஒரே கால கட்டத்தில் வெளியாகி ஓடிய படங்கள். இது மூன்றுமே ஒரே கதைதான். இது யாருக்காவது தெரியுமா? மனைவியோடு முரண்பட்ட ஒருவன் அடுத்தவரிடம் போகும் கதை. மூன்றிலும் இதே விஷயம் தானே. ஆனாலும் வேறு வேறு விதமாகக் கொடுக்கவில்லையா?

* ஒரு படம் எடுக்கும்போது அக்கம்-பக்கம் எது மாதிரி படம் எடுக்கிறார்கள் என்று தெரிய வேண்டாமா..?

அதற்கு அவசியமில்லை. எனது முந்தைய படத்திலிருந்து அடுத்து எடுக்கப்போகும் கதை எப்படி வேறுபடுகிறது என்றுதான் பார்ப்பேனே தவிர, அக்கம்-பக்கம், அடுத்தவர் படங்கள் பற்றி எனக்குக் கவலையில்லை. சொன்னதையே திரும்பச் சொல்ல மாட்டேன். செய்ததையே திரும்பிச் செய்ய மாட்டேன். ஒரே வேலையை மீண்டும் மீண்டும் செய்வதாக இருந்தால் நான் ஆபீஸ் வேலைக்குப் போயிருப்பேன். சினிமாவுக்கு வந்திருக்க மாட்டேன்.

* இப்போது எது டிரண்ட் என்பதை தெரிந்து கொள்ள வேண்டாமா.?

சினிமாவில் டிரண்டும் இல்லை ஒரு மண்ணாங்கட்டியுமில்லை. டிரண்ட் என்று எதுவுமே இல்லை. சினிமாவில் சினிமாக்காரர்கள் உருவாக்கி வைத்துள்ள மாய பிம்பம்தான் டிரண்ட். அரைத்த மாவையே அரைக்கும்போது அவர்கள் சொல்லும் நொண்டிச் சாக்குதான் இந்த டிரண்ட். இந்தச் சீசனில் எங்களுக்கு இது பிடிக்கும் இது பிடிக்காது என்று எந்த ரசிகனும் சொல்வதில்லை. என் முதல் படம் 'பார்த்திபன் கனவு' வந்தபோது அப்படித்தான் சொன்னார்கள். இப்போ 'தூள்', 'சாமி', 'அரசு' இப்படி ஆக்ஷன் படங்கள் வருகிற காலம். இப்போது இப்படி ஒரு காதல் கதையா என்றார்கள். முழுக்க முழுக்க அவநம்பிக்கைகளை சுமந்து கொண்டு அந்தப்படம் வந்தது. படத்தை நன்றாக இருக்கிறது என்று பாராட்டியவர்கள்கூட படம் ஓடாது என்றார்கள். ஆனால் என்ன ஆனது? குடும்பத்தோடு பார்த்தார்கள் காதலை கண்ணியமாகச் சொன்னதாலா படம் வெற்றி. எனக்கு இந்த டிரண்ட் மீது நம்பிக்கையில்லை.

* சமூகத்தில் நடப்பதை படமாக்குவது பற்றி உங்கள் கருத்து..?

எங்காவது ஏதாவது வரம்பு மீறி ஒழுங்கீனமாக நடப்பதை படமாக்கிவிட்டு உலகத்தில் நடக்காததையா எடுத்தோம் என்பது பொறுப்பில்லாதது. கண்டிக்கத்தக்கது. எதை சினிமாவில் காட்டுவது என்கிற கண்ணியம் பொறுப்பு வேண்டும். வீட்டுக்கு வீடு படுக்கையறையும் இருக்கிறது. கழிப்பறையும் இருக்கிறது. அதற்காக எல்லாவற்றையும் காட்டிவிட முடியுமா? கழிப்பறையிலம் கதவு வைத்திருப்பது ஏன்.

இந்த அறிவு ஏன் சிலருக்கு வருவதில்லை. நாம் வக்கிரமாகச் சிந்தித்து மக்களிடையே வியாபாரம் செய்வதற்கு சமதாயத்தின் மீது உலகத்தில் நடக்காததா என்று பழிபோட்டுத் தப்பிப்பது எனக்கு பிடிக்காது. செய்யமாட்டேன். நல்ல விஷயம் சொல்கிறோமோ இல்லையோ கெட்டதைச் சொல்லக்வடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன்.

* இயக்கிய நான்கு படங்களில் அனுபவத்தில் புரிந்து கொண்டது என்ன..?

ஒரு டாக்டரிடம் போய் எங்கு வேலை பார்க்கிறீர்கள் என்று யாரும் கேட்கிறதில்லை. எங்கு ப்ராக்டீஸ் செய்கிறீர்கள் என்றுதான் கேட்பது வழக்கம். ஒரு டாக்டர் எப்படி காலம்பூராவும் ப்ராக்டீஸ் செய்து கற்றுக் கொள்கிறாரோ அப்படித்தான் இயக்குநரும், கற்றுக் கொண்டே இருக்கிறார். எது ஓடும், எது ஓடாது என்கிற ரகசியம் புரிபடாதது. நான் பண்ணிய படங்களில் கூட நான் ரசித்த காட்சிகளை ரசிகன் நிராகரித்திருக்கிறான். நான் நிராகரித்தவற்றை அவன் ரசிக்கிறான். எப்போது நான் ரசித்து எடுத்த காட்சியை அவனும் அதே அலைவரிசையில் ரசிக்கப்போகிறான் என்பது புரியாத புதிர் என்றாலும் சுவாரஸ்யமான விளையாட்டுதான், இந்த சினிமா.

* உங்களின் ஆதர்ச சினிமா இயக்குநர்கள் யார்..?

ருத்ரையா, மணிவண்ணன் இவர்கள் இருவரும் இருவேறு துருவங்கள்போலத் தெரிகிறதா.... காரணம் சொல்கிறேன் பாருங்கள். ருத்ரையா 25 வருஷங்களுக்கு முன்னாடி இயக்கிய படம், 'அவள் அப்படித்தான்' அந்தப் படத்தை இப்போது போட்டுப் பார்த்தாலும் இன்னும் ஐந்து வருஷங்களுக்குப் பிறகு வரவேண்டிய படம்போலத் தெரியும். அந்த அளவுக்கு நவீன சிந்தனை உள்ளவர் அவர். ஓர் இயக்குநருக்கு நவீன சிந்தனை முக்கியம்.

பல்வேறு கதைகளை வெற்றிகரமாகக் கையாளும் திறமை மணிவண்ணன் ஒருவரிடம் மட்டுமே உள்ளது என்பது நிரூபிக்கப்பட்டுள்ள உண்மை. எந்த ரகப் படங்களாக இருந்தாலும் அதில் அவர் வெள்ளிவிழாப் படம் ஒன்று கொடுத்திருப்பார். க்தையா? '24 மணிநேரம்', நகைச்சுவையா 'சின்னதம்பி பெரிய தம்பி' சமூக சிந்தனையுள்ள படமா 'பாலை வன ரோஜாக்கள்' ஆக்ஷன் படமா... 'அமைதிப்படை' கதாநாயகனே இல்லாத படமா 'முதல் வசந்தம்' முக்கோணக் காதல் கதையா.. 'இங்கேயும் ஒரு கங்கை' இப்படி எல்லாமே வெள்ளிவிழாப் படங்கள். இவ்வளவு திறமை வாய்ந்தவர் மணிவண்ணன். காலம் அவரைக் கொண்டாடாமல் விட்டுவிட்டது வேதனை.

(செ.ர)

தொகுப்பு Published on 17th Jan, 2008
மேலும்