தமிழ்
  Site Web Yahoo! India Search
 
 
 
மாநிலங்களவை தேர்தல்: பரபரப்பான திருப்பங்கள்! அரசியல்
கேடிஸ்ரீ  
நடைபெறவிருக்கும் ஆறு மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலையொட்டி தமிழகத்தில் பரபரப்பு காட்சிகளுக்கும், விறுவிறுப்பு காட்சிகளுக்கும் பஞ்சமில்லை. தேர்தலில் போட்டியிட ஆளும் தி.மு.க கூட்டணி கட்சிகளும், அ.தி.மு.க கூட்டணியும் தயாராகி தங்களுக்கான வேட்பாளர்களை களம் இறக்கி விட்டன.

தி.மு.க தலைமையிலான கூட்டணி அரசு பதவியேற்றது முதல் பல்வேறு விஷயங்களில் ஆளும் தி.மு.க. அரசினை எதிர்த்து போராட்டங்களும், கோஷங்களும் எழுப்பி வந்து ஆளும் தரப்பை பல சமயங்களில் தர்மசங்கடமான நிலைக்கு கொண்டு வந்தது கூட்டணியின் முக்கிய கட்சியான பா.ம.க.

பா.ம.கவின் இத்தகைய செயல்களால் தி.மு.கவிற்கு, அக்கட்சியின் மீது அதிருப்தி நிலவியது. இப்படி தி.மு.க, பா.ம.கவிற்கு அடிக்கடி நிகழும் உரசல்களும், மோதல்களும் கூட்டணியில் பிளவை ஏற்பட்டுவிடுமோ என்ற தோற்றத்தை தமிழக மக்களிடையே ஏற்படுத்தியது.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் முதல்வர் கருணாநிதியை சந்தித்தது பலரின் புருவங்களை உயர்த்தியது. இவர்களின் சந்திப்பு மிக முக்கியமான சந்திப்பாக கருதப்பட்டது. பரஸ்பரம் இரு கட்சிகளுக்குள் இருக்கும் பிரச்சினைகளை சுமூகமாக தீர்க்க இச்சந்திப்பு ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்துவிட்டதாகவே பலரும் கருதினர். இதற்கு தகுந்தாற் போல் முதல்வரை சந்தித்துவிட்டு வெளியில் வந்த டாக்டர் ராமதாஸ் தி.மு.கவும், பா.ம.க.வும் உள்ள உறவைப் பற்றி கூறுகையில், ''தி.மு.க ஆட்சிக்கான எங்கள் ஆதரவு 100க்கு 200 சதவீதம் தொடரும்..'' என்று கூறியது கூட்டணியை உறுதி செய்வதாகவே இருந்தது.

இதனை அடுத்து அரசல், புரசல்களாக தி.மு.க, பா.ம.க உறவு நிலைப் பற்றி வந்த பல்வேறு யூகங்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

ஆனால் அது முற்றுப்புள்ளி அல்ல; வெறும் 'கமா'தான் என்பது மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர் நியமனத்தில் பா.ம.கவுக்கு ஒரு இடம் கண்டிப்பாக வேண்டும் என்ற ராமதாசின் கோரிக்கையின் மூலம் வெளிப்பட்டது.

முதல்வருடன் ராமதாசின் சந்திப்பே மாநிலங்களவை தேர்தலில் பா.ம.கவிற்கு ஓர் இடம் வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தவதற்காகவே நடைபெற்றதாகவே தெரிகிறது. இதன் மூலம் பா.ம.க, தி.மு.க கூட்டணிக்குள் மீண்டும் உரசல் ஏற்பட்டுள்ளது.

ஆனால் ராமதாசின் கோரிக்கையை எடுத்த எடுப்பிலேயே முதல்வர் கருணாநிதி நிராகரித்தது மட்டுமல்லாமல் தன் பக்க நியாயங்களை கூறும் வகையில் அறிக்கை ஒன்றையும் பத்திரிகையில் வெளியிட்டார். இருப்பினும் பா.ம.க பிடிவாதமான போக்கையே கடைப்பிடித்து வந்தது.

சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கைப்படி ஒரு வேட்பாளர் வெற்றி பெற 34 வாக்குகள் தேவை. தி.மு.க.கூட்டணியில் குறைந்தது 4 வேட்பாளர்கள் பிரச்சனையின்றி தேர்வு செய்யப்படலாம். அ.தி.மு.கவில் ஒரு உறுப்பினரை எளிதாக தேர்வு செய்துவிடலாம். அ.தி.மு.கவில் இரண்டாவது உறுப்பினரை தேர்வு செய்ய வேண்டும் என்றால் அக்கட்சிக்கு இன்னும் 2 வாக்குகள் தேவை. அதுபோல் தி.மு.க கூட்டணியின் ஐந்தாவது வேட்பாளர் வெற்றி பெற 3 வாக்குகள் தேவைப்படும்.

கடந்த முறை நடைப்பெற்ற மாநிலங்களவை தேர்தலில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு தேர்தல் சுமூகமாக முடிவடைந்தது. ஆனால் இம்முறை ஆறாவது வேட்பாளர் வெற்றி அவ்வளவு எளிதல்ல...

கடும் போட்டி நிச்சயம் என்ற நிலையில் ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினர்களின் வாக்கும் மிகமுக்கியமானதாகவே கருதப்பட்டது.

தி.மு.க சார்பாக இருவர், காங்கிரஸ் சார்பாக இருவர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பாக ஒருவர் களம் காணவிருப்பதாக முதல்வர் கருணாநிதி அறிவிப்பை அடுத்து பா.ம.கவின் கோரிக்கை முற்றிலும் ஒதுக்கப்பட்டது. காங்கிரசிற்கு இரண்டு இடங்களை ஒதுக்கியதன் மூலம் பா.ம.கவிற்கு செக் வைத்துவிட்டார் முதல்வர் கருணாநிதி.

இந்நிநலையில் பா.ம.கவின் நிலைப்பாடு என்ன? தேர்லை புறக்கணிக்கப் போகிறதா? இல்லை கூட்டணி கட்சிகளை ஆதரிக்கப் போகிறதா? என்ற கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்திற்கு பா.ம.க தள்ளப்பட்டது.

இதற்கிடையில் யாரும் எதிர்பாராத நிலையில் ம.தி.மு.கவும், பா.ம.கவும் மாநிலங்களவை தேர்தல் குறித்து எடுத்த திடீர் முடிவால் இம்முறையும் போட்டியின்றி வேட்பாளர்கள் தேர்வு செய்வதற்கான சாத்தியக்கூறு ஏற்பட்டுள்ளது.

அ.தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் ம.தி.மு.க திடீரென தான் போட்டியிட விரும்பவில்லை என அறிவித்து அ.தி.மு.கவுக்கு அதிர்ச்சியை அளித்தது. இது குறித்து ம.தி.மு.க பொதுசெயலர் வைகோ வெளியிட்ட அறிக்கையில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தந்த அ.தி.மு.க பொதுசெயலர் ஜெயலலிதாவிற்கு நன்றி தெரிவிப்பதாகவும், கட்சியின் ஆட்சி மன்றக்குழுக் கூட்டத்தில் விவாதித்ததில் இத்தேர்தலில் ம.தி.மு.க போட்டியிடுவது இல்லை என்று முடிவு செய்யப்பட்டது என்று அறிவித்தார்.

ம.தி.மு.க போட்டியில் வெற்றி பெற இன்னும் இரண்டு வாக்குகள் தேவைப்படும் நிலையில், விஜயகாந்தின் வாக்கினை பெற முயற்சி எடுத்ததாகவும் ஆனால் அவர் அதுகுறித்து தெளிவான பதில் அளிக்கவில்லை என்றும் செய்திகள் கூறுகின்றன. இதனாலேயே ம.தி.மு.க போட்டியிடவில்லை என்றும் சொல்லப்படுகிறது.

இதே போல் பா.ம.க தலைவர் ராமதாசை காங்கிரசின் முக்கிய தலைவர்கள் சந்தித்து பேசியதை அடுத்து பா.ம.க கடைசியில் தி.மு.க கூட்டணியை ஆதரிப்பது என்ற நிலையை எடுத்தது. ஒருவிதத்தில் பா.ம.க இந்த முடிவு எடுக்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டது.

இந்த திடீர் திருப்பதால் மாநிலங்களவை தேர்தலில் போட்டிக்கான வாய்ப்பு இல்லாமல் போனது என்றாலும் வேட்புமனுதாக்கலுக்கு இன்னும் அவகாசம் இருப்பதால் கடைசி நேரத்தில் அ.தி.மு.க இரண்டாவது வேட்பாளரை நிறுத்தலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஜெயலலிதாவும் போட்டியை விரும்புவதாக தெரிகிறது.

ஒருவேளை அ.தி.மு.க சார்பாக இரண்டாவது வேட்பாளர் நிறுத்தப்பட்டால், அந்த வேட்பாளர் வெற்றி பெற இரண்டு வாக்குகள் தேவை. இரண்டு வாக்குகளை பெற அ.தி.மு.க எந்த வகையில் காய்களை நகர்த்தப் போகிறது என்பதே இப்போதைய கேள்வி!

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது அ.தி.மு.கவினர் வாக்கினை பதிவு செய்து பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது போல் ஏதாவது ஒன்று நிகழவும் வாய்ப்புகள் இருக்கிறது.

அ.தி.மு.க பொதுசெயலர் ஜெயலலிதா இரண்டாவது வேட்பாளரை நிறுத்தப் போகிறாரா? அல்லது போட்டியின்றி அனைத்து வேட்பாளர்களும் தேர்வு செய்யப்படப் போகிறார்களா என்பது அ.தி.மு.கவின் அடுத்த கட்ட நடவடிக்கையை பொறுத்தே இருக்கும்.

மாநிலங்களவை தேர்தலுக்காக தற்போது கூட்டணி கட்சிகளுடன் சமரசப் போக்கை கடைப்பிடிப்பதாக பா.ம.க. அறிவித்தாலும் தி.மு.கவிற்கும் பா.ம.கவிற்கும் இடையே ஏற்பட்ட முட்டல்களும், மோதல்களும் தொடரும் என்றே தோன்றுகிறது.

தி.மு.க, பா.ம.க மோதலில் தற்போது வெற்றி பெற்றது முதல்வர் கருணாநிதியின் சாமர்த்தியமான காய் நகர்த்தலே என்றால் அதுமிகையல்ல!

தொகுப்பு Published on 14th March, 2008
மேலும்

மேலும்