அ.தி.மு.க.
வின் வழக்கறிஞரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஜோதி
கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென்று கட்சியின்
அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து விலகி கொள்வதாக
பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது அறிவித்தார்.
சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரின் ஆதிக்கம்தான்,
தான் அ.தி.மு.கவிலிருந்து விலகுவதற்கான காரணம் என்று
விலகுவதற்கான காரணத்தை கூறினார். இது அரசியல்
வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதுமட்டுமல்ல சசிகலா குடும்பத்தினரின் ஆதிக்கம்
இருக்கும் வரை அ.தி.மு.கவிற்கு எதிர்காலம் இல்லை என்று
ஆருடமும் சொன்னார்.
அ.தி.மு.கவில் ஜெயலலிதாவிற்கு அடுத்து சசிகலாதான்
என்பது அ.தி.மு.கவின் கடைசி தொண்டர் வரை அறிந்த
ஒன்றுதான். சசிகலாவின் குடும்பத்தினரின் ஆதிக்கமும்
இன்று நேற்றல்ல... என்பதும் அனைவருக்கும் தெரிந்த
நிலையில் வழக்கறிஞர் ஜோதிக்கு மட்டும் இப்போதுதான்
தெரிந்தது போலும்.
அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து விலகினாலும்,
தான் எந்த கட்சியிலும் சேரப்போவதில்லை என்று அறிவித்த
ஜோதி, சில நாட்களுக்குள்ளேயே ஆளும் கட்சியில் முதல்வர்
முன்ணிலையில் தன்னை இணைத்துக் கொண்டது
குறிப்பிடத்தக்கது. பாதுகாப்பு கருதியே தி.மு.கவில்
தன்னை இணைத்துக் கொண்டதாக தன்னிலை விளக்கம் ஒன்றும்
அளித்தார்.
அ.தி.மு.க பொதுசெயலர் ஜெயலலிதாவின் வழக்குகள்
மற்றும் அ.தி.மு.க வழக்குகள் ஆகியவற்றை கவனித்து வந்த
வழக்கறிஞர் ஜோதி அ.தி.மு.கவில் முக்கிய இடத்தில்
வைக்கப்பட்டு மாநிலங்களவை உறுப்பினராகவும் வலம் வர
செய்தது அ.தி.மு.க தலைமை.
தற்போது அவரின் மாநிலங்களை உறுப்பினர் பதவி காலம்
முடிவடைந்த நிலையில் அ.தி.மு.கவின் மீது இப்படி ஒரு
குற்றச்சாட்டை கூறுவது ஏன்? என்பதே அ.தி.மு.க வில்
உள்ள அனைத்து மட்ட தொண்டர்கள் இடையே நிலவும் கேள்வி!
எல்லாம் மாநிலங்களவை உறுப்பினர் என்ற பதவி படுத்தும்
பாடு என்றால் அதுமிகையல்ல!
மீண்டும் தனக்கு மாநிலங்களவை உறுப்பினராக்குவதற்கு
ஓர் வாய்ப்பு அளிக்கப்படும் என்று மிகவும்
எதிர்பார்த்தார் ஜோதி. அதனை அவரே பத்திரிகையாளர்கள்
சந்திப்பிலும் கூறினார். ஆனால் இம்முறை அவருக்கு அந்த
வாய்ப்பு அ.தி.மு.கவில் அளிக்கப்படவில்லை.
எதிர்பார்த்த வாய்ப்பு கிடைக்காததால் பெருத்த ஏமாற்றம்
அடைந்த ஜோதி பத்திரிகையாளர்கள் கூட்டத்தை கூட்டி
அ.தி.மு.கவின் மீது அனல் பறக்கும் குற்றச்சாட்டை அள்ளி
வீசினார்.
ஆக அ.தி.மு.க வழக்கறிஞர் ஜோதிக்கு
அ.தி.மு.கவிலிருந்து விலகியதற்கு காரணம் சசிகலா
குடும்பத்தினரின் ஆதிக்கம் முக்கிய காரணமல்ல..!
மாநிலங்களவை உறுப்பினர் பதவி கிடைக்கவில்லை என்பதே.
பதவியில் இருக்கும் வரை ஆஹா, ஓஹோவென்று கட்சி
தலைமையை துதிப்பாடுபவர்கள், கட்சி தன்னை
புறக்கணித்தாலோ அல்லது பதவி போய்விட்டாலோ அதே தலைமையை
கடுமையான வார்த்தைகளால் விமர்சிக்கவும், தலைமையை
விட்டு விலகவும் தயங்குவதில்லை. இது அ.தி.மு.கவில்
மட்டுமல்ல, எல்லா கட்சிகளிலுமே பதவிகளுக்காகவும்,
புகழுக்காகவும் ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்கிறது.
கடந்த சட்டப்பேரவை தேர்தலின் போது தி.மு.க
கூட்டணியில் இடம்பெற்றிருந்த ம.தி.மு.க கடைசி
நேரத்தில், தி.மு.க கூட்டணியிலிருந்து விலகி அ.தி.மு.க
கூட்டணியில் சேர்ந்தது. தொகுதி உடன்பாட்டில் ஏற்பட்ட
பிரச்சினைகள் தான் ம.தி.மு.க தி.மு.க
கூட்டணியிலிருந்து விலகி வருவதற்கு முக்கிய காரணமாக
பேசப்பட்டது.
அதுபோல் சட்டப்பேரவை தேர்தலின் போது அ.தி.மு.கவுடன்
கூட்டணி வைத்து போட்டியிட்ட விடுதலை சிறுத்தை இயக்கம்,
பிறகு நடைப்பெற்ற உள்ளாட்சித் தேர்தலின் போது
திடீரென்று கூட்டணியிலிருந்து விலகி தி.மு.க
கூட்டணிக்குள் தன்னை இணைத்துக் கொண்டது.
தி.மு.க கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் முக்கிய
கட்சியான பா.ம.க தற்போது நடைபெற்ற மாநிலங்களவை
தேர்தலில் தங்களுக்கு ஓர் இடம் ஒதுக்க வேண்டும் என்று
போர்க்கொடி தூக்கி தி.மு.க கூட்டணியில் சலசலப்பை
ஏற்படுத்தியது. தற்போது அந்த சலசலப்பு ஒருவழியாக
அடங்கினாலும் கூட்டணி கட்சிகளுக்குள்ளான உறவுகள்
நீருபூத்த நெருப்பாகவே இருக்கின்றன.
அன்று மக்கள் சேவைக்காகவும், நாட்டு நலன்களை
காப்பதற்காகவும் அரசியலில் ஈடுபட்டவர்கள் அதிகம்.
கொண்ட கொள்கைகளுக்காக பதவி, பட்டம் ஆகியவற்றை துறந்த
அரசியல்வாதிகள் அதிகம் இருந்தனர். ஆனால் இன்று
பதவிக்காகவும், அது தரும் சுகத்திற்காகவும் அடிக்கடி
கட்சி மாறுவதும், கொள்கைகளை மாற்றிக் கொள்ளும்
அரசியல்வாதிகளே அதிகம் காணப்படுகின்றனர்.
அதுபோல் தேர்தல் காலத்தில் கட்சிகளுக்குள் ஏற்படும்
கூட்டணிகளும் வாக்கு வங்கியை சார்ந்தே அமைகிறதே தவிர,
அந்த கூட்டணி கொள்கை கூட்டணிகளாக இருப்பதில்லை.
இத்தகைய கூட்டணிகளுக்குள் தேர்தலுக்கு பின்பு மோதலும்,
முட்டலும் ஏற்படுகிறது. ஆட்சி அதிகாரத்திற்காகதான்
கூட்டணிகள் உருவாகின்றனவே தவிர அங்கு கொள்கை,
இலட்சியங்களுக்கு இடமிருப்பதாக தெரியவில்லை. அதனால்தான்
அந்த கூட்டணிகளும் தேர்தலுக்குப் பிறகு சிதறு
தேங்காயாக சிதறிவிடுகிறது.
ஆக தங்கள் சுயநலத்திற்காக, தங்களின்
ஆதாயத்திற்காகத்தான் அதிருப்தியாளர்கள் கட்சி விட்டு
கட்சி தாவுகிறார்களே தவிர, தங்கள் கொண்ட கொள்கை,
இலட்சியம் மற்றும் அது சார்ந்த விஷயங்களுக்காக கட்சி
மாறவில்லை என்பதும், ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றவே
தேர்தல் கூட்டணிகள் ஏற்படுகின்றன என்பதும்
மறுக்கமுடியாத கசப்பான உண்மை. |