தமிழ்
  Site Web Yahoo! India Search
 
 
 
ஒகேனக்கல் கூட்டு குடிநீர்த்திட்டமும் ஓட்டு அரசியலும்! அரசியல்
கேடிஸ்ரீ  
மீண்டும் தமிழர்கள், தமிழ் சங்கங்கள், தமிழ் திரைப்படங்கள் திரையிடப்படும் திரையரங்குகள் கன்னட வெறியர்களால் தாக்கப்படும் சம்பவங்கள் பெங்களூரில் அரங்கேற தொடங்கிவிட்டன. தாக்குதலுக்கு காரணம் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம்.

ஒகேனக்கல் கூட்டு குடிநீர்த்திட்டம் தமிழக மக்களின் குறிப்பாக தர்மபுரி - கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் குடிநீர் பிரச்சனையை தீர்க்கும் கனவு திட்டம்.. ஒவ்வொரு தேர்தல்களிலும் அனைத்து கட்சிகளின் தேர்தல் அறிக்கையிலும் தவறாமல் இடம் பெறுவது 'ஒகேனக்கல் கூட்டு குடிநீர்த் திட்டம்'.

இந்நிலையில் கடந்த சட்டப்பேரவை தேர்தலின் போது திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளும் தங்கள் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக 'ஓகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை' சொல்லியிருந்தது. அறிக்கையில் சொல்லிய வண்ணம் அத்திட்டத்தை நிறைவேற்றுவதற்காக தமிழக முதல்வர் கருணாநிதி கடந்த மாதம் இத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். அப்பகுதி மக்களின் கனவு நனவாகும் வேளையில் இத்திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு கர்நாடகாவிலிருந்து கிளம்பியது.

கர்நாடக சட்டப்பேரவைக்கான தேர்தல் அருகாமையில் இருக்கின்ற இந்த நேரத்தில், ஓட்டு வங்கியை குறி வைத்து அங்குள்ள மாநில மற்றும் தேசிய கட்சிகள் இப்பிரச்சனையை கையில் எடுத்துக் கொண்டு களத்தில் குதித்தன.

தேவகெளடாவின் விபரீத ஆசையால் கைக்கெட்டிய முதல்வர் நாற்காலியை ஒரே வாரத்தில் பறிக்கொடுத்த தேசிய கட்சியான பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் முதல்வர் எடீயூரப்பா, முதலில் போராட்டத்தில் குதித்தார். கைவிட்டுப் போன ஆட்சி அதிகாரத்தை மறுபடியும் தக்க வைக்கும் முயற்சியில் தமிழகத்திற்கு பெரிதும் நன்மை தரவிருக்கும் குடிநீர்த்திட்டத்தை தடுத்து நிறுத்தும் விதமாக எந்தவித முன்னறிவிப்பும் இன்றி ஓகேனக்கல் பகுதிக்கு சென்று ஆர்ப்பாட்டம் செய்து பிரச்சனைக்கு பிளையார் சுழிப்போட்டார். இன்று இப்பிரச்சனை அரசியலாக்கப்பட்டு கொழுந்து விட்டு எரிய தொடங்கிவிட்டது.

ஏற்கெனவே காவிரி பிரச்சனையில் இடைக்கால தீர்ப்பினை அமல்படுத்தாமல் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்து தமிழகத்திற்கு எதிராக மோதல் போக்கை கடைபிடித்து தஞ்சை டெல்டா பகுதி விவாசாயிகளின் வாழ்க்கையோடு விளையாடி வரும் கர்நாடகம், தற்போது தமிழகத்திற்கு சொந்தமான ஓகேனக்கல் பகுதியை அழிச்சாட்டியமாக தங்களுக்கே சொந்தம் என்று உரிமை கொண்டாட தொடங்கிவிட்டன. அதற்காக போராட்டமும் நடத்துகின்றன. பயிருக்கான நீரும் கொடுக்க மறுக்கிறது; மக்கள் உயிருக்கு தேவையான குடிநீரும் தர மறுக்கிறது.

இந்நிலையில் தமிழக சட்டப்பேரவையில் நடைப்பெற்றுக் கொண்டிருக்கும் நிதிநிலை கூட்டத்தொடரில் கடந்த மாதம் 27ம் தேதி இப்பிரச்சனை தொடர்பாக உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸடாலின் தீர்மானம் ஒன்றினை கொண்டு வந்தார். அந்த தீர்மானத்திற்கு ஆதரவாக தமிழகத்து அனைத்து கட்சிகளும் ஒன்று திரண்டன.

அரசியல் ஆதாயத்திற்காக கர்நாடக பாரதிய ஜனதா ஒகேனக்கல் பிரச்சினையை கையில் எடுத்திருப்பது துரதிர்ஷ்டவசமானது. அதைவிட ஓகேனக்கல் கர்நாடகத்திற்கு சொந்தமானது என்று எடீயூரப்பா கூறுவது அப்பட்டமான அரசியலே!

கர்நாடக பாரதிய ஜனதாவின் நிலை இது என்றால், தமிழக பாரதிய ஜனதாவோ ஓகேனக்கலுக்கு சொந்தம் கொண்டாடி எடியூரப்பா போராட்டம் நடத்தியதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் ஓகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் விரைந்து செயல்பட வேண்டும் என்றும் கேட்க் கொண்டுள்ளது.

ஆனால் பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர்கள் இதுகுறித்து எந்தவிதமான கருத்தும் இதுவரை தெரிவிக்காமல் மெளனம் காத்து வருகின்றனர்.

கடந்த 2005ஆம் ஆண்டு இப்பிரச்சனை எழுந்த போது அன்றைய தர்மபுரி மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகள் கர்நாடகம் சார்பில் அதிகாரிகள் ஆகியோர் எல்லை வரைபடத்தை வைத்து ஆய்வு செய்து இறுதியில் ஓகேனக்கல் இடைத் திட்டுப்பகுதி, சிற்றருவி போன்றவை தமிழ்நாட்டுக்கு சொந்தமானது என்று உறுதிபட தெரிவித்தார்கள் உண்மை இப்படி இருக்கையில் இன்று சில கன்னட அமைப்புகளும், பாரதிய ஜனதா போன்ற தேசிய கட்சிகளும் ஒகேனக்கல் தங்களுக்கே சொந்தம் என்று கொண்டாடுவது எந்தவிதத்தில் நியாயம்?

கர்நாடக பாரதிய ஜனதாவின் நிலை இப்படி இருக்க.. அங்கு தேசிய கட்சியான காங்கிரசின் நிலை என்னவென்று தெளிவாக இதுவரை அறிவிக்கப்படவில்லை. ஆனால் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் கர்நாடக முதல்வருமான எஸ்.எம். கிருஷ்ணா ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல் வரை தள்ளி போடவேண்டும் என்று பிரதமரை கேட்டுக் கொண்டதாக தெரிகிறது. ஆக தேசிய கட்சியான காங்கிரசும் ஒட்டு வங்கியை மனதில் வைத்து இப்பிரச்சனையை தள்ளிப்போடத்தான் விரும்புகிறதே தவிர, இப்பிரச்சனைக்கு தீர்வு காண முயற்சிக்கவில்லை.

இதுபோல் கர்நாடக முன்னாள் அமைச்சர் நஞ்சே கெளட, ஒகேனக்கல் கர்நாடகத்துக்கு சொந்தமானதுதான் என்றும், ஒகேனக்கல் கூட்டு குடிநீர்த்திட்டம் நிறைவேற்றப்பட்டால் கர்நாடக எல்லை மாவட்டங்களில் குடிநீர்ப் பஞ்சம் ஏற்படும் என்றும் கூறி வருகிறார்.

தமிழகத்தில் ஆளும் தி.மு.க கூட்டணி கட்சிகள் மட்டுமன்றி எதிர்கட்சிகளும் குறிப்பாக அ.தி.மு.க, ம.தி.மு.க போன்றவைகளும் இப்பிரச்சினையில் ஒருமித்த கருத்து கொண்டுள்ளது. இத்திட்டத்தை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்றும் அதற்காக மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்று அனைத்து கட்சிகளும் கூறி வருகின்றன. இத்திட்டத்தை எந்தப் பிரச்சினை வந்தாலும் நிறைவேற்றியே தீர்வோம் என்று தமிழக முதல்வர் கருணாநிதியும் அறிவித்துள்ளார்.

இதனையடுத்து கர்நாடகாவில் கன்னட அமைப்புகள் சில தமிழக பேருந்துகளின் மீதும், பெங்களூர் தமிழ்ச் சங்கம் மீதும் தாக்குதல் நடத்தியது. இது மட்டுமல்லாமல் பெங்களூரில் தமிழ் திரைப்படங்கள் திரையிடப்படும் திரையரங்குகளிலும் தாக்குதல் நடத்தினர்.

இதுகுறித்து தமிழ்ச் சங்கத் தலைவர் சண்முகசுந்தரம் தெரிவிக்கையில், ''இங்கு தாக்குதலில் ஈடுபட்டோ ர் மீது காவல்துறையினர் எந்தவிதமான நடவடிக்கையில் எடுக்கவில்லை என்றும் இவ்விஷயத்தில் பிரதமர் மன்மோகன்சிங் உடனடியாக தலையிட வேண்டும்..'' என்றும் கேட்டுக் கொண்டார்.

ஒகேனக்கல் குடிநீர்த் திட்டத்தை நிறுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இது தொடர்பாக தமிழக அரசுக்கு மத்திய அரசு அறிவுரை வழங்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு கர்நாடக அரசு கடிதம் எழுதவிருப்பதாக அம்மாநில தலைமைச் செயலாளர் சுதாகர் ராவ் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்பிரச்சனையில் இரண்டாவது முறையாக தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நேற்று (ஏப்ரல் 01) இரண்டாவது முறையாக 'ஒகேனக்கல் பிரச்சனைல் மத்திய அரசு உடனடியாக தலையிட வேண்டும்' என்ற தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக சட்டப்பேரவையில் இப்பிரச்சினை குறித்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு முதல்வர் கருணாநிதி பதிலளித்து பேசுகையில், ''தமிழகம் எப்போதும் தன் பக்கத்து மாநிலங்களுடனும், அந்த மாநில மக்களுடனும் நட்பையும், நல்லுறவையும் பேணி வளர்த்து வருகிறது. எனவே ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை குறிப்பிட்ட காலத்துக்குள் நிறைவேற்ற மத்திய அரசு முழு ஒத்துழைப்பையும், உதவியையும் தமிழக அரசுக்கு வழங்க வேண்டும். கர்நாடக அரசு கடைப்பிடித்து வரும் எதிர்ப்பு போக்கை தடுத்து நிறுத்த வேண்டும்..'' என்று கூறினார்.

பெங்களூரில் தமிழ்த் திரைப்படங்கள் திரையிடப்படும் திரையரங்குகள் மிரட்டப்படுவதும், கர்நாடகம் முழுவதும் தமிழ் தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பு நிறுத்தப்படும் என்றும் பகிரங்கமாக சில கன்னட அமைப்புகள் அறிக்கைவிட்டுள்ளது நமது ஒருமைப்பாட்டுக்கும், இறையாண்மைக்கும் விடப்பட்ட சாவல்களாகவே கருத வேண்டியிருக்கிறது.

இப்பிரச்சினையில் தமிழ் திரைப்பட உலகம் மீண்டும் கைகோர்த்து மாபெரும் உண்ணாவிரதம் ஒன்றை வருகிற 4ம் தேதி சென்னையில் நடத்தவிருக்கிறது. உண்ணாவிரதத்தில் தமிழ் திரைப்பட நடிகர், நடிகைகள் மற்றும் திரைப்பட சம்மந்தப்பட்ட அனைவரும் கலந்து கொள்ளவிருக்கின்றனர். அன்று தமிழகம் முழுவதும் பகல் காட்சி ரத்து செய்யப்படுகிறது.

தமிழ்த் திரைப்பட உலகின் போராட்டங்களை அடுத்து கர்நாடகாவில் கன்னட திரைப்பட உலகத்தினரும் உண்ணாவிரதம் மேற்கொள்ளவிருப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.

அதே போல் ஒகேனக்கல் குடிநீர்த்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வருகிற 10ம் தேதி கர்நாடகாவில் பொதுவேலைநிறுத்தத்திற்கு அகில கர்நாடக எல்லை போராட்டக் குழுவின் தலைவர் வட்டாள் நாகராஜ் அழைப்புவிடுத்துள்ளார்.

தமிழகத்தில் உரிமைகளுக்காக போராடுகிற போதெல்லாம் கர்நாடகத்தில் வாழும் தமிழர்கள் தாக்கப்படுவதும், தமிழக பேருந்துகள் அடித்து நொறுக்கப்படுவதும் வாடிக்கையான விஷயமாகிவிட்டது. மத்திய அரசுடன் இன்று இணைக்கமான சூழலில் இருக்கும் தமிழக அரசு இப்பிரச்சினைக்காக மத்திய அரசிடம் உரத்து குரல் கொடுக்க வேண்டும் என்பது தமிழக மக்களின் எதிர்பார்ப்பு.

ஒரு பக்கம் பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை கட்ட முற்படுகிறது. ஒரு பக்கம் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் முல்லைப் பெரியாறு அணை மட்டத்தை உயர்த்த கேரளா பிடிவாதம் பிடிக்கிறது. காவிரி பிரச்சினையில் இடைக்காலத் தீர்ப்பை துச்சமாக மிதித்து டெல்டா விவசாயிகளின் வாழ்வோடு விளையாடி வருகிறது கர்நாடகா.. இவற்றுக்கும் மேலாக தற்போது ஒகேனக்கல் பிரச்சனையிலும் தமிழகத்திற்கு எதிராக களம் இறங்கியுள்ளது.

தமிழகத்தின் அண்டை மாநிலங்களாக கர்நாடகம், கேரளம், ஆந்திரா ஆகியவை காவிரி, பெரியாறு, பாலாறு போன்ற விஷயங்களில் தமிழக மக்களுக்கு எதிராகவே செயல்பட்டு வருவதும், தமிழகத்திற்கான உரிமையை தட்டிப் பறிப்பதும் எந்த வகையில் சேர்த்துக் கொள்வது.

அண்டை மாநிலங்களின் இந்த போக்கு தேசிய ஒற்றுமைக்கே ஊறுவிளைவித்துவிடுமோ என்ற அச்சம் பரவலாக எழுகிறது. இந்திய குடிமகன் ஒருவன் இந்தியாவில் எந்தப் பகுதியிலும் வாழலாம்..சொத்துகள் வாங்கலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தாலும், இன்று கர்நாடகம், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் உள்ள சில அமைப்புகள் பிறமாநிலத்தைச் சேர்ந்தவர்களிடம் நடந்து கொள்ளும் முறையும், நதி நீர்ப் பிரச்சனையில் தொடர்ந்து தமிழகத்திற்கு அண்டை மாநிலங்கள் இழைத்து வரும் தீங்கையும் எண்ணிப் பார்க்கையில் இந்திய தேச ஒற்றுமைக்கு குந்தகம் ஏற்பட்டுவிடுமோ என்ற கேள்வி எழுகிறது.

இந்த சூழலில் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு எந்தவிதமான பாரபட்சமும் பார்க்காமல் நாட்டு நலன் ஒன்றையே குறிக்கோளாக கருதி நல்லதோர் தீர்விற்கு வழிகாட்டப்போகிறதா... அல்லது வரப்போகிற கர்நாடக தேர்தலின் ஒட்டுவங்கியை கருத்தில் கொண்டு செயல்பட போகிறதா?..

காங்கிரஸ் மட்டுமல்ல தேசிய கட்சிகள் என்று தங்களை சொல்லிக் கொள்ளும் பாரதிய ஜனதா மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் இப்பிரச்சனையில் என்ன நிலைப்பாட்டினை எடுக்க விருக்கின்றன என்பதே தற்போதைய கேள்வி!

அதுபோல் இவ்விஷயத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் கைகோர்த்து தங்கள் உறுதியான நிலைப்பாட்டினை மத்திய அரசுக்கு தெரிவிக்க வேண்டுவதும் காலத்தின் கட்டாயமாகும்.

கன்னடவெறியர்களின் அராஜகப்போக்கினை முளையிலேயே கிள்ளி , இந்திய ஒருமைப்பாட்டுக்கும், இறையாண்மைக்கும் எந்த விதமான இழுக்கும் ஏற்படாதவாறு காக்க வேண்டிய முக்கிய பொறுப்பில் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு இருக்கிறது. இதனைத கருத்தில் கண்டு மத்திய அரசு செயல்பட வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தமிழக மக்களின் எதிர்பார்ப்பு.!

தொகுப்பு April 3rd, 2008
மேலும்

மேலும்