|
தமிழ்த் திரைப்பட உலகில் சில முகங்கள் எப்போதும்
மறக்கக்கூடியவை அல்ல. அதுவும் அப்பா பாத்திரமேற்ற அந்த
முகங்கள் நம்மோடு இரண்டறக்கலந்துவிடக் கூடியவை.
அவர்களது தோற்றப் பொழிவும், வசன உச்சரிப்பும், உடல்
அசைவு (மொழி), நடிப்பும் பலவாறு அவர்களை அசைபோடத்தான்
செய்யும்.
ரங்கராவ்,
வி. நாகையா, எஸ்.வி.சுப்பையா, டி.கே. பகவதி... என்ற
முகங்கள் அப்பாக்களாகவே வாழ்ந்து சென்றவர்கள். ரங்கராவ்,
நாகை போன்றவர்கள் தெலுங்கு மொழியை தாய் மொழியாகக்
கொண்டவர்கள். ஆனாலும் தமிழ்மொழியை மிகச் சிறப்பாக
தமிழுக்குரிய சிறப்புடன் உச்சரித்தவர்கள். பேசி
வந்தவர்கள்.
கலைவாழ்க்கை மீதான நேசிப்பும் பற்றும் காதலும்
கொண்டதால் இவர்கள் கலை உலகில் தமக்கான கெளரவத்தையும்
மதிப்பையும் பெற்றவர்கள். சிலர் செல்வாக்கு
மிக்கவர்களாகவும் வாழ முடிந்தது. ஆனால் பெரும்பாலோர்
தாம் ஈட்டிய பொருட் செல்வத்தை தாமே சொந்தமாக திரைப்படம்
தயாரித்து உள்ளதையும் இழந்து நடுவீதிக்கு
விரட்டப்பட்டவர்கள். தானதர்மம் செய்து புகழ்
பெற்றவர்களும் உண்டு. மனம் போனபோக்கில் எப்படியும்
வாழலாம் என்று வாழ்ந்தவர்களும் உண்டு.
இவ்வொறெல்லாம் வாழாது புகழும் பெருமையும் பெற்று
வாழ்ந்தவர்தான் சித்தூர் வி. நாகையா. இவர்
மனிதநேயமிக்க கலைஞர். கலைமீது அலாதிப் பிரியம் கொண்டவர்.
சிறந்த குணச்சித்திர நடிகர் என்ற அடைமொழிக்கு உரிய பல
குணாதிசயங்களைக் கொண்டவர்.
ஆந்திராவில் உள்ள குண்டூர் மாவட்டத்தில் உள்ள
ரேபல்லெ என்ற சிற்றூரில் 28.03.1904 இல் பிறந்தவர்.
இவரது குடும்பம் வைதீக தெலுங்கு பிராமணக் குடும்பம்.
வறுமைப்பட்ட குடும்பம். ஆனாலும் மாமாவின் அரவணைப்பில்
வளர்ந்து வந்தார். கஷ்ட நிலையிலும் பி.ஏ. பட்டம்
பெற்றர்.
சிறுவயது முதல் இசை ஆர்வமிக்கவராகவும் இருந்தார்.
சிலகாலம் சித்தூர் சுப்பிரமணியம் பிள்ளையிடம் சங்கீதம்
பயின்றார். கர்நாடக சங்கீதத்திலும் ஆழ்ந்த
தாடனைமிக்கவராகவே வளர்ந்து வந்தார். காங்கிரஸ்
கொள்கையில் ஆழ்ந்த ஈடுபாடு மிக்கவராகவும் இருந்தார்.
வாலிபக் காங்கிரசில் தீவிர பற்றுக் கொண்டு சிலகாலம்
இணைந்து செயற்பட்டார். சித்தூர் மாவட்ட அரசு
அலுவலகத்தில் குமாஸ்தாவாகவும் சிலகாலம் பணிபுரிந்தார்.
பின்னர் 'ஆந்திர பத்திரிகா' என்கிற பத்திரிகையில்
சித்தூர் செய்தியாளராகவும் இருந்தார்.
இத்தருணத்தில் நாகையாவுக்கு திருமணம் நடைபெற்றது.
ஆனாலும் மிகக்குறுகிய காலத்தில் மனைவி காலமானார்.
வாழ்க்கையே வெறுப்புற்று தற்கொலை செய்யுமளவிற்கு
சென்றார். இந்நிலையில் கலை ஆர்வம் கொண்ட வழக்கறிஞரான
ஆர்.பி. ராமகிருஷ்ணன் என்பவர் நாகையாவை தேற்றி ஆறுதல்
வழங்கி வந்தார். நாகையாவின் தனிமையப் போக்க
கலைத்துறையில் காலடி எடுத்து வைக்க அனுசரணையாக
இருந்தார்.
'ஹிஸ் மாஸ்டர் வாய்ஸ்' (இன்றைய எச்.எம்.வி.) மற்றும்
ஹச்சின் போன்ற இசைத்தட்டு நிறுவனங்களில் நாகையாவுக்கு
பாடும் வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து பல்வேறு
வாய்ப்புகள் வந்தன. இவற்றை நன்கு பயன்படுத்திக்
கொண்டார்.இசைத்தட்டு உருவாக்கத்தில் பல புதுமைகள்
செய்தார். மேற்கத்திய இசை நுணுக்கங்களையும் அவற்றுடன்
இணைத்தார். குரல்வளம் இசை ஆர்வம் நாகையாவிற்கு ஓர்
புதுப் பொழிவைக் கொடுத்தது.
இந்தப் பரிமாணம் நாடக முயற்சிகளில் ஈடுபடுமளவிற்கு
அவரை அழைத்துச் சென்றது. சென்னையில் தெலுங்கர்கள் பலர்
நடத்திய நாடகங்களில் நடித்தார். ஆனால் பின்னர் 1938ல்
கிருகலட்சுமி என்ற தெலுங்குப் படத்தில் அனாதை ஆசிரமம்
நடத்தும் ஒரு காந்தியவாதியின் வேடம் கிடைத்தது.
அப்படத்தில் ஒரு பாடலும் படி இருந்தார்.
வாஹினி பிக்சர்ஸ் தயாரித்த 'வந்தே மாதரம்' படத்தில்
நாகையாவிற்கு கதாநாயகனாக வேடம். கதாநாயகி காஞ்சனா மாலா.
இப்படம் வெற்றி கண்டது. வாஹினியின் அடுத்த தயாரிப்பான
சுமங்கலி படத்திலும் நாகையாவுக்கு கதாநாயகன் வேடம்.
நல்ல நடிகர் என்ற பாராட்டுக்கு உரியவராக நாகையா
மாறினார். தொடர்ந்து பல படங்கள் வெற்றி பெற்றன. சில
தோல்வி உற்றன. ஆனால் நாகையாவின் நடிப்பில் தேர்ச்சியும்
முதிர்ச்சியும் கைகூடி வந்தது. நடிப்பில்
புதுப்பரிமாணம் இழையோடியது.
நடிகராக இருந்ததோடு திரைப்பட தயாரிப்பாளராகவும்
மாறினார். ரேணுகா பிலிம்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கினார்.
'பாக்கியலெஷ்மி' என்கிற படத்தை என்.எஸ். கிருஷ்ணன்,
டி.ஏ. மதுரம் நடித்த படத்தை தயாரித்தார். பின்னர்
இயக்குநர் அந்தஸ்தும் பெற்றார்.
கர்நாடக இசையின் மூலவராக கருதப்படும்
தியாகராஜசுவாமிகளின் வாழ்க்கை சரிதம் 'தியாகையா' என்ற
படமாக உருவானது. இதில் தானே தியாகையாவாக பாடி நடித்தார்.
இப்படத்தை தானே இயக்கினார். இப்படம் பல்வேறு
பாராட்டுகளுக்கு வாய்ப்பைக் கொடுத்தது. 1940களில்
தியாகராஜபாகவதர் நடித்த அசோக்குமார் படம் மூலமாக நாகையா
தமிழ்த்திரை உலகில் காலடி எடுத்து வைத்தார். அதைத்
தொடர்ந்து பல படங்களில் நடித்தார். நாகையா என்ற
நடிகனின் தனிமுத்திரை தமிழ்த் திரைப்படத்தில் தனித்து
நின்றது. பல்வேறு ஏற்ற இறக்கங்களையும் தாண்டி நல்ல
குணசித்திர நடிகர் என்ற அந்தஸ்தை அவருக்கு தமிழ்த்
திரைப்பட உலகம் கொடுத்தது.
நாகையா நல்ல நடிகர் மட்டுமல்ல; சிறந்த
மனிதாபிமானியும்கூட. மேலும் சிறந்த கர்நாடக இசை
ஆர்வலரும் - வல்லுனரும்கூட. இந்த சிறப்பெல்லாம்
நாகையாவின் பன்முக ஈடுபாட்டை முகத்தைக் காட்டும்.
எங்கு சங்கீதக் கச்சேரி நடந்தாலும் அங்கு சென்று
இசையை அனுபவிக்கும் மனப்பாங்கு மிக்க கலைஞர். ஒருமுறை
மயிலாப்பூரில் உள்ள ரசிகரஞ்சனி சபாவில் சங்கீதக்
கச்சேரி கேட்டுவிட்டு காரில் திநகரில் உள்ள வீடுநோக்கி
வந்து கொண்டிருந்தார். லஸ் சர்ச் ரோட்டில் உள்ள பஸ்
ஸ்டாப்பில் கச்சேரி கேட்டு வந்த பலரும் அப்போது பெய்த
பெரும் மழையில் நனைந்தபடி பஸ்சுக்காக காத்துக்
கொண்டிருந்தார்கள்.
அதைப் பார்த்துவிட்ட நாகையா வண்டியை நிறுத்தச்
சொன்னார். திநகர் பஸ்சுக்காக காத்து இருந்தவர்களை
எல்லாம் தன் வண்டியில் ஏற்றி அனுப்பி வைத்தார். கூட்டம்
அதிகம் என்பதால் கார் இரண்டு மூன்று முறை சென்று
திரும்ப வேண்டி இருந்தது. அதுவரை நாகையா பஸ்
ஸ்டாப்பிலேயே மழையில் நனைந்தபடி உடன் இருந்தவர்களுடன்
சங்கீதம் பற்றி பேசிக் கொண்டிருந்தார்.
இந்த சம்பவம் நாகையாவின் மனதில் உறுத்திக்
கொண்டேயிருந்தது. சங்கீதம் கேட்க மயிலாப்பூருக்கு
செல்ல வேண்டுமா? மாம்பலத்திலேயே ஒரு சபையை
உருவாக்கினால் என்ன?
இவ்வாறு ஆக்கப்பூர்வமாக சிந்திக்கத் தொடங்கினார்.
இந்த சிந்தனையின் விளைவில் உருவானதுதான் திநகரிலுள்ள 'தியாகபிரம்ம
கான சபா'. இதற்கான கட்டிடத்தை நாகையா முன்னின்று
உருவாக்கினார். இசை அன்பர்களும் நண்பர்களும் உருவாகும்
மண்டபம் நாகையாவின் பெயரில் இருக்க வேண்டுமென
விரும்பினர். ஆனால் நாகையா அதை மறுத்து விட்டார்.
கலைத்தாயின் பெயரையே அதற்கு வைக்க வேண்டுமெனக் கூறி, 'வாணி
மஹால்' என்கிற பெயர் தீர்மானமானது.
கலைநேயமும் மனிதநேயமும் கூடிப்பெற்ற நாகையா பின்னர்
வறுமையின் கோரப்பிடியில் சிக்குண்டுதான் வாழ்ந்தார்.
நடிக்க வாய்ப்பின்றி பண வசதியும் இனறி வறுமையோடு போராடி
வந்தார். அப்போது அவருக்கு பத்மஸ்ரீ விருது
கிடைத்திருந்தது. ஆனாலும் வறுமை தரித்தர வாழ்வு வாழ
வைத்துவிட்டது என்பது மட்டும் நிஜம்.
இன்றும் பழைய படங்களைப் பார்க்கும் போது நாகையாவின்
குண சிறப்புகளை காணலாம். அப்பா பாத்திரத்தின் மவுசை
அதிகரித்துக் காட்டிய நடிகர்களுள் நாகையாவுக்கும்
சிறப்பான இடமுண்டு. அதுமட்டுமல்ல பல்வேறு சிறப்பான
பாத்திரங்களை எல்லாம் ஏற்று நடித்து உயிர்பாக்கிக்
காட்டியவர்.
இந்தக் கலைஞனுக்கு சென்னை பனகல் பூங்காவில் ஒரு சிலை
வைக்கப்பட்டுள்ளது. இந்த விவரம் பலருக்கு தெரியாமல்
இருக்கலாம். ஆனாலும் அவர் வாழ்ந்த காலத்தில் அவர்
வாழ்க்கை பாதுகாப்பாக அமைய எவறும் தடுத்தாட்
கொள்ளவில்லை. |