கடந்த
60களிலும் 70களிலும் தென்னிந்தியாவின் பட்டி
தொட்டிகளில் எல்லாம் இந்த குயிலின் இசையை கேட்காதவர்களே
இல்லை; தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்ற நான்கு
மொழிகளில் உள்ள இசை ரசிகர்களை தன் இனிய குரலினால்
கட்டிப்போட்டு வைத்த பெருமை இவருக்கு உண்டு.
தென்னிந்திய லதாமங்கேஷ்கர் என்று அழைக்கப்படுபவர்.
அமைதியான தோற்றம்... கொஞ்சும் தமிழ் பேச்சு...
போன்றவைகளுக்கு சொந்தக்காரர்.ஆம்... தென்னிந்திய
மொழிகளில் பல்லாயிரக்கணக்கான பாடல்களை பாடி சாதனைப்
புரிந்துள்ள பி.சுசீலாவே இத்தகைய பெருமைக்கு
சொந்தக்காரர். சமீபத்தில் இந்திய அரசு இவருக்கு
உயர்ந்த விருதான பத்மபூஷன் விருதை வழங்கி
கெளரவித்துள்ளது தென்னிந்தியர்களுக்கு - குறிப்பாக
தமிழ் திரைப்பட உலகிற்கு பெருமை தரும் விஷயம் என்றால்
அதுமிகையல்ல.
ஆந்திர மாநிலத்தில் உள்ள விஜயநகரத்தில் 1935ஆம்
ஆண்டு இசை ஆர்வம் கொண்ட குடும்பத்தில் பிறந்ததாலோ
என்னவோ இயற்கையிலே பி.சுசீலாவிற்கு இசையின் மேல் ஓர்
ஆர்வம். இவரின் இசை ஆர்வத்தை கண்ட இவரது குடும்பத்தினர்
அவருக்கு கர்நாடக சங்கீதத்தை கற்றுக் கொடுக்க முடிவு
செய்தனர். இதன் விளைவு சிறுவயதிலேயே பல்வேறு இசை
நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பாடும் வாய்ப்பு பெற்றார்.
அதில் வெற்றியும் பெற்று வந்தார். இந்நிலையில்
விஜயநகரத்தில் உள்ள இசைக்கல்லூரியில் சேர்ந்த சுசீலா
இசைக்கான டிப்ளமோ பட்டத்தில் முதல்வகுப்பில் தேர்ச்சி
பெற்றார்.
இந்நிலையில் அகில இந்திய வானொலியில் பல்வேறு
நிகழ்ச்சிகளில் பாடுவதற்கான வாய்ப்புகள் சுசீலாவிற்கு
கிடைக்க வானொலியில் சுசீலாவின் குரல் ஒலிக்கத்
தொடங்கியது.
அன்றைய காலக்கட்டத்தில் தெலுங்கில் பிரபலமான
இசையமைப்பளராக விளங்கிய நாகேஸ்வரராவ் அவர்கள் தன்
இசையமைப்பில் பாடுவதற்கு புதிய குரல்களை
தேடிக்கொண்டிருந்தார். புதிய குரலுக்காக அகில இந்திய
வானொலியை அவர் அணுக, வானொலி நிலையத்தார் அவரிடம் ஐந்து
நபர்களை அனுப்பினார்கள். அந்த ஐந்து நபர்களில் ஒருவர்
பி.சுசீலா. பல்வேறு தேர்வுகளுக்கு பிறகு சுசீலாவின்
குரல் தேர்வு செய்யப்பட்டது.
முதன் முதலாக சுசீலாவின் குரல் 1952ல் திரைக்கு
வந்த 'பெற்றதாய்' படத்தின் மூலம் ஒலிக்கத் தொடங்கியது.
இப்படம் தெலுங்கில் 'கன்னத்தலி' என்ற பெயரில்
வெளிவந்தது. ஏ. நாகேஸ்வரராவ் மற்றும் ஜி. வரலட்சுமி
முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இப்படத்தில் எ.எம்.
ராஜாவுடன் இணைந்து சுசீலா பாடிய முதல் பாடல் 'எதுக்கு
அழைத்தாய்...' என்பதாகும்.
இதன் பிறகு சுசீலா ஏவிஎம் நிறுவனத்தின் ஊழியராக சில
ஆண்டுகள் பணியாற்றினார். ஏவிஎம் நிறுவனம் இதற்காக
சுசீலாவிற்கு மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை சம்பளமாக
அளித்தது. ஏவிஎம் நிறுவனர் ஏ.வி. மெய்யப்பச்
செட்டியாருக்கு எப்போதுமே எல்லாம் நேர்த்தியாகவும்,
சுத்தமாகவும் இருக்க வேண்டும். அந்த வகையில் அவர்
சுசீலாவின் தமிழ் உச்சரிப்பும் சுத்தமாக இருக்க
வேண்டும் என்று விரும்பினார். இதனால் சுசீலாவிற்கு
தமிழ் உச்சரிப்பு சரியாக வருவதற்காக தமிழாசிரியர்
ஒருவரை நியமித்தார். அந்தளவிற்கு வார்த்தை
உச்சரிப்புகளுக்கு அந்த காலத்தில் முக்கியத்துவம்
கொடுக்கப்பட்டது. சுத்தமான உச்சரிப்புடன் பாடுகின்ற
போதுதான் அந்தப் பாடல் வரிகள் மக்கள் மனதை தொடும்..
வெற்றி பெறும் என்ற எண்ணமும் அன்றைய காலத்தில் நிலவி
இருந்தது.
இதற்கிடையில் 1955ல் திரைக்கு வந்த 'கணவனே கண் கண்ட
தெய்வம்' படத்தில் வரும் பாடல்கள் மூலம் சுசீலா தமிழகம்
எங்கும் பிரபலமடைந்தார். குறிப்பாக அப்படத்தில் வரும்
'எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுவது...', 'உன்னை கண்
தேடுதே...' போன்ற பாடல்கள் அவரை புகழின் உச்சிக்கே
கொண்டு சென்றது. இதன் பிறகு அதே வருடம் திரைக்கு வந்த
'மிஸ்ஸியம்மா' பாடல்களான 'பிருந்தாவனமும் நந்தகுமாரனும்...',
'அறிய பருவமடா...' போன்ற பாடல்கள் சுசீலாவிற்கு மேலும்
புகழ் சேர்த்தன.
சுசீலா சினிமாவில் பாட வந்த காலத்தில் பி. லீலா,
ஜிக்கி, எம்.எல். வசந்தகுமாரி என்று பல பிரபல பாடகிகள்
கொடிக்கட்டி பறந்து கொண்டு இருந்தனர். இவர்கள்
மத்தியில் சுசீலா தனக்கென ஒரு பாணியை ஏற்படுத்தி தன்
இனிமையான குரலினால் தென்னந்தியா முழுவதும் ஓர் அதிர்வு
அலையை ஏற்படுத்தினார் என்றால் அதுமிகையல்ல.
1955ல் தொடங்கிய இவரது நீண்ட இசை பயணத்தில் 1960 -
1970 வரை முக்கிய காலகட்டம் எனலாம். ஆம் இந்தக்
காலக்கட்டத்தில் திரைக்கு வந்த அனைத்து படங்களிலும்
சுசீலாவின் பாடல்கள் இல்லாமல் இருந்தது இல்லை.
சுசீலாவின் கானகுரல் தென்னிந்திய மொழிகளில் ஒலிக்காத
நாளே இல்லை எனலாம்.
பல்வேறு மாநில விருதுகளும், தேசிய விருதுகளும்
சுசீலாவை தேடி வந்தன. தொடர்ந்து 1969, 1971, 1977,
1982 மற்றும் 1983 ஆகிய ஆண்டுகளில் சிறந்த பாடகிக்கான
தேசிய விருது இவருக்கு வழங்கப்பட்டது. இதுமட்டுமல்லாமல்
தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம் மற்றும் கேரளா ஆகிய
மாநிலங்கள் பல்வேறு விருதுகளை இவருக்கு வழங்கி
கெளரவப்படுத்தியது.
உயர்ந்த மனிதன் படத்தில் வரும் 'நாளை இந்த வேளை
பார்த்து...' பாடலின் மூலம் தமிழில் முதல் தேசிய விருது
பெற்ற சுசீலா எண்ணற்ற நெஞ்சங்களில் இன்றும் நீங்கா இடம்
பெற்றவர் என்றால் அதுமிகையல்ல. மேலும் சிவாஜிகணேசன்,
ஜெயலலிதா நடிப்பில் வெளிவந்த 'சவாலே சமாளி' படத்தில்
வரும் 'சிட்டுக்குருவிக்கென...' என்ற பாட்டும் இவருக்கு
தேசிய விருதினை வாங்கிக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
நாகேஸ்வரராவ், விஸ்வநாதன்-ராமமூர்த்தி,
எம்.எஸ்.விஸ்வநாதன் என்று அன்றைய இசையமைப்பாளர்களின்
இசையில் மட்டுமல்லாமல் இசைஞானி இளையராஜா, ஏ.ஆர்.
ரஹ்மான் மற்றும் இன்றைக்கு பிரபலமாக விளங்கும்
இசையமைப்பாளர்களின் இசையிலும் பாடிய பெருமை
சுசீலாவிற்கு உண்டு.
கடந்த 12 வருடங்களாக திரைப்படங்களில் பாடாமல்
விலகியிருந்த பி. சுசீலா சமீபத்தில் 'சில நேரங்களில்'
என்ற படத்தில் பாடல் ஒன்றை பாடியிருப்பது சிறப்பு.
சினிமாவில் பி. சுசீலா பாட வந்து 50 வருடங்கள்
உருண்டோ டிவிட்ட நிலையில் 2008ஆம் ஆண்டிற்கான பத்மபூஷன்
விருதினை சுசீலாவிற்கு வழங்கி அவரை மேலும்
கெளரபடுத்தியது மத்திய அரசு.
''இன்றைக்கு சினிமாவிற்கு பாடவரும் பாடகர்களும்,
பாடகிகளும் சினிமாவிற்கு பாட வருவதற்கு முன்பு ஒருமுறை
சுசீலாவின் பாடல்களை கேளுங்கள். தமிழ் மொழியை எப்படி
உச்சரிக்க வேண்டும்; எப்படி பாட வேண்டும் என்பதை
சுசீலாவின் பாடல்கள் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்.. அதன்
பிறகு சினிமாவில் பாட வாருங்கள்.. ''என்று எப்போதோ ஒரு
நிகழ்ச்சியில் சுசீலாவைப் பற்றி கவிஞர் வைரமுத்து
கூறியது நினைவிற்கு வருகிறது.
காலங்கள் உருண்டோ டி போனாலும்.. புதிய புதிய
பாடல்கள்.. புதிய புதிய குரல்களில் வந்தாலும் இந்த
குயிலின் 'மயங்குகிறாள் ஒரு மாது..', 'மாலைப் பொழுதின்
மயக்கத்திலே..', 'சொன்னது நீதானா..' போன்ற நெஞ்சை
வருடும், மயக்கும் குரல் உலகெங்கிலும் வாழும் தமிழர்கள்
இல்லத்தில் நேற்றும், இன்றும், என்றும் ஒலித்துக்
கொண்டிருக்கும் என்பது மறுக்க முடியாத நிஜம். |