கடந்த
2007ஆம் ஆண்டின் இறுதியில் உலகெங்கும் மாறாத சோகத்தை
ஏற்படுத்திவிட்டது பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனசிர்
புட்டோ வின் படுகொலை. இன்று உலகநாடுகள் பல தீவிரவாத
அச்சுறுத்தலின் பிடியில் சிக்கிக் கொண்டு திணறுகின்றன.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனசீர் புட்டோ வின்
படுகொலையே இதற்கு சான்று.
பாகிஸ்தானில் வளர்ந்து வரும் பயங்கரவாதம்,
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் அதிகரித்து வரும்
நக்சல் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் போன்றவைகளை யாரும்
சாதாரணமாக எடுத்துக் கொள்ளமுடியாது. காஷ்மீர்
தீவிரவாதிகளிலிருந்து, தமிழீழ விடுதலைப் புலிகள் வரை
நம் நாட்டின் பாதுகாப்புக்கு சவால் விடுவதாக
இருக்கின்றன என்றால் அதுமிகையல்ல.
தீவிரவாதங்கள் இந்தியாவில் தலைதூக்காதவாறு
பார்த்துக் கொள்ள வேண்டும் என்று தேசிய பாதுகாப்பு
ஆலோசகர் எம்.கே. நாராயணன் அவர்கள் கூறியது
குறிப்பிடத்தக்கது.
உலகமயமாக்கல் என்ற பெயரில் இன்று நம் நாட்டில்
பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்கள் தொழில் தொடங்க ஆர்வம்
காட்டி வருவதும், அத்தகைய நிறுவனங்களை தங்கள்
மாநிலங்களில் தொழில் தொடங்க பல்வேறு மாநிலங்கள்
அழைப்புவிடுவதும் நாடு முன்னேற்ற பாதையில் செல்வதற்கான
அறிகுறி என்று பலர் சொல்லலாம்.
குறிப்பாக தமிழகத்தில் கடந்த ஓராண்டாக பல்வேறு
வெளிநாட்டு நிறுவனங்கள் தொழில்தொடங்க முன்வருவது,
தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திட்டுள்ளது.
அதே நேரத்தில் பல்வேறு மாநிலங்களில் - ஏன்
தமிழகத்திலும் கூட - நக்சல், விடுதலைப் புலிகள் மற்றும்
பல்வேறு தீவிரவாத அமைப்புகளின் பெயரால் வன்முறைகளும்,
வெடிகுண்டு கலாசாரமும் பெருகி வருவது சாதாராண
மக்களிடையே பெரும் அச்சத்தையும், கவலையும் அளித்து
வருகிறது.
இப்படி தீவிரவாத செயல்கள் பெருகி வருவதை தடுக்க
மத்திய மாநில அரசுகள் உரிய முயற்சி எடுக்கவில்லை
என்றால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிய அளவில்
பாதிக்கப்படும். அன்றாட வாழ்க்கையில் பாதிப்பு
ஏற்படுகின்ற போது அங்கு எப்படி பொருளதார வளர்ச்சியை
காணமுடியும்.
ஒரு பக்கம் பயங்கரவாதமும், தீவிரவாத செயல்களும்
அதிகரிக்க, மற்றொரு பக்கம் அத்தியாவசியமான பொருட்களின்
விலை ஏற்றம் பாமர மக்களை சொல்லொணா துயரத்தில்
ஆழ்த்தியுள்ளது. இதற்கிடையில் மாநிலத்திற்கு மாநிலம்
நதிநீர் பிரச்சினையில் சுமூகமான தீர்வு காணமுடியாத
சூழலில் விவசாயிகள் பிரச்சினை அதிகரித்து பல்வேறு
மாநிலங்களில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும்
நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது மற்றொரு பெரும் சோகம்.
ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமானது அந்த
நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பு. அந்த வகையில் நம்
நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட வேண்டும்.
அப்போதுதான் நம் நாடு எல்லாவகையிலும் வளர்ச்சியை எட்ட
முடியும். அதற்கான முயற்சியில் மாநில, மத்திய அரசுகள்
ஈடுபட வேண்டும்.
பயங்கரவாதிகளிடமும், தீவிரவாதிகளிடமும் மத்திய அரசு
மென்மையான போக்கினை கடைப்பிடிக்காமல் அவர்கள் மேல்
கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இன்று
மத்திய மாநில அரசுகளுக்கு உடனடி தேவை தீவிரவாத
அமைப்புகளுக்கு எதிரான நடவடிக்கைகளை
கட்டுப்படுத்துவதற்கான உறுதியான அமைப்பு மற்றும்
நடவடிக்கை மட்டுமே.
இந்த உறுதி தீவிரவாத அமைப்புகளிடம் மட்டுமல்ல இன்று
இந்தியா முழுவதும் மாநிலத்துக்கு மாநிலம்
தீர்க்கப்படாமல் இருக்கும் நதிநீர் பிரச்சனைகளிலும்
தேவை. இதன் மூலம் விவசாயிகளின் துயர் துடைக்க
வழிபிறக்கும்.
வருகிற புத்தாண்டு முதல் அதற்கான முயற்சியை மத்திய,
மாநில அரசுகள் எடுக்க வேண்டும். அப்போது தான் நாம்
அப்துல்காலமின் கனவான 'வளமான இந்தியா'வை உருவாக்க
முடியும்.
அரசுகள் மட்டுமல்ல நாமும் அதற்கான உறுதியை
புத்தாண்டில் எடுப்போம். அமைதியான, வளர்ச்சியான
இந்தியாவை உருவாக்குவோம். |